முஹம்மது (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு-7

நூல்கள்: முஹம்மது (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு

முஹம்மது (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு-7

இன்னா செய்தவருக்கும் இரக்கம்

தாயிப் நகர தலைவர்களிடமும் மக்களிடமும் இஸ்லாத்தை நபியவர்கள் எடுத்து சொன்னார்கள். தாயிப் நகர தலைவன் நபியவர்களை அவமானப்படுத்தி விரட்டியடித்தான். நபியவர்கள் மனமுடைந்து போனார்கள்.

உண்மையை ஏற்பது  உலகத்திற்கு கசப்பாகத்தானே இருக்கிறது ! அதை பற்றி நபியவர்கள் சொல்வதை கேளுங்கள்:

“…ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். ‘கர்னுஸ் ஸஆலிப்’ எனுமிடத்தை நான் அடையும் வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என்மீது நிழலிட்டுக்கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள்.

அவர்கள் என்னை அழைத்து, ‘‘உங்கள் சமுதாயத்தார் உங்களிடம் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்” என்று கூறினார்கள்.

உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு முகமன் (சலாம்) கூறினார். பிறகு, ‘‘முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரு மருங்கிலும் உள்ள) இந்த இரு மலைகளை யும் அவர்கள்மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பி னாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)” என்று கூறினார்.

அப்போது, ‘‘(வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் வழித்தோன்றல்களில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வழிபடுவோரை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே, அவர்களைத் தண்டிக்க வேண்டாம்)” என்று கூறிவிட்டேன்.”

(புகாரி: 3231)

நபியவர்களை தவிர வேறு எந்த மனிதராலும் இப்படி கூறியிருக்க முடியுமா என்ன? இன்னா செய்தாருக்கும் நன்னயம் செய்யும் பண்பு அவர்களது இயல்பிலேயே இருந்தது. நபியவர்கள் மக்கா வந்தடைந்தார்கள், சிறிது நாட்கள் கடந்தன. பத்து  ஆண்டுகால பிரச்சாரம் , ஓய்வற்ற உழைப்பு , சொல்லவியலா பொறுமையும் சகிப்புத்தன்மையும் ,

நெருக்கமானவர்களின் இழப்பு , தன்  சகாக்கள் பட்ட துன்பங்கள் , அவமானம், நபியவர்கள் வேறு என்ன தான் செய்து விடுவார்கள்? இறைவனின் உதவியை எதிர்நோக்கி இருந்தார்கள். ஒரு நாள் கஅபாவில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது….

மின்னல் வாகனத்தில் விண்ணகப் பயணம்

அன்று  நபியவர்கள்  உறங்கிக்கொண்டிருந்தார்கள். ஒரு புறம் பெரிய தந்தை  மகன் ஜஅஃபர் (ரலி) , ஒரு புறம் சிறிய தந்தை ஹம்ஸா (ரலி) இருபுறமும் இருவர் உறங்க , நடுவில் அயர்ந்திருந்த நபியவர்கள் இலேசாக  கண்விழித்துப் பார்த்தார்கள். கோவேறு கழுதை? இல்லை, அது அதைவிடவும் சிறியதாக இருந்தது.

அதற்கு கடிவாளமிடப்பட்டு இருந்தது.  சேணம் கூட இருந்ததது, அதை கையில் பிடித்திருந்தவர் ஜிப்ரீல்(அலை). தான் எங்கோ பயணப்பட இருப்பதை  நபியவர்கள் உணர்ந்தார்கள். அந்த வாகனத்தின் பெயர் “புராக் ” என்பதனையும் அறிந்தார்கள்.

கண் பார்வை எட்டும் தூரத்தில் தன்  ஓரடியை எடுத்து வைக்கும் அந்த வாகனத்தில் ஏறுவதற்கு நபியவர்கள் சிரமப்பட்டார்கள். “ஏன் இவ்வாறு செய்கிறாய்? முஹம்மதிடம்? அவரை விடவும் அல்லாஹ்விடம் மதிப்பிற்குரியவர் வேறெவரும் உன் மீது எறியதில்லையே!” –  ஜிப்ரில் அலை அவர்களின் அதட்டல் புராக்கை வியர்வை வழிந்தோடச் செய்தது .

நபியவர்கள் ஏறியதும் பயணம் ஆரம்பமானது. போகும் வழியில் ஒரு செம்மண் குன்றின் அருகே மூஸா அலை அவர்கள் தம் கப்ரில் தொழும் காட்சியை கண்டார்கள். சிறிது நேரத்தில் வாகனம் பாலஸ்தீனத்தில் உள்ள பைத்துல் முகத்தஸை எட்டியது.

அங்கே நபியவர்கள்  நபிமார்களான மூஸா, ஈஸா, இப்ராஹிம் (அலை) அவர்களையும் வானவரான நரகின் காவலர் மாலிக் (அலை) அவர்களையும் கண்டார்கள். நபிமார்களுக்கு தொழுகை நடத்தும் பேற்றினையும் பெற்றார்கள். உலக முடிவு காலத்தில் பூமியில் குழப்பம் விளைவிக்கப் போகும் தஜ்ஜாலையும் கூட கண்டார்கள். பிறகு வாகனம் கிளம்பி முதல் வானத்திற்கு சென்றது .

யார் அது?

வானத்தை எப்படி அடைந்திருக்க முடியும்? அதுவும் அந்த காலத்தில், மனிதர்களாலேயே தம்  அறிவைக்கொண்டு விண்கலம் உருவாக்க முடியும் எனில் , வானத்தை படைத்து அதை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனால் முடியாதா என்ன? புராக் முதலாம் வானத்தை அடைந்ததும் என்ன நடந்தது என்று நபியவர்களின் கூற்றையே கேட்கலாம் வாருங்கள்…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை (முகடு) பிரிக்கப்பட்டது. (அங்கிருந்து வானவர்) ஜிப்ரீல் அவர்கள் இறங்கி (வந்து) என் நெஞ்சைப் பிளந்தார்கள். பிறகு அதை, ‘ஸம்ஸம்’ தண்ணீரால் கழுவினார்கள். பிறகு நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத் தட்டு ஒன்றைக் கொண்டுவந்து என் நெஞ்சில் அதை ஊற்றி(நிரப்பி)னார்கள். பிறகு என் கையைப் பிடித்து என்னை அழைத்துக்கொண்டு வானத்திற்கு ஏறிச் சென்றார்கள். (பூமிக்கு) அண்மையிலுள்ள வானத்திற்கு வந்தபோது வானத்தின் காவலரிடம், ‘‘திறங்கள்” என்று கூறினார்கள்.

அதற்கு அவர், ‘‘யார் அது?” என்று கேட்டார். ஜிப்ரீல் அவர்கள், ‘‘இதோ ஜிப்ரீல்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், ‘‘உங்களுடன் வேறெவரேனும் இருக்கிறரா?” என்று கேட்டார். அவர்கள், ‘‘என்னுடன் முஹம்மத் அவர்கள் இருக்கிறார்கள்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், ‘‘(அவரை அழைத்துவரச் சொல்லி) அவரிடம் (ஆள்) அனுப்பப் பட்டதா?” என்று கேட்க, ஜிப்ரீல் அவர்கள், ‘‘ஆம், திறங்கள்” என்று கூறினார்கள்.

(முதல் வானத்தின் கதவு திறக்கப்பட்டு) நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒரு மனிதர் இருந்தார். அவரது வலப் பக்கத்திலும் மக்கள் இருந்தனர்; இடப் பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தமது வலப் பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தமது இடப் பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு, என்னைப் பார்த்து,) ‘‘நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக!” என்று கூறினார். நான் ‘‘ஜிப்ரீலே! இவர் யார்?” என்று கேட்டேன்.

அவர், ‘‘இவர் ஆதம் (அலை) அவர்கள்; அவர்களுடைய வலப் பக்கமும் இடப் பக்கமும் இருக்கும் மக்கள் அவர்களுடைய சந்ததிகள். அவர்களில் வலப் பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப் பக்கத்தில் இருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான், அவர்கள் வலப் பக்கம் (சொர்க்கவாசிகளான) தம் மக்களைப் பார்க்கும்போது (மகிழ்ச்சியால்) சிரிக்கிறார்கள்; இடப் பக்கம் (நரகவாசிகளான தம் மக்களைப்) பார்க்கும்போது (வேதனைப்பட்டு) அழுகிறார்கள்” என்று பதிலளித்தார்கள்.

பிறகு என்னை அழைத்துக்கொண்டு ஜிப்ரீல் (இன்னும் உயரத்திற்கு) ஏறிச் சென்றார்கள். பிறகு இரண்டாம் வானத்திற்கு வந்து அதன் காவலரிடம், ‘‘திறங்கள்” என்று கூறினார்கள். அதன் காவலரும் முதலாமவர் கேட்டதைப் போன்றே கேட்டார். பிறகு (முன்பு போலவே ஜிப்ரீல் அவர்கள் பதில் கூறியப்பின் வாயிலைத்) திறந்தார்.

ஜிப்ரீல் (அலை) அவர்கள் இத்ரீஸ் (அலை) அவர்களைக் கடந்து சென்ற போது, ‘‘நல்ல இறைத்தூதரே வருக! நல்ல சகோதரரே, வருக!” என்று கூறினார்கள். நான், ‘‘இவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘‘இவர் இத்ரீஸ்” என்று கூறினார்கள். பிறகு மூசா அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள், ‘‘நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக” என்று கூறினார்கள்.

நான், ‘‘இவர் யார்?” என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அவர்கள், ‘‘இவர் மூசா” என்று கூறினார்கள்.
பிறகு நான், ஈசா அவர்களைக் கடந்து சென்றேன். அவர்களும், ‘‘நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக!” என்று கூறினார்கள். நான், ‘‘இவர் யார்?” என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் அவர்கள், ‘‘(இவர்) ஈசா” என்று பதிலளித் தார்கள்.

பிறகு நான் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அவர்கள், ‘‘நல்ல நபியே, வருக! நல்ல மகனே, வருக!” என்று கூறினார்கள். நான், ‘‘இவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு, ‘‘இவர் இப்ராஹீம்” என்று ஜிப்ரீல் அவர்கள் பதிலளித்தார்கள்.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பிறகு ஜிப்ரீல் அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு மேலே சென்றார்கள். நான் ஓர் உயரமான இடத்திற்கு வந்தபோது அங்கு நான் (வானவர்கள் விதிகளை எழுதிக்கொண்டிருக்கும்) எழுதுகோல்களின் ஓசையைச் செவியுற்றேன்.

அப்போது அல்லாஹ் என்மீது (என் சமுதாயத்தாருக்காக) ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கினான். அதைப் பெற்றுக்கொண்டு நான் திரும்பியபோது மூசா அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது மூசா அவர்கள், ‘‘உங்கள் சமுதாயத்தார் மீது என்ன கடமையாக்கப்பட்டது?” என்று கேட்டார்கள். நான், ‘‘அவர்கள்மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன”என்று பதிலளித்தேன்.

அவர்கள், ‘‘அப்படியானால் உங்கள் இறைவனிடம் திரும்பிச்சென்று (சற்று குறைத்துக் கடமையாக்கும்படி) கேளுங்கள். ஏனெனில், உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறை வேற்ற முடியாது” என்று கூறினார்கள். உடனே நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்று (தொழுகைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி) கேட்டேன். அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான்.

மூசா அவர்களிடம் திரும்பிச் சென்றபோது, ‘‘உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறி முன்புபோல் (‘‘உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறைவேற்ற முடியாது”) என்று கூறினார்கள். (நான் அவ்வாறே திரும்ப இறைவனிடம் சென்று இன்னும் குறைக்கும்படி கோர) அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான்.

நான் மூசா அவர்களிடம் மீண்டும் சென்று கூறிய போது, ‘‘உங்கள் இறைவனிடம் திரும்பச் சென்று இன்னும் குறைத்துக் கேளுங்கள். ஏனெனில், உங்கள் சமுதாயத்தார் அதற்குச் சக்தி பெறமாட்டார்கள்” என்று கூற, நான் திரும்பிச் சென்று, என் இறைவனிடம் (இன்னும் சற்று குறைக்கும்படி) கேட்டேன்.

அதற்கு அவன், ‘‘அவை ஐந்து (வேளைத் தொழுகைகள்) ஆகும். அவையே (பிரதிபலனில்) ஐம்பது (வேளைத் தொழுகைக்கு ஈடு) ஆகும். (ஒருமுறை சொல்லப் பட்ட) சொல் என்னிடம் மாற்றப்படுவதில்லை” என்று கூறினான். உடனே, நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பிச் சென்றேன். அவர்கள், ‘‘உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறினார்கள். நான், ‘‘என் இறைவனிடம் (மேலும் சலுகை கோர) வெட்கப்படுகின்றேன்” என்று பதிலளித்தேன்.

பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (வானுலகின் எல்லையான) ’சித்ரத்துல் முன்தஹா’வுக்குச் சென்றார்கள். அப்போது நான் அறிய முடியாதபடி பல வண்ணங்கள் அதைச் சூழ்ந்து மூடியிருந்தன. பிறகு நான் உள்ளே அனுமதிக்கப்பட்டேன். அப்போது அங்கே முத்தாலான கூடாரங்களைக் கண்டேன். அதன் மண் (நறுமணம் வீசும்) கஸ்தூரியாக இருந்தது.”

(புகாரி: 3207)

நபியவர்கள் சித்ரத்துல் முன்தஹா வை கண்டதாக கூறினார்கள் அல்லவா? அது ஒரு சொர்க்கத்து இலந்தை மரம் . அதன் இலைகள் யானையின் காதுகளைப்போல் இருந்ததாம் . அதன் பழங்கள் பெரும் கூஜாக்களைப் போல் இருந்ததாம்.  அதன் கீழ்ப்பகுதியில் நான்கு ஆறுகளையும் கூட கண்டிருக்கிறார்கள். ஜிப்ரீல் (அலை ) அவர்களை அவர்களது உண்மையான தோற்றத்தில் கண்டார்கள் .

பிறகு சொர்க்கம் அதன் கஸ்தூரி போன்ற மண், அதன் முத்தாலான தோரணங்கள் , அவற்றின் பிரம்மாண்டத்தையும் கண்டார்கள். அதில் ஏழைகளே அதிகம் இருந்ததையும் பார்த்தார்கள். கவ்சர் தடாகத்தையும் அதன் துளையுள்ள முத்து கலசங்களையும் கண்டார்கள். பிறகு நபியவர்கள் பூமிக்கு அழைத்து வரப்பட்டு தாம் உறங்கிக்கொண்டிருந்த இடத்திலேயே கொண்டு வந்து விடப்பட்டார்கள்.