12) ஸ்கலிதம் ஏற்பட்டால் குளிப்பு கடமை
12) ஸ்கலிதம் ஏற்பட்டால் குளிப்பு கடமை
கனவு காண்பதன் மூலம் உறக்கத்தில் விந்து வெளிப்படுவதற்கு ஸ்கலிதம் என்று சொல்வார்கள். இது ஆண்களுக்கு அதிகம் ஏற்படும். அரிதாக பெண்களுக்கும் ஏற்படும். இது வெளிப்பட்டால் குளிப்பது கடமையாகி விடும்.
ஓர் ஆண்மகன் தூக்கத்தில் காண்பதைப் போன்று தனது தூக்கத்தில் காணும் பெண்ணைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு ஒரு பெண் கண்டால் அவள் குளித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு சுலைம் (ரலி),
நூல்: முஸ்லிம்
மர்மஸ்தானத்தையும், உடலில் பட்ட அசுத்தத்தையும் கழுவுதல்
கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது, தாம்பத்தியத்தின் மூலம் உடலில் பட்ட அசுத்தங்களையும், மர்ம ஸ்தானத்தையும் முதலில் கழுவ வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது (முதலில்) தங்கள் மர்மஸ்தானத்தைக் கையினால் கழுவினார்கள். பின்னர் கையைச் சுவற்றில் தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் தொழுகைக்குரிய உளூவைச் செய்தார்கள். குளித்து முடித்து, இரு கால்களையும் கழுவினார்கள்.
அறிவிப்பவர்: மைமூனா (ரலி),
வலது கையால் இடது கையில் தண்ணீர் ஊற்றி, இடது கையால் மர்மஸ்தானத்தைக் கழுவுவார்கள் என்று(புகாரீ: 259)வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது, அதற்கு முன்னர் உளூச் செய்வது நபிவழியாகும். அவ்வாறு உளூச் செய்யும் போது, கால்களை மட்டும் கடைசியாக (குளித்து முடிக்கும் போது) கழுவுவதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது தமது கைகளைக் கழுவிக் கொண்டு, தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்வார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
குளித்து முடித்ததும் தாம் நின்ற இடத்தை விட்டு சற்று விலகி, இரு கால்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கழுவுவார்கள்.
அறிவிப்பவர்: மைமூனா (ரலி),
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைகளைத் தண்ணீரில் நனைத்து, ஈரக் கையால் தலையின் அடிப் பாகத்தைக் கோதி விட்டுப் பின்னர் மூன்று தடவை தலையில் தண்ணீரை ஊற்றுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
பின்னர் தமது கையால் தலை முடியைக் கோதுவார்கள். முடியின் அடிப்பாகம் நனைந்து விட்டது என்று அவர்கள் நினைக்கும் போது மூன்று தடவை தலையில் தண்ணீர் ஊற்றுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
கடமையான குளிப்பை நிறைவேற்றுவதற்கு மணிக் கணக்கில் தண்ணீரில் ஊற வேண்டும் என்பது அவசியமில்லை. மாறாக மூன்று தடவை தலையில் தண்ணீர் ஊற்றிய பின்னர் உடல் முழுவதும் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். தமது இரு கைகளிலும் தண்ணீரைச் சாய்த்து இரண்டு தடவைகள் அல்லது மூன்று தடவைகள் கைகளைக் கழுவினார்கள். பின்னர் தமது வலது கையால் இடது கை மீது தண்ணீரைச் சாய்த்து தமது மர்மஸ்தானத்தைக் கழுவினார்கள்.
பின்னர் தமது கையைத் தரையில் தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தார்கள். பின்னர் முகத்தையும், கைகளையும் கழுவினார்கள். தமது தலையை மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் உடலில் ஊற்றினார்கள். பின்னர் தாம் நின்ற இடத்திலிருந்து விலகி கால்களைக் கழுவினார்கள்.
அறிவிப்பவர்: மைமூனா (ரலி),
நமது முடிகளில் ஒன்றிரண்டு நனையாமல் இருக்குமோ என்று சில பேர் எண்ணிக் கொண்டு குடம், குடமாகத் தண்ணீரை ஊற்றுவார்கள். இவ்வாறு அதிகம் அலட்டிக் கொள்வது தேவையில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தது போல் ஈரக் கையால் தலையின் அடிப் பாகத்தில் தடவிக் கோதிய பின் மூன்று தடவை தலையின் மீது தண்ணீர் ஊற்றிக் கொள்வதே போதுமானதாகும். இதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து அறியலாம். இது பற்றி இன்னும் தெளிவாக ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் குளிக்கும் முறை பற்றி சிலர் தர்க்கம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சிலர், நான் என் தலையை இப்படி, இப்படியெல்லாம் (தேய்த்துக்) கழுவுவேன் என்று கூறினார்கள். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான் மூன்று கை தண்ணீர் எடுத்து என் தலையில் ஊற்றிக் கொள்வதோடு சரி என்று குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி),
நானோ இரண்டு கைகளாலும் தண்ணீர் எடுத்துத் தலையில் ஊற்றிக் கொள்வதோடு சரி என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக(புகாரீ: 254)அறிவிப்பில் உள்ளது.
கடமையான குளிப்பு அல்லாத சாதாரண குளிப்பைப் பற்றியதாக இது இருக்குமோ என்று சிலர் நினைக்கக் கூடும். முஸ்லிமில் இடம் பெற்ற (494வது) ஹதீஸில் கடமையான குளிப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாகக் கூறப்பட்டுள்ளது.
எனவே கடமையான குளிப்புக்கும் இவ்வாறு செய்யலாம் என்பதில் ஐயமில்லை.
பின்னப்பட்ட சடைகளை அவிழ்த்து விட்டுத் தான் கடமையான குளிப்பை நிறைவேற்ற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். அது தவறாகும். ஹதீஸ்களை ஆராயும் போது முடிக்குக் கீழே உள்ள தோல் தான் கட்டாயமாக நனைய வேண்டுமே தவிர ஒவ்வொரு முடியும் நனைய வேண்டும் என்பது கட்டாயமில்லை என்பதை அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஈரக் கையால் தலையின் அடிப்பாகத்தைத் தேய்ப்பார்கள் என்றும் அடிப்பாகம் நனைந்து விட்டது என்று நினைக்கும் போது தலையில் தண்ணீர் ஊற்றுவார்கள் என்றும் கூறப்பட்ட விளக்கத்திலிருந்து இதை அறியலாம்.
இதை இன்னும் தெளிவாகவே விளக்கும் ஹதீஸ்களும் உள்ளன.
அல்லாஹ்வின் தூதரே! நான் தலையில் சடை போட்டிருக்கிறேன். கடமையான குளிப்புக்காக நான் சடையை அவிழ்க்க வேண்டுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், வேண்டியதில்லை; உன் தலையில் மூன்று தடவை தண்ணீர் ஊற்றிக் கொள்வதே போதுமானதாகும்; பின்னர் உன் மீது தண்ணீரை ஊற்றிக் கொள்; நீ தூய்மையாகி விடுவாய் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி),
நூல்: முஸ்லிம்
எனவே தலையின் அடிப்பாகம் நனைவது தான் கட்டாயமானது. மேலே உள்ள முடிகள் நனையாமல் இருப்பதால் குளிப்புக்கு எந்தக் குறைவும் ஏற்படாது.
சடையை அவிழ்க்காமல் குளிக்கும் போது, பாதிக்கு மேற்பட்ட முடிகள் நனைவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி இருந்தும் சடையை அவிழ்க்கத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குளிக்கும் போது சொல்ல வேண்டிய துஆக்கள், திக்ருகள் ஏதுமில்லை. நிய்யத் என்ற பெயரில் சில வார்த்தைகளைச் சொல்ல வேண்டியதில்லை
ஆண்களும், பெண்களும் நிர்வாணமாகக் குளிக்கக்கூடாது. அவ்வாறு செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.
உன் மனைவி, அடிமை ஆகியோரைத் தவிர மற்றவர்களிடம் உன் அந்தரங்கப் பகுதியை பாதுகாத்துக் கொள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். சிலர் சிலருடன் கலந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. (அப்போது சில பகுதிகள் தெரிய வாய்ப்புள்ளதே) என்று நான் கேட்டேன்.
அதை மற்ற எவரும் பார்க்காதவாறு இருக்கு முடிந்தால் அதை யாரும் பார்க்காமல் இருக்கட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எங்களில் ஒருவர் தனித்திருக்கும் போது? என்று நான் கேட்டேன். மனிதர்களை விட அல்லாஹ்விடம் வெட்க உணர்வுடன் நடந்து கொள்ள அல்லாஹ் தகுதிவாய்ந்தவன் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி),
நூல் : அபூதாவூத்
குளிப்பு கடமையானவர்களாக இருக்கும் போது உண்ணுவதற்கும், உறங்குவதற்கும் முன்னால் உளூச் செய்து கொள்ள வேண்டும். இது கட்டாயம் அல்ல. செய்வது சிறப்பு.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், இரவு நேரத்தில் தமக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு விடுவது பற்றிக் கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்” உளூச் செய்யுங்கள்; உங்கள் பிறப்புறுப்பைக் கழுவுங்கள்; பிறகு உறங்குங்கள்” என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
உடலுறவு கொண்டு விட்டு மீண்டும் உடலுறவு கொண்டால் உளூ செய்வது நல்லது
إِذَا أَتَى أَحَدُكُمْ أَهْلَهُ، ثُمَّ أَرَادَ أَنْ يَعُودَ، فَلْيَتَوَضَّأْ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் தம் மனைவியிடம் உடலுறவு கொண்டுவிட்டுப் பின்னர் மீண்டும் (உறவுகொள்ள) விரும்பினால் அவர் உளூச் செய்து கொள்ளட்டும்.
அறிவிப்பவர்: அபூ சயீத் அல்குத்ரீ (ரலி),
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கு எற்பட்டு இருக்கும் போது உண்ணவோ உறங்கவோ விரும்பினால் தொழுகைக்கு உளூச் செய்வதைப் போன்று உளூ செய்து கொள்வார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: முஸ்லிம்