6) ஆண்களுடன் பெண்கள் பேசலாமா?

நூல்கள்: பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்

மஹ்ரமாக இல்லாத ஆண்களுடன் பெண்கள் பேசக் கூடாது. பெண்களின் குரலை ஆண்கள் கேட்கக் கூடாது என்ற நம்பிக்கை சில முஸ்லிம்களிடம் உள்ளது. இந்த நம்பிக்கை முற்றிலும் தவறாகும்.

ஆணாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஏராளமான பெண்கள் கேள்வி கேட்டுள்ளனர்.

பெண்கள் கூடுதல் கட்டுப்பாட்டுடன் இருக்கும் காலம் இத்தா காலமாகும். இந்தக் கால கட்டத்தில் பெண்களுடன் பேசலாம் என்று ஆண்களுக்கு அல்லாஹ் அனுமதிக்கிறான்.

(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன்: 2:235)

இத்தா காலத்தில் அப்பெண்களைத் திருமணம் செய்வது குறித்து பேசக் கூடாது. மார்க்கம் அனுமதித்த மற்ற விஷயங்களைப் பேசலாம். திருமணப் பேச்சைக் கூட சாடைமாடையாக பேசலாம் என்று இவ்வசனத்தில் அல்லாஹ் அனுமதிக்கிறான்.

ஆயினும் குழைந்து, கொஞ்சிப் பேசாமல் சாதாரணமாகப் பேச வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியருக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான். இதனால் ஆண்களுக்கு சபலம் ஏற்படும் என்று காரணத்தையும் அல்லாஹ் கூறுகிறான்.

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.

(அல்குர்ஆன்: 33:32)