3) பெண்கள் கப்ரு ஜியாரத் செய்யலாமா?

நூல்கள்: பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்

பெண்கள் கப்ரு ஜியாரத் செய்யலாமா?

மண்ணறைகளுக்குச் சென்று வரும் பெண்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன.

இப்னு அப்பாஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி), மற்றும் ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி) ஆகிய மூவர் வழியாக இந்தக் கருத்தில் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வழியாகவும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்படும் அறிவிப்பு பலவீனமானதாக உள்ளது. ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி) அவர்களின் வழியாக வரும் அறிவிப்பு சரியானதாக உள்ளது.

இது பற்றி விபரமாகப் பார்ப்போம்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

سنن الترمذي  – 320 – حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرَاتِ القُبُورِ، وَالمُتَّخِذِينَ عَلَيْهَا المَسَاجِدَ وَالسُّرُجَ

மண்ணறைகளைச் சந்தித்து வரும் பெண்களையும், அவற்றின் மீது விளக்கு ஏற்றுபவர்களையும், பள்ளி எழுப்புபவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : திர்மிதீ

இது பலவீனமான அறிவிப்பாகும். இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக அபூ சாலிஹ் என்பார் இதை அறிவிப்பதாக இதில் சொல்லப்பட்டுள்ளது.

இவர் பலவீனமானவர் என்று இப்னு ஹஜர், அபூ ஹாதிம், நஸாயீ, யஹ்யா பின் மயீன் மற்றும் பல அறிஞர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

سنن الترمذي   – 1056 – حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعَنَ زَوَّارَاتِ القُبُورِ

மண்ணறைகளை அதிகமாகச் சந்திக்கச் செல்லும் பெண்கைள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் : திர்மிதீ

அபூஹுரைரா (ரலி) வழியாக உமர் பின் அபீ சலமா என்பவர் இதை அறிவிக்கிறார். இவர் பலவீனமானவர் என்று அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ, அலீ பின் மதீனீ, யஹ்யா பின் மயீன், அபூஹாதிம், ஷுஅபா, முஹம்மது பின் சஅத், இப்னு ஹுஸைமா, நஸாயீ ஆகிய அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே இதுவும் பலவீனமான அறிவிப்பாகும்.

அறிவிப்பவர்: ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி)

سنن ابن ماجه ت الأرنؤوط (2/ 514)- لَعَنَ رَسُولُ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – زُوَّارَاتِ الْقُبُورِ

மண்ணறைகளை அதிகமாகச் சந்திக்கச் செல்லும் பெண்கைள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர் : ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி)

நூல்: இப்னு மாஜா

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் ஏற்கத்தக்கவர்களாக உள்ளதால் இது ஆதாரப்பூர்வமான ஹதீஸாகும். ஆனாலும் இந்தத் தடை பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நீக்கப்பட்டு விட்டது.

இதைப் பின்வரும் நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றது.

صحيح مسلم  – قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடக்கத்தலங்களைச் சந்திக்க வேண்டாம் என உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி), நூல் : முஸ்லிம்

المستدرك على الصحيحين للحاكم – أَنَّ عَائِشَةَ أَقْبَلَتْ ذَاتَ يَوْمٍ مِنَ الْمَقَابِرِ فَقُلْتُ لَهَا: يَا أُمَّ الْمُؤْمِنِينَ، مِنْ أَيْنَ أَقْبَلْتِ؟ قَالَتْ: مِنْ قَبْرِ أَخِي عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ، فَقُلْتُ لَهَا: أَلَيْسَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ زِيَارَةِ الْقُبُورِ؟ قَالَتْ: نَعَمْ، كَانَ قَدْ نَهَى، ثُمَّ أُمِرَ بِزِيَارَتِهَا

அப்துல்லாஹ் பின் அபீ மலீகா கூறுகிறார் :

ஒரு நாள் ஆயிஷா (ரலி) அவர்கள் மண்ணறைகளைச் சந்தித்துவிட்டு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் இறை நம்பிக்கையாளர்களின் தாயாரே நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் என் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் அபீ பக்ர் அவர்களின் மண்ணறையிலிருந்து வருகிறேன் என்று பதிலளித்தார்கள்.

மண்ணறைகளுக்குச் செல்லக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்யவில்லையா? என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் முதலில் தடை செய்திருந்தார்கள். பிறகு அவற்றைச் சந்திக்க ஏவினார்கள் எனக் கூறினார்கள்.

நூல்: ஹாகிம்

صحيح مسلم  –  فَقَالَ: إِنَّ رَبَّكَ يَأْمُرُكَ أَنْ تَأْتِيَ أَهْلَ الْبَقِيعِ فَتَسْتَغْفِرَ لَهُمْ “، قَالَتْ: قُلْتُ: كَيْفَ أَقُولُ لَهُمْ يَا رَسُولَ اللهِ؟ قَالَ ” قُولِي: السَّلَامُ عَلَى أَهْلِ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ، وَيَرْحَمُ اللهُ الْمُسْتَقْدِمِينَ مِنَّا وَالْمُسْتَأْخِرِينَ، وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لَلَاحِقُونَ ”

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

உம் இறைவன் பகீஉ வாசிகளிடம் சென்று அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி கட்டளையிடுகின்றான் என்று (என்னிடம்) ஜிப்ரீல் கூறினார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத்தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்? என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன் என்று சொல் என்றார்கள்.

நூல்: முஸ்லிம்

(இந்த துஆவின் பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறை நம்பிக்கையாளர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்று விட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! அல்லாஹ் நாடினால் நாங்கள் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.)

 

ஆண்களும், பெண்களும் கப்ரு ஜியாரத் செய்யக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னர் தடை செய்திருந்தார்கள். குறிப்பாக இந்த விசயத்தில் பெண்களுக்கு கடுமையான தடையை விதித்திருந்தார்கள். பின்னர் இருவருக்கும் அனுமதியளித்தார்கள் என்பதை இந்த ஹதீஸ்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

மண்ணறைகளுக்கு செல்லக்கூடியவர்கள் அங்கே சொல்ல வேண்டிய பிரார்த்தனையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள். இந்தப் பிரார்த்தனையை ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்லக்கூடாது என்றால் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு இந்தப் பிரார்த்தனையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்திருக்க மாட்டார்கள்.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் பெண்கள் பொது மையவாடிக்குச் சென்று மண்ணறைகளைப் பார்த்து மறுமை சிந்தனையை அதிகப்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு என்று அறிந்து கொள்ளலாம். ஆனால் ஆண்களானாலும், பெண்களானாலும் இறைவனின் கோபத்துக்கும், சாபத்துக்கும் உரிய இடமான தர்ஹாக்களுக்குச் சென்றுவர அனுமதியில்லை.