04) நிர்வாகத்தில் முதிர்ச்சி

நூல்கள்: இஸ்லாம் கூறும் நிர்வாகவியல்

நிர்வாகவியல் ஓர் இஸ்லாமியப் பார்வை-4

முதிர்ச்சி

எதையும் சிந்திக்காமல் பேசுவது, சின்னச் சின்ன விஷயங்களில் மிகுந்த அக்கரை காட்டுவது, சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது மற்றவர்களின் தூண்டுதலால் செயலில் இறங்குவது, தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள அவசரப்படுவது போன்றவை முதிர்ச்சி இல்லாதவர்களின் வெளிப்படையான அடையாளங்கள்.

ஒரு மனிதனின் உடல் முதிர்ச்சியடைந்து, அறிவு முதிர்ச்சியடையவில்லையானால் மற்றவர்களின் உதவியுடன் தான் வாழ முடியும். அறிவு முதிர்ச்சி என்பது நடத்தையில் முதிர்ச்சி; சிந்திப்பதில் முதிர்ச்சி; மனோநிலை முதிர்ச்சி.

அ) நடத்தையில் முதிர்ச்சி

எதை எங்கு பேசுவது? யாருடன் எதைச் பேசுவது? எந்தெந்த அடிப்படையில் நடந்து கொள்வது? என்று விளங்கிச் செயல்படுவது.

ஆ) சிந்திப்பதில் முதிர்ச்சி

எந்தச் செயலைச் செய்யும் முன்பும் அதனுடன் தொடர்புடைய முந்தைய விஷயங்களோடு தொடர்புபடுத்தி யோசிப்பது.

இ) மனோநிலை முதிர்ச்சி

நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள், குறிப்பாக நாம் விரும்பாதவை நடந்தால் பாதிக்கப்பட்டு விடாமல் நிதானமாக இருப்பது. ஒருவரிடம் அறிவு முதிர்ச்சி இல்லை என்றால் அவர் நிர்வாகியாவதற்கான அடிப்படைத் தகுதிகள் எதுவுமே இல்லை எனலாம். எனவே முதிர்ச்சியை பயிற்சி செய்யுங்கள்.

உடல் தோற்றம்

“தாலூத் என்பவரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான்” என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். “எங்கள் மீது அவருக்கு எப்படி ஆட்சியதிகாரம் இருக்க முடியும்? அவரை விட ஆட்சிக்கு நாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள் வசதியும் வழங்கப்படவில்லை” என்று அவர்கள் கூறினர். “உங்களை விட அவரை அல்லாஹ் தேர்வு செய்து விட்டான். அவருக்கு கல்வி மற்றும் உடலை (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான். தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்” என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன்: 2:247)

நோய்கள் குடியிருக்கும் வீடாக ஒருவரது உடல் இருந்தால் அவரால் அவரையே பார்த்துக் கொள்வது இயலாது. இந்நிலையில் நிர்வாகியாக எப்படிப் பணியாற்ற முடியும்?

அதனால் தான் இன்று ஆட்களை வேலைக்கு அமர்த்தும் பெரும் நிறுவனங்கள் அவர்களின் ஆரோக்கியம் பற்றிய சான்றிதழ் கேட்கின்றன.

இன்று வரும் நோய்கள் எல்லாம் அதிகமாகச் சாப்பிடுதல், தகுந்த உடற்பயிற்சி இல்லாமை போன்றவற்றால் தான் ஏற்படுகின்றன.

உடற்பயிற்சி, நடைப் பயிற்சிகளை தினமும் செய்து வர முயல வேண்டும். முன்னர் பல காலங்களில் நல்ல வளர்ந்த தோற்றமும், கட்டான உடலும், சிவந்த நிறமும், அடர்ந்த தாடியும் என இப்படித் தான் தலைவர்கள் பார்க்கப்பட்டார்கள். ஆனால் அறிவியல் வளர்ச்சி இவை முழுவதும் தேவையில்லை என்ற நிலையை உருவாக்கி இருந்தாலும் ஆரோக்கியம், அதற்கான சரியான பயிற்சிகள் அவசியமே!

தோற்றத்தில் ஆடை என்பது மிக முக்கியத்துவம் பெறுகின்றது.

“அல்லாஹ் ஒருவருக்கு அருட்கொடைகளை வழங்கியிருந்தால் அதை அவர் வெளிப்படுத்தட்டும்!” என நபியவர்கள் கூறினார்கள். (பைஹகீ)

பெருமை இல்லாமல் வீண் விரயம் இல்லாமல் நல்ல ஆடைகளை, சுத்தமானதை அணிவது தோற்றத்தில் மேலும் மெருகூட்டும்.

எளிமை

உலக வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் பகட்டு மற்றும் பெருமையாக ஊதாரித்தனம் செய்யாமல், அதே நேரத்தில் அல்லாஹ் வழங்கி இருந்தால் கஞ்சத்தனமும் செய்யாமல் நமது தேவைகளை நிறைவு செய்து கொள்வதில் நடுநிலை பேண வேண்டும்.

வீடு, உடை, தங்குமிடம், செலவு செய்தல். வாகனம் போன்ற எல்லாவற்றிலும் இந்த நடுநிலை  பேணப்பட வேண்டும். இப்படி சேர்க்கப்பட்ட பொருட்கள் நமது உபயோகத்திற்கு மட்டுமில்லை. நம் மூலமாக நலப்பணிகள் செய்வதற்காக ஏழை எளியோருக்கும் உரியது என்ற உண்மையை மறந்து விடக்கூடாது.

நடந்து போய் விடலாம் என்ற தூரத்திற்குக் கார் உபயோகிப்பது, ஊட்டியில் உள்ள அலுவலகத்துக்குக் குளிரூட்டி (ஏர்கண்டிஷனர்) பொருத்திக் கொள்வது போன்றவை ஆடம்பரம். அதே நேரம் சென்னையில் குளிரூட்டி பொருத்திக் கொள்வதை ஆடம்பரம் என வாதிட முடியாது.

அவர்கள் செலவிடும் போது விரையம் செய்ய மாட்டார்கள். கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். அதற்கு இடைப்பட்ட நிலையாகவே அது இருக்கும்.

(அல்குர்ஆன்: 25:67)

நீதி

ஒரு நிர்வாகி எல்லா விவகாரங்களிலும் நீதியாய் நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் சம்பந்தமான விவகாரங்களிலும் சக நிர்வாகிகள், குடும்பம் தொடர்பான அனைத்து நிலைகளிலும் அனைவருக்கும் நீதியாக நடக்க வேண்டும்,

தன்னுடைய மாணவர்களில் உறவினர் அல்லது முன்பே தெரிந்தவர் என்பதால் அவரை மற்ற திறமையானவர்களை விட முன்னேற்ற முயல்வது பெரிய அநீதி.

அது போல ஒரு பிரச்சனையில் திறமையானவர் ஒரு புறம், அவருக்கு எதிர் தரப்பாக நிர்வாகத்தில் சாதாரணமான ஒருவர் இருக்கலாம். திறமையானவர் தவறுதலாக நடந்திருந்து அதைப் பகிரங்கமாகக் கூறினால் நிர்வாகத்தில் அவரது ஆர்வம் குன்றிவிடும் என்பதற்காகச் சிலர் அநீதியாய் நடந்து விடுவார்கள். கேட்டால், “என் நலத்திற்காக நான் இந்த முடிவெடுக்கவில்லை; நமது நிர்வாக நலனுக்காகத் தான்’ எனப் பதிலுரைப்பார்கள். ஆனாலும் இது அநீதி தான். ஏனென்றால் இந்த நடவடிக்கையில் ஒரு அப்பாவி பாதிக்கப்பட்டிருக்கின்றார்.

ஒரு நபர் மீது ஏதாவது ஒரு காரணத்தால் முன்பே மனதில் வெறுப்பு இருக்கும். அது மனித இயல்பு! அதன் காரணமாக ஒரு பிரச்சனையில் அவர் குற்றமற்றவர் என்பதற்கு எல்லா வகையான ஆதாரங்களும் இருந்தும் அவர் மேல் குற்றம் சாட்டுவது, நடவடிக்கை எடுப்பது தவறு.

பல தரப்பட்ட, பல சிந்தனையுடையவர்கள் இருக்கும் ஒரு நிர்வாகத்தில் எல்லாருக்கும் நீதியாய் நடக்க வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன்: 5:8)

செலவுகளைக் கட்டுப்படுத்துதல்

இன்றைய நிர்வாக அமைப்புகளில் செலவுகளைக் கட்டுப்படுத்துதல் என்பது மிக இன்றியமையாத ஒன்றாக உள்ளது. செலவுக் கட்டுப்பாட்டிற்கு முக்கிய வழி எந்தத் திட்டத்தைத் தீட்டும் போதும் அதற்கு என்ன செலவாகும் என்று திட்டமிடுவது, அந்தத் தொகையை மிச்சப்படுத்தவும் முயல்வது.

அதற்காகக் கஞ்சத்தனம் செய்ய கூடாது. எது தேவையான செலவு? எது தேவையில்லாதது? என்பதை அதன் மூலம் கிடைக்கும் நன்மையைப் பொறுத்துத் தான் முடிவு செய்ய முடியும். பொது நிர்வாகமாக இருந்தால் செலவுகளைப் பற்றி மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதை மனதில் நிறுத்த வேண்டும்.

ஒரு நிர்வாகத்தில் காலப்போக்கில் அன்றாட நடவடிக்கைகளின் உள்ளே பல தேவையில்லாத சிறு சிறு செலவுகள் புகுந்து வரும். அதைக் கண்டறிந்து அச்செலவுகள் தொடர்ச்சியானவைகளாக இருந்தால் காரணமறிந்து நிறுத்த முயற்சி செய்ய வேண்டியது அவசியம்.

விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

(அல்குஆன்: 17:27)

நேர மேலாண்மை

இப்பொழுதெல்லாம் பிஸி என்பது சாதாரண மனிதர்கள் முதல் நாட்டை ஆள்பவர்கள் வரை தினசரி உபயோக வார்த்தைகளில் ஒன்று. நேரமில்லை, நேரமில்லை, யாரிடமும் நேரமில்லை. உண்மை என்னவெனில் நேரம் இருக்கின்றது அதை முறைப்படுத்தி பயன்படுத்தத் தெரியவில்லை.

தொழுகை, முஸ்லிம்களுக்கு நேர மேலாண்மைக்கான ஒரு சிறந்த பயிற்சியாகும். காலையில் எழுவதில் நேரம் குறிக்கப்பட்டு விட்டது. மதியம், மாலை, இரவு அந்தந்த காரியங்களை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பொதுவாக ஓரிடத்திற்கு ஐந்து மணிக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு ஐந்தரை மணிக்கு ஏன் போகிறோம்? நம்மிடம் எந்தக் காரியத்தையும் திட்டமிட்டுச் செய்யும் பழக்கமில்லை.

திட்டமிடுதல், முன்பதிவு, முன் அனுமதி இவையெல்லாம் பெரும் பெரும் தலைவர்கள், பணக்காரர்களுக்குரியது என்பது நமது எண்ணம். ஒவ்வொருவரும் நேரத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் ஒருவர் மற்றொருவருக்குக் கொடுக்க இயலாத, அல்லாஹ் நமக்கு வழங்கி இருக்கும் பெரும் பாக்கியம் காலமாகும்.

நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவர்கள் மட்டும் தான் தங்களது வாழ்வில் நிறைவு செய்தும் சாதித்தும் இருக்கின்றார்கள்.

உங்களின் ஒரு வாரத்திற்கான நேர அட்டவணையை உருவாக்குங்கள். உதாரணமாக, திங்கள் காலை என்ன செய்வீர்கள்? நீங்கள் அலுவலகத்துக்குப் போகிறவராக இருந்தால் எழுதுங்கள். எத்தனை மணிக்கு வீடு திரும்புவீர்கள்? காலை உணவு, மதிய உணவு, தேநீர் என உணவுப் பழக்கவழக்கத்தையும் தொடர்ச்சியான நேரங்களில் முறைப்படுத்துங்கள்.

குடும்பத்துக்கு, சொந்த பந்தங்களுக்கு நண்பர்களுக்கு, உடற்பயிற்சி செய்வதற்கு, இவ்வளவு ஏன்? இயற்கைத் தேவைகளை நிறைவு செய்வதற்கு உட்பட எல்லாவற்றையும் நேரம் குறித்து செய்யுங்கள்.

இவற்றில் தினமும் செய்ய வேண்டியது, வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்ய வேண்டியது, மாதம் செய்ய வேண்டியது, சிறப்பு நிகழ்ச்சி என அனைத்தையும் எழுதி வையுங்கள்.

எதையும் யாரிடமும் ஒப்புக் கொள்வதற்கு முன் உங்களிடம் அந்த நேரம் வேறெதற்கும் ஒப்புக் கொள்ளாமல் இருக்கின்றதா என்று பாருங்கள். “நேரமில்லை! நான் ஏற்கனவே வேறு வேலையை ஒப்புக் கொண்டிருக்கின்றேன்’ என்று கூறினால் தவறாக நினைத்து விடுவார்கள் என்று கற்பனை செய்யாதீர்கள்.

ஓரிடத்திற்கு, ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பயணித்துச் செல்ல, பயண தூரத்தில் ஏதேனும் தடங்கல்கள் இருக்கும் என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு புறப்படுங்கள்.

நபி (ஸல்) அவர்கள் நபியாக அல்லாஹ்வால் நியமிக்கப்பட்டு அவர்கள் வாழ்ந்த 23 ஆண்டு கால வாழ்க்கையில், ஒரு மனிதன் தனது நேரத்தை எப்படி முறைப்படுத்திப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு ஒரு பெரிய முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள்.

கட்டுப்பாடு

ஒரு மனிதர் எதற்கெடுத்தாலும் எரிச்சல் அடைபவராகவும் விரைவில் கோபப்படுபவராகவும் இருந்தால் மற்றவர்கள் அவரை கலகலப்பில்லாத, அன்பு பொறுமையில்லாத, கரடுமுரடான மனிதர் என்று தான் புரிந்து கொள்வார்கள். இத்தகைய குண நலத்துடன் ஒருவர் நிர்வாகியானால் அவர் சார்ந்த நிர்வாகம் ஒன்றுமில்லாமல் போவதற்கு வேறு எந்தக் காரணமும் தேவையில்லை.

“ஒரு மனிதனின் பாரம்பரியம், அவன் வாழும் சூழல் ஆகியவை அவனது குண நலன்களை முடிவு செய்பவையாக இருக்கின்றன’ என்று இன்றைய ஒழுக்கவியல் கள ஆய்வுகள் சொன்னாலும் இது இறைவனின் அருள் என்று இஸ்லாம் கூறுகின்றது.

இதற்கான பயிற்சியை ஏக இறைவன் அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்குகின்றான்.

போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் குறைவான நேரம் தவிர நின்று வணங்குவீராக! அதில் பாதியளவு அல்லது அதை விடச் சிறிதளவு குறைத்துக் கொள்வீராக! அல்லது அதை விட அதிகமாக்கிக் கொள்வீராக! குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக! உம் மீது கனமான சொல்லை நாம் போடுவோம். இரவில் எழுவது மிக்க உறுதியானதும் சொல்லைச் சீராக்குவதுமாகும். (முஹம்மதே!) பகலில் உமக்கு நீண்ட பணி உள்ளது. உமது இறைவனின் பெயரை நினைப்பீராக! அவனிடம் முற்றிலும் சரணடைவீராக!

(அல்குஆன்: 73:1-8)

(முஹம்மதே!) உமக்கு உபரியாக இருக்கும் நிலையில் இரவில் இதன் மூலம் (குர்ஆன் மூலம்) தஹஜ்ஜுத் தொழுவீராக! புகழப்பட்ட இடத்தில் உமது இறைவன் உம்மை எழுப்பக் கூடும்.

(அல்குஆன்: 17:79)

இவற்றைக் கீழ்வரும் பயிற்சியாக வரிசைப்படுத்தலாம். கடமையான வணக்கங்கள் போக,

  • தஹஜ்ஜத் தொழுதல்
  • குர்ஆன் ஓதுதல்
  • எப்போதுமே இறை நினைவுடனிருத்தல்
  • அல்லாஹ்விடமே சரணடைதல் (தவக்கல்)
  • பிரார்த்தனைகளைத் தொடர்ந்து செய்து வருதல்

போன்ற பயிற்சிகளைத் தொடர்ச்சியாகச் செய்து வந்தால் கட்டுப்பாடுள்ள மனிதனாக, பொறுமை அன்பு நிறைந்து காணப்படுவார். இனிப்பை ஈ மொய்ப்பது போல் மக்கள் அவரைச் சூழந்திருப்பார்கள். மாறாக, கடுகடுப்பு, கடுமை உள்ளவராக இருந்தால் அனைவரும் ஓடிப் போய் விடுவார்கள்.

(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.

(அல்குர்ஆன்: 3:159)

இந்த வசனத்தை ஒரு இஸ்லாமிய நிர்வாகிக்கான அடிப்படை விதிகள் என்று கூறலாம்.

எச்சரிக்கை! உங்களை மற்றவர்கள் எளிதில் கோபப்படுத்தி விடலாம் என்ற அளவுக்கு சுய கட்டுப்பாடில்லாத மனிதராக நீங்கள் இருந்தால் நீங்கள் நிர்வாகியாக இருப்பதற்கு, இஸ்லாமிய நிர்வாகியாக இருப்பதற்கான அடிப்படைத் தகுதி உங்களிடம் இல்லை என்பது பொருள்.

தாராள மனம்

பொதுவாகவே ஒருவர் தாராள மனம் படைத்தவர் என்றால், அவர் பொருளாதாரத்தைக் கணக்குப் பார்க்காமல் தேவையுடையவர்களுக்குச் செலவு செய்வார். இது தாராள மனம் என்பதன் ஒரு வெளிப்பாடு மட்டும் தான்.

ஒரு இஸ்லாமிய நிர்வாகிக்கு இதையும் தாண்டி நிரம்பி வழியும் மனப்பக்குவம் இருக்க வேண்டும். இது அன்பு, பெருந்தன்மை, இரக்கம், திறந்த மனது, பொறாமை துளியளவும் இல்லாமை போன்றவை நிறைந்து வழிய வேண்டும்.

இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் அனுபவித்துக் கொள்ளும் உரிமை எல்லா மக்களுக்கும் உண்டு என்ற அடிப்படையில் மற்றவர்களின் உணர்வுகள், ஆசைகள், விருப்பு வெறுப்புகள், தேவைகள் போன்றவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தாராளத் தன்மை இல்லாத ஒருவர் இறுகிய மனதுடன் காணப்படுவார். இவர்களை இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளலாம். மற்றவர்களின் முன்னேற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இவர்களே தீர்மானித்துக் கொள்வார்கள். மற்றவர்களின் வெற்றிகளையும் சாதனைகளையும் மகிழ்ச்சியையும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.

ஆனால் வெளிப்படையில், “உங்கள் முன்னேற்றம் மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது’ எனக் கூறுவார்கள். அதே வேளை, முன்னேற்றத்தைத் தடுக்க உள்வேலை செய்வார்கள். இது மிகவும் நுணுக்கமானதாக இருக்கும். உதாரணமாக, தன்னுடன் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் தன் அளவோ அதற்கு மேலோ உயர்ந்து விடுவார் என அஞ்சினால் அவரை வேறொரு நிறுவனத்தில் தாமே வேலையில் சேர்த்து விடுவார்கள்.

இத்தகைய மனம் படைத்தவர்கள் நல்ல குழுப் பணியாளராக இருக்க மாட்டார்கள். ஏனென்றால் தனது பதவியையும் புகழையும் மற்றவர்கள் பெற்றுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் மற்றவர்களிடம் நெருங்க மாட்டார்கள்.

இந்தக் குணமுடையவர்கள் முடிவெடுக்கும் அதிகாரம் படைத்த குழுக்களில் இடம் பெறுவது அந்த நிர்வாகத்திற்குப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். பல நேரங்களில் தனது பதவி, புகழுக்குப் போட்டியாக இவர்கள் கருதுகின்ற ஒருவரை ஓரம் கட்டுவதற்கு, தனக்கெதிராகப் பேசுபவர்களைப் பழி தீர்த்துக் கொள்வதற்கே ஆலோசனைக் கூட்டங்களைப் பயன்படுத்துவார்கள்.

ஆலோசனைக் கூட்டங்களில் ஆரோக்கியமான ஆலோசனைகள், விமர்சனங்கள் அனைத்தையும், அதை எடுத்து வைப்பவர்களின் முன்னேற்றத்திற்கான படிகள் என்ற கண்ணோட்டத்துடனே பார்ப்பார்கள். அதனால் நல்ல ஆலோசனைகளையும் மட்டம் தட்டுவார்கள்.

தமது நிறுவனத்தில் குழுவில் சேர்ந்து பணிபுந்த ஒருவர் இதை விட்டுப் போய் விட்டார் என்பதற்காக அவருக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்த வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசுவார்கள்.

விமர்சிப்பவர்களிடம், குறைகளை சுட்டிக் காட்டுபவர்களிடம் வெளிப்படையாக ஒப்புக் கொள்வது போல் காட்டினாலும் மனதில் அவர்களுக்கெதிரான குரோதத்தை வளர்த்துக் கொள்வார்கள். இத்தகைய இறுக்கமான மனதுடன் ஒருவர் இஸ்லாமிய நிர்வாகியாக இருப்பது மிகவும் ஆபத்தானது.

ஒரு இஸ்லாமிய நிர்வாகியிடம் இருக்க வேண்டிய தாராள மனத்திற்கு நபி (ஸல்) அவர்கள் தான் முன் உதாரணம். தான் பிறந்து வளர்ந்த ஊரிலிருந்து துரத்தப்பட்டு, அந்த ஊரில் வாழும் போது அடி உதைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்த போதும் உலக வரலாற்றிலேயே எந்த எதிர்ப்புமின்றி மக்காவில் வெற்றி வீரராக அவர்கள் நுழைந்த போது அத்தனை பரம எதிரிகளுக்கும் பொது மன்னிப்பு அளித்தார்கள்.

அத்தனை அதிகாரங்களும் பெற்றிருந்தும் “நீங்கள் பங்கு வைத்ததில் சரி சமமில்லை’ என விமர்சிக்கும் தைரியம் நிறைந்த சக தோழர்களுக்குப் பொறுமையாகப் பதிலளித்தார்கள்.

இவை நபியவர்களின் நிரம்பி வழியும் மனப்பான்மையின் சில உதாரணங்கள்.

 

அடுத்த தலைமுறை நிர்வாகிகளை

அடையாளம் காட்டுதல்

 

ஒருவர் எவ்வளவு வெற்றிகரமான நிர்வாகியாக இருந்தார் என்பதற்கு அவர் பதவி, பொறுப்புகளிலிருந்த காலத்தில் செய்த சாதனைகள் மாத்திரம் அளவுகோல்கள் இல்லை. அவர் விட்டுச் செல்லும் பணிகளைத் தொடர அடுத்த தலைமுறை நிர்வாகிகளைப் பயிற்றுவித்து மக்களுக்கும் அடையாளப்படுத்த வேண்டும்.

தனது பதவிக்கு புகழுக்கு ஆபத்து என்ற எண்ணத்தில் மற்றவர்களை மட்டம் தட்டும் ஒருவர் தொலைநோக்குப் பார்வையுடன் ஒருவரைப் பயிற்றுவிப்பார் என்று எதிர்பார்ப்பதே தவறு.

அதே போல், “நான் இந்தப் பதவியிலிருந்து, பொறுப்பிலிருந்து வெளியேறிய பிறகு, எனக்குப் பின் இதை யாரும் நடத்த இயலவில்லை என்று ஊர் பேச வேண்டும்’ என்பதற்காகத் தனது பணிகளில் பலவற்றை மறைத்து வைப்பது குறுகிய மனப்பான்மையின் வெளிப்பாடு.

நபி (ஸல்) அவர்கள் இரண்டு வகையான பெரும் பணிகளை விட்டுச் சென்றார்கள். ஒன்று, இஸ்லாத்தை எடுத்துக் கூறுவது. மற்றொன்று, தனது ஆட்சித் தலைவர் பொறுப்பு.

இஸ்லாத்தை எடுத்துக் கூறும் பணியை ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். அதை அனைவருக்கும் எதையும் மறைக்காமல் கூறியும் விட்டர்கள்.

(புகாரி: 1740, 1741)

ஆட்சிப் பொறுப்பைப் பொறுத்த வரை தனக்குப் பின் இருவரை அடையாளம் காட்டினார்கள். அவர்கள் எந்த அளவுக்குத் திறமைசாலிகள் எனவும் சூசகமாகக் கூறினார்கள்.

(புகாரி: 3676)