முஹம்மது(ஸல்) அவர்களின் அழகிய வரலாறு-3

நூல்கள்: முஹம்மது (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு

முஹம்மது(ஸல்) அவர்களின் அழகிய வரலாறு-3

இறைவனின் தூதரா?

திடீரென்று வந்து ஒருவர் “படி ” என்றதும் நபியவர்கள் குழப்பமடைந்தார்கள். நான் படிக்கத்தெரிந்தவன் இல்லை என்றார்கள். மீண்டும் அவர் படி என கூற நபியவர்கள் மீண்டும் அதே பதிலை கூறினார்கள். வந்தவர் நபியவர்களை இறுக்க அணைத்து திருமறையின் 96வது அத்தியாயத்தின் முதல் ஐந்து வரிகளை கற்று தருகிறார். அதாவது…”

اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَقَ‌‏

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.

خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ‌‏

“அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.

اِقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُۙ‏

ஓதுவீராக: உம் இறைவன் கண்ணியமிக்கவன்.

الَّذِىْ عَلَّمَ بِالْقَلَمِۙ‏

அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.

عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ‏

மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.

(அல்குர்ஆன்: 96:1-5)

வந்தவர் யார் என்று நபியவர்களுக்கு தெரியாது. பதற்றமும் குழப்பமும் அவர்களை தொற்றிக் கொள்ள, அவர்கள் ஹிரா குகையிலிருந்து வீட்டிற்கு விரைந்தோடி வருகிறார்கள். குளிர்காய்ச்சலில் நடுங்கியபடி. மனைவி கதீஜா(ரலி) அவர்களிடம் போர்த்திவிட பணிக்கிறார்கள்.

பிறகு சமாதானம் அடைந்து மனைவியிடம் நடந்ததை கூற… கதீஜா(ரலி ) கூறிய வார்த்தைகள் நபியவர்களின் மேன்மைக்கு சிறந்த சான்று. மனைவியிடம் நற்பெயர் வாங்குவது அவ்வளவு எளிதல்ல என்று அனுபவமுள்ள அனைவரும் அறிந்த ஒன்று…

கதீஜா(ரலி) சொன்னார்கள்:

“அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்; வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள்’ என்றார்கள்”

பிறகு கதீஜா(ரலி) தன் உறவினர் வரகாவிடம் கூட்டி செல்கிறார்கள். வரகா யூத கிறிஸ்தவ வேதங்கள் தோரா மற்றும் இஞ்சீலை படித்த ஒரு அறிஞர். கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டவர். அவர் தான் உணர்த்துகிறார் நபியவர்கள் யார் என்று.

தூதரும்வமிசமும்

அன்பாளனின் பெயரால்….

வந்தவர் யார் என்று வரகா அறிந்துகொண்டார். அவர் வேறுயாருமில்லை, இறைத்தூதர் மோஸஸ் (மூஸா)(அலை)அவர்களிடம் வந்த ஜிப்ரீல்(காப்ரயீல்) தான் அவர்…

நபி(ஸல்) அவர்களிடம் சொன்னார் வரகா: “உங்களை இந்த ஊரை விட்டு துரத்தும் போது உங்களுடன் நான் பலமிக்கவனாக இருக்கவேண்டுமே…” நபி(ஸல்) : “என்னது என் சமூகம் என்னை துரத்துமா”?

தன்னை நேர்மையாளர் என்று புகழ்சூட்டி மகிழ்ந்த, தன் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கின்ற சமூகம் துரத்துமா?? நபியவர்கள் யோசித்தார்கள்….

வரகா : “உன்னை மட்டுமல்ல இதற்கு முன் அனுப்பப்பட்ட ஒவ்வொரு இறைத்தூதரையும் அவரது சமூகம் அவ்வாறு தான் செய்தது..” தான் ஒரு இறைத்தூதர் என்று அப்போது தான் நபியவர்கள் அறிந்தார்கள்.

  • சிறுவயது முதலே சிலைகளை வணங்காத
  • நல்லொழுக்கமும் ஆளுமையும் நிறைந்த
  • உண்மைத்தன்மைக்கு உலகத்தாரால் சான்றளிக்கப்பட்ட

தன்னைப்பற்றி மட்டுமல்லாமல் தன் சமூகத்தையும் உலகத்தையும் பற்றி மிகவும் கவலைகொள்ளும் ஒரு மனிதரை இறைவன் தன் தூதராக தேர்ந்தெடுத்து கொண்டான். இதற்கு முன்னால் ஈஸா எனும் இயேசுவும், தாவூத் எனும் தாவீதும், சல்மான் எனும் சாலமோனும்,மூஸா எனும் மோஸஸும் எதற்கு இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ அதே பணிக்கு நபியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்…

வரகாவுக்கு எப்படி தெரிந்தது? அவர் இறைத்தூதர் என்று…

கிறிஸ்தவர்களின் இஞ்சீலிலும் யூதர்களின் தவ்ராத்திலும் இறுதிநபியின் அடையாளங்களும் முன்னறிவிப்புகளும் இடம்பெற்றிருந்தன. அதனை கற்றறிந்ததால் வரகா முஹம்மது (ஸல்) அவர்களை நபியென அறிந்துகொண்டார்.

முன்னறிவிப்பு

புகழுக்குரியவனின் பெயரால்…..

வரகா முந்தைய வேதங்களில் தேர்ச்சி பெற்றவராகையால் வேதங்களின் முன்னறிவிப்பின் படி இவர்(முஹம்மது ஸல்) தான் இறைத்தூதர் என்பதை அறிவித்தார். மேலும்..

முந்தைய வேதங்களில் முஹம்மது (ஸல்) பற்றிய செய்தி உள்ளதை அன்றைய காலத்தில் வாழ்ந்த அபீசினியா(எத்தியோப்பியா) நாட்டு மன்னர் நஜ்ஜாஷியும் ரோம பேரரசர் ஹெர்குலிஸ் அங்கீகரித்து உறுதிப்படுத்திய செய்திகள் பின்னால் வர இருக்கின்றன.

“எழுதப்படிக்கத்தெரியாத இத்தூதரை, இந்த நபியை அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும் இஞ்சீலிலும் இவரைப்பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர் நன்மையை ஏவுகிறார்..தீமையை விட்டும் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார்…தூய்மையற்றவைகளை அவர்களுக்கு தடை செய்கிறார்.

அவர்களுடைய சுமையையும் அவர்கள் மீதிருந்த விலங்குகளையும் அப்புறப்படுத்துகிறார்…இவரை நம்பி இவரை கண்ணியப்படுத்தி இவருக்கு உதவியும் செய்து இவருடன் அருளப்பட்டுள்ள ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்..”

(அல்குர்ஆன்: 7:157)

இது திருமறை குர்ஆனில் முந்தைய வேதங்களில் உள்ள முன்னறிவிப்பை சொல்கிறது. பிறகு

இதுபற்றிய ஆழ்ந்த சிந்தனை மற்றும் குழப்பத்தில் மூழ்கிய முஹம்மது(ஸல்) அவர்களுக்கு தெளிவு பிறந்தது. தன் மீதுள்ள பொறுப்பும் சுமையும் எத்தகையது என்பதை நபியவர்கள் உணர்ந்தார்கள்….

நாட்கள் சென்றன, அந்த வானவரை நெடுநாட்கள் காணமுடியவில்லை. எந்த இறைச்செய்தியும் வெளிப்பாடும் வரவில்லை. ஆனால் ஆரம்பம் முதலே தெளிவான உண்மை கனவுகள் அவருக்கு வந்துகொண்டே தான் இருந்தன. ஒரு நாள்

முஹம்மது(ஸல்) சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். வானத்தில் ஏதோ தெரிவது போலிருந்தது, மேலே தலை உயர்த்தி பார்த்த போது அங்கே வானவர் ஜிப்ரீல் வானத்திற்கும் பூமிக்கும் மத்தியில் அந்தரத்தில் ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்திருந்தார்.

திடுக்கமுற்று பயந்து திரும்பிய நபியவர்கள் வீட்டிற்கு ஓடி சென்று, போர்த்திவிடுங்கள்” என்று கூறலானார். போர்த்திக்கொண்டு கண்விழிக்காமல்  அப்படியே பயத்தில் படுத்துக்கொண்டார்..

அப்போது ஜிப்ரீல் (அலை) வந்து..

“(போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே!

நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக.

மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக..

உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக.

அன்றியும் அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக.”

(அல்குர்ஆன்: 74:1-5)

என்ற வசனங்களை கற்றுதந்தார்..

பின் அடிக்கடி அவருக்கு வஹி (வேதவெளிப்பாடு) வர தொடங்கியது…