ஃபாத்திஹா அத்தியாயத்தின் சிறப்புகள்

நூல்கள்: திருக்குர்ஆன் சூராக்களின் சிறப்பு

ஃபாத்திஹா அத்தியாயத்தின் சிறப்புகள்

திருக்குர்ஆனில் யாஸின், வாகிஆ, முல்க் போன்ற அத்தியாயங்களின் சிறப்புகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்களில் பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் இருப்பதைப் போன்று இந்த அத்தியாயம் தொடர்பாக வரக்கூடிய ஹதீஸ்களிலும் காணப்படுகிறது. எனினும் இந்த அத்தியாயம் தொடர்பாக ஏராளமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை முதலில் பார்த்து விட்டு பலவீனமான செய்திகளைப் பின்னர் பார்க்கலாம்.

 

தேள் கடிக்கு மருந்து

நபித்தோழர்களில் சிலர் அரபுப் பிரதேசத்தின் ஒரு கூட்டத்தினரிடம் வந்து தங்கினார்கள்.  ஆனால் அந்தக் கூட்டத்தினர் அவர்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை.  இந்நிலையில் அந்தக் கூட்டத்தின் தலைவனை (தேள்) கொட்டிவிட்டது.  “உங்களிடம் மருந்தோ அல்லது மந்திரிப்பவரோ உள்ளனரா?” என்று அவர்கள் கேட்டனர்.

அதற்கு நபித்தோழர்கள், “நீங்கள் எங்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. எனவே எங்களுக்கு ஒரு கூலியை நீங்கள் நிர்ணயித்தால் நாங்கள் உங்களுக்கு உதவுவோம்” என்று கூறினார்கள்.  அந்தக் கூட்டத்தினர் சில ஆடுகள் தருவதாகக் கூறினார்கள்.

அதன் பின்னர் ஒருவர், “அல்ஹம்து’ சூராவை ஓதி உமிழ்ந்தார். இதனால் அவர் குணமடைந்து விட்டார்.  அவர்கள் ஆடுகளைக் கொடுத்தனர். “நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றி விசாரிக்காது இதைப் பெற மாட்டோம்” என்று கூறி, நபி (ஸல்) அவர்களிடம் வந்து இது பற்றிக் கேட்டார்கள்.

இதைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.  “அல்ஹம்து சூரா ஓதிப் பார்க்கத் தக்கது என்று உனக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டு விட்டு “எனக்கும் அந்த ஆடுகளில் ஒரு பங்கைத் தாருங்கள்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

(புகாரி: 2276)

இதே ஹதீஸ்(புகாரி: 5007, 5736, 5749)ஆகிய எண்களிலும்,(முஸ்லிம்: 4428, 4429)(திர்மிதீ: 1989)(அபூதாவூத்: 3401, 2965)இப்னுமாஜா-2147(அஹ்மத்: 11046, 10972, 10648, 10562)ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.

திர்மிதியின் மற்றொரு (திர்மிதீ: 1989) அறிவிப்பில்  முப்பது ஆடுகள் கொடுத்தார்கள் என்றும் பாத்திஹாவை ஏழு தடவை ஓதினார் என்றும் இடம் பெற்றுள்ளது.

(அஹ்மத்: 10972) என்ற நூலில், தேள் கொட்டிய இடத்தில் ஓதி துப்பினார் என்று இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸிலிருந்து தேள் மற்றும் விஷ ஜந்துக்கள் தீண்டினால் பாத்திஹாவை வைத்து ஓதிப் பார்க்கலாம் என்று நமக்கு தெரிகிறது. என்றாலும் நிவாரணம் கிடைப்பது அவர்களின் இறையச்சத்தைப் பொறுத்தது. மேலும் நபி (ஸல்) அவர்கள் நோய்க்கு மருத்துவம் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்கள். எனவே மருத்துவம் செய்வதுடன் இறைவனிடமும் நோய் நிவாரணத்திற்கு துஆச் செய்ய வேண்டும்.

 

மகத்தான அத்தியாயம்

நான் ஒரு முறை தொழுது கொண்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் தொழுது முடிக்கும் வரை அவர்களுடைய அழைப்புக்குப் பதில் கொடுக்கவில்லை. தொழுது முடித்த பின் அவர்களிடம் சென்றேன். “நான் அழைத்தவுடன் வருவதற்கு என்ன தடை?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டனர். “அல்லாஹ்வின் தூதரே! தொழுது கொண்டிருந்தேன்” என்று நான் கூறினேன்.

“நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு உயிர் அளிக்கக் கூடிய ஒரு காரியத்திற்காக இத்தூதர் அழைக்கும் போது இத்தூதருக்கும் அல்லாஹ்வுக்கும் பதிலளியுங்கள்’

(அல்குர்ஆன்: 8:24) என்று கூறவில்லையா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு, “இந்தப் பள்ளியிலிருந்து நீ புறப்படுவதற்கு முன் குர்ஆனில் உள்ள மகத்தான ஒரு அத்தியாயத்தை உனக்கு நான் கற்றுத் தருகிறேன்” என்று கூறி எனது இரு கையையும் பிடித்துக் கொண்டனர்.

அவர்கள் பள்ளியிலிருந்து புறப்படுவதற்குத் தயாரான போது, “அல்லாஹ்வின் தூதரே! குர்ஆனில் உள்ள மகத்தான ஓர் அத்தியாயத்தைக் கற்றுத் தருவதாகக் கூறினீர்களே!” என்று நினைவு படுத்தினேன். அவர்கள் “ஆம்’ அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்பது தான் அந்த அத்தியாயம் என்று கூறினார்கள்.

(புகாரி: 4474)

இதே ஹதீஸ்(புகாரி: 4647, 4703, 5006)(நஸாயீ: 904)(அபூதாவூத்: 1246)(இப்னு மாஜா: 3775)(அஹ்மத்: 15171, 17117)தாரமி-1454, 3237 ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸ் திர்மிதீ (2800வது) அறிவிப்பில் “தவ்ராத், இன்ஜீல் மற்றும் ஸபூர் ஆகிய வேதங்களில் இல்லாத மகத்தான சூராவை கற்றுத் தரட்டுமா?” என்று கேட்டதாக இடம் பெற்றுள்ளது.

 

குர்ஆனின் அன்னை

“திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்கள் (அல்ஃபாத்திஹா அத்தியாயம்) குர்ஆனின் அன்னையும், மகத்தான குர்ஆனும் ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 4704)

 

இறைவனிடம் உரையாடும் அத்தியாயம்

தொழுகையில் ஓதுவதை எனக்கும் எனது அடியானுக்கும் மத்தியில் பங்கிட்டுள்ளேன். என் அடியான் கேட்டவை அவனுக்கு உண்டு. “அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்’ என்று ஒருவன் கூறும் போது “என்னை என் அடியான் புகழ்ந்து விட்டான்’ என்று அல்லாஹ் கூறுகிறான். அவன் “அர்ரஹ்மானிர் ரஹீம்’ என்று கூறும் போது “என் அடியான் என்னைப் பாராட்ட வேண்டிய விதத்தில் பாராட்டி விட்டான்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.

“மாலிக்கி யவ்மித்தீன்’ என்று கூறும் போது “என்னைக் கவுரவப்படுத்த வேண்டிய விதத்தில் கவுரவப்படுத்தி விட்டான்’ என்று அல்லாஹ் கூறுகிறான். “இய்யாக நஃபுது வ இய்யாக நஸ்தயீன்’ என்று கூறும் போது “இதுதான் எனக்கும் எனது அடியானுக்கும் இடையே உள்ள உறவாகும்’ என்று அல்லாஹ் கூறுகிறான். “இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம்’ என்று கூறும் போது “என் அடியானின் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும்’ என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(முஸ்லிம்: 655)

 

ஒளிச்சுடர்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அமர்திருந்த போது தமக்கு மேலிருந்து ஒரு சப்தம் வருவதைக் கண்டார். அப்போது வானத்தை அன்னாந்து பார்த்த ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இதோ! வானில் இதுவரை திறக்கப்பட்டிராத ஒரு கதவு இப்போது திறக்கப்பட்டிருக்கிறது” என்று கூறினார். அந்தக் கதவு வழியாக ஒரு வானவர் இறங்கி வந்தார். அப்போது ஜிப்ரீல், “இதோ! இப்போது தான் இந்த வானவர் பூமிக்கு வந்திருக்கிறார்.

இதற்கு முன் அவர் பூமிக்கு இறங்கியதில்லை” என்று கூறினார். அவ்வானவர் ஸலாம் கூறிவிட்டு, “உங்களுக்கு முன் எந்த இறைத்தூதருக்கும் வழங்கப்பட்டிராத இரு ஒளிச்சுடர்கள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நற்செய்தியைப் பெறுங்கள். அல் ஃபாத்திஹா அத்தியாயமும் அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களுமே அவை! அவற்றிலுள்ள எதை நீங்கள் ஓதினாலும் அது உங்களுக்கு வழங்கப் பெறாமல் இருப்பதில்லை” என்று கூறினார்.

(முஸ்லிம்: 1472),(நஸாயீ: 903)

 

பைத்தியத்திற்கும் மருந்து

அலாகா பின் சுகார் (ரலி) அவர்கள் ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றார்கள். அம்மக்கள், “நீர் இந்த மனித(தூத)ரிடமிருந்து நல்ல செய்தியைக் கொண்டு வந்திருக்கிறீர். எங்களுக்காக இந்த மனிதருக்கு ஓதிப் பார்ப்பீராக!” என்று கூறி விட்டு, சங்கலியால் பிணைக்கப்பட்ட ஒரு பைத்தியக்காரரை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்.

காலையிலும் மாலையிலும் சூரத்துல் பாத்திஹாவின் மூலம் ஓதிப் பார்த்தர்கள். பின்பு அவர் முடிச்சியிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவரைப் போன்று மகிழ்ச்சியில் திளைத்தார். இதற்காக அம்மக்கள் அவருக்கு (ஆடுகளை அன்பளிப்பு) வழங்கினார்கள்.

இதை அவர் நபி (ஸல்) அவர்களிடத்தில் சொன்ன போது, “நீ அதில் சாப்பிடு! என்னுடைய வாழ்நாள் மீது சத்தியமாக! மக்களில் சிலர் தவறானதன் மூலம் மந்திரித்துச் சாப்பிடுகிறார்கள். ஆனால் நீர் உண்மையைக் கொண்டு சாப்பிடுகிறீர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அபூதாவூத்: 2966),(அஹ்மத்: 20833, 20834)

 

மற்ற வேதங்களில் இல்லாத அத்தியாயம்

அல்ஃபாத்திஹா அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள கருத்துக்களைப் போன்று வேறு எந்த வேதத்திலும் குறிப்பிடப்படவில்லை.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடத்தில் உபை (ரலி) அவர்கள் உம்முல் குர்ஆன் (ஃபாத்திஹா) அத்தியாயத்தை ஓதிக் காட்டினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாகச் சொல்கிறேன். தவ்ராத், இன்ஜீல், ஸபூர், புர்கான் ஆகிய வேதங்களில் இது போன்று அருளப்படவில்லை. இதுதான் திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களைக் கொண்டதும், மகத்துவம் மிக்க குர்ஆனும் ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அஹ்மத்: 8328)

இதே ஹதீஸ்(திர்மிதீ: 2800, 3049, 3050)(நஸாயீ: 905)(அபூதாவூத்: 1245)தாரமி-3238 ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நாம் பாத்திஹா அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக வந்துள்ள ஆதாரப்பூர்வமான செய்திகளைப் பார்த்தோம். இப்போது பாத்திஹா அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக வந்துள்ள ஆதாரமற்ற, பலவீனமான செய்திகளைத் தெரிந்து கொள்வோம்.

 

ஒவ்வொரு நோய்க்கும் மருந்து?

பாத்திஹா அத்தியாயத்தில் ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: தாரிமி-3236

இந்த ஹதீஸை அப்துல் மலிக் பின் உமைர் என்பவர் அறிவித்துள்ளார். இவர் தாபியீ ஆவார். (நபித்தோழர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்தவர்) நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, நபித்தோழர்கள் மட்டுமே அறிவிக்க முடியும். எனவே அப்துல் மலிக் பின் உமைர் அவர்களின் கருத்தை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.

 

அனைத்திலிருந்தும் பாதுகாப்பு?

நீ உன்னுடைய விலாப்புறத்தை படுக்கையில் வைத்து பாத்திஹா அத்தியாயத்தையும் குல்ஹுவல்லாஹு அஹத் என்று துவங்கும் அத்தியாயத்தையும் ஓதினால் மரணத்தைத் தவிர மற்ற அனைத்திலிருந்தும் பாதுகாப்புப் பெற்று விடுவாய் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: பஸ்ஸார்

இந்த செய்தி பஸ்ஸார் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடும் ஹைஸமீ அவர்கள், இதில் கஸ்ஸான் பின் உபைத் என்ற பலவீனமானவர் இடம் பெற்றுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நூல்: மஜ்மவுஸ் ஸவாயித், பாகம்: 10, பக்கம்: 121

 

மூன்றில் ஒரு பங்கு நன்மை?

குல்ஹுவல்லாஹு அஹத் மற்றும் பாத்திஹா அத்தியாயத்தையும் ஒருவர் ஓதினால் அவர் திருக்குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கை ஓதிய நன்மை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

யார் பாத்திஹா அத்தியாயத்தையும் குல்ஹுவல்லாஹு அஹ்த் (என்று துவங்கும் அத்தியாயத்தையும்) ஓதுவாரோ அவர் திருக்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதியவரைப் போன்றவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூற்கள்: தப்ரானீ-அல்அவ்ஸத், பாகம்: 5, பக்கம்: 32

முஸ்னத் ஹுமைத், பாகம்: 1, பக்கம்: 227

தப்ரானியின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள சுலைமான் பின் அஹ்மத் அல்வாஸிதி என்பவரை அறிஞர்கள் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இமாம் புகாரி அவர்கள், இவர் மீது ஆட்சேபணை இருக்கின்றது என்றும், இப்னு அதீ அவர்கள், இவர் ஹதீஸைத் திருடுபவர் என்றும், யஹ்யா அவர்கள், இவர் பொய்யர் என்றும், நஸயீ அவர்கள், இவர் பலவீனமானவர் என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.

நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 3, பக்கம்: 277

முஸ்னத் ஹுமைதில் இடம் பெறும் அறிவிப்பாளர் தொடரில் அபான் அர்ரகாஸி என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் அறிஞர்களால் கைவிடப்பட்டவர். (மோசமானவர்)

நூல்: மதாலிபுல் ஆலிய்யா, பாகம்: 14 பக்கம்: 443

குல்ஹுவல்லாஹு அஹத் என்ற அத்தியாயத்திற்கு மட்டும் இந்தச் சிறப்பு உள்ளது என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம், “உங்களில் ஒருவர் இரவில் குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதி ஓதுவதற்குச் சக்தி பெறுவாரா?” என்று கேட்டார்கள். இது நபித்தோழர்களுக்கு சிரமமானது. பிறகு நபித்தோழர்கள், “எங்களில் எவர் அதற்கு சக்தி பெறுவார்?” என்று கேட்டனர். “குல் ஹுவல்லாஹு அஹத் அல்லாஹு ஸமத், குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதி ஓதியதற்கு நிகரானதகும்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

(புகாரி: 5015)

 

அர்ஷின் புதையல்?

“உனக்கு நான் பாத்திஹா அத்தியாயம் கொடுத்திருக்கிறேன். அது அர்ஷுடைய பொக்கிஷங்களில் ஒன்று. அதை எனக்கும் உனக்குமாக பாதியாக பங்கு வைத்து விட்டேன்’ என்று அல்லாஹ் கூறியிருப்பது அவன் எனக்கு வழங்கிய பாக்கியங்களில் உள்ளதாகும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

நூல்: ஷுஅபுல் ஈமான், பாகம்: 2, பக்கம்: 448

இதன் அறிவிப்பாளர் தொடரில் ஸாலிஹ் அல் முர்ரி என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்.

ஸாலிஹ் அல் முர்ரீ என்பவர் ஹதீஸ் துறை அறிஞர்களால் கைவிடப்பட்டவர் என்று இமாம் நஸயீ குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: அல்லுஃபாவு வல் மத்ரூகீன், பாகம்: 1, பக்கம்: 57

 

அர்ஷின் கீழிலிருந்து இறங்கிய அத்தியாயம்?

நான்கு ஆயத்துகள் அர்ஷுக்குக் கீழ் இருந்து இறங்கியது. இதைத் தவிர வேறு ஆயத்துகள்  எதுவும் இறங்க வில்லை. 1. உம்முல் குர்ஆன். இது நம்மிடத்தில் உள்ள தாய் ஏட்டில் இருக்கிறது, இது உயர்ந்ததும் ஞானம் நிறைந்ததுமாகும் (43:4) என்று அல்லாஹ் கூறியுள்ளான். 2. ஆயத்துல் குர்ஸி 3. சூரத்துல் பகரா 3. சூரத்துல் கவ்ஸர் ஆகியவையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: தப்ரானீ – அல்முஃஜமுல் கபீர், பாகம்: 8, பக்கம்: 235

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அல் வலீத் பின் ஜமீல் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.

இவர் காஸிம் என்பவரின் மூலம் நிராகரிக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவிப்பவர் என்று இமாம் அபூஹாத்திம் அர்ராஸி அவர்கள் கூறுகிறார்கள்.

நூல்:அல்லுபாவு வல்மத்ருகீன், பாகம்: 3, பக்கம்: 217

 

தலையில் எழுதப்படும் அத்தியாயம்?

எந்தக் குழந்தை பிறந்தாலும் அதன் தலையில் பாத்திஹா அத்தியாயத்தின் ஐந்து வசனங்கள் எழுதப்படாமல் பிறப்பதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

நூற்கள் :தப்ரானீ -அல்முஃஜமுல் அவ்ஸத், பாகம்: 2, பக்கம்: 212

முஸ்னத் ஷாமியீன், பாகம்: 1, பக்கம்: 72, தாரிகுல் கபீர், பாகம்: 1, பக்கம்: 445

இச்செய்தியில் வலீத் பின் வலீத் என்பவர் இடம் பெற்றுள்ளார்.  இவர் பலவீனமானவராவார்.

இமாம் தாரகுத்னி மற்றும் அறிஞர்கள், இவர் ஹதீஸ் துறை அறிஞர்களால் கைவிடப்பட்டவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

நூற்கள்: மீஸனுல் இஃதிதால், பாகம்: 7, பக்கம்: 144

லிஸானுல் மீஸான், பாகம்: 6, பக்கம்: 228

 

இப்லீஸின் ஒப்பாரி?

“இப்லீஸ் ஒப்பாரி வைத்து அழுது, தன் தலை மீது மண்ணை வாரி அள்ளிப் போட்டுக் கொள்ள  வேண்டிய சந்தர்ப்பம் நான்கு தடவை அவனுக்கு ஏற்பட்டது. 1. அவன் சாபமிடப்பட்ட போது 2. அவன் வானுலகிலிருந்து பூமிக்குத் தூக்கி வீசப்பட்ட போது 3. நபி (ஸல்) அவர்களுக்கு நபிப் பட்டம் கொடுக்கப்பட்ட போது 4. நபி (ஸல்) அவர்களுக்கு பாத்திஹா அத்தியாயம் இறங்கிய போது” என்று முஜாஹித்  என்பவர் கூறுகிறார்.

நூல்: ஹில்யதுல் அவ்லியா, பாகம்: 3, பக்கம்: 299

இந்த செய்தி முஜாஹித் என்ற தாபியி மூலமும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூற்றாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது முஜாஹித் என்ற தாபியின் கூற்று என்பது தான் சரியானது என்று இமாம் தாரகுத்னீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: இலல் தாரகுத்னீ பாகம்: 8, பக்கம்: 23

முஜாஹித் என்பவர் தாபியீ ஆவார். (நபித்தோழர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்தவர்) ஒரு அத்தியாயத்திற்குக் குறிப்பிட்ட சிறப்புகள் உள்ளன என்று கூற வேண்டுமானால் அல்லாஹ்வோ அல்லது அவனது தூதரோ மட்டுமே கூற முடியும். எனவே முஜாஹித் அவர்களின் கருத்தை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.