அல்குர்ஆனை மறுக்கும் ஆலிம்கள் கூட்டம்-2
மார்க்கச் சட்டங்களை எடுத்துக் கூறும் பல குர்ஆன் வசனங்களை சுன்னத் ஜமாஅத் ஆலிம்கள் மறுக்கின்றார்கள், மக்களிடம் அவற்றை எடுத்துச் சொல்லாமல் மறைக்கிறார்கள் என்பதை கடந்த தொகுப்பில் பார்த்தோம்.
இஸ்லாமியக் கொள்கை மற்றும் இறைவனின் பண்பு குறித்து இன்னும் பல குர்ஆன் வசனங்களை நேரடியாக இந்த ஆலிம்கள் கூட்டம் மறுக்கின்றது. அத்தகைய குர்ஆன் வசனங்கள் என்ன கொள்கையை, நிலைப்பாட்டை போதிக்கின்றதோ அதற்கு நேர் எதிரான நிலைப்பாடுகளை எடுத்து அதனையே மக்களிடையே பிரச்சாரம் செய்கிறது இந்த உலமா (?) கூட்டம். அவை எந்தெந்த வசனங்கள்? ஆலிம்கள் கூட்டம் என்ன சொல்கிறது என்பது தொடர்பான விளக்கத்தை இத்தொடரில் காண்போம்.
மறைவில் நடப்பவற்றை அறிந்து கொள்ளும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கே உள்ளது. அவனைத் தவிர வேறு யாரும் மறைவானவற்றை அறிந்து கொள்ள மாட்டார். இந்தக் கருத்தை எண்ணற்ற இறை வசனங்கள் விளக்குகின்றன.
மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார்.
“வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக!
(அவன்) மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவன்; பெரியவன்; உயர்ந்தவன்.
மறைவானதை அல்லாஹ்வை தவிர வேறு யாரும் அறிய மாட்டார் என்பது குர்ஆன் கூறும் அடிப்படை இறைக் கோட்பாடாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட எந்த ஒரு இறைத்தூதரும் இறைவன் அறிவித்து கொடுத்தாலே தவிர மறைவானவற்றை தாமாக அறிந்து கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருக்கவில்லை.
இதை மக்கள் மனதில் பதிய வைக்கவே எங்களுக்கு மறைவானதை அறியும் சக்தி இல்லை என்று சமுதாய மக்களிடயே உரக்கச் சொல்லுமாறு அல்லாஹ் பல இறைத்தூதர்களுக்குப் பணித்திருக்கிறான். அவர்களும் அவ்வாறே பகன்றுள்ளார்கள் என்பதை திருக்குர்ஆன் வாயிலாக அறிகிறோம்.
“அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!
“இவரது இறைவனிடமிருந்து இவருக்குச் சான்று அருளப்பட்டிருக்க வேண்டாமா?” என்று அவர்கள் கேட்கின்றனர். “மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. நீங்களும் எதிர்பாருங்கள்! நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!
“என்னிடம் அல்லாஹ்வின் கருவூலங்கள் உள்ளன என்று உங்களிடம் கூற மாட்டேன். மறை வானவற்றையும் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் கூற மாட்டேன்.
அல்லாஹ்வைத் தவிர மறை வானவற்றை வேறு யாரும் அறிய மாட்டார் என்பது தான் குர்ஆன் கூறும் இறைக் கொள்கையாகும் என்பதை மேற்கண்ட பல வசனங்கள் மூலம் எளிதாக அறிகிறோம். இத்தனை வசனங்களையும் இந்தப் போலி ஆலிம்கள் மறுக்கிறார்கள். மறைவானவற்றை நபிமார்கள் அறிவார்கள், அவ்லியாக்கள் (?) அறிவார்கள் என்ற தவறான நம்பிக்கையை மக்களிடையே விதைத்து அதைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்யும் வண்ணம் தங்கள் செயல்பாடுகளை அமைத்துள்ளார்கள்.
நபிகள் நாயகம் மறைவானதை அறிவார்கள் என்று தாங்கள் ஓதும் மவ்லிதுகளில் புகழ்மாலை (?) சூடி அதை இறையில்லத்தில் வைத்தே மன உறுத்தலின்றி பாடிக் கொண்டிருக்கின்றனர். முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி உள்ளிட்ட இதர இறையடி யார்களைப் புகழும் போது மறைவானதை அறிவார்கள் என்று புகழ்கிறார்கள்.
இதையெல்லாம் ஆலிம்களின் தலைமையில் அவர்களின் பேராதரவுடனே செய்து வருகிறார்கள். இறந்தவர்களுக்கும், உயிருடன் உள்ளவர்களுக்கும் மறைவானதை அறியும் ஆற்றல் உண்டு என இவர்கள் கூறுவார்களேயானால் அல்லாஹ்வைத் தவிர மறைவானதை வேறு யாரும் அறிய மாட்டார் என்று கூறும் வசனங்களின் நிலை என்ன?
இது நாள் வரை இவர்கள் அந்த வசனங்களைப் படிக்கவில்லை என்று பொருள் கொள்ள இயலுமா? அவ்வசனங்கள் தரும் கருத்தை நம்புவதற்கு இவர்கள் தயாராக இல்லை என்பதே இதன் உள்ளர்த்தம். மறைவானதை அல்லாஹ் மட்டுமே அறிவான் என்று கூறும் பல வசனங்களை இந்த ஆலிம்கள் கூட்டம் மறைக்கின்றது, மறுக்கின்றது என்பது இதன் மூலம் தெரிய வரும் பேருண்மையாகும்.
இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்பது இஸ்லாம் கூறும் கொள்கைப் பிரகடனமாகும். ஏனெனில் பெரும்பாலான இணை வைப்பு செயல்கள் நடந்தேறுவதற்கு இறந்தவர்கள் செவியேற்கிறார்கள் என்ற தவறான நம்பிக்கையே காரணமாகத் திகழ்கின்றது.
எங்கோ அடக்கம் செய்யப் பட்டிருக்கும் முஹ்யித்தீன் என்பவரை தமிழகத்தில் இருக்கும் முஸ்லிம்கள் அழைக்கிறார்கள். அதுவும் சாதாரணமாக அல்ல, தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரும் போது யா முஹ்யித்தீன் என்று அழைக்கின்றார்கள். கேட்டால் அவர்கள் எங்களின் அழைப்பை இறந்த பிறகும் செவியேற்று துன்பம் தீர்த்து வைக்கின்றார்கள் என்கிறார்கள்.
இப்படி பல இணைவைப்பு செயல்கள் நடந்தேறுவதற்கு இறந்தவர்கள் செவியேற்கிறார்கள் என்ற நம்பிக்கை ஒரு முக்கிய காரணியாகும். குர்ஆன் இந்த நம்பிக்கையைத் தவறு என்கிறது. இறந்தவர்களுக்கு செவியேற்கும் ஆற்றல் இல்லை என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றது.
நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! அழைப்பைப் புறக்கணித்து ஓடும் செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் முடியாது.
போதனையை கேட்க மறுத்து ஓடும் இறைமறுப்பாளர்களை செவியேற்க செய்ய முடியாது என்பதை நபிக்கு அல்லாஹ் விளக்கும் போது, இறந்தவர்களை உம்மால் செவியேற்கச் செய்ய முடியாதது போல் இவர்களையும் செவியேற்கச் செய்ய முடியாது என்று உதாரணம் கூறி அல்லாஹ் விளக்குகிறான். இறந்தவர்களுக்குச் செவியேற்கும் ஆற்றல் இல்லை என்பதை அல்லாஹ் இந்த உதாரணத்தின் வாயிலாக தெளிவுபடுத்தி விட்டான்.
உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.
அல்லாஹ்வையன்றி அழைக்கப் படுபவர்களைப் பற்றி அல்லாஹ் கூறும் போது அவர்கள் செவியுற மாட்டார்கள் என்பதை உறுதியாகத் தெரிவிக்கிறான்.
நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற் பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணைகற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்த (இறை)வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.
கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழிகெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.
இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் எனத் திருக்குர்ஆனின் தெளிவான பிரகடனத்தை அறிந்த பிறகு இந்த ஆலிம்கள் என்ன செய்கிறார்கள் என அறிந்து கொள்ள வேண்டாமா? இறந்து போன நல்லடியார்கள் செவியேற்பார்களாம், மக்களின் கோரிக்கையைப் புரிந்து கொண்டு, அல்லாஹ்விடத்தில் பரிந்து பேசுவார்களாம், பதிலளிப்பார்களாம். இது தான் உலக ஆதாயத்திற்காக மார்க்கத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் இந்தக் கேடு கெட்ட ஆலிம்களின் நிலைப்பாடு.
பல ஊர்களில் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களோடு சேர்த்து வெவ்வேறு பெயர்களில் தர்ஹாக்கள் கட்டப்பட்டுள்ளது. சில மக்கள் கூட்டம் வந்து தங்கள் தேவைகளை அங்கே அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களிடம் முறையிடுகிறார்கள். இதையெல்லாம் இந்த ஆலிம்கள் எதிர்ப்பதில்லை என்பதை விட இந்தச் செயலுக்குக் காரணமே இவர்களின் மேற்கண்ட நிலைப்பாடு தான் என்பதை சொல்லிப் புரிய வேண்டியதில்லை.
இதற்கெல்லாம் மேலாக முஹ்யித்தீன் என்பவரைப் பற்றி இவர்கள் எழுதி வைத்துள்ள புளுகல் உலகறிந்த விஷயம். ஆயிரம் முறை முஹ்யித்தீன் என்பவரை அழைத்தால் அழைத்த வருக்கு விரைவாக முஹ்யித்தீன் பதிலளிப்பாராம். இவ்வாறு மவ்லிதுகளில் எழுதி வைத்து அந்த இணைவைப்புப் பாடலை பள்ளியில் வைத்தே ஓதிக் கொண்டிருக்கிறார்கள்.
இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் எனத் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறியதன் பின்னாலும் இவர்கள் இறந்தவர்களை அழைத்துப் பிரார்த்திப்பார்களேயானால் இவர்கள் குர்ஆன் வசனங்களை மறுக்கிறார்கள் என்று முடிவெடுக்காமல் வேறு எப்படி முடிவெடுப்பது?
முடிவில் அவர்களில் யாருக் கேனும் மரணம் வரும்போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.
ஒருவர் இறந்து விட்டால் அவருக்கும் இவ்வுலகத்திற்குமான அனைத்து தொடர்புகளும் அறுந்து போகின்றன. அவர் தமது இறப்பிற்குப் பிறகு பர்ஸக் எனும் திரைமறை வாழ்வில் புகுந்து விடுகிறார். இறந்தவர்களுக்கும் நமக்கும் இடையில் இறைவன் ஏற்படுத்தும் பலமான திரையே பர்ஸக் எனப்படுகிறது.
சாதாரண திரைக்கு அப்பால் இருந்தாலே எதிரில் நடப்பவற்றை அறிந்து கொள்ள இயலவில்லை என்றால் பர்ஸக் எனும் பலமான திரைக்கு அப்பால் இருக்கும் இறந்தவர்கள் இங்கு நடப்பவற்றை எப்படி அறிந்து கொள்வார்கள்? இறந்தவர்கள் யாவரும் பர்ஸக் வாழ்க்கையில் புகுந்து விட்டார்கள் எனும்போது பர்ஸக் எனும் இறைவன் ஏற்படுத்திய பலமான திரையை, தடுப்பைத் தாண்டி இறந்தவர்கள் செவியேற்பார்களா? அப்படி ஒரு முஸ்லிம் நம்பலாமா? முஹ்யித்தீன் விஷயத்தில் முஸ்லிம்களின் நம்பிக்கை அப்படித்தான் உள்ளது.
ஆயிரம் முறை அழைத்தால் முஹ்யித்தீன் பதிலளிப்பார் என்றால் எப்படி? இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்று பல வசனங்கள் கூறியதன் பிறகு முஹ்யித்தீன் மக்களின் அழைப்பை எவ்வாறு செவியேற்பார்? பர்ஸக் எனும் திரைமறை வாழ்க்கையில் இருக்கும் முஹ்யித்தீன் அவரது பக்தர்களுக்கு எப்படி விரைவாகப் பதிலளிப்பார்?
இப்படி நம்பக் கூடாது; இது தெளிவான, நரகில் தள்ளும் இணை வைப்பு என்று மக்களிடையே பிரச்சாரம் செய்ய வேண்டிய ஆலிம்கள் இக்கருத்தை மறைக்கிறார்கள், மக்களின் இணைவைப்பு செயலுக்குப் பக்கபலமாக நிற்கிறார்கள். அது மட்டுமின்றி நபிகள் நாயகத்தைக் கனவிலும் நனவிலும் (?) கண்டு களிக்கும் பாக்கியத்தைத் தங்கள் துஆக்களில் வேண்டி மக்களிடம் போலி வேஷமிடுகிறார்கள்.
நபிகள் நாயகத்தை நனவில் பார்த்தவர்களால் தான் கனவில் காண இயலும். அவர்கள் காலத்தில் வாழாத அவர்களை முன்பின் பார்த்திராத நாம் எப்படி அவர்களைக் கனவில் காண இயலும்? அது ஒரு புறமிருக்க தற்போது நபிகள் நாயகத்தை நனவில் பார்ப்பது சாத்தியமான ஒன்றா? பர்ஸக் எனும் திரைமறை வாழ்க்கையில் இருக்கும் நபிகள் நாயகம் இறைவன் ஏற்படுத்திய பலமான திரையை உடைத்துக் கொண்டு நமக்கு நனவில் காட்சியளிக்க முடியுமா? அல்லாஹ்வை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலுவானவர்களா?
இப்படி ஒரு பிரார்த்தனையை குர்ஆன் அறிவுள்ள பாமரன் கூட வேண்ட மாட்டான் எனும் போது ஆலிம்கள் என்போர் கண்ணீர் மல்க இப்பிரார்த்தனையை வேண்டுகிறார்கள் எனில் இவர்கள் தான் குர்ஆனை மதிப்பவர்களா? மவ்லித் வரிகளைச் சரிகாணும் பஸாதி ஆலிம்கள் உட்பட இத்தகு ஆலிம்கள் அனைவரும் குர்ஆனை மறுக்கின்ற கூட்டமே என்பதில் துளியும் சந்தேகமில்லை.
இத்தனையையும் மீறி இறந்தவர்கள் செவியேற்பார்கள் என்று நம்புபவன் இறைவனின் பாதுகாப்பை பலவீனமாகவும் இறைவனையே பலவீனனாகவும் நினைக்கிறார் என்று பொருள். அல்லாஹ் அத்தகைய மோசமான இறைக் கொள்கையிலிருந்து நம்மைக் காப்பானாக!
மறைவான ஞானம், இறந்தவர்கள் செவியேற்பு தொடர்பாக பல குர்ஆன் வசனங்களை மறுத்து இறைவனுக்கு இணை கற்பிப்பதைச் சரிகாணும் போலி ஆலிம்கள் கூட்டம் இறைவனது உருவம் தொடர்பிலும் பல குர்ஆன் வசனங்களை மறுக்கின்றார்கள். இறைவனின் உருவம் தொடர்பாக குர்ஆனுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்த ஆலிம்கள் எடுப்பதன் மூலம் அவ்வசனங்களை மறுக்கின்றார்கள்.
அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு; ஆனால் அது எதைப்போன்றும் கிடையாது, அதற்கு உதாரணம் கூற இயலாது என்பதுவே இறைவனின் உருவம் தொடர்பாக குர்ஆனின் நிலைப்பாடாகும். அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்பதைப் பல குர்ஆன் வசனங்கள் சான்றளிக்கின்றன. அனைத்தையும் இடம்பெறச் செய்வதற்கு பக்கங்கள் போதாது என்பதால் சில சான்றுகளை மட்டும் தருகிறோம். இறைவன் அர்ஷில் அமர்ந்திருக்கிறான் என்பதைப் பல வசனங்கள் தெரிவிக்கின்றன.
உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.
அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான்.
அர்ஷில் அமர்ந்திருக்கிறான் என்பதிலிருந்து அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்பது தெளிவு. உருவம் இல்லையாயின் அமர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. அல்லாஹ்வுக்கு கால் உண்டு என்பது பின்வரும் இரு வசனங்களிலிருந்து அறியலாம்.
வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும் போது…
கெண்டைக்கால் திறக்கப்பட்டு ஸஜ்தாச் செய்ய அழைக்கப்படும் நாளில் அவர்களுக்கு அது இயலாது.
பின்வரும் இரு வசனங்கள் உள்பட ஏராளமான இறைவசனங்கள் அல்லாஹ்வுக்கு கைகள் இருக்கின்றன என்பதை தெளிவுபடுத்துகின்றன.
“இப்லீஸே! எனது இரு கைகளால் நான் படைத்தவருக்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?” என்று (இறைவன்) கேட்டான்.
அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப்பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும். அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன்.
அல்லாஹ் செவியேற்பவன், பார்ப்பவன் என்று பல வசனங்கள் கூறுகின்றன. அவற்றிலிருந்து அல்லாஹ்வுக்குக் கண்கள் மற்றும் செவிகள் உண்டு என புரியலாம்.
அல்லாஹ் செவியுறுபவன்; பார்ப்பவன்.
இன்னும் பல சான்றுகளின் அடிப்படையில் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு; ஆனால் அது படைப்பினங்களை போன்று கிடையாது என்று நாம் கூறுகிறோம்.
அவனைப் போல் எதுவும் இல்லை.
“அல்லாஹ் ஒருவன்” என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
ஆனால் நபியின் வாரிசுகள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் ஆலிம்கள் அத்தனை வசனங்களையும் மறுத்து அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று கூறிவருகிறார்கள். அதிகமான ஆலிம்கள் மற்றும் பொதுமக்களின் நிலைப்பாடு அல்லாஹ்வுக்கு உருவமில்லை என்பதாகவே இருக்கிறது. உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர் என்று பாட்டெழுதிப் படிக்கும் அளவு இந்தக் கருத்து மக்களிடம் ஓங்கியுள்ளது.
ஆலிம்கள் என்போர் அல்லாஹ்வின் உருவம் தொடர்பாக குர்ஆன் கூறும் இக்கருத்தை மக்களிடம் எடுத்துக் கூற திராணியற்றவர்களாக இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலரோ அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு ஆனால் இல்லை, அதைப் பற்றி பேசவே கூடாது என பூசி மொழுகும் அற்ப வேலையைச் செய்கின்றனர்.
மக்கள் நிலை என்னவோ அதற்கேற்பவே தங்கள் நிலைப் பாட்டை வடித்துக் கொள்கிறார்கள். குர்ஆனின் போதனைகளைக் கண்டு அதற்கேற்ப தங்கள் நிலைப்பாட்டை அமைத்துக் கொள்வது கிடையாது. அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்ற இவர்களது இந்நிலைப்பாட்டின் மூலம் உருவம் உண்டு எனக் கூறும் பல குர்ஆன் வசனங்களை இவர்கள் மறுத்துள்ளார்கள் என்பதை இதன் மூலம் அறியத் தருகிறோம்.
இந்தப் போலி ஆலிம்கள் ஏகத்துவாதிகளை எதிர்க்கும் அளவு சமுதாயத்தில் மலிந்து கிடக்கும் இணைவைப்புகளை ஒரு போதும் எதிர்ப்பது கிடையாது. இவர்களது பார்வையில் தர்கா கட்டி வழிபாடு செய்வது, மவ்லித் ஓதுவது, தாயத்து தொங்க விடுவது என எதுவுமே இணைவைப்பு கிடையாது.
இவைகளை எல்லாம் உற்சாகத்திற்காக செய்து கொள்ளலாம் என்ற புல்லரிக்கும் ஃபத்வாவை வழங்கி தங்கள் ஜுப்பா பாக்கெட்டுகளை புல்லாக்கிக் கொள்ளும் புத்திசாலிகள். மக்கள் செய்யும் எல்லா இணைவைப்பு செயல்களையும் ஆதரித்து பேசும் நாடக நடிகர்கள். இவர்கள் ஆதரிக்கும் பல மவ்லித்களில் தாங்கள் செய்த பாவங்களை மன்னிக்குமாறு, தங்களை இரட்சிக்குமாறு நபிகள் நாயகத்திடம், முஹ்யித்தினீடம் முறையிடும் வரிகள் ஏராளம் உண்டு.
உதாரணத்திற்கு சில வரிகளை இங்கே தருகிறோம்.
யாகுத்பாவில் முஹ்யித்தீன் அவர்களை புழ்ந்து இடம் பெறும் சில வரிகள்
“காப்பாற்றிக் கரை சேர்க்கும் மகத்தான இரட்சகரே! (என்னை) நெருங்கி (என்னுடன்) ஒன்றி விடுவீராக! இப்பிரபஞ்சத்தில் பளீரென்று பிரகாசிக்கும் நிலையில் நீரே எனது கலீஃபாவாக இருக்கிறீர்’ என்ற இறைவனின் உரையாடல் நிச்சயமாக உம்மை வந்தடைந்தது; அதை நீங்கள் செவியுற்றீர்கள். முஹ்யித்தீன் அவர்களே! (இறைவனா லேயே மகத்தான இரட்சகரே என்று அழைக்கப் பட்டதன் மூலம்) நீங்கள் மகத்துவம் மிக்க திருநாமம் ஒன்றைச் சூட்டப்பட்டு விட்டீர்கள்.
சுப்ஹான மவ்லிதில் நபிகள் நாயகத்தை நோக்கி புகழ்ந்து சொல்லப்படும் கவி வரிகள்.
என் பாவங்களை நன்மைகளாக மாற்றுங்கள்!
என் தீமைகளை அலட்சியம் செய்யுங்கள்!
உங்களின் மன்னிப்பை என் மீது சொரிந்து என் மீது அருள் புரியுங்கள்.
இத்தகைய மல்லிதுகளை இவர்கள் சரி காண்பதற்கும் இத்தகு மவ்லிதுகளை மக்கள் தொடர்ந்து ஓதத் தங்கள் மேலான ஆதரவைத் தொய்வின்றி வழங்குதவற்கும் அடிப்படை காரணம் நபிகள் நாயகம் பாவங்களை மன்னிப்பார் என்ற நம்பிக்கையே ஆகும். நபிகள் நாயகம் மட்டுமின்றி முஹ்யித்தீன் போன்ற நல்லடியார் களிடமும் பாவமன்னிப்பு கோரலாம். அவர்களும் பாவங்களை மன்னிப் பார்கள் என்ற நம்பிக்கையில் இவர்கள் உள்ளார்கள். ஜமாலி போன்றோர் அதை வெளிப்படுத்தி சொல்வார்கள்.
ரஷாதி போன்றவர்களோ வருமானம் பாதிக்காத வகையில் இது விஷயத்தில் நடந்து கொள்வார்கள். மற்றபடி இவர்களுக்கிடையில் பெரிய கொள்கை வேறுபாடு என்று எதுவும் இல்லை. அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. பாவங்களை மன்னிப்பவனும் மக்களை இரட்சிப்பவனும் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அல்லாஹ்வை யன்றி பாவங்களை மன்னிப்பவன் யாரும் கிடையாது.
இந்தக் கொள்கை முழக்கத்தை பல குர்ஆன் வசனங்கள் எடுத்தியம்புகின்றன.
அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடை யோன் என்று (அல்லாஹ் கூறுவதைத் தெரிவிப்பீராக!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நியாயமான காரணமின்றிப் போருக்குச் செல்லாமல் பின்தங்கி விட்ட மூன்று நபித்தோழர்களின் குற்றத்தை இறைவன் மன்னித்து விட்டதாக அறிவிக்கும் வரை அம்மூவரையும் நபிகள் நாயகம் விலக்கி வைத்தார்கள். இறைவன் அவர்களை மன்னித்துவிட்டதாக அறிவித்த பின்பே அவர்களை இணைத்துக் கொண்டார்கள்.
தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (இறைவன் மன்னித்தான். பூமி விசாலமானதாக இருந்தும் அவர்களைப் பொறுத்த வரை அது சுருங்கி விட்டது. அவர்களது உள்ளங்களும் சுருங்கி விட்டன. அல்லாஹ்வை விட்டு (தப்பிக்க அவனிடமே தவிர வேறு போக்கிடம் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
மன்னிக்கும் அதிகாரம் அல்லாஹ் வுக்கு மட்டுமே உரியது என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு நடந்துள்ளனர். நபிகள் நாயகத்திற்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டென்று இருக்கு மானால் தன் காலத்தில் குற்றமிழைத்த அம்மூவர்களையும் அல்லாஹ்வின் தூதர் மன்னித்திருப்பார்கள். அல்லாஹ் மன்னிக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
எனவே பாவங்களை மன்னித்து மக்களை இரட்சிப்பது அல்லாஹ் ஒருவன் மட்டுமே!
இந்த சத்திய முழக்கத்தைத் தான் மேற்கண்ட இறைவசனங்கள் இயம்புகின்றன. அதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் முழுக்க முழுக்க உலக ஆதாயத்திற்காக மட்டுமே இந்த ஆலிம்கள் இணைவைப்பு வரிகள் அடங்கிய மவ்லிதுகளை ஆதரிக்கின்றார்கள். இதன் மூலம் குர்ஆன் வசனங்களை மறுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இவர்கள் குர்ஆனை மதிப்பது உண்மையானால் தாங்கள் பணி செய்யும் பள்ளிகளில் ஒரு ஜும்ஆ உரையில், ஒரு பொது மேடையில் மவ்லிதின் அபத்தங்களை, அதில் உள்ள இணை வைப்பு வரிகளை பற்றி மக்களுக்கு விளக்கி ஒரு உரை நிகழ்த்தி காட்டட்டும் பார்க்கலாம்.
குர்ஆனுக்கு எதிரான பல நிலைப்பாடுகள் கண்டு தெளிவாகக் குர்ஆன் வசனங்களை மறுக்கும் கூட்டம் இது. நபிமொழிகளுக்கு எதிரான பல செயல்பாடுகளை ஆதரித்து, அவற்றைச் செய்வதன் மூலம் பல நபிமொழிகளை சகட்டு மேனிக்கு மறுக்கும் கூட்டம்.இமாம்கள், பெரியார்களின் பெயரால் அல்லாஹ்வையும் ரசூலையும் அவமதிக்கும் கூட்டம் இது.
உலக மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு எங்களை எதிர்த்தாலும் அதைக் கண்டு எங்கள் ஈமான் அதிகரிக்குமே தவிர குறைந்து விடாது. ஏனெனில் இந்த ஏகத்துவக் கொள்கைவாதிகள் மக்கள் கூட்டத்திற்கும் மக்கள் சக்திக்கும் ஒரு போதும் அஞ்ச மாட்டார்கள்.
“மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!” என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்” என்று அவர்கள் கூறினர்.