ஊறு விளைவிக்கும் ஊர்ப்பற்று-2

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

ஊறு விளைவிக்கும் ஊர்ப்பற்று

ஊர் விஷயத்தில் உறுதியான நிலைப்பாடு

நபி (ஸல்) அவர்கள் “நஜ்த்’ பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் “பனூ ஹனீஃபா’ குலத்தைச் சேர்ந்த ஸுமாமா பின் உஸால் என்பவரைக் கைது செய்து வந்தார்கள். பள்ளிவாசலின் தூணில் அவரைக் கட்டிப் போட்டார்கள். மூன்று நாளுக்குப் பிறகு அவர் நபிகளாரால் மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு நடந்த சம்பவத்தைப் பாருங்கள்.

ஸுமாமா, பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு, பள்ளிவாசலுக்கு வந்து, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை’ என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், “முஹம்மது, அல்லாஹ்வின் தூதர்’ என்றும் நான் உறுதி கூறுகிறேன்’’ என்று மொழிந்துவிட்டு, “முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களிலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் மார்க்கத்தை விட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரை விட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகி விட்டது. உங்கள் குதிரைப் படையினர் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டனர்’’ என்று சொல்லிவிட்டு, “மேலும் நான் இப்போது (மக்காவிற்குச் சென்று) உம்ரா செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?’’ என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ரா செய்ய அவருக்கு அனுமதி அளித்தார்கள். அவர் மக்காவிற்குச் சென்ற போது (அங்கே) ஒருவர் அவரிடம், “நீ மதம் மாறி விட்டாயா?’’ என்று கேட்டார். அதற்கு ஸுமாமா (ரலி) அவர்கள், “இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை.) மாறாக, அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறி விட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் அனுமதி தரும் வரை (எனது நாடான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது’’ என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (புகாரி: 4372)

”நபி (ஸல்) அவர்கள் அனுமதி தரும் வரை எனது நாடான யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட மக்காவாசிகளான உங்களுக்கு வராது” என்ற வார்த்தையை உற்றுக் கவனியுங்கள்.

இந்த உறுதி நம்மிடம் இருக்கிறதா? ஊர் ஜமாஅத்தாக இருந்தாலும் மார்க்கத்திற்குப் புறம்பான செயல்களுக்கு ஒத்த ரூபாய் கூட கொடுக்க மாட்டேன் என்று சொல்ல நிறைய பேருக்கு தைரியம் இல்லை.

என்னதான் இருந்தாலும் ஊர் ஜமாஅத்தை விட்டும் விலகி விடக்கூடாது என்று கெட்டியாக ஒட்டிக் கிடக்கிறார்கள். இணைவைப்பு, பித்அத் குறித்து அறிந்திருந்தும் ஊர்ப் பற்று என்ற பெயரில் கந்தூரி விழா, மவ்லூது, மீலாது போன்றவற்றில் கலந்து கொள்கிறார்கள்.

தடம்புரள வைக்கும் ஊர்ப்பற்று

ஊர்களை மையமாக வைத்துப் பெரும் சண்டைகள் நடக்கின்றன. மூடநம்பிக்கைகள், பெரும்பாவங்கள் குறித்துப் பிரச்சாரம் செய்தால், கருத்துச் சொன்னால் வெளியூர்காரன் பேசக் கூடாது என்கிறார்கள். உள்ளூர்க்காரர்கள் அடித்துக் கொள்வோம், சேர்ந்துக் கொள்வோம்; நீங்கள் தலையிடக் கூடாது என்கிறார்கள்.

எது சரியானது என்பதைக் காட்டிலும், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதையே கவனிக்கிறார்கள். இப்படி மதீனாவாசிகள் கேள்வி கேட்டிருந்தால் மதீனாவில் இஸ்லாமிய ஆட்சி அமைந்திருக்குமா? என்று சிந்தித்துப் பாருங்கள்.

நபிகளாரிடம் பயிற்சி பெற்ற நபித் தோழர்களையே ஊர் நினைப்பு தடுமாற வைத்துள்ளது.

நபியவர்கள் இறந்துபோன தருணம், அவர்கள் இறக்கவே இல்லை எனும் கருத்தில் சிலர் இருந்தனர். அப்போது அங்கு வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் குர்ஆனில் இருக்கும் 39:30 மற்றும் 3:144 ஆகிய இரு வசனங்களை ஓதிக்காட்டி. நபியவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதைப் புரிய வைத்தார்கள். அதன் பிறகு நடந்த நிகழ்வைக் காண்போம்.

…உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டை அடைக்க) விம்மி அழுதார்கள். அன்சாரிகள் (தமது) “பனூ சாஇதா’ சமுதாயக் கூடத்தில் ஒன்றுகூடி (தம் தலைவர்) சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம், “ “எங்களில் ஒரு தலைவர்; உங்களில் ஒரு தலைவர் (ஆக இருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வோம்‘ என்று முஹாஜிர்களிடம் சொல்வோம்)’’ என்று பேசிக்கொண்டார்கள். அப்போது அபூபக்ர், உமர் பின் கத்தாப், அபூ உபைதா பின் ஜர்ராஹ் (ரலி) ஆகியோர் (ஆட்சித் தலைவரை முடிவு செய்ய) அன்சாரிகளிடம் வந்தனர். உமர் (ரலி) அவர்கள் பேசப் போனார்கள். உடனே அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்கள் மௌனமாக இருக்கச் சொல்லி விட்டார்கள். (இதைப் பிற்காலத்தில் நினைவு கூரும் போது) உமர் அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பேச முயன்றது எதற்காக என்றால், நான் எனக்குப் பிடித்த பேச்சு ஒன்றைத் தயாரித்து வைத்திருந்தேன். அபூபக்ர் அவர்கள் அந்த அளவிற்குப் பேச மாட்டார்கள் என்று நான் அஞ்சினேன். அதனால் தான் நான் பேச முயன்றேன்’’ என்று கூறி வந்தார்கள்.

பிறகு, அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசினார்கள். மக்களிலேயே உரை நயம் மிக்கவர்களாக அவர்கள் பேசினார்கள். அவர்கள் தம் பேச்சில், “(குறைஷிகளாகிய) நாங்கள் ஆட்சித் தலைவர்களாக இருப்போம்; (அன்சாரிகளான) நீங்கள் அமைச்சர் களாக இருங்கள்’’ என்று சொன்னார்கள். உடனே, (அன்சாரியான) ஹுபாப் பின் முன்திர் (ரலி) அவர்கள், “இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டோம். எங்கள் இடையேயிருந்து ஒரு தலைவரும் உங்கள் இடையேயிருந்து ஒரு தலைவரும் (தேர்ந்தெடுத்துக் கொள்வோம்)” என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “இல்லை; நாங்களே தலைவர்களாக இருப்போம். நீங்கள் அமைச்சர்களாக இருங்கள். ஏனெனில், குறைஷிகள் தாம் அரபுகளில் சிறந்த ஊரை (மக்காவை)ச் சேர்ந்தவர்களும், சிறந்த செயல்திறன் மிக்கவர்களும் ஆவர். ஆகவே, உமர் பின் கத்தாப், அல்லது அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ்விற்கு (தலைமைக்கான) விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள்’’ என்று சொன்னார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “இல்லை; நாங்கள் உங்களிடமே விசுவாசப் பிரமாணம் செய்கிறோம். நீங்கள் எங்கள் தலைவர்; எங்களில் சிறந்தவர்; எங்களிடையே அல்லாஹ்வின் தூதருக்கு மிகவும் பிரியமாயிருந்தவர்கள்’’ என்று சொல்லிவிட்டு, அவர்களுடைய கரத்தைப் பிடித்து அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மக்களும் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), (புகாரி: 3667, 3668)

மக்காவைச் சேர்ந்த முஹாஜிர்களுக்கு ஒரு தலைமை, மதீனாவைச் சேர்ந்த அன்சாரிகளுக்கு வெறொரு தலைமை என்று இந்தச் சமூகம் பிரிந்து சிதைந்து போகும் அபாயம் ஏற்பட்டது. அவர்கள் சுதாரித்துக் கொண்டதால் நிலைமை சீரானது. யோசித்துப் பாருங்கள்! இதற்குக் காரணம், நம் ஊர்; நம் ஊர்வாசி; நமக்கான அரசு என்று சிலர் யோசித்ததின் விளைவு என்பதை மறுக்க முடியுமா?

நியாயம் யார் பக்கம் இருக்கிறதோ அவர்களுக்கு ஆதரவாக நிற்கவேண்டுமே தவிர, தவறு செய்தவர் நமது ஊரைச் சார்ந்தவர் என்பதால், அவருக்குத் துணைபோகக் கூடாது. ஊர் மோகம் கொண்டு நிதானத்தையும், நியாயத்தையும் இழந்துவிடக் கூடாது. அது நம்மைத் தடம்புரளச் செய்துவிடும்; வழிகெடுத்து விடும்.

ஊர் வழக்கத்தை ஒழித்த இஸ்லாம்

ஊர்க் கட்டுப்பாடு என்ற பெயரில் பல அராஜகங்கள் நடக்கின்றன. இன்றும் பிறமத மக்கள் வாழும் ஊர்களில் தாழ்ந்த சாதி மக்களுக்கென ஊரில் ஒரு பகுதியை ஒதுக்கி இருப்பார்கள். ஊரைப் பிரித்து வைத்திருப்பார்கள். இவர்கள் மேல்சாதி மக்கள் வசிக்கும் பகுதியில் குடியேற முடியாது.

இது போன்ற நடவடிக்கை மக்கத்து முஷ்ரிக்குகளிடம் வேறு வடிவில் இருந்தது. ஹஜ்ஜின் போது மக்கள் அனைவரும் ஒன்பதாம் நாள் அன்று அரஃபா திடலில் தங்குவது வழக்கம். இதற்கு மாறாக, உயந்த குலம் என்று சொல்லப்பட்ட குறைஷிகள் மட்டும் முஸ்தலிபா எனும் இடத்தில் தங்குவார்கள். காரணம், முஸ்தலிபா என்பது கஅபாவின் எல்லைக்கு உள்ளேயும், அரஃபா என்பது அதற்கு வெளியேயும் அமைந்திருக்கும். இது ஒதுக்கப்பட்ட மக்களுக்கான இடமாகக் கருதப்பட்டது.

இந்த ஊர் வழக்கத்தை இஸ்லாம் உடைத்து எறிந்தது. ஹஜ் கிரியைகள் செய்யும் அனைவரும் ஒன்பதாம் நாள் “அரஃபா’ திடலில் இருக்க வேண்டும் என்று 2:199 வசனத்தின் மூலம் இஸ்லாம் பிரகடனம் செய்தது. சமத்துவத்தை நிலைநாட்டியது.

(அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின் போது) குறைஷியரும், அவர்களுடைய மதத்தவர்களும் முஸ்தலிஃபாவிலேயே தங்கிவிடுவார்கள். (ஹரம் – புனித எல்லையை விட்டு வெஜயேற மாட்டார்கள்.) அவர்கள் (இந்த விஷயத்தில்) “உறுதிமிக்கவர்கள்’ எனப் பெயரிடப்பட்டுவந்தனர். மற்ற அரபுகள் அனைவருமே அரஃபாத்தில் தங்கி வந்தார்கள். இஸ்லாம் வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (துல்ஹஜ் 9ஆவது நாளில்) அரஃபாத் சென்று, அங்கே தங்கியிருந்துவிட்டு அங்கிருந்தே திரும்ப வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டான். அந்தக் கட்டளைதான் “மக்கள் அனைவரும் திரும்புகின்ற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்’’ எனும் (2:199ஆவது) இறை வசனமாகும். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), (புகாரி: 4520)

அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே! ஊர் வழக்கம், ஊர்க் கட்டுப்பாடு என்ற தோற்றத்தில் மார்க்க நெறிமுறைகளைத் தகர்க்கும் வகையில் எந்தவொரு செயல் இருப்பினும் அதற்குக் கட்டுப்படாதீர்கள். அவற்றை உதைத்துத் தள்ளுங்கள். அந்தச் சட்டங்களுக்கு ஒருபோதும் உடந்தையாகி விடாதீர்கள்.

ஊர்ப் பற்றினால் ஏற்படும் ஏனைய தீங்குகளை இன்ஷா அடுத்த இதழில் தொடரும்…