கொள்கை மட்டும் போதுமா? தொழுகை மிகவும் அவசியம்!
கொள்கை மட்டும் போதுமா? தொழுகை மிகவும் அவசியம்!
இணை வைப்பு எனும் ஷிர்க் இல்லையென்றால் நமக்கு சுவர்க்கம் நிச்சயம் என்ற நம்பிக்கை நம் மக்களிடம் நன்கு ஆழப் பதிந்து விட்டது.
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார்.
இணைவைப்பு மட்டும் தான் மன்னிக்கப்படாது. நாம் தான் இணை வைக்கவில்லையே! அதனால் தொழுகை போன்ற விஷயங்களில் நாம் குறை வைத்தால் அல்லாஹ் பெரிதாகப் பிடிக்கமாட்டான் என்ற தவறான நம்பிக்கை மக்களிடம் உருவாகி விட்டது.
‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொல்லி, பிறகு அதே நம்பிக்கையில் இறந்துவிடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார்’ என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: (புகாரி: 5827)
இணை வைக்கவில்லையென்றால் நமக்கு சுவனம் உறுதி தான் என்று இந்த ஹதீஸ் அடித்துச் சொல்கின்றது. அதனால் தொழாமல் இருந்து விட்டால் அது பாதகமில்லை என்ற தப்பான எண்ணம் மேலும் அந்த நம்பிக்கைக்கு வலு சேர்ப்பதாக அமைந்து விட்டது. மேலோட்டமாகப் பார்க்கும் போது இணைவைப்பு இல்லை என்றால் சுவர்க்கம் உறுதி என்று இந்த வசனம், ஹதீஸிலிருந்து விளங்க முடியும்.
தான் செய்த பாவத்திற்காக ஒரு முஃமின் நரகில் தண்டிக்கப்பட்டுக் கொண்டிருப்பார். அவரை அல்லாஹ் எப்படிக் காப்பாற்றுகின்றான் என்று பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.
‘‘இறுதியாக இறைவன் நரகத்திற்குரியவர்களில் தான் நாடிய சிலர் மீது கருனை காட்ட நினைக்கும் போது வானவர்களிடம், அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுமாறு கட்டளையிடுவான். அவ்வாறே வானவர்கள் அவர்களை வெளியேற்றுவார்கள். சஜ்தாச் செய்த அடையாளங்களை வைத்து இவர்களை வானவர்கள் அடையாளம் காண்பார்கள்.
சஜ்தா செய்ததனால் (ஏற்பட்ட) அடையாளங்களைப் புசிக்கக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துவிட்டான். ஆகவே (அல்லாஹ்வை வணங்கியவர்கள்) நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். சஜ்தா செய்த வடுக்களைத் தவிர ஆதமின் மைந்தர்களுடைய முழு உடம்பையும் நரகம் புசித்துவிடும்.
இந்த நிலையில் அவர்கள் கருகிப் போன நிலையில் நரகத்திலிருந்து வெளியேறுவார்கள். அப்போது அவர்கள் மீது (மாஉல் ஹயாத் எனும்) ஜீவநீர் ஊற்றப்படும். உடனே அவர்கள் வெள்ளச் சேற்றில் முளைத்துவிடும் தானிய வித்தைப் போன்று செழிப்புடன் எழுவார்கள்” என்று ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மறுமை நிகழ்வுகளைப் பற்றி புகாரியில் இடம் பெறும் நீண்ட ஹதீஸிலிருந்து)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 806)
இந்த ஹதீஸ் நரகிலிருந்து ஒரு முஃமின் காப்பாற்றப்படுவதற்குக் குறைந்தபட்சத் தகுதியாக தொழுகை இருக்க வேண்டும் என்று விவரிக்கின்றது. அதாவது ஸஜ்தாவின் தழும்புகள், அடையாளங்கள் அவரைக் காப்பாற்றுவதற்குக் காரணமாக அமைகின்றன. அதனால் தொழுகை இல்லையென்றால் அவர் சொர்க்கம் செல்ல முடியாது என்பதை இந்த ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது.
அப்படியானால் மேலே இடம் பெற்றிருக்கும் புகாரி ஹதீஸ், ‘ஒருவர் லாயிலாஹ இல்லல்லாஹு சொல்லி விட்டால் சொர்க்கம் சென்று விடுவார்’ என்று தெரிவிக்கின்றதே என்று கேட்கலாம். இதை முஸ்லிமில் இடம்பெறுகின்ற இன்னொரு ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது.
‘‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சான்று கூறுகின்றாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கின்றது என்று நற்செய்தி சொல்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 52)
இந்த ஹதீஸும் லாயிலாஹ இல்லல்லாஹு என்று சொல்பவருக்குச் சொர்க்கம் என்று தான் சொல்கின்றது. ஆனால் ‘உள்ளத்தால் நம்பி’ என்ற ஒரு வார்த்தை கூடுதலாக இடம் பெறுகின்றது.
‘அணை உடைந்து வெள்ளம் வருகின்றது. அதனால் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள்’ என்று ஓர் அறிவிப்பு வெளியானால் உடனே மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்வதற்குத் தயாராகின்றார்கள்.
இதற்கு என்ன அர்த்தம்? இந்த அறிவிப்பு அவர்களது உள்ளங்களில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது. அதனால் தான் தங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற செயல்பாட்டில் இறங்குகின்றார்கள்.
அதுபோல் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று ஒருவர் உள்ளத்தால் உறுதியாக நம்பி விட்டால் அமல்கள் என்ற செயல்பாடுகளில் அவர் இறங்கியாக வேண்டும். அவ்வாறு இறங்கவில்லை என்றால் அந்த ஈமான் அவரிடத்தில் எந்த ஒரு பிரதிபலிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று அர்த்தமாகி விடும்.
ஒரு பணியாளர் ஒரு கம்பெனியில் சேரும் போது முதலாளி அவரிடத்தில் ஒப்பந்தம் செய்து கொள்வார். அவ்வாறு ஒப்பந்தம் செய்து பணியில் சேர்ந்த தொழிலாளி பணி செய்யவில்லை என்று வைத்துக் கொள்வோம்.
முதலாளி அவரிடத்தில் நீ ஏன் வேலை செய்யவில்லை? என்று கேட்டால், ‘உங்களை முதலாளி என்று நான் ஏற்றுக் கொண்டு விட்டேனே! அப்புறம் என்ன வேலை செய்யவில்லையா? வேலை செய்யவில்லையா? என்று கேட்டு நச்சரிக்கின்றீர்கள்’ என்று திரும்பக் கேட்டால் அந்தத் தொழிலாளியின் நிலை என்ன? அந்த முதலாளி இவரை இதன் பின்னரும் அங்கு வேலையில் வைத்திருப்பாரா? நிச்சயம் வைத்திருக்க மாட்டார். அவர் இந்தத் தொழிலாளியை தனது கம்பெனியிலிருந்து நீக்கி விடுவார்.
அதுபோல் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை; அவன் தனது எஜமானன் என்று ஒப்புக் கொண்டு விட்டு அமல்கள் எதுவும் செய்யவில்லை என்றால் அதை எப்படி அவன் ஒத்துக் கொள்வான். அல்லாஹ் திருக்குர்ஆனில் ஈமானைப் பற்றிச் சொல்கின்ற போதேல்லாம் அமல்களையும் சேர்த்தே சொல்கின்றான்.
குர்ஆனில் ‘இன்னல்லதீன ஆமனூ’ என்று சொல்கின்ற போதெல்லாம் அல்லாஹ், ‘வ அமிலுஸ் ஸாலிஹாத்தி’ என்று சேர்த்தே சொல்கின்றான்.
இதற்குப் பின்வரும் வசனத்தை ஓர் எடுத்துக் காட்டாக கூறலாம்.
நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிவோரைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அதில் அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர். மிகச்சிறந்த நிழலில் அவர்களை நுழையச் செய்வோம்.
இன்னும் அதிகமான இடங்களில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். அதாவது, ஈமான் (நம்பிக்கை) கொண்டு நல்லமல்கள் செய்கின்றார்களோ அவர்களுக்கு சொர்க்கம் என்று அமல்களை சேர்த்தே சொல்கின்றான்.
அதனால் உள்ளத்தால் நம்புதல் என்றால் அது செயல் வடிவத்தில், அமல்கள் என்ற வடிவத்தில் வெளிவந்தாக வேண்டும்.
இதன்படி, லாயிலாஹ இல்லல்லாஹு என்று சொன்னவருக்குச் சொர்க்கம் என்றால் அதன் கருத்து, அதன்படி அமல் செய்தவருக்குச் சொர்க்கம் என்று தான் விளங்கிக் கொள்ள வேண்டுமே தவிர வெறுமனே வாயளவில் சொன்னாலோ அல்லது நம்பிக்கை மட்டும் கொண்டு விட்டு அமல் செய்யாமல் இருந்தாலோ அவர் சொர்க்கம் செல்ல முடியாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
இப்படி நாம் தவ்ஹீதுக் கொள்கையைப் புரிந்து கொண்டால் நம்மிடம் தொழுகையில் அலட்சியமும், அசட்டைத்தனமும் வராது. ஒரு சில ஊர்களில் மர்கஸ்களில் மக்ரிப் நேரம் மக்களால் நிரம்பி வழிகின்றன. ஆனால் அவை ஃபஜ்ர் தொழுகை நேரங்களில் காற்றாடிக் கொண்டிருக்கின்றன.
ஃபஜ்ர் தொழுகையைப் பற்றி நிறைய சிறப்புகள் ஹதீஸ்களில் இடம் பெறுகின்றன.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒருவர் தனியாகத் தொழுவதைவிடக் கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறப்புடையதாகும். ஸுப்ஹுத் தொழுகையின்போது பகல் நேர வானவர்களும் இரவு நேர வானவர்களும் ஒன்று சேருகிறார்கள்.’
இதை அபூஹுரைரா (ரலி) அறிவித்துவிட்டு, நீங்கள் விரும்பினால் ‘நிச்சயமாக ஸுப்ஹு நேரத்தில் ஓதப்படும் குர்ஆன், சாட்சி கூறக்கூடியதாக இருக்கிறது’
(அல்குர்ஆன்: 17:78) ➚ என்ற வசனத்தை ஓதுங்கள் என்றார்கள்.
நூல்: (புகாரி: 648)
இந்த ஹதீஸில், மலக்குகள் சங்கமிக்கின்ற சங்கைமிகு நேரம் என்று ஃபஜ்ர் தொழுகை சிறப்பித்துக் கூறப்படுகின்றது.
ஃபஜ்ர் மற்றும் அஸர் தொழுகைகளைப் பேணக் கூடியவர்களுக்கு இறைவனை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று பின்வரும் ஹதீஸ் தெரிவிக்கின்றது.
ஜரீர் (ரலி) அறிவித்தார்.
நாங்கள் முழு நிலவுள்ள இரவில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலவை நோக்கி ‘இந்த நிலவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பது போல் நிச்சயமாக உங்களுடைய இறைவனைக் காண்பீர்கள்! சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்!’ என்று கூறிவிட்டு, ‘சூரியன் உதிக்கும் முன்னரும் மறையும் முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைத் துதிப்பீராக!’ (அல்குர்ஆன்: 50:39) ➚ என்ற இறைவசனத்தையும் ஓதிக் காண்பித்தார்கள்.
நூல்: (புகாரி: 554)
இது போன்ற ஹதீஸ்கள் ஏராளமாக உள்ளன. எடுத்துக் காட்டுக்கு இந்த ஹதீஸ்கள் போதும் என்பதால் அவை அனைத்தும் இங்கு குறிப்பிடப்படவில்லை. இவ்வளவு சிறப்புக்குரிய தொழுகை அன்று நயவஞ்சகர்களுக்குத் தான் பாரமாகவும் பளுவாகவும் இருந்தது.
இதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஸுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரண்டு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதிலுள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு முஅத்தினுக்கு நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுகை நடத்துமாறு கூறி, அதன் பின்பு எவரேனும் தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: (புகாரி: 657)
அண்மையில் தான் நம்மைப் புனிதமிகு ரமளான் மாதம் கடந்து சென்றிருக்கின்றது. ஒரு மாத காலம் அது நமக்குப் பயிற்சியும் பாடமும் நடத்தியிருக்கின்றது.
ஒரு மாதப் பயிற்சி என்பது சாதாரணமானதல்ல! அரசாங்கம், தனியார் நிறுவனங்கள் ஒரு துறைக்கு ஒருவரைத் தேர்வு செய்யும் போது அவருக்கு ஒரு மாத காலம் பயிற்சியை வழங்குகின்றது. அதுபோல் அல்லாஹ் நமக்கு ஒரு மாதம் பயிற்சி அளித்திருக்கின்றான். ரமளான் மாதம் பல்வேறு பாடங்களையும் படிப்பினைகளையும் கற்றுத் தந்தாலும் குறைந்த பட்சம் கீழ்க்காணும் இரண்டு பாடங்களை நமது வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.
சஹ்ர் நேர பாவமன்னிப்பு
இரவு எவ்வளவு தாமதமாகப் படுத்தாலும் நாம் சஹ்ர் நேரத்தில் எழுந்தோம். அந்தப் பழக்கத்தை நாம் பாடமாகக் கொள்வோமாக! அந்த நேரத்தில் பாவமன்னிப்புத் தேடுவதை குர்ஆன் சிறப்பித்துச் சொல்கின்றது.
51:17 كَانُوْا قَلِيْلًا مِّنَ الَّيْلِ مَا يَهْجَعُوْنَ
51:18 وَبِالْاَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُوْنَ
இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர். இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள்.
(அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுவோராகவும், (இறைவனுக்கு) கட்டுப்பட்டோராகவும், (நல்வழியில்) செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரத்தில் பாவமன்னிப்புத் தேடுவோராகவும் (இருப்பார்கள்.)
இந்த நேரத்தில் அல்லாஹ் தஆலா தனது அடியார்களிடத்தில் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்கின்றான்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்குக் கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.
நூல்: (புகாரி: 1145)
அதனால் இந்த நேரத்தில் நாம் பாவமன்னிப்புத் தேடுவது இறைவனிடத்தில் மன்னிப்பைப் பெற்றுத் தருகின்றது.
வித்ரு தொழுகை
ரமளானின் பிந்திய பத்து இரவுகளில் நாம் வித்ரை இரவின் கடைசி நேரத்தில் தொழுதோம். அந்த வித்ரை நாம் ஏன் எப்போதும் பிந்திய நேரத்தில் தொழுகின்ற பழக்கத்தைக் கடைப்பிடிக்கக் கூடாது?
‘‘இரவின் இறுதியில் எழ முடியாது என்று பயப்படுபவர் இரவின் ஆரம்பத்தின் வித்ரு தொழுவாராக! இரவின் இறுதியில் எழ முடியும் நம்புகின்றவர் இரவின் இறுதியில் வித்ரு தொழுவாராக! ஏனெனில், இரவின் இறுதி நேரத்தில் தொழும் போது (மலக்குகள்) பங்கேற்கின்றனர். இது மிகச் சிறந்ததாகும்’’ என்று ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 1380) (1255)
அதிகாலையில் பாவமன்னிப்புத் தேடல், வித்ர் தொழுதலுக்குரிய சிறப்புக்களை மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களும் விவரிக்கின்றன. அதனால் ரமளான் படித்துத் தந்த பாடங்களில் இந்த இரு அமல்களை ரமளான் பரிசாகப் பெற்றுச் செயல்பட வேண்டும்.
இரவில் சுபுஹுக்கு ஓர் அரை மணி நேரத்திற்கு முன்பு எழுந்து குறைவான எண்ணிக்கையில் முதலில் தொழப் பயிற்சி மேற்கொள்வோமாக! அதன் பிறகு பக்குவம், பழக்கம் ஏற்பட்டதும் இன்னும் கொஞ்சம் முந்தி எழுவோம். அதன் பின்னர் கொஞ்சம் ரக்அத்துகளின் எண்ணிக்கையை கூட்டிக் கொண்டு தொழ முனைவோம்.
இவ்வாறு செய்வதன் மூலம் நம்முடைய ஃபஜ்ர் தொழுகை நமக்குத் தப்பாத நிலை நமக்கு ஏற்படும். ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து தொழ ஆரம்பித்து விட்டால் மற்ற தொழுகைகள் அவனுக்கு உளவியல் ரீதியாக ஒரு பிரச்சனையாக இருக்காது என்பதைக் கவனத்தில் கொண்டு செயல்படுவோம். இதன் மூலம் கொள்கை, தொழுகை இரண்டையும் பேணி, சுவனம் செல்லும் நன்மக்களாக ஆவோம்.