சிரமம் இல்லாத சிறந்த மார்க்கம்- (ஜகாத்)

பயான் குறிப்புகள்: சந்தர்ப்ப உரைகள்

சிரமம் இல்லாத சிறந்த மார்க்கம் (ஜகாத்)

இஸ்லாமியக் கடமைகள் ஐந்து. அவற்றில் ஜகாத்தும் ஒரு கடமையாகும். திருக்குர்ஆனில் அல்லாஹ் தொழுகையைக் குறிப்பிடும் இடங்களில் எல்லாம் ஜகாத்தையும் சேர்த்தே குறிப்பிடுகின்றான்.

2:43 وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَارْكَعُوْا مَعَ الرّٰكِعِيْنَ‏

தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்யுங்கள்!

(அல்குர்ஆன்: 2:43)

இதுபோன்று ஏராளமான வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெறுகின்றன. இதன் அடிப்படையில் மக்கள் ஜகாத் வழங்குகின்றார்கள். ஆனால் அதிலும் மக்கள் சிரமத்தை அனுபவிக்கின்றார்கள். உதாரணமாக, ஒருவர் 50 பவுன் நகை வைத்திருக்கின்றார். அவர் அதற்குரிய ஜகாத்தைக் கொடுத்து விட்டால் மறு ஆண்டு மீண்டும் அதே நகைக்கு ஜகாத் கொடுப்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.

கொடுத்த பொருளுக்கே மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் கூறும் சில ஹதீஸ்களும் உள்ளன.

இந்த ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவையாக இருந்தால் இவற்றின் அடிப்படையில் முடிவு செய்வதில் நியாயம் இருக்கின்றது. ஆனால் இந்தக் கருத்தில் இடம் பெறும் ஹதீஸ்களில் எதுவுமே ஆதாரப்பூர்வமானதாக இல்லை. அவற்றில் சில ஹதீஸ்கள் இட்டுக்கட்டப் பட்டவையாகவும், வேறு சில ஹதீஸ்கள் பலவீனமானவையாகவும் உள்ளன.

எவ்விதக் காலக் கெடுவும் நிர்ணயிக்காமல் ஒரு காரியத்தைச் செய்யுமாறு பொதுவாகக் கட்டளையிட்டால் அதை ஒரு தடவை செய்ய வேண்டும் என்பது தான் அதன் பொருளாகும்.

வணக்க வழிபாடுகள் மட்டுமின்றி, உலகில் நாம் செய்கின்ற கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட அனைத்தையும் இப்படித் தான் புரிந்து கொள்கிறோம்; புரிந்து கொள்ள வேண்டும்.

தொழுகையைப் பொறுத்த வரை தினமும் ஐந்து வேளை தொழ வேண்டும் என்பதற்கு நேரடியான கட்டளை இருக்கின்றது. அதனால் தினமும் ஐந்து வேளை தொழுகை கடமை என்று நாம் புரிந்து கொள்கிறோம்.

குர்ஆனிலோ, நபிவழியிலோ ‘தொழ வேண்டும்’ என்ற கட்டளை மட்டும் இருந்து எவ்வளவு தொழ வேண்டும் என்பது பற்றி ஒரு குறிப்பும் அறவே இல்லாவிட்டால் தினசரி ஐந்து வேளை என்று நாம் புரிந்து கொள்ள மாட்டோம். மாதம் ஒரு தடவை என்றும் புரிந்து கொள்ள மாட்டோம். வருடம் ஒரு தடவை என்றும் புரிந்து கொள்ள மாட்டோம். அப்படிப் புரிந்து கொண்டால் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இவ்வாறு புரிந்து கொண்டீர்கள் என்ற கேள்வி எழும்.

நோன்பைப் பொறுத்த வரை ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றாக வேண்டும் என்று தெளிவான கட்டளை உள்ளது. “ரமளானை அடைபவர் நோன்பு நோற்க வேண்டும்’’ என்றும் கட்டளை உள்ளது. ரமளான் என்பது குறிப்பிட்ட ஒரு மாதத்தின் பெயராகும். இம்மாதம் வருடந்தோறும் திரும்பத் திரும்ப வருவதால் ஒவ்வொரு வருடமும் நோன்பு நோற்க வேண்டும் என்று புரிந்து கொள்கிறோம்.

இப்படிக் கூறப்படாமல், நோன்பு நோற்க வேண்டும் என்று மட்டும் குர்ஆனிலோ, நபிவழியிலோ கூறப்பட்டு, நாளோ, கிழமையோ, மாதமோ அத்துடன் குறிப்பிடப்படாமல் இருந்தால் அதனை நாம் எப்படிப் புரிந்து கொள்வோம்?

வாழ்நாளில் ஒரு தடவை என்று தான் அதைப் புரிந்து கொள்ள முடியும். அவ்வாறு புரிந்து கொண்டால் அதில் ஏற்கத்தக்க எந்த எதிர்க் கேள்வியும் எழாது.

அவ்வாறு இல்லாமல் வாரா வாரம் என்றோ, மாதா மாதம் என்றோ, வருடத்தில் ஒரு மாதம் என்றோ, வருடத்தில் ஒரு வாரம் என்றோ நாம் அதைப் புரிந்து கொண்டால் அந்தக் காலக் கெடுவை எங்கிருந்து எடுத்தீர்கள் என்ற கேள்வி எழும். அதற்கு விடை கூற இயலாது.

ஹஜ் என்ற கடமையை இதற்குரிய சரியான உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

ஹஜ் கடமை என்று பொதுவாகக் கூறப்பட்ட பின் “ஒவ்வொரு வருடமுமா?’’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு நபித் தோழர் கேட்டதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்துகின்றார்கள். வாழ்நாளில் ஒரு தடவை தான் என்று விளக்கம் அளிக்கின்றார்கள்.

(நூல்: (முஸ்லிம்: 2599) (2380)

கால நிர்ணயம் எதையும் கூறாமல் ஒன்றைச் செய்யுமாறு கட்டளையிட்டால் மொத்தத்தில் ஒரு தடவை செய்ய வேண்டும் என்றே அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.

இந்த அடிப்படையில் தான் ஜகாத் குறித்த கட்டளையும் அமைந்துள்ளது.

குர்ஆன் ஹதீஸ் முன்வைக்கின்ற ஆதாரங்கள், ஆய்வுகள் அடிப்படையில் ஜகாத் என்பது மிக எளிமையான வணக்கமாகும். இதன் மூலம் ஜகாத் வழங்குவோர் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிக்கும்.

உபரியான தர்மங்களில் ஓர் எளிமை! ஓர் எல்லை!

மேலே நாம் கண்டது கடமையான தர்மத்தில் மார்க்கம் அளித்திருக்கின்ற எளிய முறையாகும். இப்போது உபரியான தர்மங்களுக்கு வருவோம். உபரியான தர்மங்களைப் பொறுத்தவரையில் அதற்கு மார்க்கம் ஓர் எல்லையை நிர்ணயித்து விட்டது. அது மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பகுதியாகும்.

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.

இறுதி ஹஜ்ஜின்போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் ‘இறைத்தூதர் அவர்களே! நான் மரணத் தருவாயை அடைந்து விட்டேன். நான் செல்வந்தன்; என்னுடைய ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுக்காரர்களில்லை: எனவே, என்னுடைய பொருளில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் செய்து விடட்டுமா?’ எனக் கேட்டேன்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘வேண்டாம்’ என்றார்கள். பின்னர் நான் ‘பாதியைக் கொடுக்கட்டுமா?’ எனக் கேட்டேன். அதற்கும் நபி(ஸல்) அவர்கள், ‘வேண்டாம்; மூன்றில் ஒரு பங்கை வேண்டுமானால் தர்மம் செய்துவிடும். அதுவும் அதிகம் தான்; ஏனெனில், உம்முடைய வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விட பிறரிடம் தேவையற்றவர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது.

இறை உவப்பையே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கிற எந்த ஒரு செலவானாலும் சரி. அதற்காக உமக்கு நன்மை கொடுக்கப்படும்; நீர் உம் மனைவியின் வாயில் இடுகிற உணவுக் கவளத்திற்கும் கூட உமக்கு நண்மையுண்டு’ என்று கூறினார்கள்.

நூல்: (புகாரி: 1295) 

இதைத் தாண்டி மார்க்கம் என்ற பெயரில் பொருளாதாரத்தைத் தாரை வார்க்கக் கூடாது என்று தடை விதித்து விட்டது. இதற்குக் காரணம் என்ன?

‘உம்முடைய வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விட பிறரிடம் தேவையற்றவர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காரணம் கூறுகின்றார்கள்.

ஊரார்க்கு அவ்வளவையும் அள்ளிக் கொடுத்து விட்டு, தன் குடும்பத்தினரை தரித்திர நிலையில் விடுவதை மார்க்கம் அனுமதிக்கவில்லை.

பிற மதங்களில் தனது மனைவி மக்கள் யாருக்கும் ஒரு சல்லிக் காசு கூடக் கொடுக்காமல் கோயில்களுக்கும் மடங்களுக்கும் குடும்பத்தலைவர் மொத்த சொத்துக்களையும் எழுதி வைத்து விட்டுச் சென்று விடுவதை நாம் பார்க்க முடிகின்றது.

இஸ்லாம் அவ்வாறு மனைவியும் மக்களும் மற்ற வாரிசுகளும் கஷ்டங்களை அனுபவிக்கும் நிலையில் அவர்களை விட்டுச் செல்ல அனுமதிக்கவில்லை. இது இஸ்லாமிய மார்க்கம் பொருளாதார ரீதியில் மக்களுக்கு காட்டுகின்ற எளிமையும் இலகுவுமாகும்.