அருள் பொங்கும் மாதமே! வருக!
அருள் பொங்கும் மாதமே! வருக!
இறைவனின் மாபெரும் உதவியால் இந்த வருடமும் ரமளான் மாதத்தை முஸ்லிம்களாகிய நாம் அடைந்திருக்கின்றோம். அருள் பொங்கும்மாதம்! பாவங்களைக் கழுவி மனிதர்களை சுத்தப்படுத்துகின்ற மாதம்! அமல்களைஅதிகரிக்கச் செய்கின்ற மாதம்! ‘பொறுமையைப் போதிக்கின்றமாதம்! இறையச்சத்தை ஊட்டுகின்ற மாதம்! வணக்க வழிபாடுகளில்அக்கறை செலுத்தவைக்கின்ற மாதம்!
இது போன்ற ஆயிரமாயிரம் குணாதிசயங்களைக்கொண்ட சிறப்பிற்குரிய ரமளானில் நாம் பாதப்படிகளை எடுத்துவைத் திருக்கின்றோம். ஒவ்வொரு வருடமும் ரமளான் மாதம் நம்மிடத்தில்வந்து செல்கின்றது. ஒவ்வொரு வருடமும் ரமளான் நம்மிடத்தில் வரும்போதும் ஒரு புதுவிதமான புத்துணர்ச்சியும், ஆர்வமும், இனம் புரியாத மகிழ்ச்சியும் நம்மைஅறியாமலேயே நம்மிடத்தில் தொற்றிக்கொள்கின்றது.
எத்தனயோ ரமளான் நம்மிடத்தில் வந்து சென்றிருக்கின்றது. முன்னர், ரமளான் நம்மை வந்து அடைவதற்கு அதிகப்படியான மாதங்களும், நாட்களும் எடுத்துக் கொண்டதுபோன்ற ஒரு சிந்தனை ஓட்டம் நமக்கு ஏற்ப்பட்டது. ஒரு ரமளானுக்கும் மறு ரமளானுக்கும் நீண்ட நாட்கள் இடைவெளி இருப்பதைப்போன்ற தோற்றம் இருந்தது. ஆனால் காலம் செல்லச்செல்ல ரமளான் மாதம் நம்மை வேகமாக அடைந்து கொண்டிருப்பதைப் போன்ற ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவத்தை நாம் அனைவரும் உணர்ந்து கொண்டிருக்கின்றோம்.
சென்ற வருடரமளான் இப்போதுதானே முடிந்த மாதிரி தெரிகின்றது.அதற்குள் அடுத்த ரமளான் வந்துவிட்டதா? என்ற கேள்விக்கணைகள் அனைவரின் உள்ளங்களிலும் எழச் செய்தால் அதற்கு அற்புதமான ஒரு பதிலும் கிடைக்கிறது. அதாவது, நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்ற இந்த உலகம் வேகமாகப் பயணித்துக்கொண்டே இருக்கின்றது. மரணத்தை அடையக்கூடிய நாட்களை நோக்கி நாம் வேகமாகப்பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை நம்முடைய உள்ளங்களில் நாம் அசைபோட்டுக் கொள்கின்றோம்.
மேலும், ரமளான் மாதம் ஒவ்வொரு ஆண்டும் நம்மை நோக்கிவரும் போது, ஒவ்வொரு மனிதர்களும் தங்களுக்குத்தாங்களே எடுத்துக்கொள்கின்ற சப்தம் என்னவென்றால், இந்த வருடரமளானில் அதிகமாக அமல்கள் செய்வேன்! வீணானகாரியங்களில் ஈடுபட்டு ரமளான் மாதத்தை வீணாக்கிவிட மாட்டேன்! என்னுடைய உள்ளங்களில் உள்ள பாவங்கள் என்ற அசுத்தங்களை நன்மை செய்வதன்மூலமாகத் துடைத்தெறிவேன் என்பதாகும்.
நாம் நினைப்பது ஒன்று! ஆனால் நடப்பதோ வேறொன்று! நினைத்தால் மட்டும் போதுமா? உள்ளங்களில் என்ன சபதம் எடுத்தோமோ, அந்த சபதத்தை வெறியுடன் அமுல்படுத்த வேண்டாமா? இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போதே ‘ரமளான் நம்மைவிட்டுப் பிரியாவிடைகொடுக்கும் ‘நேரம் நெருங்கிவிடும். பிறகு, வருத்தத்தோடு ‘இந்த ரமளான் தான்முடிந்துவிட்டது, அடுத்த ‘ரமளானையாவதுசரியாகப்பயன்படுத்த முயற்சிப்போம் என்ற விரக்தியோடு அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபட ஆரம்பித்துவிடுவோம்.
இது போன்ற நிலைகளில் நம்மை நோக்கி வந்திருக்கின்ற இந்த வருடரமளானை வீணடித்து விடாமல், ரமளான் ஏன் வந்திருக்கின்றது? ரமளான் நம்மிடத்தில் எதை எதிர்பார்க்கின்றது? ரமளான் எதை நோக்கி அழைக்கின்றது? ரமளான் மாதத்தை எவ்வாறு வரவேற்பது? இது போன்ற . அனைத்து விஷயங்களையும் அறிந்துவைத்துக் கொண்டு ரமளானைஆரத்தழுவி வரவேற்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
இறையச்சமே இலக்கு
ரமளான் நோன்பு நம் மீது கடமையாக்கப் பட்டதற்கு மிகமிக முக்கியமானஅடிப்படைக் காரணம் நாம் அனைவரும் தக்வா எனும் இறையச்சத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்ற காரணத்தினால் தான். ரமளான் மாதத்தில் நாம் பெறக்கூடிய இறையச்சத்தின் மூலமாக மீதம் இருக்கின்ற பதினோரு மாதங்களிலும் அற்புதமான ஒரு இலட்சியப்பாதையை அடைந்துவிடலாம் என்று சொல்கின்ற அளவுக்கு ரமளான் நோன்பு நமக்கு இறையச்சத்தைப் போதிக்கின்றது.
நம்பிக்கைகொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
(அல்குர்ஆன்: 2:183) ➚.)
நோன்பின் நோக்கமே தக்வா எனும் இறையச்சத்தைப் பெறுவதற்குத்தான் என்றும், இறையச்சத்தை இலக்காகக் கொண்டுதான் ரமளான்மாதத்தில் காலடி எடுத்துவைக்க வேண்டும் என்றும்இறைவன்அழுத்தம் திருத்தமாகப்பதிய வைக்கின்றான். இன்றைய நவீன காலகட்டத்தில் இந்த இறையச்சம் என்பது மிகவும் அத்தியாவசியமானதாகும்.
இறையச்சம் இல்லாமலும் இறையச்சத்தைப் பெறுவதற்கு முயற்சிசெய்யாமலும் நம்முடைய வாழ்நாளை நாம் கழிக்கும் போது மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும் என்பதே, கடந்தகால வரலாறுகள் நமக்குச் சொல்லித் தருகின்ற பாடம். தக்வாவைப் பெறுவது எப்படி?
அருள் பொங்கும் ரமளான் மாதத்தில் நோன்பு
நோற்றிருக்கும் போது நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையானஅனைத்துப் பயிற்சிகளையும், மேலும் இறைவனின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்ற குணநலன்களையும், இறைவன் தடுத்த காரியங்களைச் செய்யாமல், அவற்றை விட்டும் தவிர்ந்து இருக்கின்ற அற்புத ஆற்றலையும் பெற்றுக்கொள்கின்றோம்.
நோன்பு நேரங்களில் ஹலாலான சில விஷயங்களையும், இறைவன் சொல்லிவிட்டான் என்ற ஒற்றைக் காரணத்துக்காக, நம்முடைய மனோஇச்சைகளுக்குக் கட்டுப்படாமல் அல்லாஹ் ஒருவனுக்காக வேதியாகம் செய்து புறந்தள்ளி ஒதுக்கிவிடுகின்றோம்.
அதிகாலை ஃபஜ்ர் நேரம் முதல் மாலை மக்ரிப் நேரம் வரை அன்றைய தினத்தின் கடுமையான உஷ்ணத்தையும், வெயிலையும் கூடப் பொருட்படுத்தாமல் இறைவனுக்காகப் பசியையும் தாகத்தையும் பொறுத்துக் கொள்கின்றோம். இந்தப் பயிற்சிதான் அல்லாஹ் ஹராமாக்கியவற்றைச் செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி, பயபக்தியை ஊட்டக்கூடிய பயிற்சிக்களமாக மாறிநிற்கும்.
நோன்பு நோற்றிருப்பவர் தொழுகைக்காக உளு செய்கின்ற போது தங்களின் தொண்டைக் குழிவரைக்கும் சென்ற தண்ணீரை, யாருமேகண்டு கொள்ளவில்லையென்றாலும், அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று கூறி, ஒரு துளி கூட தொண்டைக்குழியில் இருந்து கீழிறக்கிவிடாமல் அப்படியே வெளியே கொப்பளித்துவிடுகிறார். இந்தப் பயிற்சி இறைவன் மீது இருக்கின்ற பயத்தை அதிகரிக்க நிச்சயம் உதவுகின்றது. ! –
ஒரு நோன்பாளி தனது வீட்டில் தனிமையில் அமர்ந்திருக்கின்ற போது, குளிர்பானங்களும், ருசிகர உணவுகளும் அவருக்கு முன்னால் வீற்றிருக்கும். யாருமே இல்லாத நேரமான தனிமையில் கூட அவற்றைத் தொட்டுப் பார்ப்பதற்குக் கூட உள்ளத்தில் சிந்தனைஎழாது. இந்தப் பயிற்சி இறைவன் தடுத்திருக்கின்ற காரியங்களைச் செய்யவிடாமல் உள்ளத்தைப் பக்குவப்படுத்த உதவுகின்றது.
ஒரு நோன்பாளி, மனிதர்கள் நன்கு அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கின்ற வேளையில் அதிகாலை நேரத்தில் எழுந்து ஸஹர் உணவை ‘உண்ணுகின்றான். மற்ற மனிதர்கள் உண்ணுகின்ற ‘நேரங்களில், உணவுகள் மற்றும் பானங்களை விட்டும் தவிர்ந்து கொள்கின்றான்.
இந்தக்’ காரியம் அவனுக்குச் சிரமத்தை ஏற்படுத்தினாலும்,குரியவர்களாக, இறைவனின் அன்பைப் பெறுகின்ற மனிதர்களாக மாறுவதற்கு அல்லாஹ்வை நேசிக்க வேண்டும். அல்லாஹ்வை அஞ்சி நடக்காத துர்பாக்கியசாலிகளை அல்லாஹ் நேசிக்க மாட்டான்,
அல்லாஹ்வைஅஞ்சுங்கள்! (தன்னை) அஞ்சுவோருடனேஅல்லாஹ்இருக்கிறான். என்பதைஅறிந்துகொள்ளுங்கள்!
(அல்குர்ஆன்: 2:194) ➚.)
அல்லாஹ்விற்கு பயந்து இறையச்சத்தோடு ஒவ்வொரு நாட்களையும் கழிக்கின்ற மனிதர்களோடு அல்லாஹ் இருக்கின்றான். அல்லாஹ் உடன் இருக்கின்றான் என்றால், அல்லாஹ்வின் உதவி இருக்கின்றது. அல்லாஹ்வின் பாதுகாப்பு இருக்கின்றது.
அல்லாஹ்வின் கண்காணிப்பு இருக்கின்றது. இதுபோன்ற ஒட்டுமொத்த இறைவனின் கண்காணிப்புக் கீழ்வலம்வருபவர்களாக நாம் மாறுவதற்கும், இறைவன் நம்மை அவனது பாதுகாப்பிற்குக் கீழ்வைத்திருப்பதற்கும் இறையச்சத்தைப் பிரதானமாகக் கொண்டிருக்கவேண்டும். இறையச்சவாதிகளுக்கு இன்னும் அதிகப்படியான சிறப்பம்சங்களை இறைவன் குறிப்பிடும்போது…
وَمَنْ يَّـتَّـقِ اللّٰهَ يَجْعَلْ لَّهٗ مَخْرَجًا ۙ
65:3 وَّيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ ؕ وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ ؕ
அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். ,
(அல்குர்ஆன்: 65:2) ➚,3.)
இறைவனை அஞ்சுவோருக்கு ஒரு அற்புதமான போக்கிடம் தயாராக இருக்கின்றது என்று இறைவன் வாக்குறுதி வழங்குகின்றான். மேலும் எவ்விதச் சிரமமும் இன்றி அல்லது சிரமப்பட்டாலும் கூட இறையச்சவாதிகளுக்கு அறியாப்புறத்திலிருந்து உணவளிப்பதும், உதவி செய்வதும் அல்லாஹ்விற்குக் கடமை என்றும், அல்லாஹ்வை சார்ந்திருப்போருக்கு இறைவன் ஒருவன் மட்டுமே போதுமானவன் என்றும் உணர்வுப்பூர்வமான அறிவுரையை இறைவன் நமக்குவழங்குகின்றான். இறையச்சவாதிகள் அடையும் மிக முக்கியமான சிறப்பாக இறைவன் குறிப்பிடும் போது…
அல்லாஹ்வை அஞ்சுபவரின் தீமைகளை அவரை விட்டும் அல்லாஹ் நீக்குவான். அவருக்கு மகத்தான கூலியை வழங்குவான்.
(அல்குர்ஆன்: 65:5) ➚.)
நம்முடைய வாழ்நாளில் நாம் செய்து வருகின்ற அத்தனை தீமைகளையும் கழுவி, தீமைகளை நம்மை விட்டு அப்புறப்படுத்தி, பரிசுத்தமான மனிதர்களாக இறைவனை அஞ்சுவோரை மாற்றுவதற்கு அல்லாஹ் விரும்புகின்றான்.
மேலும், இறைவனை அஞ்சுவோருக்கு மகத்தான, பிரம்மாண்டமான கூலியையும் இறைவன் தயார் செய்துவைத்திருக்கின்றான். இது போன்ற ஏராளமான சிறப்புகளையும், கண்ணியத்தையும், மகத்துவத்தையும் இறைவனை.அஞ்சக்கூடிய மனிதர்களால் மட்டுமே பெற முடியும். இறைவனை அஞ்சுவோரை இறைவன் உச்சத்தில் வைத்து நன்மைகளை அருவிகளாகக் கொட்டித்தீர்க்கின்றான்.
இறையச்சம் இல்லாமல் தங்களின் வாழ்க்கையை தான் தோன்றித்தனமாக, தங்களின் மனம்போன போக்கில் வாழ்பவர்கள் இந்த ரமளானில் தங்களின் உள்ளங்களைக் கழுவி, இறையச்சம் என்ற ஆயுதத்தின் மூலமாக சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். வெறுமனேஅழிந்து போகின்ற அற்ப உலக சுக போகங்களுக்காகவும், பதவிக்காகவும், புகழுக்காவும், காசுபணம்சம்பாதிப் பதற்காகவும் ஆசைப் பட்டு இறைவனைஅஞ்சாமல் வாழ்ந்தால் மேற்குறிப்பிட்ட இறைவனின் எந்தச் சிறப்புகளையும் கடுகளவிற்குக் கூட நம்மால் சுவைக்கவோ, சுவாசிக்கவோ முடியாது என்பதை உள்ளங்களில் அழுத்தம்திருத்தமாகப் பதிய வைத்துக் கொள்ளவேண்டும். அழைப்பாளர் அழைக்கின்றார்,
அருள் பொங்கும் மாதத்தில் பாவமான காரியங்களை விட்டும் மனிதர்கள், அதிலும் குறிப்பாக நோன்பாளிகள் தவிர்ந்து இருக்க வேண்டும் என்ற காரணத்தினால், நோன்பாளிகள் இறையச்சத்தோடு தங்களின் வணக்க வழிபாடுகளைச் செய்து முடிக்கவேண்டும் என்பதற்காக இறைவன் புறத்திலிருந்து சிறப்பான முறையில் பிரத்தியேக அழைப்பாளர் நம்மை நோக்கி அழைப்பு விடுக்கின்றார்.
ரமளான் மாதத்தில் வானத்தின் வாசல்கள் திறக்கப்படும்; நரகத்தின் வாசல்கள் மூடப்படும்; கெட்டவர்களான ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர். அதன் இரவுகளில் ஒரு அழைப்பாளர் (வானவர்) இறக்கி, ”நல்லதைத் தேடுபவனே! (நன்மையில்) முன்னேறிவா! தீமையைத் தேடுபவனே! (தீமையைத்) தடுத்துக்கொள்!” என்று அழைக்கிறார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உத்பாபின் ஃபர்கத் (ரலி)
நூல்: (நஸாயீ: 2108)
ரமளான் மாதத்தில் இறைவனின் அருள் மழையில் ஒட்டுமொத்த நோன்பாளிகளும் நனையவேண்டும் என்பதற்காக முரண்டு பிடித்த, அகம்பாவம் கொண்ட, ஆணவத்தன்மை மிகைத்திருக்கின்ற ஷைத்தான்களை இறைவன் பிடித்துவைத்து விலங்கிட்டுச் சிறைபிடிக்கின்றான். ஷைத்தான் விலங்கிடப்படுகின்றான் என்றால் தீமைகளே நடக்காது என்றுஅர்த்தமல்ல! மற்ற நாட்களை விட நோன்பு நாட்களில், நோன்பாளிகளிடம் அவனது ஆதிக்கம் குறைவாக இருக்கும் என்றே இதை விளங்கிக்கொள்ள வேண்டும்.
இறையடியார்கள் இறையச்சத்தோடு நன்மைகளை அதிகமதிகம் செய்யவேண்டும் என்பதற்காக, ஷைத்தான்களின் ஆதிக்க சக்தியிலிருந்து நம்மைக் காப்பாற்றி அமல்களை அதிகப்படுத்த இறைவன் உதவிக்கரம் நீட்டுகின்றான்.
மேலும், இறையச்சம் கலந்த அமல்களை ! நோன்பாளிகள் செய்வதற்காகவே சிறப்பு அழைப்பாளர் அழைக்கின்றார். ‘நன்மைகளை அதிகம் செய்பவர்களே! விரையுங்கள்! மேலும், தீமைகளை அதிகம் செய்பவர்களே! தீமைகளை விட்டும் தூரமாகுங்கள்’ என்கின்றார். இறையச்சம் மிகைத்திருக்கின்ற நோன்பாளிகள் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும் என்பதற்காகவும், இறையச்சமில்லாத சில மனிதர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவும் இந்தச் சிறப்பு ஏற்பாட்டை இறைவன் – செய்துவைத் திருக்கின்றான்.
இறையச்சவாதிகளைத் தவிர, இந்த அழைப்பாளருக்கு வேறு எவராலும் பதிலளிக்க முடியாது. அழைப்பாளரின் சிறப்பு அழைப்பை ஏற்று கண்ணியத்தோடு இந்த ரமளானைக் கழிப்பதற்குக் கடமைப்பட்டிருக்கின்றோம். பரிசுத்தத்தின் பக்கம் அழைக்கின்றது.
ரமளான் மாதம் என்பது நோன்பாளிகளைப் பரிசுத்தப்படுத்தி, இறையச்சத்தைப் பாடமாக நடத்தி, நற்குணம் கொண்டவர்களாக மாற்றுகின்ற மாதம் என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால் இன்னும் ஒரு படிமேலாகச் சென்று ரமளான் ஒட்டு மொத்த பாவத்தையும் கழுவி மனிதர்களைப் பரிசுத்தப்படுத்துகின்ற அற்புதமானவாசலைத் திறந்துவைத்து, உண்மையான நோன்பாளிகளை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றது.
அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்.
நூல்: (புகாரி: 38)
மேலும், நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
எவர். நம்பிக்கைகொண்டவராகவும், நற்கூலியைஎதிர்பார்த்தவராகவும்ரமளான் மாதத்தில்நின்றுவணங்குகின்றாரோஅவரின் முந்தையபாவங்கள்அனைத்தும்மன்னிக்கப்பட்டு விடும்.
நூல்: (புகாரி: 37)
இறைவனுக்காகவும், நன்மையை எதிர்பார்த்தும் ரமளானில் நோன்பு நோற்றால் நாம் அடைகின்ற பாக்கியத்தை ஒட்டு மொத்தமாகவும், இரத்தினச் சுருக்கமாகவும் இந்தச் செய்திகள் சாறுபிழிந்து நமக்கு உபதேசிக்கின்றது. மேலும், ரமளான் மாதத்தில் நோன்பாளிகள் உளத்தூய்மையோடும், இறையச்சம் கலந்த உண்மையான நம்பிக்கையோடும் நோன்பு நோற்றாலோ அல்லது இரவு நேரங்களில் நின்று வணங்கினாலோ இறைவன் தருகின்ற வெகுமதியாக, நாம் முன்னர் செய்த அனைத்துப்பாவங்களையும் மன்னித்துப் பரிசுத்தப்படுத்துகின்றான்.
ஒரு மனிதர் ரமளானில் மிகச்சரியாக ‘ஒவ்வொரு நாட்களையும் பயன்படுத்தினால் இறைவனுக்காகவும், இறைவன் நன்மைகளை அள்ளித்தெளிப்பதற்குகாத்துக் கொண்டிருக்கின்றான் என்ற காரணத்துக்காகவும் நோன்பு பிடித்தால் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிட்டது என்ற இனம் புரியாத ஒரு மகிழ்ச்சிக் கடலில் மூழ்கித்திளைப்போம்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள்கூறியதாவது: – “அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலை நிறுத்தி, ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரை சொர்க்கத்தில் புகச்செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது; அவர்அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தாலும் சரி; அல்லது அவர் பிறந்த பூமியில் உட்கார்ந்து கொண்டாலும் சரி” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: (புகாரி: 2790)
இந்த செய்தியை நன்கு ஆழமாகப்படித்துப் பாருங்கள்! இறைநம்பிக்கையும், இறையச்சமும் கலந்த நோன்பு ஒரு மனிதரை அவர் செய்த தவறுகளிலிருந்து திருத்தி பரிசுத்தப்படுத்துகின்றது. மேலும், ரமளானில் இறைவனுக்காக நோன்பு நோற்ற மனிதர்களை சொர்க்கத்தில் நுழைவிக்கச் செய்வது இறைவன் தனக்குத்தானே எழுதி வைத்துக் கொண்ட கட்டாயக் கடமைகளிலும், விதிகளிலும் உள்ள ஒன்றாகும்.
இறையச்சத்தோடு நோன்பு நோற்றால் கட்டாயமாக இறைவன் சுவர்க்கத்தில் நுழைவிக்கச் செய்வான் என்று இருக்கும் போது, நம்மை ஆரத்தழுவி இருக்கின்ற அருள்பொங்கும் ரமளான் மாதத்தை வீணடிக்கலாமா? சிந்தித்துப்பாருங்கள்!
ரய்யான்அழைக்கின்றது
ரமளான் மாதம் முழுவதும் இறையச்சத்தோடு, நன்மையை எதிர்பார்த்து நம்முடைய அமல்களையும், வணக்க வழிபாடுகளையும் நோன்பாளிகள் செய்து முடிக்கும் போது நாம் அடைகின்ற பரிசுகளை இறைவன் தந்து தூதரின் மூலமாக அழகானமுறையில் விளக்கித் தருகின்றான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் எட்டுவாசல்கள் உள்ளன. அதில் “ரய்யான்’ என்றழைக்கப்படும் வாசலொன்று உள்ளது. அதில் நோன்பாளிகளைத் தவிர வேறெவரும் நுழைய மாட்டார்கள்.
நூல்: (புகாரி: 3257)
மேலும்நபி (ஸல்) அவர்கள்கூறுகின்றார்கள்:
சொர்க்கத்தில்’ரய்யான்’ என்றுகூறப்படும் ஒருவாசல்இருக்கிறது! மறுமைநாளில், அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள்! ‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும்; உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டு விடும்; அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்.
நூல்: (புகாரி: 1896)
உண்மையான முறையில் நோன்பை நிறைவேற்றினால், எனக்காக நோன்பு நோற்ற என்னுடைய நோன்பாளிகள் எங்கே? என்னுடைய நோன்பாளிகள் எங்கே? எங்கே? என்று நம்மை எதிர்பார்த்துக்காத்திருந்து கூலியை அள்ளி வழங்குகின்றான்.
சொர்க்கத்தில் ஏராளமான படித்தரங்கள் இருந்தாலும், நோன்பாளிகளுக்கு மாத்திரம் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற ரய்யான் என்ற சொர்க்கவாசலுக்குச் சொந்தக்காரர்களாக நோன்பாளிகளை இறைவன் அழைக்கின்றான். மேலும், நோன்பாளிகள் ரய்யானில் நுழைந்தவுடன் ரய்யானின் வாசல் அடைக்கப்பட்டு விடும்.
நோன்பாளிகள் ரமளான் மாதத்தில் பட்ட சிரமத்தினாலும், கஷ்டத்தினாலும் நாளை மறுமையில் இறைவன் மகத்தான பரிசாக, நோன்பாளிகளுக்கு மட்டும் பிரத்தியேகமாக ரய்யான் எனும் சொர்க்கத்தின் வாசல் வழியாகஅழைக்கின்றான். ரமளான்எப்படி நம்மை ஒவ்வொருவருடமும் ஆரத்தழுவி வரவேற்கின்றதோ, அது போன்று ரமளானில் நன்மையை எதிர்பார்த்து நோன்பு நோற்ற நோன்பாளிகளை இறைவன் முகமலர்ச்சியோடு ஆரத்தழுவி ரய்யான் என்ற சொர்க்கவாசல் வழியாக வரவேற்கின்றான்.
அருள் பொங்கும் மாதத்தை வீணாக்காதீர்கள்!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவன் ரமளான் மாதத்தை அடைந்து அவனது பாவங்கள் மன்னிக்கப்படாமல் அம்மாதம் கழிந்தால் அவனுடைய மூக்கு மண்ணை கவ்வட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (திர்மிதீ: 3545) (3468) (ஹதீஸ்சுருக்கம்)
இந்தக் கடுமையான எச்சரிக்கைக்குப் பயந்து, வீணானகாரியங்களில் ஈடுபடுவதிலிருந்து விலகி இருக்க வேண்டும். இதிலிருந்து நாம் அறிவது, ரமளான் மாதம் நம்மை நோக்கி வருவதற்குண்டான பிரதான நோக்கமே, நன்மைகளை நாம் அதிகம் செய்ய வேண்டும் என்ற ஒற்றைக்காரணத்தினால் தான். ரமளானை நன்மைகள் செய்வதற்காக வரவேற்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
ரமளான் மாதத்தை பயனுள்ள வகையில் மாற்றுவதற்கு கடுமையாக முயற்சிசெய்ய வேண்டும். ரமளான் மாதத்தை ஒரு நிமிடம் கூட வீணடிக்காத வகையில் கிட்டத்தட்ட 720 மணி ‘நேரங்களும் அயராது இறையச்சத்தை பெறுவதற்கு பாடுபட வேண்டும். அதிகமதிகம் உளமாற இறைவனிடத்தில் பாவமன்னிப்புத் தேடி சரணடையுங்கள்! இரவுத் தொழுகையில் மிகவும் பேணுதலாகஇருங்கள்! குர்ஆனை அதிகமதிகம் ஒதுங்கள்! இறைதியானம், பிரார்த்தனை, துதித்தலில்; அதிகமாக ஈடுபட வேண்டும்.
கடைசிப் பத்து நாட்களில் பம்பரமாகச் சுழன்று, ஓய்வெடுக்காமல் ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்தஇரவைத் தேடப்பாடுபட வேண்டும். அதிகமதிகம் தர்மம் செய்ய வேண்டும்.கேவலமான, அருவருக்கத் தக்க காரியங்களிலிருந்து விலகி விடவேண்டும். சமூகவலைத்தளங்களில் மூழ்கிக் கிடந்து நேரத்தையும், காலத்தையும் வீணடிக்காமல் இருக்கவேண்டும். ரமளானில் ஒய்வு நேரங்கள் போகமற்ற நேரங்களில் தூங்கியே கழித்து விடாமல் அமல்களைஅதிகப்படுத்தமுயற்சிக்க வேண்டும்.
ஏராளமான பாக்கியங்களை பெற்றுத்தந்து, பாவம்கலவாத மனிதர்களாக நம்மை மாற்றுவதற்கு அருள் பொங்கும் ரமளான் நம்மிடத்தில் வந்து அடைந்து இருக்கின்றது. நம்மையெல்லாம் பரிசுத்தமான மனிதர்களாகவும், இறையச்சமுள்ள மனிதர்களாகவும் மாற்றுவதற்கு ரமளான்முயற்சிக்கின்றது. ஆனால் மனிதர்களில் பெரும்பாலானோர் இந்த அருள் பொங்கும் சங்கை நிறைந்த ரமளான் மாதத்திலும் கூட தேவையில்லாத, வீணான, அருவருப்பான, அசிங்கமானகாரியங்களில் ஈடுபட்டு, இறையச்சமா?
அது எனக்குக் கடுகை கோடிபங்காகவைத்து அதில் ஒரு பங்கு கூட வேண்டவே வேண்டாம் என்று சொல்லி, விரண்டோடி, நரகத்தின் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றார்கள். எனவே, இந்த வருட ரமளானை அடைந்திருக்கின்றநாம் அடுத்த வருட, ரமளானில் இருப்போமா? இல்லையா? என்பது’ தெரியாது. நம்மை நோக்கி வந்திருக்கும் அருள் பொங்கும் ரமளான் மாதத்தைக் கனகச்சிதமாக, .. சரியான முறையில் பயன்படுத்தியே தீருவேன், ‘நன்மைகளைக் கொள்ளையடிக்க விரைவேன் என்ற வேட்கையுடன் இந்த ரமளானில் காலடி எடுத்துவைத்து, சொர்க்கத்தைப் பெறுவதற்கு ‘அல்லாஹ்உதவிசெய்வானாக!!