மலக்குகளின் துஆவைப் பெறுவோர்கள்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

முன்னுரை

இறைவனின் படைப்புகளில் மிகஅற்புதமான படைப்பு மலக்குகள் ஆவார்கள். என்னதான் மனிதன் சிறந்த படைப்பாக இருந்தாலும் சிந்திக்கும் திறன் இருந்தாலும் இறைவனுக்கு மாறு செய்யும் குணம் அவனிடம் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் மலக்குமார்கள், இறைவனின் கட்டளையை அப்படியே! பின்பற்றி நடப்பவர்கள். இறைவனுக்கு மாறுசெய்யவே! தெரியாதவர்கள்.

திருக்குர்ஆனில் இறைவன் இவர்களைப்பற்றி கூறும்போது தங்கள் இறைவனின் கட்டளைக்கு மாறுசெய்ய மாட்டார்கள் என வர்ணிக்கின்றான்.

இவர்கள் இறைவனின் வேலையாள்கள். இந்த நல்லோர்கள் நமக்காக துஆ செய்தால் எப்படி இருக்கும். மலக்குகள் நமக்காக துஆ செய்வது சாதாரண விஷயமா? அவர்களின் துஆவில் நாம் இடம்பெறுவது நமக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியமே!. ஏனெனில், இறைவன் நமக்காக துஆ செய்யுமாறு கட்டளையிட்டால் மட்டுமே! மலக்குகள் துஆசெய்வார்கள். தாமாக துஆ செய்ய மாட்டார்கள்.

தர்மம் செய்பவர்

‘ஒவ்வொரு நாளும் இரு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், ”அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!” என்று கூறுவார். மற்றொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!” என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 1442)

தொழுத இடத்தில் அமருபவர்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தமது வீட்டில் தொழுவதைவிடவும், தமது கடைத் தெருவில் தொழுவதை விடவும் ‘ஜமாஅத்துடன் (கூட்டுத் தொழுகை) தொழுவது, மதிப்பில் இருபத்தி ஐந்து (மடங்குகள் தொழுகைகள்) கூடுதலாகும். ஏனெனில், உங்களில் ஒருவர் அங்கசுத்தி (உளூ) செய்து, அதை செம்மையாகச் செய்து, தொழுகின்ற ஒரே நோக்கத்துடன் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் பள்ளிவாசலுக்கு வரும் வரை எடுத்துவைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும் ஓர் அந்தஸ்த்தை அவருக்கு அல்லாஹ் உயர்த்துகின்றான்;

ஒரு பாவத்தை அவரை விட்டு நீக்குகின்றான். (கூட்டுத்) தொழுகையை எதிர்ப்பார்த்து அவர் பள்ளிவாசலில் இருக்கும்போது அவர் தொழுது கொண்டிருப்பவராகவே! கருதப்படுகிறார். மேலும், அவர் (வெளியேறிவிடாமல்) எந்த இடத்தில தொழுகின்றாரோ! அந்த இடத்திலேயே! இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். ஆனால், (அங்கசுத்தியை அகற்றிவிடக் கூடிய) சிறுதுடக்கு (காற்றுப்பிரிதல் மூலம்) அவர் பள்ளிக்குள் உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும். அப்போது வானவர்கள், ”இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக! என்று பிரார்த்திக்கின்றார்கள்.
(புகாரி: 477)

தொழுகையை எதிர்பார்த்து இருப்பவர்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்து வீற்றிருக்கும்வரை அவர் தொழுதுகொண்டிருப் பவராகவே கருதப்படுகிறார்; அவருக்குச் சிறு துடக்கு ஏற்படாமல் இருந்தால். அப்போது அவருக்காக வானவர்கள், ”இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவருக்குக் கருணை புரிவாயாக!” என்று பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(முஸ்லிம்: 1178)

இந்த காரியம் மலக்குமார்களின் துஆவை பெற்றுத் தருவதோடு இன்னும் பல நன்மைகளையும் அள்ளித் தருகிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல இந்த ஒரே செயல்மூலமாக பல நன்மைகளை அள்ளிவிடலாம். இதோ நபிகள் நாயகம் கூறுவதைப் பாருங்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?” என்று கேட்டார்கள். மக்கள், ”ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”(அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்துவைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவைதாம் கட்டுப்பாடுகளாகும்” என்று கூறினார்கள்.(முஸ்லிம்: 421)

பிறருக்கு துஆ செய்பவர்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர், கண்ணெதிரே! இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்தித்தால், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர், ”ஆமீன் (இறைவா! ஏற்றுக்கொள்வாயாக) அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும்!” என்று கூறுகிறார்.
(முஸ்லிம்: 5280)

ஸஃப்வான் பின் அப்தில்லாஹ் பின் ஸஃப்வான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்றபோது (என் மனைவியின் தந்தை) அபுத்தர்தா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அங்கு அவரைக் காண முடியவில்லை. (என் மனைவியின் தாய்) உம்முத் தர்தா அவர்களைக் கண்டேன். அவர் என்னிடம், ”இந்த ஆண்டில் நீங்கள் ஹஜ்ஜுக்குச் செல்ல நாடியுள்ளீர்களா?” என்று கேட்டார்.

நான் ”ஆம்” என்றேன். அதற்கு அவர் சொன்னார்: அவ்வாறாயின் எங்கள் நலனுக்காகவும் பிரார்த்தியுங்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், ”ஒரு முஸ்லிம் கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகச் செய்யும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அந்த முஸ்லிமின் தலைக்கருகில் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர் ஒருவர் உள்ளார். அந்த முஸ்லிம் தம் சகோதரருக்காக நன்மை வேண்டிப் பிரார்த்திக்கும்போதெல்லாம், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அந்த வானவர், ‘இறைவா! (இவருடைய பிரார்த்தனையை) ஏற்றுக் கொள்வாயாக! அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறார்” என்று கூறினார்கள்.
(முஸ்லிம்: 5281)

தொழுகைக்கு முந்தி வருபவர்

முதல் வரிசையில் இருப்பவர்களின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகள் இறைவனிடம் (அவர்களுக்காக) அருள் வேண்டுகிறார்கள் என நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள் இதை பராஃ பின் ஆஸிப் அறிவிக்கின்றார்கள்
(இப்னு மாஜா: 987) ,(அஹ்மத்: 17878) ,(நஸாயீ: 642)

எனவே, மலக்குமார்களின் துஆக்களை பெற செய்ய வேண்டிய அமல்களை எல்லாம் செய்து அல்லாஹ்வின் அருளைப் பெற முயற்சிப்போமாக!