அல்லாஹ்வை நேசிப்போம், ஈமானைப் பாதுகாப்போம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

முன்னுரை

அல்லாஹ்வை நேசித்தால் தான் ஈமானின் சுவையை உணர முடியும் என்பதற்கு நபி (ஸல்) அவர்கள் பல செய்திகளில் மேற்கோள் காட்டியுள்ளார்கள். அல்லாஹ்வை தொழுதால் தான் அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர்களாக ஆக முடியும். அவ்வாறு அல்லாஹ்வின் நேசத்தை பெற வழிகளை பார்ப்போம்.

தொழுகை தரக்கூடிய இன்பம்

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை நேசித்தக் காரணத்தினால் தொழுவது அவர்களுக்கு இன்பத்தைத் தரக்கூடியதாக இருந்தது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எனது கண் குளிர்ச்சி தொழுகையில் வைக்கப்பட்டுள்ளது. அறிவிப்பவர்: அனஸ் (ரலி),(நஸாயீ: 3879)

அல்லாஹ்வின் நேசம் ஒருவரை நல்லகாரியங்களைச் செய்யத் தூண்டும்

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள்.
(அல்குர்ஆன்: 76:8)➚

நயவஞ்சகன் தான் அல்லாஹ்வை நேசிக்கமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் விளங்கியிருந்தார்கள். ஒருவரை ஏசும் போது அல்லாஹ்வை விரும்பாத நயவஞ்சகன் இவன் என்று நபித்தோழர்கள் கூறியிருக்கிறார்கள்.
அறிவிப்பவர்: இத்பான் இப்னு மாலிக் (ரலி),(புகாரி: 425)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மூன்று தன்மைகள் அமையப்பெறாத) எவரும் இறைநம்பிக்கையின் சுவையை உணரமாட்டார். (அவை)
1. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்விற்காகவே நேசிப்பது.
2. இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றியப் பிறகு மீண்டும் அதற்குத் திரும்புவதை விட நெருப்பில் வீசப்படுவதையே விரும்புவது.
3. அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் மற்றெதையும் விட அவருக்கு நேசத்திற்குரியோராவது. அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),(புகாரி: 6041)

நபிகளார் செய்துள்ள பிரார்த்தனை

அல்லாஹ்வை நேசிப்பது ஈமானுக்கு மிக முக்கியமான அம்சம் என்பதினால் நபி (ஸல்) அவர்கள் இத்தன்மை தன்னிடத்தில் இருக்க வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

(இறைவா) உன்னை நேசிப்பதையும், உன்னை யார் நேசிப்பார்களோ அவர்களை நேசிப்பதையும் உனது நேசத்தின் பால் எந்தக் காரியம் நெருக்கி வைக்குமோ அந்த நற்காரியத்தை (நான்) விரும்புவதையும் உன்னிடத்தில் வேண்டுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி),(திர்மிதீ: 3159)

அல்லாஹ்வை நாம் நேசிக்க வேண்டும் என்றும் அவனை நேசிப்பது போல் யாரை நேசித்தாலும் அது இணைவைப்பு என்றும் அல்லாஹ் சொல்கிறான்.

அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள். அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும் போது அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே என்பதையும், அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும் கண்டு கொள்வார்கள்.
(அல்குர்ஆன்: 2:165)➚

அல்லாஹ்வை சேசத்தைப் பெற

நபி (ஸல்) அவர்களை பின்பற்றுவதின் அவசியத்தை உணர்த்தும் போது அல்லாஹ்வை நேசிப்பதை நிபந்தனையாக வைத்து அல்லாஹ் கூறுகிறான்.

”நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக!
(அல்குர்ஆன்: 3:31)➚

அல்லாஹ்விற்கு பிடிக்காத காரியத்தை செய்வதால் அவர்களை நாம் வெறுக்க வேண்டும
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக் கூடிய சமுதாயத்தினர், அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்போர் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் அவர்களை நேசிப்பதை நீர் காணமாட்டீர்.

அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.(அல்குர்ஆன்: 58:22)➚

”உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன்பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்” என்று கூறுவீராக!
(அல்குர்ஆன்: 9:24)➚

அல்லாஹ்வை நேசிப்பதே வெற்றிக்கு உதவும்

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே மறுமைநாள் எப்போது வரும்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அதற்காக நீ என்ன முயற்சி செய்துள்ளாய்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் அதற்காக நான் அதிகமான தொழுகையையோ, நோன்பையோ தான தர்மங்களையோ முன் ஏற்பாடாகச் செய்து வைக்கவில்லை. ஆயினும் நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் நீ யாரை நேசிக்கின்றாயோ அவருடன் (மறுமையில்) இருப்பாய் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),(புகாரி: 6171)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மூன்று விஷயங்கள் யாரிடத்தில் இருக்கின்றதோ அவர் நரகத்தை விட்டும் தடுக்கப்படுவார். நரகம் அவரை விட்டும் தடுக்கப்படும். (அவை) அல்லாஹ்வை நம்புவது. அல்லாஹ்வை நேசிப்பது. இணைவைப்பிற்கு திரும்பிச் செல்வதை விட நெருப்பில் போடப்பட்டு கருக்கப்படுவது அவருக்கு விருப்பமானதாக வேண்டும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),(அஹ்மத்: 11679)

அவனை நேசிக்காமல் அவனை மறந்து வாழ்ந்தால் நம்மை அழித்துவிட்டு அவனை நேசிக்கும் நல்லக்கூட்டத்தாரை அல்லாஹ் படைப்பான். நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏக இறை வனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
(அல்குர்ஆன்: 5:54)➚

அள்ளித்தருவதில் அல்லாஹ் குறைந்தவனா?

அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் உங்களால் எண்ண முடியாது. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.(அல்குர்ஆன்: 16:18)➚

உங்களிடம் உள்ள ஒவ்வொரு அருட்கொடையும் அல்லாஹ்வுடையது. பின்னர் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனிடமே முறையிடுகின்றீர்கள்.
(அல்குர்ஆன்: 16:53)➚

அல்லாஹ் தான், வானங்களையும், பூமியையும் படைத்தான். வானிருந்து தண்ணீரை இறக்கினான். அதன் மூலம் உங்களுக்கு உணவாகக் கனிகளை வெளிப்படுத்தினான். அவனது கட்டளைப்படி கடல் செல்வதற்காக கப்பலையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான். ஆறுகளையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான்.(அல்குர்ஆன்: 14:32)➚

அல்லாஹ் அழகில் குறைந்தவனா?

அழகிற்காக ஒருவரை நேசிப்பதாக இருந்தால் முதல் அல்லாஹ்வைத் தான் நாம் நேசிக்க வேண்டும்.
நிச்சயமாக அல்லாஹ் அழகானவன். அவன் அழகையே விரும்புகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),(முஸ்லிம்: 147)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்துவிடும் போது (அவர்களிடம்) அல்லாஹ் உங்களுக்கு நான் இன்னும் கூடுதலாக ஏதேனும் வழங்க வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா? என்று கேட்பான். அதற்கு அவர்கள் இறைவா நீ எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையா? எங்களை நரகத்திருந்து காப்பாற்றி சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கச் செய்யவில்லையா? (இதைவிடக் கூடுதலாக எங்களுக்கு வேறென்ன வேண்டும்)? என்று கேட்பார்கள். அப்போது அல்லாஹ் (தன்னைச் சுற்றிலும் இருக்கும்) திரையை விலக்கி (அவர்களுக்கு தரிசனம் தந்தி)டுவான். அப்போது தம் இறைவனைக் (காணும் அவர்களுக்கு அவனைக்) காண்பதைவிட மிகவும் விருப்பமானது வேறெதுவும் வழங்கப்பட்டிராது.
அறிவிப்பாளர்: ஸஹைப் (ரலி)(முஸ்லிம்: 297)

அல்லாஹ் அன்பு செலுத்துவதில் குறைந்தவனா?

(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள். குழந்தை கிடைக்கவில்லை). கைதிகளில் (தன்) குழந்தையை அவள் கண்டபோது அதை வாரி எடுத்து தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள் என்றார்கள். நாங்கள் இல்லை. எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது என்று சொன்னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான் என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி),(புகாரி: 5999)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்விற்கே உரியவையாகும். அவற்றில் ஒன்றை ஜின், மனிதன், மிருகங்கள், ஊர்வன ஆகியவற்றுக்கிடையே இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் அவை ஒன்றொன் மீதொன்று பாசம் கொள்கின்றன. பரிவு காட்டுகின்றன. அதன் மூலம் தான் விலங்குகூட தன் குட்டிமீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்) தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை அல்லாஹ் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் அடியார்களுக்கு அன்பு காட்டுவான்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),(முஸ்லிம்: 5312)

அல்லாஹ்வின் மீதுள்ள அச்சகுணம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன் (ஒரு காலத்தில்) ஒரு மனிதர் இருந்தார். அல்லாஹ் அவருக்கு செல்வத்தை வழங்கியிருந்தான். அவருக்கு மரணம் நெருங்கிவிட்ட போது தன் மகன்களிடம் உங்களுக்கு எப்படிப்பட்ட தந்தையாக நான் இருந்தேன்? என்று கேட்டார். அவர்கள் சிறந்த தந்தையாக இருந்தீர்கள் என்று கூறினார்கள். அதற்கு அவர் நான் நற்செயல் எதுவும் செய்யவில்லை. ஆகவே நான் இறந்துவிட்டால் என்னை எரித்துவிடுங்கள். பிறகு என்னை பொடிபொடியாக்கி சூறாவளிக் காற்று வீசும் நாளில் (காற்றில்) என்னைத் தூவிவிடுங்கள் என்று சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்தனர். அவரை அல்லாஹ் ஒன்று திரட்டி (முழு உருவை மீண்டும் அளித்து) இப்படிச் செய்ய உத்திரவிடும்படி உன்னைத் தூண்டியது எது? என்று கேட்டான். அவர் உன் (மீது எனக்குள்ள) அச்சம் தான் என்று கூறினார். உடனே அவரைத் தன் கருணையால் அல்லாஹ் அரவணைத்துக் கொண்டான்.
அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி,)(புகாரி: 3478)

அல்லாஹ்வை அஞ்சவேண்டிய முறையில் அஞ்ச வேண்டும். அவனை நேசிப்பது என்றால் வெறும் மனதால் நேசிப்பது என்று அர்த்தம் இல்லை. அவனின் கட்டளைகளை அப்படியே பின்பற்றக்கூடிய மக்களாக நாம் ஆக வேண்டும். அவை தொழுவது, இணைகர்ப்பிக்காமல் இருப்பது, அல்லாஹ்விற்கு பயந்து பாவச்செயல்களிலிருந்து விடுபடுவது போன்றவையாகும்.