போதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

முன்னுரை

நபி (ஸல்) அவர்கள் இந்த உலக வாழ்க்கையை மனிதன் எவ்வாறு விரும்பிங்கிறான் என்றும் எவ்வாறு விரும்ப வேண்டுமென்றும் மிக தெளிவாக கூறியுள்ளார். மனிதன் தன் பேராசைக் காரணமாகவே நரகில் செல்கிறான். போதும் என்ற மனம் பெரும்பாலாரிடத்தில் இருப்பதில்லை.

செல்வத்தை உபயோகிக்கும் முறை

நபியவர்கள் ஒரு நாள் மிம்பரில் அமர்ந்திருந்தார்கள். நாங்கள் அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்தோம். ‘எனக்குப் பின்னால் உலக வளங்களும் அதன் அலங்காரமும் உங்களுக்குத் திறந்து விடப்படுவதைப் பற்றியே நான் பயப்படுகின்றேன்’ என்று நபியவர்கள் கூறினார்கள். ஒருவர் ‘அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மை தீமையைத் தருமா?’ எனக் கேட்டதும் நபியவர்கள் மௌனமாகி விட்டார்கள். உடனே ‘என்ன ஆனது உனது நிலைமை? நீ ரஸூல் (ஸல்) அவர்களிடம் பேசுகிறாய்! ஆனால் நபியவர்களோ உன்னிடம் பேசாமல் இருக்கிறார்களே!’ என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அந்நேரத்தில் நாங்கள் ரஸூல் (ஸல்) அவர்களுக்கு வஹீ அருளப்படுவதாக நினைத்துக் கொண்டோம். ரஸூல் (ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்து விட்டு, ‘கேட்டவர் எங்கே?’ என்று அவரைப் புகழ்வதைப் போல கேட்டார்கள். ”நன்மை தீமையை உருவாக்காது. நீர் நிலைகளின் கரையோரங்களில் விளைகின்ற செடிகள் கால்நடைகளைக் கொன்றுவிடுகின்றன அல்லது மரணத்தின் விளிம்பிற்கே கொண்டு செல்கின்றன.

பசுமையான (நல்ல வகை) செடிகளை தின்பவைகளைத் தவிர! கால்நடைகள் அந்தச் செடிகளை வயிறு புடைக்கத் தின்று சூரிய ஒளியை முன்னோக்கி, சாணம் போட்டு, சிறுநீர் கழித்து மீண்டும் மேய்கின்றன. (இது போலவே) இந்த உலகம் பசுமையானது; இனிப்பானது. ஒரு முஸ்ஸிம் தனது செல்வத்திலிருந்து ஏழைக்கும், அனாதைக்கும், வழிப்போக்கருக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை அது அவனுக்கு நல்ல தோழனாக இருக்கும். யார் அதனை முறையின்றி எடுத்துக் கொள்கின்றாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்று! மறுமையில் அந்தச் செல்வம் அவருக்கெதிராகச் சாட்சி சொல்லும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),(புகாரி: 1465)

மனிதனின் பேராசை

நபியவர்கள் மனிதனின் பேராசையின் உச்சக் கட்டத்தைக் கூறும் போது, மனிதனுக்கு ஒரு ஓடை நிறைய தங்கம் வழங்கப்பட்டால், அதனுடன் இரண்டாவதை விரும்புவான். இரண்டாவது வழங்கப்பட்டாலும் மூன்றாவதை அவன் விரும்புகிறான். மண் தான் அவன் வயிறை நிரப்பும். இதிலிருந்து பாவமன்னிப்புத் தேடியவரை அல்லாஹ் மன்னிப்பான்
அறிவிப்பவர்: இப்னு ஸுபைர் (ரலி),(புகாரி: 6438)

நபிகளார் கூறுகிறார்கள்: மனிதன் பெரியவனாகும் போது அவனுடன் இரண்டு விஷயங்கள் வளர்கின்றன. அவை: 1. செல்வத்தில் மீதுள்ள ஆசை, 2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை.
அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி),(புகாரி: 6421)

நாம் செல்வத்தின் மீது பேராசை கொள்வது அல்லாஹ்வின் நினைவை விட்டும் தடுமாறச் செய்து விடும்.
மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாகத் (செல்வத்தை) தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது.
(அல்குர்ஆன்: 102:1-2)➚

உண்மையான செல்வம் என்பது போதுமென்ற மனம் தான்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வசதி வாய்ப்புகள் அதிகமாக இருப்பது செல்வம் கிடையாது. போதுமென்ற மனம் தான் செல்வமாகும்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),(புகாரி: 6446)

நபியவர்களின் உபதேசத்தைக் கேட்டு விட்டு அன்றிருந்து யாரிடமும் கையேந்தி யாசகம் கேட்க மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து, தான் மரணிக்கும் வரை தனக்கு அரசாங்கத்தில் கிடைக்கவிருந்த மானியத்தையும் கூட வேண்டாம் என்று ஒதுக்கித் தன்மானத்தை நிலைநாட்டிய நபித்தோழரை இதற்கு உதாரணமாகக் கூறாலாம்.
நான் ரஸூல் (ஸல்) அவர்களிடம் தர்மம் கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள்.

பிறகு அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மீண்டும் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகு ‘இந்தச் செல்வம் பசுமையானது; இனிப்பானதுமாகும். யார் இதனைத் தூய மனதுடன் பெறுகிறாரோ, அவருக்கு பரகத் வழங்கப்படும். யார் இதனைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு பரகத் வழங்கப்படாது. அவர் சாப்பிட்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்று. கொடுக்கும் கை, வாங்கும் கையை விடச் சிறந்தது’ என்று நபியவர்கள் கூறினார்கள். அப்போது ஹகீம் (ரலி), ”அல்லாஹ் வின் தூதரே! உங்களை சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீது ஆணையாக! உங்களுக்குப் பின் எவரிடத்திலும் எதையும் நான் தர்மமாகக் கேட்க மாட்டேன்” என்று கூறினார்.

இதன் பிறகு அபூபக்கர் (ரலி) அவர்கள் அவருக்கு ஸகாத்தைக் கொடுக்க அழைத்தார். அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகு உமர் (ரலி) அவர்கள் தம் ஆட்சிக் காலத்தில் அவருக்கு தர்மம் கொடுப்பதற்காக அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். அப்போது உமர் (ரலி) அவர்கள், ”முஸ்லிம் சமுதாயமே! நான் ஹகீமை கனீமத் பொருட்களில் அவருக்குள்ள பங்கைப் பெற்றுக் கொள்ளுமாறு அழைக்கிறேன். அவரோ அதை மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!” என்று கூறினார்.
அறிவிப்பவர்: ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி),(புகாரி: 1472)

நபியவர்களின் வாழ்க்கையைப் பாருங்கள்!

நபியவர்கள் ஒரு ஈச்ச மரப்பாயின் மீது படுத்திருந்தார்கள். அந்த பாய்க்கும் அவர்களுக்குமிடையே (விரிப்பு) எதுவும் இல்லாமல் இருந்தது. அவர்களின் தலைக்குக் கீழ் ஈச்ச நார் நிரப்பப்பட்ட தோல் தலையணை இருந்தது. அவர்களின் கால்களுக்கீழ் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்க விடப்பட்டிருந்தது. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் அச்சு பதிந்திருப்பதைக் கண்டு அழுதேன். நபியவர்கள், ”ஏன் அழுகிறீர்!” என்று கேட்டார்கள். அதற்கு நான், ”அல்லாஹ்வின் தூதரே! கிஸ்ரா, கைஸர் (பாரசீக மன்னர்கள்) சுக போகத்தில் திளைக்கிறார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் அல்லவா? நீங்கள் இந்த நிலையில் இருப்பதா?” என்று கேட்டேன். அப்போது நபியவர்கள், ” அவர்களுக்கு இந்த உலகமும் நமக்கு மறுமையும் இருப்பதை நீ விரும்பவில்லையா?” என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),(புகாரி: 4913)

நபியவர்கள் இந்த உலக சுக போகங்களை அனுபவிப்பதற்கு வாய்ப்பும் முழுத்தகுதியும் இருந்தும் அதனைத் தூக்கியெறிந்து விட்டு, மறுமையில் இதற்கான கூலியை அல்லாஹ் தருவான் என்ற மனப்பான்மையுடன் வாழ்ந்துள்ளார்கள். இவ்வுலகில் மனிதன் தான் ஒரு வழிப்போக்கனைப் போன்று வாழ வேண்டும். அவ்வாறு வாழும் போது நமக்கு வழங்கப்பட்ட செல்வத்தை ஏழை எளியவர்களுக்கு கொடுத்து உதவிட வழிவகுக்கும். அவ்வாறு வாழ்ந்தால் அந்த செல்வமே நம்மை மறுமையில் நம்மை காக்கும் கேடயமாகும். மாறாக, செல்வத்தை நல்வழியில் செலவிடாதோரை அச்செல்வம் நரகில் தள்ளும்.