பாவத்தை கழுவும் தொழுகை
முஸ்லிமான ஒவ்வொருவருக்கும் தொழுகை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த தொழுகையின் முக்கியத்துவத்தையும், மேலும் தொழாதவனின் நிலைப் பற்றியும் காணலாம் .
”உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உடலுள்ள) அழுக்குகளில் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?” என்று கேட்டார்கள். ”அவரது அழுக்குகளில் எதையும் தங்க விடாது” என்று மக்கள் பதிலளித்தார்கள். ”இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 528) ➚,(முஸ்லிம்: 1185) ➚
தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும்.
(அல்குர்ஆன்: 29:45)➚
இஹ்ஸான் என்றால் என்ன ? என்று நபியவர்களிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் கேட்கும் போது, ”(தொழுகையில்) அல்லாஹ்வை நீ பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்க்கிறான் என்று (எண்ணி) நீ அவனை பார்ப்பது போன்று வணங்குவதாகும்” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 50) ➚
மேலும் மறுமை நாளில் வெற்றி பெற்று சொர்க்கத்திற்குச் செல்பவனைப் பற்றி அல்லாஹ் கூறும் போது…. தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான். (அவன்) தனது இறைவனின் பெயரை நினைத்துத் தொழுதான்.(அல்குர்ஆன்: 87:14-15)➚
”யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச் செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்.(புகாரி: 160) ➚
தொழுகையினால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்பதை நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையும் உதாரணமாகக் கூறலாம்.
நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து, ”அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்” என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்த போது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார்.
நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த போது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, ”அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள், ”எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?” என்று கேட்டார்கள். அவர், ”ஆம்!” என்றார். நபி (ஸல்) அவர்கள், ”அவ்வாறாயின் அல்லாஹ் ‘உமது பாவத்தை’ அல்லது ‘உமக்குரிய தண்டனையை’ மன்னித்து விட்டான்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),(புகாரி: 6823) ➚
பாவங்கள் என்றால் பெரும் பாவங்கள் உட்பட அனைத்துப் பாவங்களும் தொழுகையின் மூலமாக மன்னிக்கப்படும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜூம்ஆவிலிருந்து மறு ஜூம்ஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். பெரும் பாவங்கள் செய்யாத வரை!
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(முஸ்லிம்: 394) ➚
தொழுகைக்குரிய அனைத்து முன்னேற்பாடுகளைச் செய்யும் போதும் பாவங்கள் மன்னிக்கப்படும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?” என்று கேட்டார்கள். மக்கள், ”ஆம்! அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”சிரமமான சூழ்நிலைகளிலும் உளூவை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்து வைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவை தாம் கட்டுப்பாடுகளாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(முஸ்லிம்: 421) ➚
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ”என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு செயலை எனக்குக் கூறுங்கள்” எனக் கேட்டார். அப்போது, ”நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; தொழுகையை நிலை நாட்ட வேண்டும்; ஸகாத் வழங்க வேண்டும்; உறவினர்களிடம் இணக்கமாக நடக்க வேண்டும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி),(புகாரி: 1396) ➚
தொழுபவர்களுக்கு அல்லாஹ் ஒரு எச்சரிக்கையை விடுக்கிறான். தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான்.
அல்குர்ஆன் (107:4-5➚)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபஜ்ர், இஷா ஆகிய தொழுகைகளை விட நயவஞ்சகர்களுக்கு மிகவும் சுமையான தொழுகை வேறேதுவும் இல்லை. அவ்விரு தொழுகைகளிலுமுள்ள சிறப்பை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு அவர்கள் வந்து சேர்ந்து விடுவார்கள். தொழுகை அறிவிப்பாளரிடம், இகாமத் சொல்லுமாறு கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரிடம் மக்களுக்குத் தலைமை தாங்(கித் தொழுவிக்)குமாறு பணிவித்து விட்டு, பிறகு தீப்பந்தத்தை எடுத்துக் கொண்டு, இன்னும், தொழுகைக்குப் புறப்பட்டு வராமலிருப்பவரை எரித்து விட முடிவு செய்தேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 657) ➚
நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையில் சோம்பல் காட்டுபவர்களை நயவஞ்சகர்களுக்கு ஒப்பிட்டுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியானிடத்தில் மறுமை நாளில் முதன் முதலாக அவனுடைய அமல்கள் சம்பந்தமாக விசாரிக்கப்படுவது தொழுகையைப் பற்றித் தான். அது சரியானால் அவன் வெற்றியடைந்து விடுவான். அது தவறினால் அவன் நஷ்டமடைந்து விடுவான்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி),(திர்மிதீ: 378) ➚
தொழாதவருக்கு கேடு தான், நயவஞ்சக்காரன், நரகத்தை அடையக் கூடியவன் என்பன செய்திகளை கேக்கும் போது தொழுகையின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் உணர முடிகிறது. எனினும், பெரும்பாலோனோர், இது போன்ற ஹதீஸ்களை கேட்டு செவி தாழ்த்தி விடுகின்றனர். அவ்வாறு இல்லாமல், தொழுகை நிலை நாட்டி அதிலும் கவனமற்ற தொழுகையாளிக்கே கேடு என்று சொல்லும் போது தொழாதவர்களின் நிலையை உணர்ந்து இனி வரும் காலங்களில் நாமும் பேணிதலுடன் தொழுது, மற்றவர்களையும் தோலும் படி வலியுறுத்த வேண்டும்.