மூடநம்பிக்கைகள் நுழைந்துவிட்ட முஹர்ரம் மாதம்!
முஹர்ரம் மாதம்
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்! இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக் கூடியவை. அவை – துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும்.
அறிவிப்பவர் : அபூபக்ரா (ரலி), நூல்: (புகாரி: 3197)
மூடநம்பிக்கைகள்
இந்த கண்ணியம் மிக்க முஹர்ரம் மாதம் பற்றி சமுதாயத்தில் நிலவும் பல மூடநம்பிக்கைகளை தொகுத்துத் தருகிறோம்.
மெய் நிலை கண்ட ஞானி, மாநபியின் திருபேரர், கௌஸுல் அஃலம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்கள் கூறினார்களாம்!
இம்மாதத்தின் சிறப்பான ஆஷுராவுடைய நாளில்தான்,
1. ஹஸ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அன்னவர்களின் துஆ ஒப்பு கொள்ளப்பட்டதாம்!.
2. ஹஸ்ரத் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அன்னவர்களுக்கு சுவனப் பெருவாழ்வு கிட்டியதாம்!
3. ஆறுமாத கடலில் அலைக்கழிந்த பின்னர் ஹஸ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அன்னவர்களின் கப்பல் ‘ஜூதி’ மலையில் ஒதுங்கியதாம்.
4. ஹஸ்ரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அன்னவர்கள் பிறந்ததும், அல்லாஹ் அவர்களை தன் கலீலாக ஏற்றதும், நம்ரூதுடைய நெருப்பு குண்டம் அவர்களுக்கு சுவனப் பூங்காவாக மலர்ந்ததாம்.
5. ஹஸ்ரத் தாவூத் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அன்னவர்களின் பிழை பொறுக்கப்பட்டதும் இந்நாளிலாம்.
6. ஹஸ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அன்னவர்கள் இழந்த ஆட்சியை அன்றை தினமே மீண்டும் அடையப் பெற்றார்களாம்.
7. சோதனை வயப்பட்ட ஹஸ்ரத் அய்யுப் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அன்னவர்கள் நோய் நீங்கி நலம் பெற்றதும் இன்றேதானாம்.
8. கடும் இருட்டில், மீனின் வயிற்றில் 40 நாட்கள் கிடந்தது அழுது புலம்பிய ஹஸ்ரத் யூனுஸ் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அன்னவர்கள் மீண்டும் வெளியானது ஆஷுராவுடைய நாளில் தான்.
9. கொலைகாரர்களிடம் இருந்து ஹஸ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அன்னவர்களை காப்பாற்றி அல்லாஹ் தன் பால் உயர்த்திக் கொண்டதும் ஆஷுராவுடைய நாளில்தானாம்!
இது மட்டுமல்ல, இன்னும் ஏராளமான மூடநம்பிக்கைகள்!
பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள், துல்ஹஜ்ஜுடைய இறுதி நாளும், முஹர்ரம்முடைய முதல் நாளும் யார் நோன்பு நோற்பார்களோ அவர்களுக்கு முழு வருடமும் நோன்பு நோற்ற நன்மைக்கிடைக்கும். மேலும் கூறினார்கள், யார் முஹர்ரம் உடைய முதல் பிறையிலிருந்து 10ம் பிறை வரைக்கும் நோன்பு நோற்பாரோ அவருக்கு 10 வருடம் நோன்பு நோற்ற நன்மையும், 10 வருடம் இரவு விழித்து வணங்கிய நன்மையும் கிடைக்குமாம்!
மேலும் ஒரு ஹதீஸில் வருகின்றது, யார் ஒருவன் முஹர்ரமில் 3 நோன்பு நோற்பானோ அவனுக்கு 9 வருடங்கள் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும்.
அந்த அழகிய நாளில் நோன்பிருந்தவர் வருடம் முழுவதும் தவறிவிட்ட தன்னுடைய நோன்புகளை பெற்று கொண்டார் என்று எம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்களாம்.
ஒரு சமயம் அமீருல் முஃமினீன் ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் சமூகமளித்து, யா ரஸுலல்லாஹ்! அன்றைய தினத்திலே நம்மீது அல்லாஹ் பேரருள் புரிந்துள்ளானா! என்று கேட்டார்கள். அதற்கு ஆம் அதில் சந்தேகமே இல்லை. என்ற நபிகள் கோமான் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள், “விண்ணையும், மண்ணையும், மலை, கடல், கோள்களையும், அர்ஷ் என்னும் கண்ணியமிக்க அவனுடைய மணிமண்டபத்தையும், குர்ஸீ என்னும் அரியாசனத்தையும் லவ்ஹ் என்னும் பலகையையும், கலம் என்னும் எழுதுகோலையும் அல்லாஹ் அந்நாளிலேயே படைத்தான். ஜிப்ரீலையும், மீக்காஈலையும் மற்ற மலக்குமார்களையும் அன்றே படைத்தான். ஹஸ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களையும் அன்றே படைத்தான். அன்றைய தினமே அல்லாஹ் அஸ்ஸவஜல் அரசின் மீது நிலை கொண்டான். வானத்தில் இருந்து முதன் முதலாக மழை பொழிந்ததும் அன்றே. அல்லாஹ் அஸ்ஸவஜலின் ரஹ்மத் இந்த பூமிக்கு பொழிந்ததும் அன்றே. மேலும் அழிவு நாளும் அன்றே வரும்.” என்று கோமான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அருளினார்களாம்!
ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களே அறிவித்த, பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ஹதீஸ் ஒன்றை மைமூன் இப்னு மெஹ்ரான் ரஹ்மதுல்லாஹி அலைஹி என்ற பெரியார் எழுதுகிறார்கள். ‘ஆஷுராவுடைய நாளில் நோன்பு இருப்பவருக்கு பதினாயிரம் ஸுஹதாக்களுடையவும், பதினாயிரம் ஹஜ்ஜாஜிகளுடையவும் நன்மைகள் அளிக்கப்படும். அன்றை தினம் ஒரு அனாதையின் தலையை பரிவுடன் தடவியவருக்கு அத்தலையின் முடிகளின் எண்ணிக்கையளவு சுவர்க்கத்தில் தரஜாக்கள் அருளப்படும். ஆஷுராவுடைய இரவில் ஒரு முஃமீனுக்கு உணவளித்தவர் என் சமுதாயம் முழுவதுக்கும் உணவளித்தவர் போன்றவராவார். என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஷுராவுடைய இரவை ரஹ்மத் நிறைந்த ஒரு இரவாக கணித்து கூறும், அறிவுலக மாமேதை, ஹஜ்ஜத்துல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் நபிலான அதாவது அதிகப்படியான வணக்கங்களால் இந்த இரவை ஹயாத்தாக்கும் படி தங்களின் உலகப் புகல் பெற்ற ‘இஹ்யா’ வில் நினைவூட்டுகிறார்கள்.
இது மட்டுமல்ல, இன்னும் ஏராளமான மூடநம்பிக்கைகள்!
ஆஷுராவுடைய இரவில் விளித்து, வணங்கி அன்றைய பகலில் நோன்பு நோற்றவருக்கு 60 வருடம் அமல் செய்த நன்மை கிடைக்கும் என்று காருண்ய கடல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அறிவித்ததாக ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்களாம்!
ஆஷுராவுடைய இரவில் விழித்து வணங்கும் வழக்கமுடையவன் மௌதாகுவதற்கு முன் அவன் மௌத்தைப்பற்றி அறிவிக்கப்படுவானாம்! என்று ஜீலானின் கோமான் தீனுக்கு ஜீவனளித்த சீமான் முஹ்யத்தீன் அப்துல் காதிர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள். மேலும் ஒருவன் விரும்பும் காலம் வரை அல்லாஹ் அஸ்ஸவஜல் அவனை உயிர் வாழ செய்வான் என்று தம் பாட்டனார் கருணை கடல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அன்றைய தினம் தன குடுபத்துக்காக மனந்திறந்து செலவழித்தவர் அவ் வருடம் முழுவதும் பெரும் செல்வசீமானாக இருப்பார். என்று கூறிய ஹஸ்ரத் ஸுப்யான் இப்னு அஃயீனா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அது உண்மையிலும் உண்மையே என்பதை என் 50 ஆண்டுகால அனுபவத்தில் நான் அறிந்து கொண்டேன். என்றார்களாம்!
இது போன்ற எண்ணற்ற மூடநம்பிக்கைகள் சமுதாயத்தில் உள்ளன. ஆனால், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இம்மாதம் குறித்து வரும் செய்திகளை இனி காண்போம்!
சரியான செய்திகள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ் வின் மாதமான முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, இரவுத் தொழுகை ஆகும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)‘ நூல் : (முஸ்லிம்: 2157)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:அறியாமைக் காலக் குறைஷியர் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றனர்; நபி (ஸல்) அவர்களும் நோற்றனர். நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்குமாறுப் பணித்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பை விட்டுவிட்டனர். விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்றனர்; விரும்பாதவர் விட்டுவிட்டனர்.
நூல் : (புகாரி: 2002)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:ரமளான் நோன்பு கடமையாக்கப்படுதவற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் 10ஆம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அதுதான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமளானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, “யார் (ஆஷூராவுடைய) நோன்பு நோற்க விரும்புகிறாரோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும்! யார் அதை விட்டுவிட விரும்புகிறாரோ அவர் அதை விட்டுவிடட்டும்!” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : (புகாரி: 1592)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் விரும்பியவர் (ஆஷூரா தினத்தில்) நோன்பு நோற்றனர்; விரும்பாதவர் விட்டுவிட்டனர்.
நூல் : (புகாரி: 2001)
சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்) அவர்கள் அஸ்லம் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, “இன்று ஆஷூரா நாளாகும்; ஆகவே, இந்நாளில் யாரேனும் சாப்பிட்டிருந்தால் அவர் இந்நாளின் எஞ்சிய பகுதியில் நோன்பாக இருக்கட்டும்! யாரேனும் சாப்பிடாமல் இருந்தால் அவர் நோன்பாக இருக்கட்டும்!” என்று அறிவிக்கச் செய்தார்கள்!
நூல் : (புகாரி: 2007)
யூதர்களின் பெருநாள்
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:ஆஷூரா நாளை யூதர்கள் பெருநாளாகக் கொண்டாடி வந்தனர். நபி (ஸல்) அவர்கள், “அந்நாளில் நீங்களும் நோன்பு வையுங்கள்!” என்றார்கள்.
நூல் : (புகாரி: 2005)
அபூமூசா (ரலி) அவர்கள் கூறினார்கள்: கைபர்வாசிகள் (யூதர்கள்) முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்று வந்தனர்; அந்நாளை அவர்கள் பண்டிகை நாளாகக் கொண்டாடினர்; தங்களுடைய பெண்களுக்கு அந்நாளில் ஆபரணங்களையும் அழகிய ஆடைகளையும் அவர்கள் அணிவித்தனர். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்) “இந்நாளில் நீங்களும் நோன்பு நோறுங்கள்!” என்றார்கள்.
நூல் : (முஸ்லிம்: 2085)
துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன். முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : (முஸ்லிம்: 2152)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?” என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்” என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள்.
நூல் : (முஸ்லிம்: 2088)
“அடுத்த ஆண்டுவரை நான் உயிரோடிருந்தால் ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்பேன்” என்று நபி (ஸல்) அவார்கள் கூறினார்கள்.
நூல் : (முஸ்லிம்: 2089)
عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَ الْمَدِينَةَ فَوَجَدَ الْيَهُودَ صِيَامًا يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عَلَيْهِ وَسَلَّمَ مَا هَذَا الْيَوْمُ الَّذِي تَصُومُونَهُ فَقَالُوا هَذَا يَوْمٌ عَظِيمٌ أَنْجَى اللَّهُ فِيهِ مُوسَى وَقَوْمَهُ وَغَرَّقَ فِرْعَوْنَ وَقَوْمَهُ فَصَامَهُ مُوسَى شُكْرًا فَنَحْنُ نَصُومُهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عَلَيْهِ وَسَلَّمَ فَنَحْنُ أَحَقُّ وَأَوْلَى بِمُوسَى مِنْكُمْ فَصَامَهُ رَسُولُ اللَّهِ صلى الله عَلَيْهِ وَسَلَّمَ وَأَمَرَ بِصِيَامِهِ و حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ حَدَّثَنَا مَعْمَرٌ عَنْ أَيُّوبَ بِهَذَا الْإِسْنَادِ إِلَّا أَنَّهُ قَالَ عَنِ ابْنِ سَعِيدِ بْنِ جُبَيْرٍ لَمْ يُسَمِّهِ *رواه مسلم
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது, யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்றிருப்பதைக் கண்டார்கள். “நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் இது என்ன நாள்?” என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், “இது ஒரு மகத்தான நாள்; இந்த நாளில்தான் மூசாவையும் அவருடைய சமுதாயத்தாரையும் இறைவன் காப்பாற்றி, ஃபிர்அவ்னையும் அவனுடைய சமுதாயத்தாரையும் (செங்கடலில்) மூழ்கடித்தான். எனவே, மூசா (அலை) அவர்கள் (இறைவனுக்கு) நன்றி தெரிவிக்கும் முகமாக (இந்நாளில்) நோன்பு நோற்றார்கள். ஆகவே, நாங்களும் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்” என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களைவிட நாங்களே மூசா (அலை) அவர்களுக்கு மிகவும் உரியவர்களும் நெருக்கமானவர்களும் ஆவோம்” என்று கூறினார்கள். பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்நாளில்) தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையுமிட்டார்கள்.
நூல் : (முஸ்லிம்: 2083)
அல்ஹகம் பின் அல்அஃரஜ் அவர்கள் கூறியதாவது:இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “ஸம்ஸம்’ கிணற்றுக்கருகில் தமது மேல்துண்டைத் தலையணையாக வைத்துச் சாய்ந்திருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். “ஆஷூரா நோன்பு பற்றி எனக்குச் சொல்லுங்கள்!” என அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “முஹர்ரம் மாதத்தின் (முதல்) பிறையை நீர் கண்டதும் (அன்றிலிருந்து நாட்களை) எண்ணிக்கொள்வீராக! ஒன்பதாவது நாள் காலையில் நீர் நோன்பாளியாக இருப்பீராக!” என்று சொன்னார்கள். “இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த (ஆஷூரா) நோன்பை நோற்றார்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு, “ஆம்’ என்று அவர்கள் விடையளித்தார்கள்.
நூல் : (முஸ்லிம்: 2087)
தவிர்க்க வேண்டியவைகள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (துக்கத்தினால்) கன்னங்களில் அறைந்துகொள்பவனும் சட்டைப் பைகளைக் கிழித்துக்கொள்பவனும் அறியாமைக்கால (மாச்சரியங்களுக்காக) அழைப்புவிடுப்பவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
நூல் : (புகாரி: 1297)
ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், தமது சகோதரரை இழந்திருந்த ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர் நறுமணம் பூசிக்கொண்டு, “இது எனக்குத் தேவையில்லைதான்; ஆயினும் “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பக்கூடிய பெண் தனது கணவனைத் தவிர வேறு யாருடைய இறப்பிற்கும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாது; தனது கணவன் இறந்துவிட்டால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் துக்கம் கடைப்பிடிக்க வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்றவாறு கூற நான் கேட்டிருக்கிறேன்” என்றார்.
நூல் : (புகாரி: 1287)
நபியவர்கள் காட்டித்தந்தபடி இம்மாதத்தை அடைந்து நன்மைகளை பெறுவோமாக!