பெருமானார் புன்னகை பூத்த பொழுதுகள்
இறைவனால் மனித குலத்திற்கு வழங்கப்பட்டுள்ள அருட்கொடைகளில் ஒன்று தான் ‘சிரிப்பு’ என்பதாகும். ஒருவருடைய மனதில் மகிழ்ச்சியும், இன்பமும் ஏற்படும்போது அது அவரது சிரிப்பின் மூலமாக வெளிப்படுகின்றது. இது இயற்கையாகவே நிகழக்கூடிய ஒன்றாக இருந்தாலும் கூட, தானே மனிதனைச் சிரிக்க வைப்பதாக இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறிக் காட்டுகின்றான்.
அவனே சிரிக்க வைக்கிறான். அழவும் வைக்கிறான். (அல்குர்ஆன்: 53:43)➚
ஆக, அழுகை, சிரிப்பு ஆகிய உணர்வுகள் சுழன்று வரும் வகையிலேயே அல்லாஹ் மனித வாழ்க்கையை அமைத்துள்ளான். இந்தச் சிரிப்பில் பல வகைகள் இருந்தாலும், இதழோரம் தவழும் புன்னகைக்குச் சிறப்பிடம் உண்டு என்றே சொல்லலாம். அடுத்தவரைப் பார்த்து புன்னகைக்கும் இந்த அற்பச் செயல் கூட நன்மைக்குரிய செயல் என்று இஸ்லாம் சொல்கின்றது.
அபூதர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்: “உன் சகோதரனின் முகத்தைப் பார்த்து புன்னகைப்பதும் உனக்கு தர்மமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். திர்மிதீ
மேலும் கூறினார்கள்:
என்னிடம் நபி (ஸல்) அவர்கள், “நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே” என்று கூறினார்கள்.(புகாரி: 5122) ➚
மக்களின் மத்தியில் ‘ஆன்மீகவாதிகள்’ எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வோர் அதிகமாகச் சிரிக்க மாட்டார்கள். ஏன், புன்னகைக்கக் கூட யோசிப்பார்கள். தம்முடைய ஆளுமைத்திறன் பாதிக்கப்பட்டு விடுமோ என அஞ்சுவார்கள். ஆனால், மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிபதியாகவும், மகத்தான ஆன்மீகவாதியாகவும் வாழ்ந்து சரித்திரம் படைத்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள், தாம் வாழ்ந்த சமுதாய மக்களோடு மிகவும் இயல்பாகவும், சகஜமாகவும் கலந்துறவாடுவார்கள். தன்னுடைய பதவியையோ, அந்தஸ்தையோ சற்றும் கருத்தில் கொள்ளாமல் மிகவும் எளிமையாகவும், தோழமையுணர்வோடும் பழகுவார்கள். அதிகமான நேரங்களில் புன்னகை பூத்தவர்களாகவே அவர்கள் மக்கள் முன்னிலையில் காட்சி தருவார்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களைத் தொகுத்து வழங்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்: நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை உரை நிகழ்த்தும்போது மக்கள் எழுந்து சப்தமிட்டனர். ‘இறைத்தூதர் அவர்களே! மழை பொய்த்துவிட்டது. மரங்கள் கருகிவிட்டன. கால்நடைகள் அழிந்துவிட்டன. எனவே மழை பொழிச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கேட்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்’ என்று இரண்டு முறை கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக, அப்போது வானத்தில் எந்த மேகத்தையும் நாங்கள் காணவில்லை. திடீரென மேகம் தோன்றி மழை பொழிந்தது. நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்கித் தொழுகை நடத்தினார்கள். மழை அடுத்த ஜும்ஆ வரை நீடித்தது. (அடுத்த ஜும்ஆவில்) நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும்போது ‘வீடுகள் இடிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’. என்று மக்கள் உரத்த குரலில் கூறினர். நபி(ஸல்) அவர்கள் புன்னகை செய்தார்கள். பின்னர் ‘இறைவா! எங்கள் சுற்றுப்புறங்களுக்கு (இதைத் திருப்புவாயாக!) எங்களுக்கு எதிரானதாக இதை ஆக்கிவிடாதே’ என்று பிரார்த்தித்தார்கள். உடனே மதீனாவைவிட்டு மழை விலகியது. அதன் சுற்றுப் புறங்களில் மழை பெய்யத் துவங்கியது.மதீனாவில் ஒரு துளியும் விழவில்லை. மதீனாவை நான் பார்த்தபோது அது ஒரு குன்றின் மீது அமைந்திருப்பதைப் போல் இருந்தது.(புகாரி: 1021, 3582) ➚
உமர்(ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்: அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி ஸலூல் மரணித்ததும் அவனுக்கு (ஜனாஸா) தொழுகை நடத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தத் தயாரானபோது நான் அவர்களிடம் சென்று,
‘இறைத்தூதர் அவர்களே! அப்துல்லாஹ் இப்னு உபைக்காக ஜனாஸா தொழப் போகிறீர்களா? அவன் இன்னின்ன நாட்களில் இன்னின்னவற்றைப் பேசியுள்ளான்” என, அவன் பேசியவற்றை நபி(ஸல்) அவர்களுக்கு எடுத்துக் கூறினேன். நபி(ஸல்) அவர்கள் புன்கைத்தார்கள். நான் மேலும் அதிகமாக வலியுறுத்தியதும் அவர்கள், “எனக்கு(த் தொழுகை நடத்துதல், தொழுகை நடத்தாமலிருத்தல் ஆகிய இரண்டில் எதையும் செயல்படுத்த) அனுமதியுள்ளது. எழுபது முறைகளுக்கும் அதிகமாக நான் பாவமன்னிப்புத் தேடினால் அவனுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பதாக நான் அறிந்தால் அவ்வாறே நான் அதிகமாகப் பாவமன்னிப்புத் தேடுவேன்” என்று கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் அவனுக்காக ஜனாஸா தொழுகை நடத்திவிட்டுத் திரும்பிச் சென்று சற்று நேரமாகுவதற்குள் பராஅத் (9 ஆம்) அத்தியாயத்தின், ‘அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) நீங்கள் (ஜனாஸாத்) தொழுகை நடத்த வேண்டாம்; அவரின் மண்ணறை அருகேயும் நீங்கள் நிற்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுத்துவிட்டார்கள். மேலும், பாவிகளாகவே அவர்கள் இறந்தார்கள்’ எனும் (84, 85 ஆகிய) இரண்டு வசனங்கள் அருளப்பட்டன.
அன்றைய தினம் நபி(ஸல்) அவர்களின் விஷயத்தில் எனக்கு ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி நான் ஆச்சரியப்பட்டேன். ஏனெனில் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் தாமே இது பற்றியெல்லாம் அறிந்திருக்க முடியும்!(புகாரி: 1366, 4671) ➚
உக்பா இப்னு ஹாரிஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்: கருப்பு நிறப் பெண் ஒருவர் (என்னிடம்) வந்து, எனக்கும், என் மனைவிக்கும் தாம் பாலூட்டியிருப்பதாகக் கூறினார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது, (முதலில்) அவர்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை; பிறகு (மீண்டும் மீண்டும் நான் கூறவே) புன்னகைத்துவிட்டு “இவ்வாறு கூறப்பட்ட பின் எப்படி (அவளுடன் நீ வாழ முடியும்?'” என்று வினவினார்கள். அப்பொழுது எனக்கு மனைவியாக இருந்தவர் அபூ இஹாப் தமீமியின் மகளாவார்.(புகாரி: 2052) ➚
மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்: ‘பனூ ஆமிர் இப்னு லுஅய்’ குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் பத்ருப் போரில் பங்கெடுத்தவருமான அம்ர் இப்னு அவ்ஃப் அல் அன்ஸாரி (ரலி) அவர்கள் எனக்குக் கூறினார்கள்:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் (ரலி) அவர்களை பஹ்ரைனிலிருந்து ஜிஸ்யா வரியை வசூலித்து வரும்படி அனுப்பினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (மஜூஸிகளான) பஹ்ரைன்வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்து அவர்களுக்கு அலாஃ இப்னு ஹள்ரமி (ரலி) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூ உபைதா (ரலி) அவர்கள் பஹ்ரைனிலிருந்து நிதியுடன் வந்தார்கள். அவர்கள் வந்திருப்பதைக் கேள்விப்பட்ட அன்ஸாரிகள் நபி (ஸல்) அவர்களிடம் செல்ல, அது ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக அமைந்துவிட்டது. நபி(ஸல்) அவர்கள் மக்களுடன் தொழுது முடித்துத் திரும்ப, அன்ஸாரிகள் நபியவர்களிடம் சைகையால் கேட்டார்கள். (ஆர்வத்துடனிருந்த) அவர்களைக் கண்டவுடன் நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்துவிட்டு, “அபூ உபைதா ஏதோ கொண்டு வந்திருக்கிறார்’ என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்” என்று கூற, அன்ஸாரிகள், “ஆமாம், இறைத்தூதர் அவர்களே!” என்று பதிலளித்தார்கள். “ஒரு மகிழ்ச்சியான செய்தி! உங்களுக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டு, அவர்கள் அதற்காகப் போட்டியிட்டதைப் போல் நீங்களும் போட்டியிட, அவர்களை அது அழித்துவிட்டதைப் போல் உங்களையும் அது அழித்து விடுமோ என்றே நான் அஞ்சுகிறேன்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புகாரி: 3158) ➚,(முஸ்லிம்: 5668) ➚
உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்: (என் அண்டை வீட்டு அன்ஸாரி நண்பர், நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரை விவாகவிலக்குச் செய்துவிட்டதாகத் தந்த தவறான தகவலையடுத்து நான் (என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்று, “என்னருமை மகளே! தம் அழகும், தம் மீது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கொண்டுள்ள அன்பும் யாரைக் குதூகலப்படுத்தியுள்ளதோ அவர் – ஆயிஷா – (நபியவர்களிடம்) சற்று கூடுதல் உரிமை எடுத்துக் கொள்வது) கண்டு நீ ஏமாந்து விடாதே!” என்று கூறினேன். பிறகு இந்தச் சம்பவத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் எடுத்துரைத்தபோது அவர்கள் புன்னகைத்தார்கள்.(புகாரி: 5218) ➚
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்: எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லையோ, அத்தகைய அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் (கடும்) பசியினால் என் வயிற்றைத் தரையில் வைத்து அழுத்திக்கொண்டு படுத்திருந்தேன். மேலும், (கடும்) பசியினால் வயிற்றில் நான் கல்லை வைத்துக் கட்டிக் கொண்டதுமுண்டு. ஒரு நாள் நான் நபி (ஸல்) அவர்களும், தோழர்களும் (பள்ளிவாசலுக்குச்) செல்லும் பாதையில் அமர்ந்துக்கொண்டேன். அப்போது அபூ பக்ர் (ரலி) அவர்கள் (என்னைக்) கடந்து சென்றார்கள். உடனே நான் இறைவேதத்திலுள்ள ஒரு வசனத்தைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். என் வயிற்றை அவர்கள் நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கடந்து சென்றார்கள்; (என் பசி நீங்க எதுவும்) அவர்கள் செய்யவில்லை. பிறகு உமர் (ரலி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். உடனே நான் அவர்களிடமும் இறைவேதத்திலுள்ள ஒரு வசனம் குறித்துக் கேட்டேன். அவர்கள் என் வயிற்றை நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்களும் (என் பசியைப் போக்க) ஒன்றும் செய்யாமல் போய்விட்டார்கள்.
பிறகு அபுல்காஸிம் (நபி (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். என்னைக் கண்டு, எனக்கு ஏற்பட்டுள்ள (பசி) நிலையையும், என் முகமாற்றத்தையும் அவர்கள் புரிந்துக்கொண்டு புன்னகைத்தார்கள். பிறகு, ”அபூ ஹிர்! (அபூ ஹுரைராவே!)” என்று அழைத்தார்கள். நான் ”இதோ காத்திருக்கிறேன், இறைத்தூதர் அவர்களே!” என்றேன். ”(என்னைப்) பின்தொடர்ந்து வருவீராக!” என்று சொல்லிவிட்டு நடந்தார்கள். நான் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். நபி (ஸல்) அவர்கள் (தம் இல்லத்தில்) நுழைந்தார்கள். நான் (உள்ளே செல்ல) அனுமதி கோர, எனக்கு அனுமதியளித்தார்கள். நான் உள்ளே சென்றேன். அப்போது (வீட்டில்) ஒரு கோப்பையில் பாலைக் கண்டார்கள். உடனே (தம் துணைவியாரிடம்), ”இந்தப் பால் எங்கிருந்து வந்தது?’ என்று கேட்டார்கள். அவர்கள் ”இன்ன ஆண் அல்லது பெண் தங்களுக்கு இதை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், ”அபூ ஹிர்!” என அழைத்தார்கள். நான் ”இதோ வந்துவிட்டேன், இறைத்தூதர் அவர்களே!” என்றேன். ”திண்ணைவாசிகளிடம் சென்று என்னிடம் அவர்களை அழைத்துவாருங்கள்!” என்றார்கள்.
திண்ணைவாசிகள் (அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா) இஸ்லாத்தின் விருந்தினர்கள் ஆவர். அவர்கள் புகலிடம் தேட அவர்களுக்குக் குடும்பமோ, செல்வமோ கிடையாது. வேறு யாரிடமும் செல்லவும் மாட்டார்கள். நபி (ஸல்) அவர்களிடம் ஏதேனும் தானப்போருட்கள் வந்தால் அவற்றை இவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் அனுப்பிவிடுவார்கள். அதிலிருந்து தாம் எதையும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். தம்மிடம் ஏதேனும் அன்பளிப்புப் பொருட்கள் வந்தால் இவர்களைத் தம்மிடம் அழைத்துவரும்படி ஆளனுப்பிவிடுவார்கள். (அவர்கள் வந்தவுடன்) அவர்களுடன் சேர்ந்து தாமும் உண்பார்கள்.
இப்போது நபி (ஸல்) அவர்கள் (திண்ணைவாசிகளை அழைத்து வரச்) சொன்னதால் எனக்குக் கவலை தான் ஏற்பட்டது. ‘(இருப்பதோ சிறிதளவு பால்.) திண்ணைவாசிகளுக்கு இந்தப் பால் எம்மாத்திரம்? இதைச் சிறிதளவு பருகி என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு நானே பொருத்தமானவன். திண்னை வாசிகள் வந்தால், நபியவர்கள் எனக்கு உத்தரவிட, நானே அவர்களுக்குக் கொடுத்துவிட்டு (இறுதியில்) எனக்கு இந்தப் பாலில் ஒன்றும் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியாமல் இருக்க இயலாது’ என (மனதிற்குள்) சொல்லிக் கொண்டேன்.
பிறகு, நான் திண்ணைவாசிகளிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்களும் (அழைப்பை ஏற்று) வந்து (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோரினார்கள். நபி (ஸல்) அவர்கள்
திண்ணைவாசிகளுக்கு அனுமதி வழங்கினார்கள். அவர்கள் அந்த வீட்டில் ஆங்காங்கே இடம்பிடித்து அமரலானார்கள். நபி(ஸல்) அவர்கள் ”அபூ ஹிர்!” என அழைத்தார்கள். நான் ”இதோ காத்திருக்கிறேன், கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ”இதை எடுத்து இவர்களுக்குக் கொடுங்கள்” என்றார்கள். நான் அந்தக் கோப்பையை எடுத்து ஒரு மனிதருக்குக் கொடுத்தேன். அவர் தாகம் தணியும் வரை குடித்தார். பிறகு அவர் என்னிடம் அந்தக் கோப்பையைத் திருப்பித் தந்தார். நான் அதை இன்னொரு மனிதரிடம் கொடுத்தேன். அவரும் தாகம் தீரும் வரை குடித்துவிட்டுக் கோப்பையை என்னிடம் தந்தார். பிறகு இன்னொருவர் தாகம் தீரும் வரை குடித்தார். பிறகு என்னிடம் அதைத் திருப்பித் தந்தார். இறுதியில் நான் நபி (ஸல்) அவர்களிடம் அதைக் கொண்டு சென்றேன். அப்போது மக்கள் அனைவரும் தாகம் தணிந்திருந்தினர்.
நபி (ஸல்) அவர்கள் அந்தக் கோப்பையை வாங்கித் தம் கையில் வைத்துக்கொண்டு என்னைக் கூர்ந்துப் பார்த்துப் புன்னகைத்தார்கள். பிறகு, ”அபூ ஹிர்!” என்று அழைத்தார்கள். நான் ”இதோ காத்திருக்கிறேன், கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!” என்று சொன்னேன். அதற்கவர்கள், ”நானும், நீங்களும் (மட்டும் தான்) எஞ்சியுள்ளோம் (அப்படித்தானே?)” என்று கேட்டார்கள். நான், ”இறைத்தூதர் அவர்களே! (ஆம்.) உண்மைதான்” என்றேன். நபி(ஸல்) அவர்கள், ”உட்கார்ந்து (இதைப்) பருகுங்கள்!” என்றார்கள். நான் உட்கார்ந்து பருகினேன். ”இன்னும் பருகுங்கள்!” என்றார்கள். பருகினேன். இவ்வாறு அவர்கள், ”பருகுங்கள்!” என்று சொல்லிக்கொண்டேயிருக்க, நான் பருகிக்கொண்டே இருந்தேன். இறுதியில், ”இல்லை; சத்திய (மார்க்க)த்தைக் கொண்டு தங்களை அனுப்பிவைத்த (இறை)வன் மீது ஆணையாக! இனி பருகுவதற்கு வழியே இல்லை” என்றேன். நபி(ஸல்) அவர்கள், ”(சரி) அதை எனக்குக் காட்டுங்கள்!” என்றார்கள். எனவே, நான் அவர்களிடம் அந்தக் கோப்பையைக் கொடுத்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுடைய (திருப்)பெயர் கூறி எஞ்சியதைப் பருகினார்கள்.(புகாரி: 6452) ➚
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்: நபி (ஸல்) அவர்கள் தாயிஃப் நகர மக்களை முற்றுகையிட்டார்கள். ஆனால் அதை அவர்கள் வெற்றி கொள்ளவில்லை. “அல்லாஹ் நாடினால் நாளை நாம் (மதீனாவுக்குத்) திரும்பிச் சென்றுவிடுவோம்” என்றார்கள். முஸ்லிம்கள், ”நாம் (கோட்டையை) வெற்றிக்கொள்ளாமலேயே திரும்பிச் செல்வதா?” என்று கேட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், ”அப்படியென்றால் (உங்கள் விருப்பம்). முற்பகலிலேயே போருக்குச் செல்லுங்கள்!” என்றார்கள். மக்களும் அவ்வாறே போருக்குச் செல்ல அவர்களுக்குக் காயங்கள் பல ஏற்பட்டன. நபி(ஸல்) அவர்கள் (அச்சமயம்) ”அல்லாஹ் நாடினால் நாளை நாம் (மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்” என்றார்கள். அது மக்களுக்கு மகிழ்ச்சியூட்டியது போன்றிருந்தது. உடனே நபி(ஸல்) அவர்கள் புன்முறுவல் பூத்தார்கள்.(புகாரி: 7480) ➚
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்: ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே இருந்தார்கள். அப்போது அவர்கள் (திடீரென) உறங்கிவிட்டார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு புன்னகைத்தவர்களாகத் தமது தலையை உயர்த்தினார்கள். அப்போது நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் சிரிக்கக் காரணம் என்ன?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “சற்று முன் (குர்ஆனின் 108ஆவது அத்தியாயமான அல்கவ்ஸர் எனும்) ஓர் அத்தியாயம் எனக்கு அருளப்பெற்றது” என்று கூறிவிட்டு, அந்த அத்தியாயத்தை (பின்வருமாறு) ஓதிக் காட்டினார்கள்: ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். இன்னா அஃ(த்)தைனாகல் கவ்ஸர். ஃபஸல்லி லி ரப்பிக்க வன்ஹர். இன்ன ஷானிஅ(க்)க ஹுவல் அப்தர்”. (பொருள்: அளவில்லா அருளாளன் நிகரில்லா அன்புடையோன் ஆகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்… (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு அல்கவ்ஸரை வழங்கியுள்ளோம். எனவே, உம்முடைய இறைவனைத் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக! நிச்சயமாக உம்முடைய பகைவன்தான் சந்ததியற்றவன்.)
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்கவ்ஸர் என்றால் என்ன? என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், “அல்லாஹ்வும், அவனுடைய தூதருமே அறிந்தவர்கள்” என்று பதிலளித்தோம். அவர்கள், “அது ஒரு (சுவர்க்க) நதி. என்னுடைய இறைவன் (மறுமை நாளில்) அதை (த் தருவதாக) எனக்கு வாக்களித்துள்ளான். அதில் அபரிமிதமான நன்மைகள் உள்ளன. அது ஒரு நீர்த் தடாகம். மறுமை நாளில் என்னுடைய சமுதாயத்தார் (தண்ணீர் அருந்துவதற்காக) அதை நோக்கி வருவார்கள். அதன் குவளைகள் நட்சத்திரங்களின் எண்ணிக்கையைப் போன்று (அதிகமாகக்) காணப்படும். அப்போது அவர்களில் ஓர் அடியார் (தண்ணீர் அருந்தவிடாமல்) தடுக்கப்படுவார். உடனே நான், “இறைவா! அவர் என் சமுதாயத்தாரில் ஒருவர். (அவர் ஏன் தடுக்கப்படுகிறார்?)” என்று கேட்பேன். அதற்கு இறைவன், “உங்கள் சமுதாயம் உங்களுக்குப் பின்னால் புதிது புதிதாக உருவாக்கிவிட்டதை நீங்கள் அறியமாட்டீர்கள் என்று கூறுவான்.(முஸ்லிம்: 670) ➚
ஸிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்: நான் ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருக்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம், அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (ஸுப்ஹு தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்.(முஸ்லிம்: 1188) ➚
அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறினார்கள்: கைபர் போர் தினத்தன்று கொழுப்பு இருந்த தோல் பை ஒன்றை நான் பெற்றேன். அதை நான் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு “இன்று இதிலிருந்து ஒரு சிறிதளவைக் கூட யாருக்கும் நான் கொடுக்கமாட்டேன்” என்று கூறினேன். பிறகு திரும்பிப் பார்த்தேன். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்த வண்ணம் இருந்தார்கள்.(முஸ்லிம்: 3635) ➚
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) மற்றும் ஃபாத்திமா பின்த் அல்முன்திர் பின் அஸ்ஸுபைர் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது: அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் புலம்பெயர்ந்து (மதீனாவுக்குச்) சென்றபோது, அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களைக் கருவுற்றிருந்தார்கள். அவர்கள் ‘குபா’ வந்தடைந்தபோது, அங்கு அப்துல்லாஹ்வைப் பெற்றெடுத்தார்கள். குழந்தை பிறந்தவுடன் பேரீச்சம் பழத்தை மென்று, அதைக் குழந்தையின் வாயில் தடவுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் புறப்பட்டுச்சென்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்மா (ரலி) அவர்களிடமிருந்து குழந்தையை வாங்கி, தமது மடியில் வைத்தார்கள். பிறகு பேரீச்சம் பழத்தைக் கொண்டு வரச் சொன்னார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் (இது தொடர்பாகப் பின்வருமாறு) கூறினார்கள்: பேரீச்சம் பழம் கிடைக்காமல் நாங்கள் சிறிது நேரம் அதை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். பேரீச்சம் பழம் கிடைத்ததும் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாயிலிட்டு மென்றார்கள். பிறகு குழந்தையின் வாயில் அதை உமிழ்ந்தார்கள். குழந்தையின் வயிற்றுக்குள் சென்ற முதல் பொருள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உமிழ்நீராகத்தான் இருந்தது.
அஸ்மா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழந்தையைத் தடவிக்கொடுத்து, குழந்தைக்காகப் பிரார்த்தித்தார்கள். பிறகு அதற்கு ‘அப்துல்லாஹ்’ எனப் பெயர் சூட்டினார்கள். பிறகு அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கு ஏழு அல்லது எட்டு வயதான போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (பிரார்த்தனை வேண்டி) உறுதிப் பிரமாணம் செய்தவற்காக அவர்களிடம் வந்தார்கள். அவ்வாறு செல்லுமாறு (அப்துல்லாஹ்வின் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களே அப்துல்லாஹ்வுக்கு உத்தரவிட்டிருந்தார்கள். அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் தம்மை நோக்கி வருவதைக் கண்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகை புரிந்தார்கள். பிறகு உறுதிமொழி வாங்கினார்கள்.(முஸ்லிம்: 4343) ➚
அபூஸஈத் அல்குத்ரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலர் ஒரு பயணத்தின் போது ஓர் அரபுக் குலத்தாரைக் கடந்து சென்றார்கள். அவர்கள் அக்குலத்தாரிடம் விருந்தளிக்குமாறு கோரியும் அவர்கள் விருந்தளிக்க முன்வரவில்லை. இந்நிலையில் அக்குலத்தாரின் தலைவனுக்குத் தேள் கொட்டிவிட்டது. அப்போது அவர்கள் (நபித்தோழர்களிடம்) “உங்களிடையே ஓதிப்பார்ப்பவர் எவரும் இருக்கிறாரா? ஏனெனில், (எங்கள்) குலத்தின் தலைவர் தேள்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்” என்று கூறினர். அப்போது நபித்தோழர்களில் ஒருவர், “ஆம்” என்று கூறிவிட்டு, அவரிடம் சென்று அவருக்கு ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தின் மூலம் ஓதிப்பார்த்தார். உடனே அவர் குணமடையவும் செய்தார். (ஓதிப்பார்த்த நபித்தோழருக்கு) ஓர் ஆட்டு மந்தை (சன்மானமாகக்) கொடுக்கப்பட்டது. அத்தோழர் அதை ஏற்க மறுத்துவிட்டார். நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கூ(றி அனுமதிபெ)றாத வரை (நான் ஏற்கமாட்டேன்)” என்று கூறிவிட்டார்.
அவ்வாறே அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தெரிவித்தார். “அல்லாஹவின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! ‘அல்ஃபாத்திஹா’ மூலமாகத் தான் நான் ஓதிப்பார்த்தேன்” என்று கூறினார். அதைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். மேலும், “அது (அந்த அத்தியாயம்) ஓதிப்பார்க்கத் தகுந்தது என்பது உமக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டுவிட்டு, “அவர்களிடமிருந்து அ(ந்தச் சன்மானத்)தைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்களுடன் எனக்கும் அதில் ஒரு பங்கு கொடுங்கள்” என்று சொன்னார்கள்.(முஸ்லிம்: 4428) ➚
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியர், நபியவர்களின் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்களை (ஒரு முறை) நபியவர்களிடம் அனுப்பிவைத்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, உள்ளே வர அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னுடன் எனது போர்வைக்குள் படுத்திருந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு உள்ளே வர அனுமதியளித்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் (உள்ளே வந்து), “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியர் அபூகுஹாஃபாவின் புதல்வர் (அபூபக்ர்) உடைய மகள் (ஆயிஷா) விஷயத்தில் (தாங்கள் அன்பு காட்டுவதைப் போன்றே பிற துணைவியரிடமும் அன்பு காட்டி) நீதியுடன் நடந்துக் கொள்ளும்படி கேட்டு என்னைத் தங்களிடம் அனுப்பி வைத்துள்ளார்கள்” என்று கூறினார். நான் அமைதியாக இருந்தேன்.
நபி (ஸல்) அவர்கள், “என் அன்பு மகளே! நான் நேசிப்பதை நீயும் நேசிப்பாய் அல்லவா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “ஆம் (தாங்கள் நேசிப்பதை நானும் நேசிக்கிறேன்)” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் (என்னைக் காட்டி) “அப்படியானால், இவரை நேசிப்பாயாக” என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டு ஃபாத்திமா (ரலி) அவர்கள் எழுந்து, நபி (ஸல்) அவர்களின் துணைவியரிடம் திரும்பிச் சென்று, தாம் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னதையும், அதற்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த பதிலையும் தெரிவித்தார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்களின் துணைவியர், “எங்களுக்கு நீங்கள் எந்த நன்மையும் செய்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. ஆகவே, (மீண்டும்) நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்று, ‘தங்கள் துணைவியார் அபூகுஹாஃபாவின் புதல்வர் (அபூபக்ர்) உடைய மகள் (ஆயிஷா) விஷயத்தில் நீதியுடன் நடந்துக்கொள்ளும்படி கேட்கிறார்கள்’ என்று கூறுமாறு சொன்னார்கள். அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! (இனி) ஆயிஷா (ரலி) அவர்கள் தொடர்பாக நான் நபியவர்களிடம் ஒருபோதும் பேசமாட்டேன்” என்று கூறி (மறுத்து) விட்டார்கள்.
ஆகவே, நபி (ஸல்) அவர்களின் துணைவியர் தங்களில் ஒருவரான ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை அனுப்பிவைத்தார்கள். ஸைனப் அவர்கள்தான் நபியவர்களின் துணைவியரில் நபியவர்களிடம் அந்தஸ்து பெற்றிருந்த விஷயத்தில் எனக்குப் போட்டியாக இருந்தவராவார். மார்க்க ஈடுபாட்டிலும், இறைவனை அஞ்சி நடப்பதிலும், உண்மை பேசுவதிலும், உறவுகளை அனுசரிப்பதிலும், தாராளமாகத் தானம் வழங்குவதிலும், இறைநெருக்கத்தையும், வாய்மையையும் தரும் நற்செயல்களில் தம்மைத் தீவிரமாக ஈடுபடுத்திக்கொள்வதிலும் ஸைனப் அவர்களை விடச் சிறந்த ஒரு பெண்ணை நான் ஒரு போதும் கண்டதில்லை. ஆயினும், அவர் விரைவாகக் கோபப்படக்கூடியவராக இருந்தார். அதே வேகத்தில் கோபம் தணியக்கூடியவராகவும் இருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து உள்ளே நுழைய அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் போர்வைக்குள் என்னுடன் இருந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் தம்மிடம் வந்தபோது இருந்த நிலையிலேயே அப்போதும் நபியவர்கள் இருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களுக்கு உள்ளே வர அனுமதியளித்தார்கள். ஸைனப் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் அபூகுஹாஃபாவின் புதல்வர் (அபூபக்ர்) உடைய புதல்வி (ஆயிஷா) விஷயத்தில் (அவரிடம் அன்பு காட்டுவதைப் போன்றே தங்களிடமும் அன்புகாட்டி) நீதியுடன் நடந்துகொள்ளுமாறு கேட்டு என்னைத் தங்களிடம் தங்களுடைய துணைவியர் அனுப்பியுள்ளார்கள்” என்று கூறினார்கள். பிறகு ஸைனப் என்னை எல்லை மீறி ஏசினார். நான் (அவருக்குப் பதில் சொல்ல) நபி (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளிக்கிறார்களா எனக் காத்திருந்தேன். கண் சாடையாவது செய்கிறார்களா என்று எதிர்பார்த்தேன். ஆனால்,ஸைனப் அவர்கள் தொடர்ந்து ஏசிக்கொண்டேபோக அவருக்கு நான் பதிலடி கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் வெறுக்கமாட்டார்கள் என நான் அறிந்துக் கொண்டேன். நான் அவருக்குப் பதில் சொல்ல ஆரம்பித்து, அவரை வாயடைக்கச் செய்ய நீண்ட நேரம் பிடிக்கவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்தபடியே “இவள் அபூபக்ரின் மகளாயிற்றே!” என்று கூறினார்கள்.(முஸ்லிம்: 4829) ➚
அனஸ்(ரலி) அறிவித்துள்ளார்கள்: நபி(ஸல்) அவர்களின் மரண நோயின்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். திங்கட்கிழமை அன்று தொழுகையில் வரிசையாக நின்று தொழுது கொண்டிருந்தபோது, நபி(ஸல்) அவர்கள் நின்றவாறு தங்கள் அறையின் திரையை நீக்கி எங்களைப் பார்த்தார்கள். அப்போது அவர்களின் முகம் புத்தகத்தின் காகிதம் போன்று பிரகாசித்தது. பின்னர் அவர்கள் புன்னகை செய்து சிரித்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததனால் ஏற்பட்ட மகிழ்ச்சியின் காரணமாக நாங்கள் சோதிக்கப்பட்டு விடுவோமோ என்று அஞ்சினோம். நபியைப் பார்த்த அபூபக்ர் (ரலி) அவர்கள், நபியவர்கள் தொழுகைக்கு வருகிறார்கள் எனக் கருதித் தமக்குப் பின்னாலுள்ள வரிசையில் சேர்வதற்காகப் பின் வாங்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘உங்களுடைய தொழுகையைப் பூர்த்தி செய்யுங்கள்’ என்று சைகை செய்துவிட்டு அறையின் உள்ளே சென்று திரையைப் போட்டுவிட்டார்கள். அன்றைய தினத்தில்தான் நபி(ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள்.(புகாரி: 680) ➚,(முஸ்லிம்: 715) ➚