13) சாட்சிகள்

நூல்கள்: இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா

‘இரண்டு பெண்களுடைய சாட்சியம் ஒரு ஆணுடைய சாட்சியத்திற்கு நிகராகும்’ என்று இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளது. இதையும் மாற்றார்கள் விமர்சனம் செய்கின்றனர்.

உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லா விட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக்
கொள்ளுங்கள்!)

(அல்குர்ஆன்: 2:282)

இரண்டு பெண்களின் சாட்சியத்தை ஒரு ஆணுடைய சாட்சிக்குச் சமமாகக் குர்ஆன் கூறுகிறது. இது பெண்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.

பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் ஆண்களை விடப் பெண்களே தொடர்ந்து அதிக மதிப்பெண்கள் பெற்று வருகின்றனர். இது பெண்களின் நினைவாற்றலுக்கும், அறிவுத் திறனுக்கும் சான்றாக உள்ளது. சாட்சியம் கூறுவதற்குத் தேவையான அறிவுத் திறனும் நினைவாற்றலும் ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகமாகவே உள்ள போது அவர்களின் சாட்சியத்தைப் பாதி சாட்சியமாகக் கருத எந்தவித நியாயமும் இல்லை.

பெண்களில் சிலர் சில நாடுகளின் தலைமைப் பதவியில் இருந்து சிறப்பாக நிர்வகித்து வரும் போது சாதாரண சாட்சியம் கூறும் தகுதியில் கூடப் பாரபட்சம் காட்டுவது அக்கிரமமானது என்பன போன்ற வாதங்கள் வைக்கப்படுகின்றன.

இந்த வாதங்கள் நியாயமானவை என்றாலும் சாட்சியம் கூறுவதற்கும், இவற்றுக்கும் சம்மந்தமில்லை என்பதை விளங்கினால் இந்த வாதம் அடிபட்டுப் போகும்.

பெண்களுக்கு நல்ல நினைவாற்றலும் அறிவுத் திறனும் உள்ளதை இஸ்லாம் மறுக்கவில்லை. சில விஷயங்களில் ஆண்களை விட இவர்களுக்கு அதிகமாக அந்தத் தகுதிகள் உள்ளதையும் இஸ்லாம் மறுக்கவில்லை.

நல்ல, கூரிய மதி உடைய ஆண் மகனுடைய அறிவையே செயலிழக்கச் செய்யும் அளவுக்குப் பெண்களே உங்களுக்குத் திறமை உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(புகாரி: 304, 1463)

அன்னை ஆயிஷா (ரலி), அன்னை உம்மு ஸலமா (ரலி) போன்ற பெண்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கே பாடம் சொல்லித் தருமளவிற்கு நினைவாற்றல் மிக்கவர்களாக இருந்துள்ளனர். ஆண்களையே தர்க்க ரீதியாக மடக்கும் அளவுக்கு அவர்களின் அறிவுத் திறமை மேலோங்கியிருந்தது. இஸ்லாமிய வரலாற்றில் இவை ஆதாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் ஆகும்.

மிகைப்படுத்திக் கூறல்

ஆனால் சாட்சியம் கூறுவதற்கு நினைவாற்றல், அறிவுத் திறன் என்ற இரண்டு தகுதிகள் மட்டும் போதுமா? நிச்சயமாகப் போதாது! இவ்விரண்டை விட மிக முக்கியமான தகுதி ஒன்று அவசியம். உள்ளதை உள்ளபடி கூட்டாமல், குறைக்காமல், மிகைப்படுத்தாமல், திரிக்காமல் கூற வேண்டும். இந்தத் தகுதி தான் சாட்சியம் கூறுவதற்கு மிக முக்கியம். சாட்சியம் என்பது உண்மையை உலகறியச் செய்வதும், இன்னொருவரின் எதிர் காலத்தை முடிவு செய்வதுமாகும்.

தனக்கு வேண்டியவர்களிடம் காணப்படும் மிகப்பெரும் குறையையும் மிகச் சிறிய குறையாகக் காண்பதும், தனக்கு வேண்டாதவர்களிடம் காணப்படும் சின்னஞ் சிறிய குறையையும் மிகப் பெரிய குறையாகக் காண்பதும் பெண்களின் இயல்பாக அமைந்துள்ளதை எவரும் மறுக்க முடியாது. நிறை விஷயத்திலும் அப்படியே.

ஊசியை உலக்கையாகவும், யானையைப் பூனையாகவும் பார்க்கக் கூடிய இந்த இயல்பு, சாட்சியம் கூறுவதற்கான தகுதியில் குறைவை ஏற்படுத்துகின்றது. மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற பழமொழி இவர்களின் இயல்புக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

புகுந்த வீட்டில் மகள் பாதிக்கப்படும் போது பேசுகின்ற நியாயத்தில் கடுகளவைக் கூட மருமகள் விஷயத்தில் கடைப்பிடிக்காத மாமியார்கள் பலரை நாம் காண்கிறோம்.

நன்கு அலங்காரம் செய்த பெண்களை அச்சில் ஏற்றத் தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்து விட்டு அதை விட அதிகமாகத் தானும், தன்னைச் சேர்ந்தவர்களும் அலங்காரம் செய்து கொண்டு அதில் பெருமையடிக்கும் பெண்களும் இதற்கு நிதர்சனமான எடுத்துக் காட்டுக்களாவர்.

இது போல் அனேக விஷயங்களில் பெண்களை இப்படித் தான் காண முடிகின்றது. ஆண்களிலும் இத்தகையோர் சிலர் இருக்கலாம். பெண்களில் இத்தகைய இயல்பு இல்லாதவர்களும் இருக்கலாம். விரல் விட்டு எண்ணி விடக் கூடிய விதி விலக்குகள் இவை. மிகப் பெரும்பாலோரின் நிலை இதுவாகத் தான் இருக்கின்றது.

பிடிக்காத ஒருவன் இன்னொருவனிடம் 100 ரூபாய் கடன் வாங்கியதற்குச் சாட்சி கூறும் போது கட்டுக்கட்டாகக் கொடுத்ததாக அறிந்தோ அறியாமலோ கூறினால் அங்கே நீதி செத்து விடும். பிடித்தவன் விஷயத்தில் குறைத்துக் கூறினாலும் அப்படியே.

இயற்கையாக அமைந்த பலவீனம்

பெண்கள் ஆண்களைப் போன்ற உடலமைப்புக் கொண்டவர்களல்லர். பலவீனமானவர்களாகவும் இயற்கையில் மாதாந்திர உதிரப் போக்கு என்ற உபாதைக்கு ஆளாகுபவர்களாகவும் உள்ளனர். இந்த மாதாந்திர உபாதை மனநிலையில் பாதிப்பையும், தடுமாற்றத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் என மருத்துவவியலாரும், மனோதத்துவ இயலாரும், உடற்கூறு வல்லுனர்களும் கூறுவது அனைவரும் அறிந்ததே!

ஒரு சம்பவத்திற்கு சாட்சியாக அழைக்கப்படும் பெண், மாதாந்திர உபாதையுடனிருக்கும் போது அச்சம்பவத்தைப் பார்த்திருந்தாலோ, அல்லது சாட்சியத்திற்கு அழைக்கப்படும் போது அவ்வுபாதையுடனிருந்தாலோ அவள் அளிக்கும் சாட்சியத்தில் அவளது உடல் நிலை காரணமாக ஏற்பட்டுள்ள மனநிலை பிரதிபலிப்பதால், சாட்சியம் முழுமையடையாது.

உள்ளதை உள்ளபடி கூறாமல் குழம்பிய நிலையில் அளிக்கப்படும் சாட்சியத்தால் நீதி வழங்குவதிலும் குறைபாடு ஏற்படும். இது இரண்டாவது காரணம்,

இவ்விடத்தில் மற்றொரு கேள்வி எழலாம். மாதவிடாய் நின்று போன பெண்ணையாவது ஒரு ஆணுக்கு நிகரான சாட்சியாக ஏற்கலாமல்லவா என்று வினவலாம். ஆனால் இத்தகைய பெண்களுக்கு வேறு விதமான மனநிலைக் குழப்பம் ஏற்படுவதையும் மருத்துவ விஞ்ஞானம் உறுதி செய்வதால் இவ்வினா அர்த்தமற்றுப் போகிறது!

மிரட்டலுக்கு அஞ்சுதல்

பொதுவாக சாட்சி கூறும் போது இரு தரப்பில் ஒரு தரப்புக்கு பாதகமாகத் தான் அது அமையும். யார் பாதிக்கப்படுகிறானோ அவன் தனக்கு எதிராகச் சாட்சி கூறும்பெண்ணை மிரட்டலாம். அவளையோ, அவளது குடும்பத்தில் ஒருவரையோ கொன்று விடுவதாகக் கூறினால் போதும், சாட்சியத்தை மாற்றிக் கூறி விடக் கூடியவர்கள் பெண்களில் அதிகமாகவுள்ளனர். இந்தப் பலவீனத்தின் காரணமாகவும், இவ்வாறு வேறுபடுத்த வேண்டியது அவசியமாகும்.

இயல்பிலே அமைந்த இரக்க குணம்

மேலும், பெண்கள் இயல்பிலேயே இரக்கமும், பச்சாதாபமும் கொண்டுள்ளனர். இந்நிலையில் அவர்களின் தாய்மையுணர்வின் காரணமாகக் குற்றவாளியின் மீது இரக்கப்பட்டு, சாட்சியத்தில் ஒளிவு மறைவு செய்யலாம் என்பதாலும், ஒரு ஆணுக்கு நிகராக இரு பெண்கள் சாட்சியத்திற்குத் தேவைப்படுகின்றனர். நிச்சயமாக இரு பெண்கள் ஒரு சம்பவத்தை ஒரே மாதிரியாகக் கூறுவதில்லை என்பதை முதலாவது சொன்ன காரணம் உறுதிப்படுத்துகின்றது.
எனவே ஒரு ஆண் சாட்சிக்கு நிகராக இரு பெண் சாட்சிகள் தேவை என்று இஸ்லாம் வகுத்துள்ள சட்டம் அறிவுக்குப் பொருத்தமானதும் நியாயமானதும் ஆகும் என்பது தெளிவாகிறது.

ஒவ்வொரு விஷயத்துக்கும் தேவையான தகுதிகளை எடைபோட்டு அதனடிப்படையில் ஆண் – பெண்ணிடையே இஸ்லாம் சில வித்தியாசங்களை ஏற்படுத்தியுள்ளது. நடுநிலை உணர்வுடன் இதைச் சிந்திக்கும் எவரும் இதிலுள்ள நியாயத்தை உணரலாம்.

மேலும் ஒரு பெண் சாட்சியமளிப்பதோ அளிக்காமல் இருப்பதோ அவளது உரிமையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.