09) ஜீவனாம்சம்
‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு இஸ்லாத்தில் ஜீவனாம்சம் வழங்கப்படுவதில்லை’ என்பதும் முஸ்லிமல்லாதாரால் அதிகமாக விமர்சனம் செய்யப்படும் விஷயமாகும்.
ஷாபானு வழக்கின் போது தான் இந்தியாவின் அனைத்துப் பத்திரிகைகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இஸ்லாத்தைக் குறை கூறின என்பதில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், இஸ்லாத்தை விமர்சிக்க விரும்பும் போதெல்லாம் இந்தப் பிரச்சனையை அவர்கள் குறிப்பிடத் தவறுவது கிடையாது.
ஜீவனாம்சம் வழங்குவது அவசியம் என்போர் அதை நியாயப்படுத்துவதற்கு கூறும் காரணங்களைக் காண்போம்.
‘
இல்லற வாழ்வில் அதிகமான சிரமத்துக்கும், இழப்புக்கும் ஆளாகுபவள் பெண் தான். ஒரு ஆணுடன் சிறிது காலம் அவள் இல்லறம் நடத்துவதால் தனது அழகையும், இளமையையும் இழந்து விடுகிறாள். இந்த நிலையில் அவள் விவாகரத்துச் செய்யப்பட்டால் அவளது எதிர் காலம் என்னாவது? எனவே அவளது எதிர் காலத்தைக் கருத்தில் கொண்டு தான் விவாகரத்து செய்த கணவன் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்கிறோம்’. ஜீவனாம்சத்தை நியாயப்படுத்துவோர் கூறும் காரணம் இது தான். ‘ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம்’ என்று கூறுவோரும் இவ்வாறு கூறுவது தான் இதில் வேடிக்கை. இவ்வாறு கூறுவது தங்கள் கொள்கைக்கே எதிரானது என்பதை ஏனோ இவர்கள் உணரவில்லை.
இருவரும் இல்லறத்தில் ஈடுபட்டு இருவரும் பிரிகிறார்கள் என்றால் கணவன் மட்டும் மனைவிக்கு ஜீவனாம்சம் ஏன் கொடுக்க வேண்டும்? இருவருமே எதையும் கொடுக்க வேண்டியதில்லை என்றல்லவா சமத்துவம் பேசுவோர் கூற வேண்டும்.
கூறுபவர்களுக்கு தகுதி இல்லை என்றாலும் இந்தக் கூற்றில் உள்ள நியாயத்தை மட்டும் அலசுவோம்.
இந்த நியாயமான காரணத்தை மனிதாபிமானமுள்ள எவரும் மறுக்க முடியாது. இல்லற வாழ்வில் ஒரு பெண் அதிக சிரமத்தை அடைவதும், அதிகமாக இழப்பதும், அவளது எதிர்காலம் கேள்விக் குறியாகும் என்பதும் உண்மை. இந்தக் காரணத்தை மாற்றார் மட்டுமின்றி எந்த முஸ்லிமும் மறுப்பது கிடையாது.
காரணம் உண்மை என்றாலும் அந்தக் காரணத்துக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட தீர்வு சரியில்லை என்பதே முஸ்லிம்களின் வாதம். அதாவது மேற்கண்ட காரணத்தினால் அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கச் சொல்வது சரியான பரிகாரமாகாது. ஏனெனில் இவர்கள் நியாயப்படுத்துகின்ற ஜீவனாம்சம் அந்தக் காரணத்தைக் களைய உதவவில்லை என்பதுடன் வேறு மோசமான விளைவையும் ஏற்படுத்தி விடுகின்றது.
ஒருவன் விவாகரத்துச் செய்யும் போது அவனிடம் எந்த விதமான வசதியும் கிடையாது என்று வைத்துக் கொள்வோம்.
இந்த நிலையில் ஜீவனாம்சம் வழங்குமாறு எந்த நீதி மன்றமும் உத்தரவிடாது. அப்படியே உத்தரவிட்டாலும் அவனால் அதை நிறைவேற்ற முடியாது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்காக அவனைக் கைது செய்ய முடியுமே தவிர விவாகரத்துச் செய்யப்பட்டவளுக்கு எதையும் அவனிடமிருந்து பெற்றுத் தர முடியாது.
இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஏழைகளாகவே உள்ளனர் என்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது விவாகரத்துச் செய்யப்படும் பெரும்பாலான பெண்களுக்கு ஜீவனாம்சம் கிடைக்க வழியில்லை; இவர்களைப் பொருத்த வரை ஜீவனாம்சம் என்பது ஏட்டுச் சுரைக்காய் தான்.
வசதியுள்ளவர்கள் விஷயத்திலாவது நியாயம் வழங்கலாமே என்று கேட்கலாம். இரண்டு காரணங்களால் இந்தக் கேள்வியும் அர்த்தமற்றுப் போகின்றது.
விவாகரத்துச் செய்தவன் வசதி மிக்கவன் என்றே வைத்துக் கொள்வோம். ஜீவனாம்சம் கொடுக்க முடியாது என்று அவன் முடிவு செய்து விட்டால் அதைக் கொடுக்காமலிருக்க அவனால் முடியும்.
தன்னிடம் எவ்வளவு தான் வசதிகள் இருந்தாலும் எந்த வசதியுமே தன்னிடம் இல்லை என்று கூறிப் பொய்யான சான்றுகளை அவனால் தயாரிக்க முடியும். ஆயிரக்கணக்கான அதிகாரிகளைக் கொண்ட அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய வரிகளையே ஏய்த்து ஏப்பம் விடுவோர், ஒரு அபலையை ஏமாற்றுவது பெரிய காரியம் அன்று. வசதியுள்ளவர்கள் தாமாக மனது வைத்தால் தான் ஜீவனாம்சம் கிடைக்க வழி உண்டு. இல்லையெனில் இவர்கள் விஷயத்திலும் சட்டம் ஏட்டுச் சுரைக்காய் தான். இது முதலாவது காரணம்.
பொருளாதாரத் தகுதியை அடிப்படையாகக் கொண்டே பெரும்பாலும் திருமணங்கள் நடக்கின்றன. ஏழைப் பெண்களுக்கு ஏழை ஆண்களும், வசதி மிக்க பெண்களுக்கு வசதி மிக்க ஆண்களும் தான் வாழ்க்கைத் துணைவர்களாகின்றனர். இதில் ஒன்றிரண்டு விதி விலக்குகள் இருக்கலாம். ஆயினும் பொதுவான நிலைமை இது தான்.
வசதியான ஆடவனை மணந்தவள் – அதாவது வசதியான பெண்மணி- அவனிடமிருந்து கிடைக்கும் ஜீவனாம்சத்தை எதிர் பார்த்து வாழும் நிலையிலிருக்க மாட்டாள். அவளைப் பொருத்த வரை இந்த ஜீவனாம்சம் தேவையில்லாத ஒன்று. யாருக்குக் கிடைக்க ஓரளவாவது வாய்ப்பு உள்ளதோ அவளுக்கு அது தேவையில்லை. வசதியற்றவனை மணந்தவளுக்கு – அதாவது ஏழைப் பெண்ணுக்கு – ஜீவனாம்சம் தேவை என்றாலும் அவளது கணவன் அதைக் கொடுக்க முடியாதவனாக இருக்கிறான்.
யாருக்குத் தேவையில்லையோ அவளுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது; யாருக்குத் தேவையோ அவளுக்கு கிடைக்க வழியில்லை. இது இரண்டாவது காரணம். ஆக மொத்ததில் ஜீவனாம்சம் என்பது நடைமுறைப்படுத்த சிரமமானதாகவும் எந்தக் காரணத்துக்காக அது நியாயப் படுத்தப்படுகின்றதோ அந்தக் காரணத்தைக் களைய உதவாததாகவும் உள்ளது.
ஜீவனாம்சம் வாங்கித் தருவதாக சில வழக்கறிஞர்கள் பெண்களைத் தூண்டி விட்டு ஜீவனாம்சத்தை விட அதிகமாகவே அவர்களிடம் கறந்து விடுவதையும் நாம் காண்கிறோம்.
நீதி மன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகும் ஜீவனாம்சம் பெற முடியாமல் நீதி மன்றத்துக்கு மீண்டும் மீண்டும் அலைபவர்களையும் பார்க்கிறோம்.
ஒரு சில ஆண்கள் நீதிமன்றத்தில் அற்பமான ஜீவனாம்சத் தொகையைச் செலுத்துகின்றனர். அதை மாதா மாதம் நீதிமன்றத்தில் வந்து பெறுவதற்காக பயணச் செலவு, நீதிமன்ற அலுவலர்களுக்கு லஞ்சம் என்றெல்லாம் கழித்துப் பார்த்தால் ஒன்றுமே பெண்களுக்கு மிச்சமாவதில்லை என்பதையும் கண்கூடாகக் காண்கிறோம்.
இந்த ஜீவனாம்சத்தினால் அரைக் காசுக்கு உபயோகம் இல்லை என்று தெரிந்து கொண்டே தான் இது சிறப்பான தீர்வு’ என்று கூறி தங்களைத் தாங்களே சிலர் ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
இவற்றையெல்லாம் கடந்து, முறையாக ஜீவனாம்சம் கிடைக்கிறது என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அப்போது வேறொரு மோசமான விளைவு ஏற்படக் கூடும்.
விவாகரத்துச் செய்யப்பட்டவள் மரணிக்கும் வரை அல்லது அவள் மறுமணம் செய்யும் வரை ஜீவனாம்சம் கொடுக்கப்பட வேண்டும்.’
சட்டம் இப்படித் தான் கூறுகிறது.
முன்னர் நாம் குறிப்பிட்ட இடையூறுகளைக் கடந்து விவாகரத்துச் செய்யப்பட்ட அனைவருக்கும் ஜீவனாம்சம் கிடைப்பது உறுதி செய்யப்படும் போது ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம்.
திருமணம் செய்து கொள்வதால் கணவனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும்; கணவனின் குடும்பத்திற்கும் பணிவிடை செய்ய வேண்டும்; ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருந்தாக வேண்டும் என்பதையெல்லாம் விவாகரத்துச் செய்யப்பட்டவள் அனுபவப்பூர்வமாக உணர்ந்து இருக்கிறாள்.
மறுமணம் செய்யும் வரை ஜீவனாம்சம் கிடைத்து விடும் என்பதையும் அவள் அறிந்தால் மறுமணம் செய்யும் முடிவுக்கு வரமாட்டாள். பழைய கணவனிடமிருந்து தொடர்ந்து ஜீவனாம்சம் பெறுவதையே தேர்வு செய்வாள்; சுதந்திரப் பறவையாகத் திரிவதையே அவள் விரும்பி வரவேற்பாள்.
வயிற்றுப் பசியைப் பொறுத்த வரை அவளுக்குக் கவலையில்லை. அவளுடைய உணர்ச்சிகள் என்னாவது? ஒரு முறை நடைபெற்ற திருமணத்தால் கணவனுடன் பிணக்கேற்பட்டுத் அதனால் மனம் புண்பட்ட இவள் திருமணமில்லாத வழிகளில் தான் உணர்ச்சிகளைத் தீர்க்க முயல்வாள்.
இன்னொருவனுக்குச் சுகமளித்து விட்டுப் பழைய கணவனிடம் ஜீவனாம்சம் எதிர்பார்ப்பது என்ன நியாயம்? திட்டவட்டமாக ஜீவனாம்சம் கிடைத்து விடும் என்ற நிலையில் இந்த விளைவு ஏற்படுவதைத் தடுக்க முடியாது. விவாகரத்துச் செய்யப்பட்ட அனைத்துப் பெண்களும் இப்படி நடப்பார்கள் என்று நாம் கூறவில்லை. கணிசமானவர்கள் இப்படி நடக்க ஆரம்பிப்பார்கள். மற்றவர்களுக்கும் இந்த எண்ணம் நாளடைவில் பரவி விடும் என்றே கூறுகிறோம்.
இந்தப் பெண்களின் நிலைக்குப் பரிகாரம் தான் என்ன? இந்த ஜீவனாம்ச முறை குறைபாடு உடையது என்றால் குறைபாடு இல்லாத மாற்று வழி தான் என்ன? அந்தப் பெண்களின் எதிர் காலம் என்னாவது? என்ற கேள்விகளுக்கு இஸ்லாத்தின் விடை என்ன?
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு மூன்று வகையான பாதுகாப்பை இஸ்லாம் ஏற்படுத்துகின்றது.
முதல் பாதுகாப்பு
ஒன்று, திருமணத்தின் போது கணிசமான தொகையை மஹராகப் பெற்று அவள் தனது பொறுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.
திருமணத்தின் பின் கணவனால் கைவிடப்படும் நிலையும் ஏற்படலாம் என்பதைப் பெண்கள் உணர்ந்து முன் கூட்டியே ஜீவனாம்சத் தொகையை மொத்தமாக வாங்கிக் கொள்ளுமாறும், ஆண்கள் அதைக் கொடுத்து விடுமாறும் இஸ்லாம் வழி காட்டுகின்றது.
எவ்வளவு வேண்டுமானாலும் மஹராகக் கேட்கலாம் எனவும் அந்தப் பணத்தில் அவளைத் தவிர எவருக்கும் உரிமையில்லை எனவும் இஸ்லாம் வரையறுத்துள்ளது. அரபு நாடுகளில் இன்றும் கூட திருமணத்தின் போது இலட்சக் கணக்கில் மஹர் தொகை கேட்கிறார்கள்.
முன்கூட்டியே இப்படி வாங்கிக் கொள்ளும் போது வசதியில்லை என்று கூறி கணவன் ஏமாற்றவும் இடமில்லை. தவறான வழியை மனைவி தேர்வு செய்யவும் இடமில்லை.
மறுமணம் செய்தாலும் செய்யாவிட்டாலும் பழைய கணவனிடமிருந்து தனக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதால் அவள் மறுமணத்தையே தேர்வு செய்வாள். அதனால் அவளுக்கு மீண்டும் ஒரு முறை மஹர் கிடைக்கின்றது. அவளுடைய வாழ்க்கைச் செலவுக்கும் புதிய கணவன் பொறுப்பேற்றுக் கொள்கிறான்.
இன்றைய இந்திய முஸ்லிம்கள் இதைப் பேணத் தவறி விட்டனர்; பெண்களிடம் வரதட்சணைக் கேட்கும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டனர் என்பதால் இஸ்லாத்தைக் குறை கூற முடியாது; அறிவுடையோர் அவ்வாறு கூற மாட்டார்கள்.
இரண்டாவது பாதுகாப்பு
‘விவாகரத்துச் செய்தவுடன் கணவனின் பொருளாதார வசதியைக் கவனித்து பெருந்தொகையை, சொத்தை அவளுக்கு ஜமாஅத்தினரோ அல்லது இஸ்லாமிய அரசோ வாங்கிக் கொடுக்க வேண்டும்’ என்பது விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு இஸ்லாம் ஏற்படுத்திய இரண்டாவது பாதுகாப்பாகும்.
(அல்குர்ஆன்: 2:241) ➚வசனம் இதைத் தான் கூறுகிறது.
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை. (அல்குர்ஆன்: 2:241) ➚
இவ்வசனத்தின் ஒவ்வொரு சொல்லும் ஆழமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
ஆயினும் இத்தா காலத்துக்கு, அதாவது மூன்று மாத காலத்துக்கு ஜீவனாம்சம் வழங்குவதையே 2:241 வசனம் குறிக்கிறது என்று முஸ்லிம்களில் பலர் நினைக்கின்றனர்.
இதைச் சொல்வது என்றால் இத்தா காலத்தில்’ என்று எளிதாகச் சொல்லியிருக்கலாம். இறைவன் அவ்வாறு கூறாமல் அழகிய முறையில், நியாயமான முறையில்’ என்று கூறுகிறான்.
ஒரு பெண்ணுடன் வாழ்ந்து அவளது இளமையை அனுபவித்து விட்டு மூன்று மாதம் செலவுக்குப் பணம் கொடுப்பது அழகிய முறையாகவோ, நியாயமான முறையாகவோ இருக்காது.
தனது மகளுக்கு இப்படி நேர்ந்தால் எது நியாயமானதாகப் படுகிறதோ அது தான் நியாயமானது.
(அல்குர்ஆன்: 2:236) ➚வசனம் கூறுவதை இதற்கு அளவு கோலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாகரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் தமக்குத் தக்கவாறும் ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்!
மனைவியைத் தீண்டாமல் விவாகரத்துச் செய்தவர் தமது வசதிக்குத் தக்கவாறு பெண்களுக்கு வசதிகள் அளிக்குமாறு இவ்வசனம் கூறுகிறது.
மனைவியைத் தீண்டி அனுபவித்தவர் விவாகரத்துச் செய்யும் போது இதையே அடிப்படையாகக் கொள்வது தான் பொருத்தமானது.
விவாகரத்துச் செய்தவன் வசதியுள்ளவன் என்றால் அவனது வசதிக்கேற்ப கோடிகளைப் பெற்றுத் தரும் பொறுப்பும், சில ஆயிரங்கள் தான் அவனால் கொடுக்க இயலும் என்றால் அதைப் பெற்றுத் தரும் பொறுப்பும் ஜமாஅத்துகளுக்கு உண்டு. இறைவனை அஞ்சுவோருக்கு இது கட்டாயக் கடமையாகும்.
விவாகரத்துக்குப் பின் பெண் வீட்டாரிடமிருந்து கணவன் வீட்டார் வாங்கிய வரதட்சணையை மட்டும் தான் சில ஜமாஅத்தினர் பெற்றுத் தருகிறார்கள். அது உண்மையில் அவளுக்குச் சேர வேண்டியது. விவாகரத்துக்காக எதையும் வாங்கிக் கொடுப்பதில்லை.
முஸ்லிம் சமுதாயம் இந்த இறைக் கட்டளையை நடைமுறைப்படுத்தாத காரணத்தால் தான் முஸ்லிம்கள் பல விதமான விமர்சனங்களைச் சந்திக்கின்றனர். இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரத்துக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. போலி ஜீவனாம்சத்தை முஸ்லிம்கள் மீதும் திணிக்க முயற்சிக்கப்படுகிறது.
எனவே ஜமாஅத்தினர் இவ்வசனத்தின் ஒவ்வொரு சொல்லையும் கவனித்து அல்லாஹ்வுக்கு அஞ்சி பெண்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்.
(அல்குர்ஆன்: 65:6) ➚வசனத்தில் கர்ப்பிணிகளாக இருந்தால் பிரசவிக்கும் வரை செலவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. இதனால் இத்தா காலம் வரை தான் ஏதும் கொடுக்க வேண்டும் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர்.
அவனது கருவை அவள் சுமந்திருப்பதால் அதற்காக மேலதிகமாக அவன் செய்ய வேண்டிய செலவைத் தான் அவ்வசனம் கூறுகிறது. அதைக் காரணம் காட்டி இவ்வசனத்தில்(அல்குர்ஆன்: 2:241) ➚ கூறப்படும் கட்டளையைப் புறக்கணிக்க முடியாது.
விவாகரத்துச் செய்யப்பட்டவள் விவாகரத்துச் செய்த கணவன் மூலம் குழந்தைகளைப் பெற்றிருந்தால் அந்தக் குழந்தைகள் தாயிடமே வளர்ந்து வந்தாலும் அவர்களுக்கான முழுச் செலவையும் தந்தையே ஏற்க வேண்டும். கைக்குழந்தையாக இருந்தால் அக்குழந்தைக்குப் பாலூட்டுவதற்காகவும் கூட அக்குழந்தையின் தந்தை உரிய தொகை கொடுத்து வர வேண்டும் என்றும் குர்ஆன் கட்டளையிடுகிறது.
பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும், உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. இருவரும் ஆலோசனை செய்து மனம் விரும்பி பாலூட்டுவதை நிறுத்த முடிவு செய்தால் இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கு (வேறு பெண் மூலம்) பாலூட்ட வேண்டும் என நீங்கள் விரும்பினால் (பெற்றவளுக்குக்) கொடுக்க வேண்டியதை நல்ல முறையில் கொடுத்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
மூன்றாவது பாதுகாப்பு
இது தவிர மற்றொரு பாதுகாப்பையும் விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு குழந்தைகள் ஏதும் இல்லாவிட்டால் அவர்களுக்கு அதிகமான பாதிப்புகள் ஏற்படுவதில்லை.
அவர்களுக்குக் குழந்தைகள் இருந்தால் பிள்ளைப் பாசம் காரணமாக தம்முடனே குழந்தைகளை வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இதனால் அவர்கள் மிகுந்த சிரமங்களைச் சந்திக்க வேண்டிய நிலமை ஏற்படுகிறது. இதையும் இஸ்லாம் கவனத்தில் கொள்கிறது.
தான் பெற்ற பிள்ளைகளுக்குப் பாலூட்டினால் கூட அதற்கான கட்டணத்தைக் கணவனிடமிருந்து பெறலாம் என்று இவ்வசனம் கூறுகிறது. பாலூட்டுவதற்காக அவளுக்கு எந்த விதப் பொருளாதாரச் செலவும் ஏற்படுவதில்லை. அது இயற்கையாகவே இறைவன் வழங்கிய அருட்கொடையாகும்.
இதற்கே நியாயமான முறையில் கணவனிடமிருந்து தேவையான தொகையைப் பெறலாம் என்றால் குழந்தைகளுக்கான மற்ற செலவுகளும் தந்தையையே சேரும் என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே குழந்தைகள் தாயிடம் வளர்ந்தாலும் அவர்களுக்கான உணவு, உடை மற்றும் குழந்தைகளின் மருத்துவம் உள்ளிட்ட அவசியத் தேவைகளுக்காகவும், கணவன் பொறுப்பேற்க வேண்டும். குழந்தைகளைப் பேணி பராமரிப்பதற்கான கூலிக்கும் அவனே பொறுப்பேற்க வேண்டும்.
மேற்கண்ட வசனத்தை சிந்தித்தால் இதை எவரும் விளங்கலாம்.
குழந்தை பெறாத பெண்களும், பெற்றும் வளர்க்க விரும்பாமல் கணவனிடமே தள்ளிவிடக் கூடியவர்களும் தான் இவ்வாறு பெற முடியாது.
எனவே ஜீவனாம்சம் சம்மந்தமாக இஸ்லாம் காட்டிய வழி, உலகில் எங்குமே காண முடியாத சிறப்பான வழி தான். காழ்ப்புணர்வு இன்றிச் சிந்திப்பவர்கள் இதைக் குறை கூற மாட்டார்கள்.