18) அல்லாஹ்வின் பார்வையில் சூனியம்
சூனியம், சூனியம் செய்பவர், சூனியம் செய்யப்பட்டவர் ஆகிய சொற்கள் திருக்குர்ஆனில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சில இடங்களில் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்தில் இச்சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வேறு சில இடங்களில் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியாது; அது தந்திரமாக ஏமாற்றுவதுதான் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்ற கருத்தில் தமது கருத்தை நிலைநாட்டுவதற்கு உதவும் வசன்ங்களை எடுத்துக் காட்டி சூனியத்தால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று சாதிக்கின்றனர்.
முரண்பட்ட வகையில் அல்லாஹ் பேச மாட்டான் என்று கவனமாக ஆய்வு செய்யும் போது சூனியக் கட்சியினர் குர்ஆனை தவறாகப் புரிந்து கொண்டு வாதிட்டுள்ளனர் என்பதை அறியலாம்.
இது பற்றி விபரமாகப் பார்ப்போம்.
நபிமார்கள் மறுமை உள்ளிட்ட பல போதனைகளைச் செய்த போது அதை நம்ப மறுத்தவர்கள் மனநோயே இவ்வாறு உளறுவதற்குக் காரணம் என்ற முடிவுக்கு வந்தனர். மனநோய்க்குக் காரணம் சூனியம் வைக்கப்ப்பட்டது தான் என்றும் கருதினார்கள். எனவே நபிமார்களின் போதனையை நம்பாத போது நபிமார்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதனால் பைத்தியம் பிடித்து உளறுகிறார்கள் என்று சொன்னார்கள்.
இதை திருக்குர்ஆன் பல வசனங்களில் சொல்லிக் காட்டுகிறது.
உதாரணமாக சாலிஹ் நபியின் சமுதாயத்தினர் சாலிஹ் நபியைப் பார்த்து சூனியம் செய்யப்பட்டவர் என்று சொன்னதாக கீழ்க்காணும் வசனம் கூறுகிறது.
“நீர் சூனியம் செய்யப்பட்டவராகவே இருக்கிறீர்” என்று அவர்கள் கூறினர்.
ஷுஐப் நபியையும் இவ்வாறே குறிப்பிட்டனர்.
“நீர் சூனியம் செய்யப்பட்டவர் தான்” என்று அவர்கள் கூறினர்.
நூஹ் நபிக்கும் இதே பட்டத்தைக் கொடுத்தார்கள்.
அவர்களுக்கு முன் நூஹுடைய சமுதாயம் பொய்யெனக் கருதியது. அவர்கள் நமது அடியாரைப் பொய்யரென்றனர். பைத்தியக்காரர் என்றனர். அவர் விரட்டப்பட்டார்.
மூஸா நபியையும் சூனியம் வைக்கப்பட்டவர் என்று கூறினார்கள்.
மூஸாவிடமும் (படிப்பினை) இருக்கிறது. அவரைத் தெளிவான சான்றுடன் ஃபிர்அவ்னிடம் அனுப்பிய போது, அவன் தனது பலத்தின் காரணமாகப் புறக்கணித்தான். “இவர் சூனியக்காரரோ, பைத்தியக்காரரோ” எனக் கூறினான்.
(அல்குர்ஆன்: 51:38) ➚,39
நபிமார்கள் இஸ்லாத்தை மக்களுக்குச் சொல்லும் போது இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்றே சொன்னார்கள்.
சூனியக் கட்சியினர் இதிலிருந்து எடுத்து வைக்கும் வாதத்தை முதலில் அறிந்து கொள்வோம்.
மனநோயால் பாதிக்கப்பட்டு உளறுகிறார்கள் என்ற கருத்தைச் சொல்லும் போது அதை சூனியம் வைக்கப்பட்டவர் என்ற சொல்லால் குறிப்பிட்டுள்ளனர். சூனியம் என்ற வார்த்தைக்கு மனநோய் என்று மக்கள் நம்பியிருந்ததால் தானே இப்படி கூறினார்கள்?
சூனியம் வைக்கப்பட்டவர் என்ற சொல் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும்என்ற கருத்தில் மேற்கண்ட வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதே போதுமான ஆதாரமாகும் என்று கூறுகின்றனர்.
ஆனால் இது அறிவுடையோர் வைக்க்க் கூடிய வாதமாக இல்லை.
சூனியத்திற்கு இந்த அர்த்தத்தை அல்லாஹ் சொல்லவில்லை. அறியாத மக்கள் சூனியத்திற்கு இவ்வாறு அர்த்தம் வைத்திருந்தனர் என்பதற்குத் தான் இது ஆதாரமாகுமே தவிர அல்லாஹ்விடம் இதுதான் சூனியத்தின் அர்த்தம் என்பதற்கு ஆதாரமாக ஆகாது என்பதை இவர்கள் அறிந்ததாகத் தெரியவில்லை.
இறைவனை மறுக்கக் கூடியவர்கள் சூனியத்திற்கு சக்தியிருப்பதாக நம்பினார்கள். அவர்களின் நினைப்பிற்குத் தகுந்தவாறு அவர்கள் பேசினார்கள் என்றுதான் இது போன்ற எல்லா வசனங்களிலும், அல்லாஹ் கூறியிருக்கின்றான்.
நபிமார்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது என்று கூறியது அல்லாஹ் அல்ல. எதிரிகள் கூறியதை அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான்.
காஃபிர்கள் சூனியத்தைப் பற்றி அவர்களுக்கு இருந்த நம்பிக்கைப் பிரகாரம் பேசினார்கள். அவர்கள் பேசியது அல்லாஹ்வின் கருத்தல்ல.
காஃபிர்கள் தமது நம்பிக்கைப் பிரகாரம் பேசியதை அல்லாஹ் எடுத்துக் காட்டினால், இது காஃபிர்களின் நம்பிக்கை என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
கல்லுக்குச் சக்தியிருப்பதாக காஃபிர்கள் சொன்னதை அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான்.
“எங்கள் கடவுள்களில் சிலர் உமக்குக் கெடுதி செய்து விட்டார்கள்” என்றே கூறுகிறோம் (என அவர்கள் கூறினர்). “நான் (இதற்கு) அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன்; நீங்களும் சாட்சியாக இருங்கள்! அவனையன்றி நீங்கள் எதை இணை கற்பித்தீர்களோ அதை விட்டும் நான் விலகியவன்; எனவே அனைவரும் எனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! பின்னர் எனக்கு எந்த அவகாசமும் அளிக்காதீர்கள்!” என்று அவர் கூறினார்.
கல்லுக்குச் சக்தி இருக்கின்றது என்று இதற்கு அர்த்தமாகுமா? காஃபிர்கள் கல்லுக்குச் சக்தி இருக்கிறதென்று சொன்னார்கள் என்று தான் அர்த்தமாகும்.
நான் தான் உங்களுக்குப் பெரிய கடவுள் என்று ஃபிர்அவ்ன் சொன்னான். இதனை அல்லாஹ் குர்ஆனில் எடுத்துச் சொல்வதால் ஃபிர்அவ்னை அல்லாஹ்வே கடவுள் என்று சொல்லி விட்டான் என்று கூறுவது போல் இவர்களின் வாதம் அமைந்துள்ளது.
நபிமார்கள் சூனியம் செய்யப்பட்டார்கள் என்று காஃபிர்கள் சொன்னது மன நோயாளி என்ற பொருளில் தான். ஆனால் சூனியம் என்ற சொல்லை அல்லாஹ் பயன்படுத்தும் இடங்களில் அந்த பொருளில் பயன்படுத்தவில்லை. அதைப் பின்னர் நாம் விளக்குவோம்.
நபிமார்களின் போதனைகளைக் கேட்ட போது அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது என்று சொன்னது போல் நபிமார்களை சூனியம் வைப்பவர்கள் என்றும் சொன்னார்கள். நபிமார்கள் கொண்டு வந்த அற்புதத்தை சூனியம் என்றும் சொன்னார்கள்.
வித்தை என்று சொல்ல முடியாத அளவில் அற்புதத்தைச் செய்து காட்டினாலும் அதனை மறுப்பதற்காக இது சூனியம் என்று சொன்னார்கள்.
இதனை திருக்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் கூறுகின்றான்.
“மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட்கொடையையும், ரூஹுல்குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக! என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் தொழுநோயாளியையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இறந்தவர்களை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர்! அப்போது “இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை” என்று அவர்களில் (ஏகஇறைவனை) மறுப்போர் கூறிய போது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக!” என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக!
“இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதராவேன். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்” என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக! அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது “இது தெளிவான சூனியம்” எனக் கூறினர்.
“உண்மை உங்களிடம் வந்திருக்கும் போது அதைச் சூனியம் என்று கூறுகிறீர்களா? சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்” என்று மூஸா கூறினார்.
“மூஸாவே! உமது சூனியத்தால் எங்கள் பூமியிலிருந்து எங்களை வெளியேற்ற எங்களிடம் வந்துள்ளீரா?” என்று அவன் கேட்டான்.
“தனது சூனியத்தின் மூலம் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற இவர் நினைக்கிறார். நீங்கள் என்ன உத்தரவிடுகிறீர்கள்?” (என்றும் கேட்டான்).
“உமது கையை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக! அது எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக வெளிப்படும். ஃபிர்அவ்னிடமும், அவனது சமுதாயத்திடமும் ஒன்பது சான்றுகளுடன் (செல்வீராக!) அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாகவுள்ளனர்” (என்று இறைவன் கூறினான்). நமது சான்றுகள் பார்க்கும் வகையில் அவர்களிடம் வந்த போது “இது தெளிவான சூனியம்” என்று அவர்கள் கூறினர்.
மூஸா அவர்களிடம் நமது தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது இது இட்டுக்கட்டப்பட்ட சூனியம் தவிர வேறில்லை. இது பற்றி முன்னோர்களான எங்களது மூதாதையரிடம் நாங்கள் கேள்விப்படவில்லை என்றனர்.
அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. “இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா?” என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர்.
நம்மிடமிருந்து அவர்களிடம் உண்மை வந்த போது “மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்றது இவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுகின்றனர். இதற்கு முன் மூஸாவுக்கு கொடுக்கப்பட்டதை அவர்கள் மறுக்கவில்லையா? “இரண்டும் ஒன்றை ஒன்று மிஞ்சும் சூனியங்களே” என்று கூறுகின்றனர். “அனைத்தையும் நாங்கள் மறுக்கிறோம்” எனவும் கூறுகின்றனர்.
“நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவாவார். எனவே உங்களை மாறுகால் மாறுகை வெட்டி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையானவரும் யார் என்பதை (அப்போது) அறிந்து கொள்வீர்கள்” என்று அவன் கூறினான்.
“மக்களை எச்சரிப்பீராக” என்றும், “தாம் செய்த நற்செயல் (அதற்கான கூலி) தம் இறைவனிடம் உண்டு என நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக” என்றும் மனிதர்களைச் சேர்ந்த ஒருவருக்கு நாம் அறிவிப்பது அவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா? “இவர் தேர்ந்த சூனியக்காரர்” என்று (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர்.
இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ, சூனியக்காரர் என்றோ கூறாமல் இருந்ததில்லை.
நபிமார்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது எனக் கூறும் வசனங்களை ஆதாரமாகக் காட்டியது போல் நபிமார்களை சூனியக்காரர்கள் எனக் காஃபிர்கள் கூறியதையும் சூனியக் கட்சியினர் தமக்குரிய ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
நபிமார்கள் செய்த அற்புதங்களைப் பார்த்தவுடன் அதை சூனியம் என்று சொன்னார்கள் என்றால் அதிலிருந்து தெரிவது என்ன? நபிமார்கள் செய்தது போன்ற காரியங்களை சூனியத்தாலும் செய்ய முடியும் என்பதால் தான் இவ்வாறு கூறினார்கள்.
கைத்தடியைப் போட்டு மூஸா நபி பாம்பாக மாற்றினால் அது போல் சூனியக்காரனுக்கும் செய்ய முடியுமே என்று அவர்கள் பதில் சொன்னதில் இருந்து சூனியத்தின் மூலம் அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்பது தெளிவாகிறது. சூனியத்தின் பொருளை மேற்கண்ட குர்ஆன் வசனங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம் எனக் கூறுகின்றனர்.
இதுவும் முதலில் சொன்ன வாதம் போல் தான் உள்ளது. சூனியத்தால் எதுவும் சாதிக்கலாம் என்ற கருத்தில் தான் காஃபிர்கள் சொன்னார்கள் என்பதில் ஐயமில்லை.
ஆனால் காஃபிர்கள் தமது நம்பிக்கைக்கு ஏற்ப ஒரு வாசகத்தைப் பயன்படுத்தி இருந்தால் அது எப்படி மார்க்க ஆதாரமாகும் என்ற அடிப்படை விஷயத்தை சூனியக்கட்சியினர் அறியவில்லை.
இன்றைக்கு சூனியத்தை நம்புகின்றவர்கள் சூனியத்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கின்றார்களே அது போல அன்றைக்கு சூனியத்தை நம்புகின்றவர்களும் நினைத்தார்கள்.
சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்பதற்கு இவை ஒருபோதும் ஆதாரமாக ஆக முடியாது. காஃபிர்கள் அப்படி நம்பி இருந்தார்கள் என்பதற்குத்தான் இது ஆதாரமாக அமையும்.
சூனியத்தைப் பற்றி காஃபிர்களின் நம்பிக்கை இது என்றால் அல்லாஹ்வின் பார்வையில் சூனியம் என்பது என்ன? அதை இப்போது பார்ப்போம்.
108. அவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது.
109, 110. “இவர் தேர்ந்த சூனியக்காரராக உள்ளார். உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்?” என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர்.
111, 112. “இவருக்கும், இவரது சகோதரருக்கும் அவகாசம் அளிப்பீராக! (சூனியக்காரர்களைத்) திரட்டி வருவோரைப் பல ஊர்களுக்கும் அனுப்புவீராக! அவர்கள் தேர்ந்த சூனியக்காரர் ஒவ்வொருவரையும் உம்மிடம் கொண்டு வருவார்கள்” என்றும் (ஃபிர்அவ்னிடம்) கூறினர்.
113. சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்தனர். “நாங்கள் வெற்றிபெற்றால் எங்களுக்குப் பரிசு உண்டா?” என்று அவர்கள் கேட்டனர்.
114. “ஆம்! நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்கள்” என (அவன்) கூறினான்.
115. “மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா?” என்று அவர்கள் கேட்டனர்.
116. “நீங்களே போடுங்கள்!” என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.
117. “உமது கைத்தடியைப் போடுவீராக!” என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அதுஅவர்கள் செய்த வித்தையை விழுங்கியது.
118. உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின.
119. அங்கே அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்; சிறுமையடைந்தனர்.
120. சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர்.
(அல்குர்ஆன்: 7:108) ➚– 120
65. “மூஸாவே! நீர் போடுகிறீரா? நாங்கள் முதலில் போடட்டுமா?” என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.
66. “இல்லை! நீங்களே போடுங்கள்!” என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல்அவருக்குத் தோற்றமளித்தது.
67. மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார்.
68. “அஞ்சாதீர்! நீர் தான் வெல்பவர்” என்று கூறினோம்.
69. “உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும்.அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்” (என்றும் கூறினோம்.)
70. உடனே சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்து, “மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்” என்றனர்.
இவ்வசனங்கள் கூறுவதைக் கவனியுங்கள். சூனியக்காரர்கள் மகத்தான சூனியத்தைச் செய்தனர் என்று 7:116 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
மூஸா நபிக்கு எதிராகக் களம் இறங்கிய சூனியக்காரர்கள் சாதாரணமானவர்கள் அல்லர். மிகவும் திறமை வாய்ந்த சூனியக்காரர்கள். அவர்கள் செய்து காட்டியது சிறிய சூனியம் அல்ல. மகத்தான சூனியத்தைச் செய்தனர். அந்த மகத்தான சூனியத்தால் அவர்கள் செய்து காட்டியது என்ன?
அவர்கள் செய்த சூனியத்தின் மூலம் கயிறுகளும், கைத்தடிகளும் பாம்புகளாக மாறவில்லை. மாறாக பாம்பு போல் பொய்த்தோற்றம் ஏற்படுத்தியது என்று 20:66 வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.
மகத்தான சூனியத்தின் மூலம் பொய்த்தோற்றம் தான் ஏற்படுத்த முடிந்தது. மெய்யாக எந்த மாற்றத்தையும் செய்ய முடியவில்லை. மகத்தான சூனியத்தின் சக்தியே இதுதான் என்றால் சாதாரண சூனியத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
20:69 வசனத்தில் சூனியக்காரர்கள் செய்தது தில்லுமுல்லு (சூழ்ச்சி) என்றும் அல்லாஹ் கூறுகிறான். சில தில்லுமுல்லுகளைச் செய்து சூனியத்தால் ஏதோ செய்துவிட்டதாக கண்களுக்குக் காட்ட முடிந்தது.
மேஜிக் எனும் தந்திரக் கலையைத் தொழிலாகச் செய்யும் மேஜிக் நிபுனர்கள் ஒரு மனிதனைப் படுக்க வைத்து அல்லது நிற்க வைத்து அவனை இரண்டு துண்டுகளாக வெட்டுவது போல் காட்டுவார்கள். சிறிது நேரத்தில் இரு துண்டுகளாக அறுக்கப்பட்டவர்களை இணைத்து பழைய நிலைக்கு கொண்டு வருவார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் அந்த மனிதனை இரண்டாக வெட்டவில்லை. வெட்டாமலே வெட்டியது போல் வண்ண விலக்குகளால் ஜாலம் செய்து நம் கண்களை ஏமாற்றுவார்கள். அது போல் தான் சூனியக்காரர்களும் ஏமாற்றுவார்கள். உண்மையில் அவர்கள் ஏதும் செய்வதில்லை.
இவை கண்கட்டி வித்தைதான் என்று மேஜிக் செய்பவர்கள் சொல்லி விடுவார்கள்.
ஆனால் சூனியக்காரர்கள் தாம் செய்வதைப் பற்றி இப்படி சொல்ல மாட்டார்கள் அவ்வளவுதான் வித்தியாசம்.
ஒருவரைக் கட்டிலில் படுக்க வைத்து, கட்டிலின் நான்கு கால்களையும் உருவி விடுவார்கள். கட்டிலின் நான்கு கால்களும் உருவப்பட்ட பின்னர் பார்த்தால் அந்த மனிதர் அந்தரத்தில் தொங்குவது போல் தெரியும்.
ஆனால் உண்மையில் இப்படிச் செய்ய முடியாது. மெல்லிய கம்பியால் அந்தக் கட்டில் தூக்கிக் கட்டப்பட்டு இருக்கும். அது நம் கண்களுக்கு தெரியாததால் அந்த மனிதன் அந்தரத்தில் மிதப்பதாகத் தெரியும்.
யானையை மறைய வைப்பார்கள். மக்கள் கூடி இருக்கும் போது யானையை மேடையில் ஏற்றி லைட் ஆஃப் செய்து ஆன் செய்தால் யானை இருக்காது. இதே போன்று அடுத்து செய்தவுடன் மீண்டும் யானை வந்துவிடும். இதை ஒன்றிரண்டு விநாடிகளில் செய்வார்கள்.
நிஜமாகவே யானையை இப்படி காணாமல் போகச் செய்ய முடியுமா? முடியவே முடியாது.
இது வண்ண விளக்குகளால் நம் கண்ணை ஏமாற்றும் வித்தையாகும். ஒரு சில வண்ண விளக்குகளைப் போட்டால் சில வண்ணங்கள் மறைந்துவிடும். அதே போன்று யானையின் கருப்பு வண்ணத்தை மறைக்க அதற்கான விளக்கைப் போட்டால் யானை அதே இடத்தில் இருந்தாலும் அது நம் கண்களுக்குத் தெரியாது. அங்கு சென்று தொட்டுப் பார்த்தால் யானை அதே இடத்தில் தான் இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
கண்களுக்கு யானை இல்லாத தோற்றத்தை நமக்கு நம் கண் ஏற்படுத்தும். இதுதான் கண்ணை மயக்குவது ஆகும்.
மேலே உள்ள வசனங்களில் அல்லாஹ் பயன்படுத்தியுள்ள வாசகங்களைக் கவனமாகப் பாருங்கள்!
அவர்கள் தேர்ந்த சூனியக்காரர் ஒவ்வொருவரையும் உம்மிடம் கொண்டு வருவார்கள்”
அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள்.
மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.
அங்கே அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்; சிறுமையடைந்தனர்.
அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது.
அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி.
சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்
மேற்கண்ட வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள மேற்கண்ட வாசகங்கள் சொல்வது என்ன?
சூனியம் கற்பனை தான். பொய்த் தோற்றம் தான். கண்கட்டு வித்தைதான். நிஜத்தில் ஒன்றும் நடக்கவில்லை என்பதைக் காட்டுகிறதா இல்லையா?
அல்லாஹ்வும், மூஸா நபியும் கூறியதில் இருந்து சூனியம் என்றால் என்ன என்று அறிந்து கொள்வதா? காஃபிர்கள் விளங்காமல் சூனியம் பற்றி சொன்னதை ஆதாரமாக எடுத்துக் கொள்வதா?
மூஸா நபியின் பார்வையிலும், அல்லாஹ்வின் பார்வையிலும் சூனியம் என்பது ஏமாற்றுதல் என்று இருக்கும் போது, இவற்றையெல்லாம் விட்டு விட்டு சூனியக் கூட்டத்தை ஆதரிப்பவர்கள் காஃபிர் சொன்னவற்றை எடுத்துக் கொண்டு ஆதாரமாக வாதிடுகின்றனர்.
சூனியம் என்ற வார்த்தை குர்ஆனில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.
இச்சொல்லை காஃபிர்கள் பயன்படுத்தியிருப்பார்கள்.
இச்சொல்லை நபிமார்கள் பயன்படுத்தியிருப்பார்கள்.
அல்லாஹ் தன்னுடைய வார்த்தையாகப் பயன்படுத்தியிருப்பான்.
அல்லாஹ் தன்னுடைய வார்த்தையாகப் பயன்படுத்திய எந்த வசனத்திலாவது சூனியத்தால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று சொல்லப்பட்டுள்ளதா என்றால் இல்லவே இல்லை.
5146 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மதீனாவிற்கு) கிழக்கிலிருந்து இரண்டு மனிதர்கள் வந்து சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாகப் பேச்சில் சூனியம் உள்ளது என்று சொன்னார்கள்.
சிஹ்ர் – சூனியம் என்பதற்கு அல்லாஹ்வின் தூதர் நமக்கு அர்த்தம் சொல்லித் தருகிறார்கள்.
நடைபாதையில் லேகியம் விற்பவன் பொய்யை மெய்யெனச் சித்தரிக்கும் வகையில் மக்களை ஈர்ப்பதைப் பார்க்கிறோம். கவர்ச்சியான பேச்சால் பொய்யை மெய்யைப் போல் காட்டுவதை சிஹ்ர் சூனியம் எனக் குறிப்பிடுகிறார்கள்.
சூனியம் என்றால் பொய்யான ஏமாற்றும் தந்திரம் தான் என்பதற்கு பின்வரும் ஒரு வசனமே போதிய ஆதாரமாகும்.
13. அந்நாளில் அவர்கள் நரகில் ஒரேயடியாகத் தள்ளப்படுவார்கள்.
14. நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்த நரகம் இதுவே.
15. இது சூனியமா? அல்லது (இந்த நரகத்தை) நீங்கள் பார்க்க மாட்டீர்களா?
திருக்குர் ஆன் 52:13,14,15
மறுமை விசாரணை முடிந்தவுடன் சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும், நரகவாசிகள் நரகத்திற்கும் சென்றவுடன் அல்லாஹ் நரகவாசிகளைப் பார்த்து, எதைப் பொய் என்று சொல்கின்றீர்களோ அந்த நரகம் இதுதான். இது என்ன சிஹ்ரா என்று சொல்லுங்கள் என்று கேட்பான்.
அல்லாஹ் கேட்கும் இந்தக் கேள்வியில் இருந்து சிஹ்ர் என்ற சொல்லுக்கு அல்லாஹ்விடம் என்ன பொருள் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
நரகம் என்பது பொய் என்று காஃபிர்கள் உலகில் சொல்லிக்கொண்டு இருந்தனர். அவர்கள் நரகில் தள்ளப்படும் போது இது பொய்யா என்று கேட்பதற்குப் பதிலாக இது சிஹ்ரா என்று அல்லாஹ் கேட்கிறான்.
சிஹ்ர் என்றால் பொய் என்று அல்லாஹ் பொருள் சொல்லித் தருகிறான்.
காஃபிர்கள் சூனியம் என்ற சொல்லுக்கு செய்த அர்த்தத்தை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவில்லை. இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டும் வித்தை தான் சிஹ்ர் என்பது தான் அல்லாஹ் சொல்லித்தரும் அர்த்தமாகும்.