பெண்கள் பள்ளியில் ஜும்ஆ தொழலாமா?
பெண்கள் பள்ளியில் ஜும்ஆ தொழலாமா
கேள்வி:
“அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை கடமையாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆனால் தவ்ஹீத் பள்ளிகளில் ஜுமுஆவின் பொது பெண்களை அழைத்து வருகிறார்கள். சில இடங்களில் ஊக்குவிக்கிறார்கள். பெண்கள் தொழுதால் அவர்களுக்கு சுன்னத் தொழுகை போல் ஆகுமா?.
பதில்:
பெண்களுக்கு ஜும்ஆத் தொழுகை கடமை இல்லை என்பதால் அவர்கள் ஜும்ஆத் தொழ பள்ளிக்கு வரக்கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இது தவறான கருத்தாகும்.
பெண்கள், அடிமைகள், நோயாளிகள், சிறுவர்கள் இவர்களைத் தவிர மற்றவர்கள் கட்டாயம் ஜுமுஆத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி)
பெண்கள் ஜும்ஆத் தொழுகைக்கு பள்ளிக்கு வரக்கூடாது என்பதற்கு மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாக சிலர் காட்டுகிறார்கள். ஆனால் இந்த நபிமொழியில் பெண்கள் பள்ளிக்கு செல்லக்கூடாது என்று சொல்லப்படவில்லை. அவர்களுக்கு ஜும்ஆ கடமையில்லை என்றே கூறப்பட்டுள்ளது.
ளுஹாத் தொழுகை, இரவுத் தொழுகை, சுன்னத்தான தொழுகைகள், நஃபிலான தொழுகைகள், சுன்னத்தான நோன்புகள், உபரியான தானதர்மங்கள் ஆகியவை கடமை இல்லை என மார்க்கம் கூறுகிறது. இதனால் இவை அனைத்தும் ஹராமான செயல்கள் என்று இவர்கள் கூறுவார்களா?
இதே செய்தியில் பெண்களுடன் சிறுவர்கள் அடிமைகள் நோயாளிகள் ஆகியோருக்கும் ஜும்ஆ கடமையில்லை என்று கூறப்பட்டுள்ளது. எனவே சிறுவர்கள் அடிமைகள் நோயாளிகள் ஆகியோர் ஜும்ஆவை நிறைவேற்ற பள்ளிவாசலுக்குச் செல்வது ஹராம் என்று கூறுவார்களா?
மாறாக இது சலுகை என்றும் விரும்பினால் பள்ளிக்கு வரலாம் என்றும் அறிவுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் ஜும்ஆத் தொழுகைக்கு பள்ளிக்கு வந்து ஜமாஅத்துடன் நிறைவேற்றியுள்ளார்கள்.
உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் இதைத் தெளிவுபடுத்துகிறார்கள்.
நான் வெள்ளிக்கிழமை அன்று “காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து செவியுற்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆ (சொற்பொழி)விலும் இந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்.
அறிவிப்பவர் : அம்ரா பின்த் (ரலி) அவர்களின் சகோதரி
பொதுவாக ஜும்ஆத் தொழுகையைப் பள்ளியில் தான் நிறைவேற்ற வேண்டும். பெண்கள் பள்ளிக்கு வந்து தொழ வேண்டியதில்லை என்ற கருத்தில் நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு ஜும்ஆ கடமையில்லை என்று கூறினார்கள்.
பெண்கள் வெள்ளிக்கிழமை பள்ளிக்கு வந்தால் ஜும்ஆத் தொழுகையே லுஹருக்கு பதிலாக போதுமானதாகும். வீட்டில் தொழுதால் லுஹர் தொழுகை அவர்களுக்குக் கடமையாகும். பள்ளிக்கு வருகின்ற விசயத்தில் தான் பெண்களுக்குச் சலுகை உள்ளது. ஜும்ஆ என்ற தொழுகை லுஹர் தொழுகைக்குப் பகரமாக தரப்பட்டுள்ளதால் ஜும்ஆ தொழுகையை பெண்கள் நிரைவேற்றினால் அவர்கள் லுஹர் தொழக் கூடாது.
அவர்கள் தாமாக விரும்பி ஜும்ஆத் தொழுகையில் கலந்துகொண்டால் அவர்கள் கடமையைத் தான் நிறைவேற்றுகிறார்கள். இதை சுன்னத்தான தொழுகை என்று சொல்ல முடியாது.
பெண்களைப் போன்று நோயாளிகளுக்கும் ஜும்ஆ கடமையில்லை என்று மேற்கண்ட ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு நோயாளி இந்தச் சலுகையைப் பயன்படுத்தாமல் பள்ளிக்கு வந்து ஜும்ஆத் தொழுதால் அது கடமையான தொழுகை இல்லை என்று கூற மாட்டோம். மாறாக அவர் கடமையை நிறைவேற்றிவிட்டார் என்றே கூறுவோம்.
இதே போன்று பயணத்தில் இருப்பவர் பள்ளியில் தொழுகையை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை. ஒரு பயணி பள்ளிக்கு வந்து ஐந்து நேரத் தொழுகைகளை நிறைவேற்றினால் அவர் கடமையான தொழுகையை நிறைவேற்றவில்லை என்று கூறமாட்டோம். பெண்கள் ஜும்ஆத் தொழுவதும் இது போன்றதாகும்.