பெருநாள் தொழுகை தக்பீரில் கைகளை உயர்த்த வேண்டுமா?
பெருநாள் தொழுகை தக்பீரில் கைகளை உயர்த்த வேண்டுமா?
பெருநாள் தொழுகையில் 7+5 தக்பீர்கள் சொல்லும் போது கைகளை உயர்த்த வேண்டியதில்லை என்று தவ்ஹீது மவ்லவிகள் கூறுகின்றார்கள். ஆனால் ருகூவுக்கு முன்பு கூறும் ஒவ்வொரு தக்பீரிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைகளை உயர்த்துவார்கள் என்று பைஹகீயில் இப்னு உமர் (ரலி) அறிவிப்பதாக இடம் பெற்றுள்ளதே! இதன் நிலை என்ன?
இஸ்மாயில் ஷெரீப், சென்னை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழத் தயாராகும் போது தமது இரு கைகளையும் உயர்த்துவார்கள். அவ்விரு கைகளையும் தோள் புஜத்திற்கு நேராக வைத்துப் பிறகு அதே நிலையில் தக்பீர் சொல்வார்கள். பிறகு ருகூவு செய்வார்கள். ருகூவிலிருந்து தலையை உயர்த்த விரும்பினால் கைகளை புஜங்களுக்கு நேராக அமைகின்ற வரை உயர்த்தி, பிறகு ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று சொல்வார்கள். பிறகு ஸஜ்தா செய்வார்கள். ஸஜ்தாவின் போது தமது கைகளை உயர்த்த மாட்டார்கள். தமது தொழுகை முடிகின்ற வரை ருகூவுக்கு முன்னால் சொல்கின்ற ஒவ்வொரு தக்பீரின் போதும் கைகளை உயர்த்துவரர்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல்கள் : அபூதாவூத் (822), பைஹகீ (5983)
இந்த ஹதீஸைத் தான் தாங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். இமாம் பைஹகீ அவர்கள் இந்த ஹதீஸை பெருநாள் தொழுகையில் கைகளை உயர்த்துதல் என்று தலைப்பிட்டு பதிவு செய்திருக்கின்றார்கள். எனினும் பெருநாள் தொழுகைக்கும் இந்த ஹதீஸுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பொதுவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை குறித்து இந்த ஹதீஸில் விளக்கப்பட்டுள்ளது.
இதில் ருகூவுக்கு முன்னர் சொல்கின்ற ஒவ்வொரு தக்பீரின் போதும் கைகளை உயர்த்துவார்கள்” என்ற வாசகத்தை வைத்து பெருநாள் தொழுகையில் கைகளை உயர்த்த வேண்டும் என்று கூற முடியாது. அந்த வாசகம் சொல்லப்படுகின்ற வரிசையைக் கவனித்தால் இது சாதாரண தொழுகைகளில் அடுத்தடுத்த ரக்அத்துக்களைக் குறித்துச் சொல்லப்பட்டது என்பதை அறிய முடியும்.
பெருநாள் தொழுகையில் ஒவ்வொரு தக்பீரிலும் கைகளை உயர்த்த வேண்டும் என்ற கருத்துடைய இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூட தமது கருத்துக்கு ஆதாரமாக இந்த ஹதீஸைக் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. எனவே பெருநாள் தொழுகையில் கூடுதல் தக்பீர்களில் கைகளை உயர்த்துவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் கைகளை உயர்த்த வேண்டியதில்லை என்பதே சரி!
மற்றொரு செய்தியையும் சில அமைப்பினர் தமது நூல்களில் ஆதாரமாகக் குறிப்பிட்டு பெருநாள் தொழுகையின் ஒவ்வொரு தக்பீரிலும் கைகளை உயர்த்த வேண்டும் எனக் கூறுகின்றனர்.
பெருநாள் தொழுகையிலும் ஜனாஸா தொழுகையிலும், ஒவ்வொரு தக்பீரிலும் கைகளை உயர்த்த வேண்டும்.
அறிவிப்பவர் : உமர் (ரலி)
நூல் : பைஹகி
என்று குறிப்பிடுகிறார்கள். அந்த ஹதீஸ் இது தான்.
(اخبرنا) أبو عبد الله الحافظ ثنا أبو بكر ابن اسحق انبأ بشر بن موسى ثنا أبو زكريا انبأ ابن لهيعة عن بكر بن سوادة ان عمر بن الخطاب رضي الله عنه كان يرفع يديه مع كل تكبيرة في الجنازة والعيدين وهذا منقطع *السنن الكبرى للبيهقي
ஜனாஸா தொழுகையிலும், பெருநாள் தொழுகையிலும் ஒவ்வொரு தக்பீரிலும் உமர் (ரலி) அவர்கள் கைகளை உயர்த்தினார்கள்.
இதில் உமர் ரலி அவர்களின் சொந்தச் செயலாகத் தான் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இது ஆதாரமாகாது. மேலும் இதன் அற்விப்பாளர் வரிசை தொடர்பு அறுந்ததாகும் என பைஹகீ அவர்களே இந்தச் செய்தியின் இறுதியில் கூறுகிறார்கள்.
உமர் ரலி அவர்கள் உயர்த்தியதாகக் கூறும் இச்செய்தி பலவீனமாக இருப்பதால் எந்த வகையிலும் இது ஆதாரமாகாது.