சொர்க்கம் கடமையாகி விட்டது..!
இறைவன் பிரம்மாண்டமான பேருலகைப் படைத்து, தன்னை மட்டுமே வணங்க வேண்டும் என்பதற்காக மனிதர்களைப் படைத்திருக்கின்றான். அவனுக்கு கட்டுப்பட்டு இறைக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்பவருக்கு உலக வாழ்வில் மனிதன் எண்ணிப் பார்த்திராத ரம்மியமான சொர்க்கத்தை இறைவன் தயார் செய்து வைத்திருக்கின்றான்.
இந்த உலகத்தில் இஸ்லாத்தைக் கடைப்பிடித்து இஸ்லாமியர்களாக வாழ்பவர்களுக்கு உச்சகட்ட சோதனைகளை வழங்கி இறைவன் சோதித்துப் பார்க்கின்றான். உலக வாழ்க்கையில் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்ற முஸ்லிம்கள் தங்களுக்கு வழங்கப்படும் சோதனைகளைப் பொறுத்துக் கொண்டு இறைவனின் மீது உறுதியான நம்பிக்கை வைக்கின்ற போது, இறைவன் மகத்தான வெகுமதி நிறைந்த பரிசுகளை வழங்குவதற்குக் காத்துக் கொண்டிருக்கின்றான்.
இறைவனின் மீது உறுதியான நம்பிக்கை வைத்து நற்காரியங்களில் ஈடுபடுவோருக்கு இறைவன் கண்ணியமான தகுதிகளையும், அந்தஸ்த்துகளையும் தயார் செய்து வைத்திருப்பதாகத் திருக்குர்ஆன் நெடுகிலும் இறைவன் ஆர்வப்படுத்துகின்றான்.
குறிப்பாக இஸ்லாமியர்களாகிய நமக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து நன்மையின் கதவுகள் திறக்கப்படுகின்ற காலமெல்லாம், அந்த நன்மையின் பக்கம் மிக வேகமாக விரைந்து செல்பவர்களாக நாம் திகழ வேண்டும். ஏனென்றால், அந்த நன்மையின் கதவுகள் நம்முடைய மரணத்தின் மூலமாகவோ அல்லது மறுமை நாளின் மூலமாகவோ மிக விரைவாக மூடப்படலாம்.
நமக்கு வழங்கப்பட்டுள்ள குறிப்பிட்ட வாழ்க்கையில் நல்லறங்களை எவ்வளவு அதிகமாகச் செய்ய முடியுமோ, அந்தளவிற்கு அதிகமாகச் செய்து, நம்முடைய ஈமானை பலப்படுத்திக் கொள்வதற்குக் கடமைப்பட்டிருக்கின்றோம். நம்முடைய வாழ்க்கையை நல்லறங்கள் மூலமாக அலங்கரிக்கின்ற போது, இறைவனின் புறத்திலிருந்து உயர்தரமான அந்தஸ்த்துக்களும் – பரிசுகளும் அளப்பெரியதாய் காத்துக் கொண்டிருக்கின்றது.
“இது உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மை பயனளிக்கும் நாள்” என்று அல்லாஹ் கூறுவான். அவர்களுக்குச் சொர்க்கங்கள் உள்ளன. அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். இதுவே மகத்தான வெற்றி.(அல்குர்ஆன்: 5:119)➚
இறைவனை நம்பி உண்மையாளர்களாய் உலக வாழ்வைக் கழிப்பவர்களுக்கு மகத்தான சொர்க்கங்கள் இருப்பதாக இறைவன் வாக்குறுதி வழங்குகின்றான். மேலும், அத்தகைய மனிதர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வதாகவும் வாக்குறுதி வழங்குகின்றான்.
இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்வோரை சொர்க்கங்களில் நுழையச் செய்வோம். அதன் கீழ் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. அல்லாஹ்வைவிட உண்மை சொல்பவன் யார்?(அல்குர்ஆன்: 4:122)➚
இறைவனை நம்பிக்கை கொண்டு நற்செயல்களில் ஈடுபடுவோர் சொர்க்கங்களில் நிரந்தரமாக இருப்பார்கள் என்று இறைவன் உறுதியளிக்கின்றான்.
மாறாக, தமது இறைவனை அஞ்சியோருக்கு சொர்க்கங்கள் உள்ளன. அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இது அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் விருந்து. அல்லாஹ்விடம் இருப்பது நல்லோருக்கு மிகச் சிறந்தது.(அல்குர்ஆன்: 3:198)➚
இறைவனை அஞ்சியோருக்கு சொர்க்கங்கள் உள்ளன. அப்படிப்பட்ட சொர்க்கத்தில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பதாகவும், இந்த மகத்தான சொர்க்கம் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் விருந்து என்று அல்லாஹ் தன்னுடைய அருளை வெளிப்படுத்துகின்றான்.
அவர்களுக்கான கூலி, அவர்களின் இறைவனின் மன்னிப்பும் சொர்க்கங்களும் ஆகும். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நற்செயல்கள் செய்வோரின் கூலி மிகச் சிறந்தது.
(அல்குர்ஆன்: 3:136)➚
நற்செயல் புரிவோருக்கு சொர்க்கம் தான் கூலி! அத்தகைய கூலிதான் மிகச் சிறந்தது என்று அல்லாஹ் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றான்.
“இவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிய மாட்டான்” என்று நீங்கள் சத்தியமிட்டுக் கூறியது (சொர்க்கத்திலுள்ள) இவர்களைத் தானே!” (என்றும் கூறுவார்கள். பின்னர்) ‘நீங்கள் சொர்க்கத்தில் நுழையுங்கள்! உங்களுக்கு எந்தப் பயமும் இல்லை. நீங்கள் கவலைப்படவும் மாட்டீர்கள்’ (என்று சிகரங்களில் உள்ளவர்களிடம் இறைவன் கூறுவான்.)(அல்குர்ஆன்: 7:49)➚
சொர்க்கத்தைப் பெற வேண்டும் என்பதற்காக இந்த உலக வாழ்வைக் கழித்தவர்களைப் பார்த்து அல்லாஹ், நீங்கள் எவ்வித பயமும் இல்லாமல், கவலையும் இல்லாமல் தைரியமாக சொர்க்கத்தில் நுழையுங்கள் என்று கூறி கண்ணியப்படுத்துகின்றான்.
சொர்க்கவாசிகள், நரகவாசிகளை அழைத்து “எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்ததை உண்மையாகப் பெற்றுக் கொண்டோம். உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை நீங்கள் உண்மையாகப் பெற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள் “ஆம்!” என்று கூறுவார்கள். அப்போது அவர்களுக்கிடையே ஓர் அறிவிப்பாளர் “அநியாயக்காரர்கள்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக” என்று அறிவிப்பார்.(அல்குர்ஆன்: 7:44)➚
சொர்க்கத்திற்காக இந்த உலகில் மிகப்பெரும் சிரமத்தை அடைந்தவர்கள் நரகவாசிகளைப் பார்த்து, எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்ததை உண்மையாகவே நாங்கள் பெற்றுக் கொண்டோம் என்று கூறி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
அவர்களின் உள்ளங்களில் உள்ள குரோதத்தை அகற்றி விடுவோம். அவர்களுக்குக் கீழே ஆறுகள் ஓடும். “இதற்கான நேர்வழியை நமக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அல்லாஹ் எங்களை நேர்வழியில் செலுத்தியிருக்காவிட்டால் நாங்கள் நேர்வழியை அடைந்திருக்க மாட்டோம். எங்கள் இறைவனின் தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தனர்” என்று அவர்கள் கூறுவர். “நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்காக உங்களுக்கு உடைமையாக்கப்பட்டுள்ள சொர்க்கம் இதுதான்” என அவர்கள் அழைக்கப்படுவார்கள்.
(அல்குர்ஆன்: 7:43)➚
உலக வாழ்க்கையில் நீங்கள் இறைவனுக்காகச் செய்து கொண்டிருந்த நற்காரியங்களுக்காக உங்களுக்கு உடமையாக்கப்பட்டுள்ள சொர்க்கம் இதுதான் என்று கூறி, நல்லவர்கள் சொர்க்கத்தில் நுழைவிக்கப்பட்டு மகிழ்விக்கப்படுவார்கள்.
உலகத்தில் இஸ்லாமிய மார்க்கத்தில் முஸ்லிம்களாக வாழ்பவர்களுக்கு இறைவனின் புறத்திலிருந்தும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் போதனைகளிலிருந்தும் வாழ்வியல் வழிகாட்டுதல்கள் மிகச் சிறப்பாகக் காட்டப்படுகின்றது.
இந்த உலக வாழ்க்கையில் சிரமப்பட்டு, வேதனைகளை அனுபவித்து இறைவனிடத்தில் கிடைக்கவிருக்கும் சொர்க்கத்தை அடையப் பாடுபடுகின்றோம். அப்படிப்பட்ட அந்தஸ்துகளால் உயர்ந்து நிற்கும் சொர்க்கத்தை நம்முடைய வாழ்வில் நாம் செய்யும் அமல்கள் மூலமாக கட்டாயமாகப் பெற்று விட முடியும்.
சொர்க்கத்தைக் கடமையாக்குகின்ற ஏராளமான நற்காரியங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக பறைசாற்றுகின்றார்கள்.
· சொர்க்கம் கடமையாகி விட்டது.
· சொர்க்கத்தில் அவர் நுழைந்து விட்டார்.
· சொர்க்கம் செல்வார்.
· சொர்க்கம் உறுதியாகி விட்டது.
· சொர்க்கம் சென்று விட்டார்.
· சொர்க்கம் புகுந்தே தீருவார்.
· சொர்க்கத்தில் நுழையச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகி விட்டது.
· சொர்க்கத்தில் இவரை நுழையச் செய்.
இதுபோன்ற உன்னதமான வார்த்தைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துக்கூறி, சொர்க்கத்தை கடமையாக்குகின்ற நற்காரியங்கனை நமக்கு அறிவிக்கின்றார்கள்.
ஒரு மனிதனின் வாழ்க்கையில் மூன்று குணங்கள் இல்லாத நிலையில் வாழ்ந்து அவனது உயிர் பிரியுமானால், அவன் சொர்க்கம் செல்வதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துரைக்கின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மோசடி, கடன், ஆணவம் ஆகிய மூன்றும் நீங்கிய நிலையில் ஒருவரது உடலிலிருந்து உயிர் பிரிந்தால் அவர் சொர்க்கம் செல்வார். அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி) ஆதாரம்: முஸ்னது(அஹ்மத்: 22428) ➚
மனித வாழ்வில் தவிர்க்க வேண்டிய மிக முக்கியமான மூன்று குணங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்கின்றார்கள்.
எந்த ஒரு சூழலிலும், எந்த ஒரு தருணத்திலும் மோசடி என்கிற மாபாதாகச் செயல்பாடுகளில் ஈடுபட்டு விடக் கூடாது. அவ்வாறு ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற நிலையிலேயே ஒரு மனிதன் மரணத்தைத் தழுவுகின்ற போது அவன் சுவனம் நுழைய முடியாத துர்பாக்கியசாலியாகி விடுகின்றான்.
ஒரு மனிதன் பிறரிடத்தில் வாங்கிய கடன்களை நிறைவேற்றாத நிலையில் மரணத்தைத் தழுவி விடக் கூடாது.
பேச்சிலும், நடவடிக்கைகளிலும், பொருளாதாரத்தைச் சம்பாதிக்கின்ற நேரங்களிலும், சக மனிதர்களிடத்தில் பழகுகின்ற சூழலிலும் ஆணவப் போக்கை முற்றும் முழுவதுமாக விட்டொழிக்க வேண்டும். ஆணவப் போக்கு இருக்கின்ற நிலையிலேயே ஒரு மனிதன் மரணத்தை தழுவி விடக் கூடாது.
“ரளீத்து பில்லாஹி ரப்பா; வபில் இஸ்லாமி தீனா; வபி முஹம்மதிர் ரஸூலா” என்கிற வாசகத்தை உளப்பூர்வமாக நாவினால் மொழிந்து, அந்த வார்த்தைகளை உண்மைப்படுத்தும் வகையில் ஒருவரது வாழ்க்கை அமைந்து விட்டால், அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாக்குறுதி வழங்குகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் “ரளீத்து பில்லாஹி ரப்பா; வபில் இஸ்லாமி தீனா; வபி முஹம்மதிர் ரஸூலா”
(பொருள், அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மது நபி(ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் நான் பொருந்திக் கொண்டுவிட்டேன்.)
என்று கூறினால் அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது. அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
ஆதாரம்:(அபூதாவூத்: 1529) ➚
இறைவனையும், இறைவனின் மார்க்கமான இஸ்லாத்தையும், இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களையும் உளப்பூர்வமாக ஏற்று, தங்களுடைய வாழ்க்கையை சீர்படுத்திக் கொள்வோருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார்கள்.
ஒரு மனிதன் இந்த உலகத்தில் நல்ல மனிதனாகவும், நற்காரியங்கள் செய்பவனாகவும் வாழ்ந்து மரணிக்கும் போது, உண்மையான இறைநம்பிக்கையாளர்களின் உண்மையான சாட்சியங்கள் அவனுக்கு சொர்க்கத்தை உறுதியாக்குகின்ற செயல்களாக அமைந்து விடுகின்றது.
அனஸ் (ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்கள் இருந்த இடத்தின் வழியாக ஜனாஸா (பிரேதம்) ஒன்று கொண்டு செல்லப்பட்டது. மக்கள் அதைக் குறித்து நல்லவிதமாகப் (புகழ்ந்து) பேசினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘உறுதியாகி விட்டது’ என்று கூறினார்கள். பிறகு, மற்றொரு ஜனாஸா கொண்டு செல்லப்பட்டது. மக்கள் அது குறித்து (இகழ்ந்து) கெட்டவிதமாகப் பேசினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘உறுதியாகி விட்டது’ என்று கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! அதற்கும் ‘உறுதியாகிவிட்டது’ என்று கூறினீர்கள்; இதற்கும் ‘உறுதியாகிவிட்டது’ என்று கூறினீர்களே. (இரண்டிற்குமே இவ்வாறு கூறக் காரணமென்ன)?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘இது சமுதாயத்தின் சாட்சியமாகும். இறைநம்பிக்கையுடையவர்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவர்’ என்று கூறினார்கள்.
ஆதாரம்:(புகாரி: 2642) ➚
மற்றொரு அறிவிப்பிலே,
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களைக் கடந்து) ஜனாஸா (பிரேதம்) ஒன்று கொண்டு செல்லப்பட்டது. அது குறித்து நல்ல விதமாகப் (புகழ்ந்து) பேசப்பட்டது. இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் “உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது” என்று கூறினார்கள். பின்னர் மற்றொரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டது. அது குறித்து இகழ்வாகப் பேசப்பட்டது. அப்போதும் நபி (ஸல்) அவர்கள் “உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது” என்று கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் “(அல்லாஹ்வின் தூதரே!) என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்ட போது அது குறித்து நல்லவிதமாகப் பேசப்பட்டது. அதற்கு நீங்கள் “உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது;” என்று கூறினீர்கள். பிறகு மற்றொரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டது. அது குறித்து இகழ்வாகப் பேசப்பட்டது. அதற்கும் நீங்கள் “உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது;” என்று கூறினீர்கள். (இரண்டிற்குமே இவ்வாறு தாங்கள் கூறக் காரணமென்ன?)” என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் யாரைப் பற்றி நல்ல விதமாகப் பேசினீர்களோ அவருக்குச் சொர்க்கம் உறுதியாகி விட்டது; நீங்கள் யாரைப் பற்றி இகழ்வாகப் பேசினீர்களோ அவருக்கு நரகம் உறுதியாகி விட்டது. நீங்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவீர்கள்; நீங்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவீர்கள்; நீங்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவீர்கள்” என்று (மும்முறை) கூறினார்கள்.
ஆதாரம்:(முஸ்லிம்: 1731) ➚
ஒரு நல்ல மனிதன் மரணத்தைத் தழுவுகின்ற போது, அவரைச் சுற்றி வாழ்ந்த இறைநம்பிக்கையாளர்கள்; உண்மையான முறையில் அவர் வாழ்ந்த நல்ல வாழ்க்கை குறித்து உண்மையான சாட்சியங்களைக் கூறுகின்ற போது, அல்லாஹ் அந்த நல்ல மனிதருக்கு சொர்க்கத்தைக் கடமையாக்குகின்றான்.
இறைவனின் மார்க்கத்திற்காகப் பல்வேறு விதமான தியாகங்களையும், அர்ப்பணிப்புகளையும் செய்கின்ற போது, கேடுகெட்ட ஷைத்தான் பல்வேறு வகைகளில் நம்முடைய உள்ளங்களில் ஊசலாட்டங்களை ஏற்படுத்தி நம்மை பலவீனப்படுத்தி ஈமானை வலுவிழக்கச் செய்யப் போராடுவான்.
கேடுகெட்ட ஷைத்தானின் சூழ்ச்சிகளைத் தவிடுபொடியாக்கி, ஈமானை பலப்படுத்தி, இறைவனுக்காக தியாகத்தில் ஈடுபடுவோரை சொர்க்கத்தில் நுழையச் செய்வதை அல்லாஹ் கடமையாக்கி விடுகின்றான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமுடைய மகனை வழிகெடுப்பதற்காக ஷைத்தான் (நல்) வழிகளில் அமர்ந்து கொள்கிறான். அவனை வழிகெடுப்பதற்காக இஸ்லாம் என்ற (நல்) வழியில் அமர்ந்து கொண்டு, ‘உனது மார்க்கத்தையும் உனது தந்தையின் மார்க்கத்தையும் உனது பாட்டனாரின் மார்க்கத்தையும் விட்டுவிட்டு நீ இஸ்லாத்தை ஏற்கப் போகிறாயா?’ என்று கூறுவான்.
ஆதமுடைய மகன் ஷைத்தானிற்கு மாறுசெய்து இஸ்லாத்தை ஏற்று விட்டால் அவனை வழிகெடுப்பதற்காக ஹிஜ்ரத் (இறைவனுக்காக நாடுதுறத்தல்) என்ற (நல்) வழியில் அமர்ந்து கொண்டு, ‘உனது பூமியையும் உனது வானத்தையும் விட்டுவிட்டு நீ ஹிஜ்ரத் செய்யப் போகிறாயா? ஹிஜ்ரத் செய்தவர் கட்டிப் போடப்பட்ட குதிரையைப் போன்றவர் ஆவார்’ என்று கூறுவான்.
ஷைத்தானிற்கு மாறுசெய்து ஹிஜ்ரத் செய்து விட்டால் ஆதமுடைய மகனை வழிகெடுப்பதற்காக அறப்போர் என்ற (நல்) வழியில் ஷைத்தான் அமர்ந்து கொண்டு, ‘அறப்போரில் உயிரையும் பொருளையும் அர்ப்பணிக்க வேண்டும். நீ போரிட்டு கொல்லப்பட்டு விட்டால் (உன்) மனைவியை மற்றவர் மணமுடித்துக் கொள்வார். உனது செல்வம் பங்கிடப்பட்டு மற்றவரால் எடுத்துக் கொள்ளப்படும்’ என்று கூறுவான். (உறுதியுள்ள மனிதன்) இவனுக்கு மாறு செய்து அறப்போரில் கலந்து கொள்வான். இந்த நல்ல காரியங்களை செய்தவராக யார் மரணிக்கிறாரோ அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகிறது.
அறிவிப்பவர்: சப்ரா பின் அபீ ஃபாகிஹ் (ரலி)
ஆதாரம்: முஸ்னது(அஹ்மத்: 15958) ➚
ஆதமுடைய மனிதன் ஓரிறை மார்க்கமான இஸ்லாத்தை ஏற்று அத்தகைய இஸ்லாத்தில் வாழ்கின்ற போது, இஸ்லாமிய மார்க்கத்தில் வாழ விடாமல் ஷைத்தான் வழிகெடுப்பான்.
இறைவனுக்காக நாடு துறந்து ஹிஜ்ரத் மேற்கொள்ளும் போது, வறுமையைக் காட்டி, அச்சத்தை ஏற்படுத்தி ஹிஜ்ரத் செய்ய விடாமல் தடுப்பான்.
இறைவனுக்காக உயிர் தியாகம் செய்வதற்காக போர்க்களங்களில் கலந்து கொள்ள களமிறங்கும் போது, அச்சுறுத்தும் வார்த்தைகளைக் கூறி உயிர் தியாகம் செய்ய விடாமல் தடுப்பான்.
ஷைத்தானின் ஊசலாட்டங்களையும், ஷைத்தான் கூறும் ஆசை வார்த்தைகளையும் குழிதோண்டிப் புதைத்து விட்டு, இறைவனுக்காக அர்ப்பணிப்புக்கள் செய்கின்ற போது, அல்லாஹ் அத்தகைய அடியார்களை சொர்க்கத்தில் நுழையச் செய்வதை தன்மீது கடமையாக்கி விடுகின்றான்.
ரமலான் மாதம் சொர்க்கத்தின் பக்கம் நம்மை அழைத்து நம்மைப் பரிசுத்தப்படுத்துகின்றது. உளப்பூர்வமாகவும், இறையச்சத்தோடும் நோன்பு நோற்பவர்களுக்கு இறைவன் மகத்தான கூலியையும், மன்னிப்பையும், சொர்க்கத்தையும் உத்தரவாதம் வழங்குகின்றான்.
அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.
அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலைநிறுத்தி, ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரை சொர்க்கத்தில் நுழையச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகி விட்டது; அவர் இறைவழியில் நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றாலும் சரி; அல்லது அவர் பிறந்த பூமியில் உட்கார்ந்து கொண்டாலும் சரி!
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் மக்களுக்கு இந்த (நற்) செய்தியை அறிவிக்கலாமா?’ என்று (நபித் தோழர்கள்) கேட்டனர்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. அவற்றைத் தன்னுடைய பாதையில் அறப்போர் புரிபவர்களுக்காக (அல்லாஹ்) தயார்படுத்தி வைத்துள்ளான். ஒவ்வொரு இரண்டு படித்தரங்களுக்கிடையே வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ளதைப் போன்ற தொலைதூரம் உள்ளது.
நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால், ஃபிர்தவ்ஸ் எனும் (சொர்க்கத்தின்) படித்தரத்தையே கேளுங்கள்; ஏனெனில், அதுவே சொர்க்கத்தின் மிகச் சிறந்த படித்தரமும் மிக உயர்ந்த படித்தரமும் ஆகும். அதற்கு மேலே அளவிலா அருளாள(ன் இறைவ)னின் அரியாசனம் (அர்ஷ்) இருக்கிறது. இன்னும் அ(ந்த படித்தரத்)திலிருந்தே சொர்க்கத்தின் ஆறுகள் பாய்கின்றன’ என்று கூறினார்கள்.
ஆதாரம்:(புகாரி: 7423) ➚
சொர்க்கத்தின் பக்கம் இறைவன் அழைக்கின்றான். பிரம்மாண்டமான சொர்க்கத்தை இறைவன் பரிசாக வழங்க இருக்கின்றான். நோன்பை மிகச் சரியாக இறையச்சத்துடன் நிறைவேற்றியவர்களுக்கு சொர்க்கத்தை வழங்குவதை இறைவன் தன்மீது கடமையாக்கிக் கொண்டான் என்பதை மகத்தான ரமலான் மாதத்தை மிகச் சரியாக பயன்படுத்தியவர்கள் தங்களுடைய உள்ளங்களில் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்வதற்குக் கடமைப்பட்டுள்ளோம்.
ஓர் அடியார் இறைவனுக்காக உள்ளச்சதுடன் தொழுகையை நிறைவேற்றுகின்ற போது, இறைவன் மகத்தான பரிசாக சொர்க்கத்தைக் கடமையாக்குகின்றான்.
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (முறை வைத்து) ஒட்டகங்கள் மேய்த்து வந்தோம். இந்நிலையில் எனது முறை வந்தபோது மாலை நேரத்தில் நான் அவற்றை ஓட்டிக் கொண்டு மேய்ச்சல் நிலத்திற்குச் சென்றேன். (பிறகு நான் திரும்பிவந்தேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள், “ஒரு முஸ்லிம் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து – உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை” என்று கூறுவதை நான் கேட்டேன்.
உடனே நான், “என்ன அருமையான வார்த்தை!” என்றேன். அப்போது எனக்கு முன்னால் இருந்த ஒருவர், “இதற்கு முன்னர் சொன்ன வார்த்தை இதைவிட அருமையானது” என்றார். உடனே நான் (அவர் யார் என்று) பார்த்தேன். அங்கே உமர் (ரலி) அவர்கள் இருந்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: சற்று முன்னர்தான் நீங்கள் இங்கு வந்தீர்கள்; நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நீங்கள் வருவதற்கு முன் பின்வருமாறு) கூறினார்கள்:
உங்களில் ஒருவர் முழுமையான முறையில் அங்கத் தூய்மை செய்துவிட்டு, அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்துகொள்ளலாம்.
ஆதாரம்:(முஸ்லிம்: 397) ➚
ஒரு முஸ்லிம் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி உள்ளச்சத்துடன் தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை என்று கூறி மகத்தான பாக்கியத்தை அல்லாஹ் பரிசளிக்கின்றான்.
ஒரு முஸ்லிமான அடியார் சொர்க்கத்தை வேண்டி இறைவனிடத்தில் உளமாற பிரார்த்தனை செய்கின்ற போது, அந்த அடியாருக்கு ஆதரவாக சொர்க்கம் இறைவனிடத்தில் பரிந்துரை செய்வதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துரைக்கின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு அடியார், (அல்லாஹ்விடம்) மூன்று தடவை நரகத்தை விட்டும் காப்பாற்றும்படி பிரார்த்தித்தால், “அல்லாஹ்வே! இவரை என்னை விட்டும் காப்பாற்றுவாயாக!” என்று நரகம் கூறுகிறது.
ஒரு அடியார், (அல்லாஹ்விடம்) மூன்று தடவை சொர்க்கத்தைக் கேட்டுப் பிரார்த்தித்தால், “அல்லாஹ்வே! இவரை என்னுள் நுழையச் செய்து விடுவாயாக!” என்று சொர்க்கம் கூறுகிறது.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
ஆதாரம்: முஸ்னது(அஹ்மத்: 12170) ➚
நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நாளும், சொர்க்கத்தை வேண்டி இறைவனிடத்தில் அதிகமதிகம் பிரார்த்தனைகள் செய்து சொர்க்கத்தில் நுழையக்கூடிய அடியார்களாக மாறுவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.
ஐவேளைத் தொழுகைக்காக பாங்கு சொல்லும் போது, நம்மில் பெரும்பாலானோர் அத்தகைய பாங்கோசையை அலட்சியப்படுத்தி விட்டு, நம்முடைய அலுவல்களில் ஈடுபட்டு வருவதைப் பார்க்கின்றோம்.
பாங்கோசையைச் செவியுறுபவர் அந்த வாசகங்களை அப்படியே திரும்பக் கூறி, நபி (ஸல்) அவர்களுக்காக கேட்கிற வஸீலா துஆவையும் உளப்பூர்வமாக மொழிகின்ற போது, நிச்சயமாக அவர் சொர்க்கம் செல்வார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மகத்தான கண்ணியத்தை வழங்குகின்றார்கள்.
அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று முஅத்தின் சொல்லும் போது உங்களில் ஒருவர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்றும், முஅத்தின் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு, அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு என்று சொல்லும் போது, அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு என்றும் அவர் அஷ்ஹது அன் முஹம்மதர் ரசூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் – ரசூலுல்லாஹ் என்று சொன்னதும் அஷ்ஹது அன்ன முஹம்மதர் – ரசூலுல்லாஹ் என்றும், பிறகு முஅத்தின் ஹய்ய அலஸ் ஸலாத் என்று சொன்னதும் லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லாபில்லாஹ் என்றும், பிறகு முஅத்தின் ஹய்ய அலல் பலாஹ் என்று சொல்லும் போது லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லாபில்லாஹ் என்றும் பிறகு முஅத்தின் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொல்லும் போது அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்றும் மனப்பூர்வமாகச் சொல்வாரேயானால் அவர் நிச்சயமாக சொர்க்கம் சென்று விட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்:(அபூதாவூத்: 527) ➚
பாங்கின் வாசகங்களைக் காதுகளால் கேட்பவர் மனப்பூர்வமாக அந்த வாசகங்களை திரும்பக் கூறுகின்ற போது, அவர் நிச்சயமாக சொர்க்கம் சென்று விட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புகழாரம் சூட்டுகின்றார்கள்.
“லாஇலாஹ இல்லல்லாஹ்” என்கிற ஏகத்துவக் கலிமாவை உளமாற நம்பி மனப்பூர்வமாக மொழிந்து விட்டு, ஒருவர் மரணிக்கும் போது, இறைவனின் நாட்டத்தினால் அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்கின்றார்கள்.
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக் கொண்டிருந்தார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு மீண்டும் நான் அவர்களிடம் சென்றேன். அப்போதும் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். பிறகு (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் விழித்திருந்தார்கள். நான் அவர்கள் அருகில் அமர்ந்தேன்.
அப்போது “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (“லா இலாஹ இல்லல்லாஹ்”) என்று சொல்லி, பிறகு அதே நம்பிக்கையில் இறந்து விடும் எந்த அடியாரும் சொர்க்கம் புகுந்தே தீருவார்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
நான், “அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே (சொர்க்கம் புகுந்தே தீருவார்)” என்று சொன்னார்கள்.
நான் (மீண்டும்) “அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே (சொர்க்கம் புகுந்தே தீருவார்)” என்று சொன்னார்கள்.-
இவ்வாறு மூன்று தடவை நடந்தது. நான்காவது தடவை “(அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார்) அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! (அதாவது நீர் இதை விரும்பாவிட்டாலும் சரியே)” என்று கூறினார்கள்.
ஆதாரம்:(முஸ்லிம்: 154) ➚
மற்றொரு அறிவிப்பிலே;
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து “உங்கள் சமுதாயத்தாரில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் இறந்து விடுகிறாரோ அவர் நிச்சயமாகச் சொர்க்கம் செல்வார்” என்று நற்செய்தி கூறினார். உடனே நான், “அவர் விபச்சாரம் செய்தாலும் திருடினாலுமா?” என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் “விபச்சாரம் செய்தாலும் திருடினாலும் சரியே” என்று பதிலளித்தார்.
ஆதாரம்:(முஸ்லிம்: 153) ➚
பெரும்பாவங்களில் ஈடுபட்டிருந்தாலும் சரியே! அல்லாஹ்வின் நாட்டத்தினால், இறைக்கருணையினால் “லாஇலாஹ இல்லல்லாஹ்” கலிமாவை உளப்பூர்வமாக மொழிந்தவர் நிச்சயமாக சொர்க்கம் நுழைந்தே தீருவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “லாஇலாஹ இல்லல்லாஹ்” கலிமாவின் மகத்துவத்தைப் பறைசாற்றுகின்றார்கள்.
பாவமன்னிப்புக்கான எத்தனையோ பிரார்த்தனைகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கற்றுக் கொடுக்கப்பட்டிருந்தாலும், பாவமன்னிப்பின் தலையாய துஆவை ஒவ்வொரு நாளும் ஒதுபவர் சொர்க்கவாசியாக மாறி விடுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுக்கின்றார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
‘அல்லாஹும்ம அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கலக்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க வ வஅதிக்க மஸ்ததஅத்து, அபூ உ லக்க பி நிஅமத்திக்க, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃபக்ஃபிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக் ஃபிருத் துனூப இல்லா அன்த்த. அஊது பிக்க மின் ஷர்ரி ஸனஅத்து’ என்பதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல் ஆகும்.
(பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமையாவேன். நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நீ (எனக்கு) அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக் கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)
மாலை நேரத்தில் ஒருவர் இதைச் சொல்லிவிட்டு (அன்று மாலையே) அவர் இறந்தால் அவர் (சொர்க்கம் செல்வார்’ அல்லது சொர்க்கவாசியாவார்’ காலை நேரத்தில் ஒருவர் (இதைச்) சொல்லிவிட்டு அன்று பகலிலேயே இறந்தால் அதே போன்றுதான் (அவரும் சொர்க்கம் செல்வார்)
ஆதாரம்:(புகாரி: 6323) ➚
மிகக் கவனமாக காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் உளமாற ஓதி வருபவர்களுக்கு திடீரென்று மரணம் நிகழ்கின்ற போது அவர் நிச்சயம் சொர்க்கவாசியாகி விடுவார் என்று மகத்தான பாக்கியத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்குகின்றார்கள்.
சொர்க்கத்தைக் கடமையாக்குகின்ற இதுபோன்ற ஏராளமான நற்காரியங்களை நம்முடைய வாழ்வில் வீரியமாகவும், உள்ளச்சத்துடனும் செய்து இறைவனின் மகத்தான விருந்தான பிரம்மாண்டமான சொர்க்கத்தைப் பெறுவதற்குப் போட்டி போடுவதற்கு அல்லாஹ் பேருதவி செய்வானாக…!