தூயோனைப் போற்றிய துல்கர்னைன்
முக்காலத்தையும் அறிந்தவனாகிய அல்லாஹ், அல்குர்ஆனிலே கடந்த காலத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளைக் கூறியுள்ளான்.
அதில், மக்களுக்குச் சத்தியத்தைத் தெளிவுபடுத்திய நபிமார்கள் பற்றிய செய்திகளும் உள்ளன. ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்ளாமல் இறைவனது தண்டனைக்கு ஆளானவர்கள் பற்றிய செய்திகளும் உள்ளன.
ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டு அதிலே உறுதியாய் இருந்த நல்லடியார்கள் பற்றிய தகவல்களும் உள்ளன.இப்படியான வரலாற்று நாயகர்களுள் துல்கர்னைன் அவர்களும் ஒருவர். இவரைப் பற்றி இக்கட்டுரையில் அறிந்து கொள்வோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த வேதக்காரர்கள், பல கேள்விகளை நபிகளாரிடம் முன்வைப்பவர்களாக இருந்தார்கள். இதன் மூலம் அவர்கள் நபியவர்களின் நபித்துவத்தை சோதித்துப் பார்ப்பவர்களாக இருந்தார்கள்.
எழுதவும் படிக்கவும் தெரியாத, முந்தைய வேதங்களை அறிந்து வைத்திராத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தக் கேள்விகளுக்கு சரியான பதிலை அளித்து விட்டால் அவர் உண்மையிலேயே இறைத்தூதர் தான் என்றும் அவ்வாறு இல்லாவிட்டால் அவர் இறைத்தூதர் இல்லை என்றும் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
இதைப் பின்வரும் நபிமொழிகள் வாயிலாக அறியலாம்.
நான் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவின் (மக்கள் நடமாட்டமில்லாத) ஒரு பாழ்வெளியில் சென்று கொண்டிருந்தேன். அப்போது நபியவர்கள் தம்முடனிருந்த பேரீச்ச மட்டையாலான கைத்தடியை ஊன்றிக் கொண்டு வந்தார்கள். அப்போது யூதர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள்.
அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் (நபியவர்களைச் சுட்டிக் காட்டி) “அவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள்!” என்றார். இன்னொருவர் “அவரிடம் நீங்கள் கேட்க வேண்டாம்; நீங்கள் விரும்பாத (பதில்) ஏதும் அவரிடமிருந்து வந்துவிடப் போகிறது” என்றார்.
இறுதியில் அவர்களில் சிலர், “இறைவன்மீது ஆணையாக நாம் (அதைப் பற்றி) கட்டாயம் அவரிடம் கேட்டே விடுவோம்” என்றனர். அப்போது அவர்களில் ஒருவர் எழுந்து, “அபுல்காசிமே! உயிர் (ரூஹ்) என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு (பதிலளிக்காமல்) நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அப்போது நான் “நபியவர்களுக்கு இறைவனிடமிருந்து வேதஅறிவிப்பு (வஹீ) அறிவிக்கப்படுகிறது’ என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். (வேத அறிவிப்பின்போது ஏற்படும் சிரமநிலை விலகி) அவர்கள் தெளிவடைந்தபோது, “(நபியே!) உயிரைப் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். “உயிர், எனது இறைவனின் கட்டளையில் உள்ளதாகும். குறைவான அறிவே உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று கூறுவீராக!” எனும் (17:85➚) இறைவசனத்தைக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்கள்:(புகாரி: 125) ➚,(முஸ்லிம்: 5384) ➚
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்களுக்கு (அவர்கள் யூத மதத்திலிருந்த போது) எட்டியது. உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைதூதர் மட்டுமே அறிவார்’ என்று கூறினார்கள். பிறகு,
‘1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது?
2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது?
3. குழந்தை தன் தந்தையை (சாயலில்) ஒத்திருப்பது எதனால்? அது (சாயலில்) தன் தாயின் சகோதரர்களை ஒத்திருப்பது எதனால்?’ என்று கேட்டார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘சற்று முன்பு தான் (வானவர்) ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்’ என்று கூறினார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி), ‘வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே!’ என்று கூறினார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடைளாயம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்று திரட்டும். சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும். குழந்தையிடம் காணப்படும் (தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்கு காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனுடைய நீர் (உயிரணு) முந்தினால் குழந்தை அவனுடைய சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (உயிரணு) முந்தினால் குழந்தை அவளுடைய சாயலில் பிறக்கிறது’ என்று பதிலளித்தார்கள். (உடனே) அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி), ‘தாங்கள் இறைத்தூதர் தாம் என நான் சாட்சி கூறுகிறேன்’ என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: அனஸ் (ரலி)(புகாரி: 3329) ➚
இப்படியாக, யூதர்களும் கிறிஸ்தவர்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நிறைய கேள்விகளைக் கேட்டுள்ளார்கள். அந்தக் கேள்விகளுக்கு உரிய பதில்களை அல்லாஹ் சில நேரங்களில் நபிகள் நாயகத்திற்குத் தெரிவித்து மக்களுக்கு அவை விளக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் அல்குஆன் வசனங்கள் மூலம் பதிலளிக்கப்பட்டுள்ளது. இக்கருத்தை, முன்னர் கண்ட நபிமொழிகள் வாயிலாக விளங்கலாம். இதற்குப் பின்வரும் வசனமும் சான்றாக இருக்கிறது.
(நபியே!) உம்மிடம் துல்கர்னைன் பற்றியும் கேட்கின்றனர். “அவரைப் பற்றிய விபரத்தை உங்களுக்கு நான் எடுத்துரைப்பேன்” என்று கூறுவீராக!
(அல்குர்ஆன்: 18:83)➚
துல்கர்னைன் (அலை) அவர்கள் பற்றியும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்குரிய பதிலை அல்லாஹ் திருமறையில் அருளியுள்ளான். அவர் குறித்து அறிய வேண்டிய செய்திகளைக் கூறியுள்ளான்.
துல்கர்னைன் என்பது காரணப்பெயரா அவரது இயற்பெயரா என்பது குறித்து முடிவெடுக்க எந்த உறுதியான ஆதாரமும் இல்லை.
கர்ன் என்ற அரபிச் சொல்லுக்கு கொம்பு என்று பொருள். துல்கர்னைன் என்றால் இரண்டு கொம்புகளை உடையவர் என்று பொருள்.
முந்தைய கால மன்னர் ஒருவருக்கு தலையில் இரண்டு கொம்புகள் இருந்தனவாகவும் அவற்றுள் ஒன்றை அடித்தால் அவர் இறந்துவிடுவார்; மற்றொன்றை அடித்தால் உயிர்பெற்று விடுவார் என்று சிலர் கூறியுள்ளார்கள். இது கற்பனையே தவிர இக்கூற்றுக்கு ஆதாரம் இல்லை.
உலக வரலாற்றில் கூறப்படும் மகா அலெக்ஸாண்டர் என்பவர் தான் துல்கர்னைன் என்றும் சிலர் கூறியுள்ளார்கள். இதற்கும் ஏற்கத்தகுந்த ஆதாரம் ஏதுமில்லை.
சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவு ஆகிய இரண்டையும் ஒரே பயணத்தில் அவர் கண்டதால் அவ்விரு நிகழ்வுகளும் இரண்டு கொம்புகளாக உருவகித்துக் கூறப்படுவதாகவும் சிலர் சொல்கிறார்கள்.
முந்தைய காலத்தில் பெரும் பேரரசுகளாக இருந்த ரோம் மற்றும் பாரசீகப் பேரரசுகள் இரண்டும் ஒருசேர இவரது ஆதிக்கத்தின் கீழ் இருந்ததால் அந்தப் பேரரசுகள் இரண்டு கொம்புகளாக உருவகித்துக் கூறப்படுவதாகச் சிலர் சொல்கிறார்கள்.
இவற்றுக்கும் ஏற்கத்தகுந்த ஆதாரம் ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முந்தைய காலத்தில் சிலருக்கு பெரிய நிலப்பரப்பை ஆளும் வகையிலான மாபெரும் ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டது. அத்தகைய வலிமையான ஆட்சி கொண்ட அரசராக துல்கர்னைனும் விளங்கினார்.
நாம் பூமியில் ஆட்சியதிகாரத்தை அவருக்குக் கொடுத்தோம். ஒவ்வொன்றுக்குமான வழியையும் அவருக்கு வழங்கினோம்.(அல்குர்ஆன்: 18:84)➚
ஆட்சியதிகாரம் மட்டுமின்றி எந்தவொரு விசயத்தையும் எந்தவொரு பொருளையும் எவ்வாறு செய்ய வேண்டும் என்கிற சிறப்பான அறிவாற்றலும் துல்கர்னைன் (அலை) அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது என்பதை மேலுள்ள வசனம் வாயிலாக அறிய முடிகிறது.
இன்றைய காலத்துடன் ஒப்பிடும் போது அறிவியல் வளர்ச்சி அரிதிலும் அரிதாகியிருந்த அந்தக் காலகட்டத்தில், தமக்கு வழங்கப்பட்ட அறிவாற்றலைக் கொண்டு துல்கர்னைன் பூமியில் நீண்டதொரு பயணம் மேற்கொண்டார்.
அந்தப் பயணத்தில் சூரியன் மறையும் கடைக்கோடிப் பகுதியில் சில மக்கள் வசித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அப்போது அவருக்கு அல்லாஹ் வழங்கிய அறிவுரையைப் பின்வரும் வசனம் சுட்டிக் காட்டுகிறது.
அவர் ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார். இறுதியில், சூரியன் மறையுமிடத்தை அவர் அடைந்தபோது, சேற்றுத் தண்ணீரில் அது மறைவதைக் கண்டார். அதற்கருகில் ஒரு சமுதாயத்தையும் கண்டார். “துல்கர்னைனே! நீர் (அவர்களை) தண்டிக்கலாம்; அல்லது அவர்கள் விஷயத்தில் நீர் நல்லதை எடுத்துக் கொள்ளலாம்” என்று கூறினோம்.
(அல்குர்ஆன்: 18:85-86)➚
துல்கர்னைன் சந்தித்த மக்கள் அவரது அதிகாரத்திற்கு கட்டுப்படாத பட்சத்தில் அவர்களைத் தண்டிக்கலாம் அல்லது ஏதேனும் நல்லதொரு முடிவை எடுத்துக் கொள்ளலாம் என்ற வழிகாட்டுதல் அல்லாஹ்வின் தரப்பில் இருந்து அவருக்கு வழங்கப்பட்டது.
அப்போது அவர் அளித்த பதிலைப் பின்வரும் வசனம் குறிப்பிடுகிறது.
“நாம் அநியாயம் செய்பவனைத் தண்டிப்போம். பின்னர் அவன் தன் இறைவனிடம் கொண்டு செல்லப்படுவான். அப்போது அவனை இறைவன் மிகக் கடுமையாகத் தண்டிப்பான். இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல் செய்பவருக்கு நற்கூலி இருக்கிறது. நமது கட்டளையில் எளிதானதை அவருக்குக் கூறுவோம்” என்று (துல்கர்னைன்) கூறினார்.
(அல்குர்ஆன்: 18:87-88)➚
வரம்பு மீறி அநியாயம் செய்வோரைத் தாம் தண்டிப்போம் என்றும் இப்படி இவ்வுலகில் தண்டிக்கப்படுவதோடு மறுமை நாளிலும் அவர்களுக்கு தண்டனை இருப்பதாக துல்கர்னைன் மறுமை நாளைப் பற்றி அவர்களுக்கு எச்சரிக்கை செய்தார். மேலும், ஓரிறைக் கொள்கையை ஏற்றுக்கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு மறுமையில் மகத்தான நற்கூலி இருப்பதாகவும் அவர்களிடம் அழைப்புப் பணி செய்தார்.
ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்பவர்கள் தங்களுக்குக் கீழுள்ள மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் துல்கர்னைன் திகழ்ந்தார். இதோ அவர் மக்களிடம் கூறியதைப் பாருங்கள்.“நமது கட்டளையில் எளிதானதை அவருக்குக் கூறுவோம்” என்று (துல்கர்னைன்) கூறினார்.
(அல்குர்ஆன்: 18:88)➚
எது மக்களுக்கு இலகுவானதாக, எளிதானதாக இருக்கிறதோ அதைத் தான் அவர்களுக்கு கட்டளையாகக் கூறுவேன் என்று துல்கர்னைன் கூறுவதில் இருந்து அவர் மக்களைச் சிரமத்தில் தள்ளாத, துன்பத்தில் ஆழ்த்தாத அரசராக இருந்தார் என்பதை விளங்க முடிகிறது.
இன்று கொடுமையான சட்டங்கள் போட்டு, கடுமையான திட்டங்களைத் தீட்டி மக்களை வாட்டி வதைக்கும் ஆட்சியாளர்கள் தங்களைத் திருத்திக் கொண்டு மக்கள் நலன்பெறும் வகையில் சிறப்பாகச் செயல்படுவதற்குரிய முன்மாதிரி துல்கர்னைன் வசம் இருக்கிறது.
துல்கர்னைன் தமது பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருந்தார். அந்தப் பயணத்தின் போது மற்றொரு சமூகத்தையும் கண்டார். அந்த மக்களைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
பின்னர் அவர் ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார். இறுதியில், அவர் சூரியன் உதிக்கும் இடத்தை அடைந்தபோது, அது ஒரு சமுதாயத்தின்மீது உதிப்பதைக் கண்டார். நாம் அவர்களுக்கு அதை விட்டும் (காத்துக்கொள்ளத்) தடுப்பு எதையும் ஏற்படுத்தவில்லை. இவ்வாறே (அவர்களின் நிலை இருந்தது). மேலும் அவரிடம் உள்ளவற்றை முழுமையாக அறிந்திருந்தோம்.
(அல்குர்ஆன்: 18:89-90)➚
அந்த மக்கள், சூரியனை விட்டும் காத்துக் கொள்கின்ற தடுப்பு எதையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதில் இருந்து அவர்கள் கடும் சூரிய வெப்பத்தால் பாதிப்பைச் சந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
துல்கர்னைன் தமது பயணத்தின் போது இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் ஒரு சமுதாயம் வாழ்வதைக் கண்டார். அவர்களைப் பற்றி அல்குர்ஆன் பின்வரும் செய்தியைக் கூறுகிறது.
பின்னர் அவர் ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார். இறுதியில், இரண்டு மலைகளுக்கிடையேயுள்ள இடத்தை அவர் அடைந்தபோது அதன் அருகில் ஒரு சமுதாயத்தை கண்டார். அவர்கள், (பிறர்) பேசுவதைப் புரிந்து கொள்ள இயலாதோராக இருந்தனர்.(அல்குர்ஆன்: 18:92-93)➚
மலைகளுக்கு அருகில் வாழும் மக்களால் மற்றவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. அவர்கள் மொழி வேறு; இவர்கள் மொழி வேறு. இருந்தாலும், அவர்கள் துல்கர்னைனிடம் பேசினார்கள்; அவர்கள் பேசுவதை அவர் புரிந்து கொண்டு பதிலளித்து உரையாடியதாக அல்குர்ஆன் கூறுகிறது.
இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்து வருகிற மக்கள் அந்த மலைக்கு அப்பால் யஃஜூஜ் மஃஜூஜ் எனும் கூட்டம் வாழ்வதாகவும் அவர்கள் பூமியில் பெரும் அட்டூழியம் செய்வதாகவும் கூறிக் கவலைப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து காப்பாற்றும் வகையில் தடுப்பை அமைத்தால் அதற்குரிய வெகுமதி அளிப்பதாகக் கூறினர். அப்போது துல்கர்னைன் அளித்த பதிலைப் பாருங்கள்.
“துல்கர்னைனே! யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் பூமியில் குழப்பம் செய்கின்றனர். எங்களுக்கும் அவர்களுக்குமிடையில் ஒரு தடுப்புச் சுவரை நீர் எழுப்புவதற்காக உமக்கு நாங்கள் ஒரு தொகையைத் தரலாமா?” என்று அவர்கள் கேட்டனர். “என் இறைவன் எனக்குத் தந்திருப்பதே சிறந்தது. எனவே (ஆள்) பலத்தைக் கொண்டு எனக்கு உதவுங்கள். உங்களுக்கும் அவர்களுக்குமிடையே உறுதியான தடுப்பை அமைக்கிறேன். இரும்புப் பாளங்களை என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று அவர் கூறினார்.
(அல்குர்ஆன்: 18:94-95)➚
யஃஜூம் மஃஜூஜ் கூட்டத்தை விட்டு காப்பாற்றும் வகையில் தடுப்பு அமைக்க ஒப்புக் கொண்ட துல்கர்னைன் வெகுமதி ஏதும் வேண்டாம் என மறுத்து விட்டார்; தமக்கு இறைவன் பெரும் பாக்கியம் செய்திருப்பதை நினைவு கூர்ந்து பெருந்தன்மையாக நடந்து கொண்டார்.
இன்றைய காலத்தில் சிலர் வாழ்வில் சிறப்பான வளங்களையும் வசதிகளையும் பெற்றிருந்தாலும் கூட கொடுக்கல் வாங்கலில் பெருந்தன்மை இல்லாமல் அடித்தட்டு மக்களிடம் கடும்போக்குடன் நடந்து கொள்வதைக் காண்கிறோம். இன்னும் சிலரோ அடுத்தவர் சொத்துக்கும் செல்வத்துக்கும் ஆசைப்பட்டு அநியாயமான காரியங்களைச் செய்வதைப் பார்க்கிறோம். இத்தகைய ஆட்கள் துல்கர்னைன் அவர்களின் வாழ்வில் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
இரும்புப் பாளங்களை இரண்டு மலைகளுக்கு இடையே அடுக்கவும் அவற்றின் மீது செம்பை உருக்கி ஊற்றவும் துல்கர்னைன் வழிகாட்டுதல் வழங்கினார். அந்த மக்களின் உதவியுடன் மாபெரும் தடுப்பை அமைத்தார். இந்நிகழ்வு பற்றி குர்ஆன் குறிப்பிடுகிறது.
இறுதியாக, இரண்டு மலைகளின் உச்சி வரையிலான இடைவெளியை அவர் சமப்படுத்தியதும், “ஊதுங்கள்!” என்றார். அதை நெருப்புக் கங்காக ஆக்கியபோது, “உருக்கிய செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள். இதன்மீது ஊற்றுவேன்” என்று கூறினார். அவர்களால் அதில் ஏற இயலாது; அதில் துவாரமிடவும் இயலாது. (என்று கூறினார்.)(அல்குர்ஆன்: 18:95-96)➚
இத்தகைய தொழில்நுட்ப அறிவை துல்கர்னை (அலை) அவர்களுக்கு அல்லாஹ் அளித்திருந்தான். ஒவ்வொன்றுக்குமான வழியையும் அவருக்கு வழங்கினோம் (18:84➚) எனும் வசனம் இங்கு உண்மையாவதைக் காண்கிறோம்.
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரால் ஏறவும் துளையிடவும் முடியாத வகையில் இரண்டு மலைகளுக்கு இடையே உறுதியான தடுப்பை ஏற்படுத்திய பிறகு துல்கர்னைன் கூறிய வார்த்தை என்ன தெரியுமா? இதோ பாருங்கள்.
இது என் இறைவனிடமிருந்துள்ள அருளாகும்.
(அல்குர்ஆன்: 18:97)➚
மகத்தான பணியைச் செய்து முடித்த துல்கர்னைன் அதற்குரிய புகழையும் பெருமையையும் இறைவனுக்கு உரித்தாக்குகிறார். அவன் அளித்த ஆற்றலால் தான் இப்பணியை செய்ய முடிந்ததாக முழங்குகிறார்.
இப்படியான தன்னடக்கம் இன்று பலரிடம் இல்லாமல் போய்விட்டது. ஏதேனும் ஒரு காரியத்தைச் செய்துவிட்டால் தமது அறிவாலும் ஆற்றலாலும் தான் செய்ய முடிந்ததாக எண்ணிப் பூரிப்படைந்து இறைவனை மறந்து தற்பெருமை கொள்பவர்களாக இருக்கிறார்கள். இத்தகைய ஆட்களுக்கு துல்கர்னைன் வாழ்வில் தக்கப் பாடம் உள்ளது.
இறைவனது நாட்டத்தால் மலைகளுக்கு இடையே தடுப்பை ஏற்படுத்திய துல்கர்னைன், அத்தடுப்பு குறித்து ஒரு முக்கியச் செய்தியை மக்களுக்கு எடுத்துரைத்தார்.
“என் இறைவனின் வாக்குறுதி வரும்போது இதை அவன் தூள் தூளாக்குவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையானதாக உள்ளது” என்று கூறினார். அந்நாளில் அவர்களில் சிலரைச் சிலருடன் அலைமோத விடுவோம். ஸூர் ஊதப்படும். அவர்களை மொத்தமாக ஒன்று சேர்ப்போம்.(அல்குர்ஆன்: 18:97-99)➚
இச்செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் நடுக்கத்துடன் வந்து, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. நெருங்கி வரும் ஒரு தீமையின் காரணத்தால் அரபுகளுக்குக் கேடு நேரவுள்ளது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டு விட்டது” என்று தம் கட்டை விரலையும் அதற்கடுத்துள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டியபடி கூறினார்கள். உடனே, நான் “அல்லாஹ்வின் தூதரே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்து விடுவோமா” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம்; தீமை பெருகி விட்டால்…” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஸைனப் பின்த் ஜஹ்ஸ் (ரலி), நூல்கள்:(புகாரி: 3346) ➚,(முஸ்லிம்: 5520) ➚
நபி (ஸல்) அவர்கள் (மாடி) அறையொன்றில் இருந்தார்கள். நாங்கள் கீழே இருந்தோம். அப்போது அவர்கள் எங்களை எட்டிப் பார்த்து, “என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நாங்கள், “யுக முடிவைப் பற்றி(ப் பேசிக் கொண்டிருக்கிறோம்)” என்று சொன்னோம்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “பத்து அடையாளங்கள் நிகழாதவரை யுகமுடிவு நாள் வராது.
1. கிழக்கில் ஒரு நிலநடுக்கம்
2. மேற்கில் ஒரு நிலநடுக்கம்
3. அரபு தீபகற்பத்தில் ஒரு நிலநடுக்கம்
4. புகை
5. தஜ்ஜால்
6. பூமிக்குள்ளிருந்து வெளிப்படும் (அதிசயப்) பிராணி
7. யஃஜூஜ், மஃஜூஜ்
8. சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
9. (யமன் நாட்டிலுள்ள) ‘அதன்’ என்ற பகுதியின் கடைக்கோடியிலிருந்து ஒரு நெருப்புக் குழம்பு கிளம்பி மக்களை வாகனங்களில் ஏறிப் பயணம் புறப்படச் செய்வது.
அறிவிப்பவர்: ஹுதைஃபா பின் அஸீத் (ரலி),
நூல்கள்:(முஸ்லிம்: 5559) ➚,(திர்மிதீ: 2109) ➚,(அபூதாவூத்: 3757) ➚,(இப்னு மாஜா: 4045) ➚,(அஹ்மத்: 15555) ➚
உலக அழியப் போகும் அடையாளங்களுள் ஒன்றாக, துல்கர்னைன் ஏற்படுத்திய தடுப்பு உடைந்து யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் வெளியாகும் என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலேயே அத்தடுப்பில் சிறு சிதைவு ஏற்பட்டுள்ளது என்பதையும் மேலுள்ள நபிமொழிகள் வாயிலாக அறிய முடிகிறது.
துல்கர்னைன் அவர்களால் தடுப்பு அமைக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்ட யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் உலக அழிவின் நெருக்கத்தில் வெளியே வருவார்கள். அவர்கள் வெளியேறும் காலகட்டம் குறித்தும் அவர்களது அழிச்சாட்டியம் குறித்தும் நபிமொழிகளில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
ஈசா (அலை) அவர்களுக்கு அல்லாஹ், “நான் என் அடியார்கள் சிலரை வெளிவரச் செய்துள்ளேன். அவர்களுடன் போரிட யாருக்கும் ஆற்றல் கிடையாது. எனவே, (முஸ்லிமான) என் அடியார்களை (சினாயிலுள்ள) ‘தூர்’ மலைக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வையுங்கள்” என்று அறிவிப்பான்.
பின்னர், அல்லாஹ் ‘யஃஜூஜ்’ ‘மஃஜூஜ்’ கூட்டத்தாரை அனுப்புவான். அவர்கள் ஒவ்வோர் உயரமான பகுதியிலிருந்தும் வேகமாக(க் கீழே இறங்கி) வருவார்கள். அவர்களில் முதல் அணியினர் (ஜோர்தானில் உள்ள) ‘தபரிய்யா’ ஏரியைக் கடந்து செல்லும்போது, அதிலுள்ள மொத்த நீரையும் குடித்து விடுவார்கள். அவர்களின் இறுதி அணியினர் அதைக் கடந்து செல்லும்போது. “முன்னொரு காலத்தில் இந்த ஏரியில் தண்ணீர் இருந்திருக்கும்” என்று பேசிக் கொள்வார்கள்.
பின்னர் இறைத் தூதர் ஈசா (அலை) அவர்களும், அவர்களுடன் இருப்போரும் (‘தூர்’ மலையில்) முற்றுகையிடப்படுவார்கள். அப்போது (ஏற்படும் பட்டினியால்) அவர்களில் ஒருவருக்குக் காளை மாட்டின் தலை கிடைப்பது, இன்று உங்களில் ஒருவருக்கு நூறு பொற்காசுகள் கிடைப்பதைவிடச் சிறந்ததாக இருக்கும்.
பின்னர் இறைத் தூதர் ஈசா (அலை) அவர்களும், அவர்களுடன் இருப்போரும் (அல்லாஹ்விடம் உதவி கேட்டுப்) பணிந்து வேண்டுவார்கள். அப்போது யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் பிடரிகளில் புழுக்களை அல்லாஹ் அனுப்புவான். அதனால் அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பலியாவார்கள். பின்னர் இறைத் தூதர் ஈசா (அலை) அவர்களும், அவர்களுடன் இருப்போரும் (மலையிலிருந்து) தரைக்கு இறங்கி வருவார்கள்.
அப்போது பூமியின் எந்தவொரு சாண் அளவு இடமும், யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் (சடலங்களிலிருந்து வெளிவரும்) கொழுப்பாலும் துர்நாற்றத்தாலும் நிரம்பியிருப்பதையே காண்பார்கள். உடனே இறைத் தூதர் ஈசா (அலை) அவர்களும், அவர்களுடன் இருப்போரும் அல்லாஹ்விடம் (அவற்றை அகற்றக் கோரிப்) பணிந்து வேண்டுவார்கள். அப்போது அல்லாஹ் ஒட்டகங்களின் கழுத்துகளைப் போன்று (பெரியதாக உள்ள) பறவைகளை அனுப்புவான். அவை அந்தப் பிணங்களைத் தூக்கிச் சென்று அல்லாஹ் நாடிய இடத்தில் வீசியெறியும்.
பின்னர் அல்லாஹ் மழை பொழியச் செய்வான். அந்த மழை எந்த மண் வீட்டிலும், எந்த மேட்டு வீட்டிலும் படாமல் இருக்காது. இறுதியில், பூமியைக் கழுவி, கண்ணாடி போன்று (சுத்தமாக) ஆக்கி விடும். பின்னர் பூமிக்கு, “நீ உன் கனி வர்க்கங்களை முளைக்கச் செய்வாயாக; உன்னிடமுள்ள வளங்களை மீண்டும் தருவாயாக” என்று உத்தரவு பிறப்பிக்கப்படும்.
அந்நாளில் (எந்த அளவுக்கு வளம் கொழிக்குமெனில்), ஒரு குழுவினர் சேர்ந்து ஒரேயொரு மாதுளம் பழத்தை உண்பர். அதன் தோல் பகுதி அவர்கள் அனைவருக்கும் நிழல் அளிக்கும். அவர்களுக்குப் பால் வளமும் கிட்டும். எந்த அளவுக்கென்றால், பால் தரும் ஓர் ஒட்டகம் ஒரு பெரும் கூட்டத்துக்கே போதுமானதாயிருக்கும். பால் தரும் ஒரு பசு, ஒரு குலத்தாருக்கே போதுமானதாயிருக்கும். பால் தரும் ஓர் ஆடு, உறவினர்கள் அடங்கிய ஒரு கூட்டத்திற்கே போதுமானதாயிருக்கும்.
இந்நிலையில் அல்லாஹ், தூய காற்றை அனுப்புவான். அது அவர்களின் தோளிடுக்குகளுக்குள் நுழைந்து அவர்களைப் பிடித்துக் கொள்ளும். இறைநம்பிக்கை கொண்ட ஒவ்வொரு முஸ்லிமின் உயிரையும் அது கைப்பற்றும். அதையடுத்து மக்களில் தீயவர்கள் (மட்டுமே பூமியில்) எஞ்சியிருப்பார்கள். அவர்கள் கழுதைகளைப் போன்று (வெட்ட வெளியில் வைத்துப் பகிரங்கமாக) உடலுறவு கொள்வார்கள். அவர்கள் மீதுதான் உலக முடிவு நாள் ஏற்படும்.அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி)(முஸ்லிம்: 5629) ➚
இறைவனால் வானுக்கு உயர்த்தப்பட்டு உயிரோடிருக்கும் ஈஸா (அலை) அவர்கள் மீண்டும் பூமிக்கு வருவார்கள். தஜ்ஜாலைக் கொல்வது உட்பட அவர்கள் செய்யப்போகும் காரியங்கள் குறித்து நபிமொழிகளில் கூறப்பட்டுள்ளன. ஈஸா (அலை) அவர்களின் மீள் வருகை காலத்தில் தான் துல்கர்னைன் ஏற்படுத்திய தடுப்பு முற்றாகச் சிதைந்து யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் வெளியே வருவார்கள் என்பதையும், இறைவனது ஆற்றலால் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பதையும் மேலுள்ள நபிமொழி தெளிவுபடுத்துகிறது.