சத்தியத்தை விட்டும் திசைதிருப்பக்கூடிய காரியங்கள்
அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே!
சத்தியம் என்று வருகின்ற போது அதனை ஈமான் கொள்வதும், பின்பற்றுவதும், மனதார ஏற்றுக் கொள்வதும், அதற்கு அடிபணிவதும், அதனைப் பற்றிப்பிடிப்பதும், அதன்பால் அழைப்பு விடுப்பதும், அதற்கு உதவி புரிவதும், அதற்காக வேண்டி வாதிடுவதும் எமது கடமையாகும்.
எனவே, முஸ்லிமான ஒருவன் சத்தியத்தைத் தேடிப்பெற்றுக் கொள்வதற்கும், அதனை ஏற்றுச் செயல்படுவதற்கும், அது எங்கிருந்து கிடைத்தாலும் மனத்திருப்தியுடன் அங்கீகரிப்பதற்கும் முன்வரக் கூடியவனாக இருப்பான்.
மாறாக, வழிகேடர்களைப் பொறுத்தளவில் அவர்கள் சத்தியம் விடயத்தில் பல பிழையான நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றனர். சிலர் சத்தியத்தை மறைக்கக் கூடியவர்களாகவும், இன்னும் சிலர் சத்தியத்துடன் அசத்தியத்தை கலக்கக் கூடியவர்களாகவும், மேலும் அசத்தியத்தைக் கொண்டு மாற்று விளக்கம் கூறக்கூடியவர்களாகவும், பல விளக்கங்களுக்குத் தோதுவாக அமையக்கூடிய ஆதார வரிகளை தேடிப் பின்பற்றக் கூடியவர்களாகவும், ஆதாரங்களை அதற்குரிய இடத்தில் பிரயோகிக்காமல் முறைதவறிய அமைப்பில் பயன்படுத்தக்கூடியவர்களாகவும், அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவுடைய வாசனங்களுடன் விளையாடக்கூடியவர்களாகவும், வழிதவறிய விடங்களுக்கு நற்பெயர்களை சூட்டி அலங்கரித்துக் காட்டக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
எனவே, சத்தியத்தைப் பற்றியும், அதனை விட்டும் திசைதிருப்பக்கூடிய அம்சங்களைப் பற்றியும் பேசுவது காலத்தின் தேவையாகும். ஏனெனில், இவ்விடயத்தில் ஒருவர் ஈடேற்றத்தைக் காண்பது மிகச் சிரமமாகும்.
சத்தியத்தை விட்டும் திசைதிருப்பக்கூடிய காரியங்கள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை நாம் இப்போது பார்ப்போம்.
1. அநியாயம் செய்தல்
2. அறியாமை
3. கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல்
4. மன இச்சையைப் பின்பற்றுதலும் உள்ளத்தின் தீர்ப்பை அமல் நடத்துவதும்
5. பொறாமை
6. மார்க்கத்தில் எல்லை மீறிச் செல்லல்
7. தற்பெருமை கொள்ளல்
8. தனது பதவி பறிபோகக்கூடாது என்ற நோக்கில் செயற்படல்
நாம் அநியாயம் செய்யக்கூடியவர்களாக இருந்தால் அதன் காரணமாக அல்லாஹ் எங்களை விட்டும் சத்தியத்தை தூரப்படுத்துவான். இது குறித்து சுமார் 10க்கு மேற்பட்ட இடங்களில் அல்லாஹ் வெளிப்படையாகக் கூறியுள்ளான். எடுத்துக்காட்டாக:
அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான்.
தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்து, இத்தூதர் (முஹம்மத்) உண்மையாளர் என்று விளங்கி, நம்பிக்கை கொண்டு விட்டு பிறகு மறுத்த கூட்டத்திற்கு அல்லாஹ் எவ்வாறு நேர்வழி காட்டுவான்? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும், கிறித்தவர்களையும் உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! அவர்களில் ஒருவர் மற்றவருக்குப் பாதுகாவலர்கள். உங்களில் அவர்களைப் பொறுப்பாளராக்கிக் கொள்வோர் அவர்களைச் சேர்ந்தவரே. அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்.
“ஒட்டகத்தில் இரண்டு, மாட்டில் இரண்டு உள்ளன. இவற்றில் ஆண் பிராணிகளையா தடை செய்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவைகளையா?” என்று கேட்பீராக! இவ்வாறு அல்லாஹ் உங்களுக்குக் கூறியபோது நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? அறிவின்றி மக்களை வழிகெடுப்பதற்காக அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டுவோரை விட மிகப் பெரிய அநீதி இழைத்தோர் யார்? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான்.
ஹாஜிகளுக்குத் தண்ணீர் வழங்கி, (கஅபா எனும்) புனிதப்பள்ளியை நிர்வகிப்போரை அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைப் போல் கருதுகிறீர்களா? அவர்கள் அல்லாஹ் விடம் சமமாக மாட்டார்கள். அநீதி இழைத்த கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும், அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
அவர்கள் உமக்குப் பதிலளிக்காவிட்டால் அவர்கள் தமது மனோஇச்சைகளையே பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக! அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நேர்வழியின்றி தனது மனோஇச்சையைப் பின்பற்றியவனை விட வழிகெட்டவன் யார்? அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன்படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதுவோருக்குரிய உதாரணம் மிகவும் கெட்டது. அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான்.
இஸ்லாத்திற்கு அழைக்கப்படும் நிலையில் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனை விட மிகப் பெரிய அநீதி இழைப்பவன் யார்? அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “ஹிஜ்ர்” பிரதேசத்தைக் கடந்து சென்றபோது, “தமக்குத் தாமே அநீதியிழைத்துக் கொண்டவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்கு நேர்ந்த அதே சோதனை உங்களுக்கும் ஏற்பட்டுவிடுமோ என்றஞ்சி, அழுதபடியே தவிர செல்லாதீர்கள்” என்று எங்களிடம் கூறினார்கள். பிறகு தமது வாகனத்தை விரட்டிக் கொண்டு, மிக விரைவாக அந்த இடத்தைக் கடந்துசென்றார்கள்.
எனவே, அநியாயத்தை செய்வதை விட்டு விலகியிருக்க வேண்டும்.
இப்பண்பு அனைத்து வகையான பாவங்களுக்கும் அடிப்டையாகக் காணப்படுகின்றது. யார் ஒரு விஷயத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லையோ அவர் அது தொடர்பான அறிவுக்கு எதிரியாக மாறிவிடுவார் என்பது எதார்த்தமானது. பித்அத், தர்கா வழிப்பாடு, இன்னும் இது போல ஷிர்கான காரியத்தை மக்கள் அறியாமையில் செய்துக்கொண்டு வருகிறார்கள். அதன் அடிப்படையிலேயே இச்சமுகத்திற்கு மத்தியில் பல சத்தியத்திற்குரிய பிரச்சாரம் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இவற்றைப் பற்றி அல்லாஹுத்தஆலா பின்வருமாறு கூறுகிறான்.
அவர்களுக்கு முழுமையான அறிவு இல்லாததாலும், விளக்கம் கிடைக்காததாலும் பொய்யெனக் கருதுகின்றனர். இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யெனக் கருதினர். அநீதி இழைத்தோரின் முடிவு என்ன ஆனது என்பதைக் கவனிப்பீராக!
“அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!” என்று அவர்களிடம் கூறப்பட்டால் “எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்” என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும், நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா?
நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கிழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்.
அவர்களில் எழுத்தறிவற்றோரும் உள்ளனர். அவர்கள் பொய்களைத் தவிர வேதத்தை அறிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் கற்பனையே செய்கின்றனர்.
عَنْ عَبْدِ اللهِ قَالَ:
«يَا ابْنَ مَسْعُودٍ» ، قُلْتُ: لَبَّيْكَ ثَلَاثًا، قَالَ: «هَلْ تَدْرُونَ أَيُّ عُرَى الْإِيمَانِ أَوْثَقُ؟» قُلْتُ: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «الْوَلَايَةُ فِي اللهِ، وَالْحُبُّ فِي اللهِ، وَالْبُغْضُ فِي اللهِ»
قَالَ: «يَا ابْنَ مَسْعُودٍ» ، قُلْتُ: لَبَّيْكَ يَا رَسُولَ اللهِ، قَالَ: «أَيُّ الْمُؤْمِنِينَ أَفْضَلُ؟» قُلْتُ: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «إِذا عَرَفُوا دِينَهُمْ أَحْسَنُهُمْ عَمَلًا»
ثُمَّ قَالَ: «يَا ابْنَ مَسْعُودٍ، هَلْ تَدْرِي أَيُّ الْمُؤْمِنِينَ أَعْلَمُ؟» قُلْتُ: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «إِذَا اخْتَلَفُوا – وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ – أَبْصَرُهُمْ بِالْحَقِّ، وَإِنْ كَانَ فِي عَمَلِهِ تَقْصِيرٌ، وَإِنْ كَانَ يَزْحَفُ زَحْفًا»
ثُمَّ قَالَ: ” يَا ابْنَ مَسْعُودٍ، هَلْ عَلِمْتَ أَنَّ بَنِي إِسْرَائِيلَ افْتَرَقُوا عَلَى اثْنَتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً، لَمْ يَنْجُ مِنْهَا إِلَّا ثَلَاثُ فِرَقٍ، فِرْقَةٌ أَقَامَتْ فِي الْمُلُوكِ وَالْجَبَابِرَةِ، فَدَعَتْ إِلَى دِينِ عِيسَى، فَأُخِذَتْ فَقُتِلَتْ بِالْمَنَاشِيرِ، وَحُرِّقَتْ بِالنِّيرَانِ، فَصَبَرَتْ حَتَّى لَحِقَتْ بِاللهِ، ثُمَّ قَامَتْ طَائِفَةٌ أُخْرَى لَمْ تَكُنْ لَهُمْ قُوَّةٌ، وَلَمْ تُطِقِ الْقِيَامَ بِالْقِسْطَ، فَلَحِقَتْ بِالْجِبَالِ، فَتَعَبَّدَتْ وَتَرَهَّبَتْ، وَهُمُ الَّذِينَ ذَكَرَهُمُ اللهُ فَقَالَ {وَرَهْبَانِيَّةً ابْتَدَعُوهَا مَا كَتَبْنَاهَا عَلَيْهِمْ إِلَّا ابْتِغَاءَ رِضْوَانَ اللهِ} [الحديد: 27] إِلَى {وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ} [الحديد: 16] ، وَفِرْقَةٌ مِنْهُمْ آمَنَتْ، فَهُمُ الَّذِينَ آمَنُوا وَصَدَّقُونِي، وَهُمُ الَّذِينَ رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا، وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ، وَهُمُ الَّذِينَ لَمْ يُؤْمِنُوا بِي وَلَمْ يُصَدِّقُونِي، وَلَمْ يَرْعَوْهَا حَقَّ رِعَايَتِهَا، وَهُمُ الَّذِينَ فَسَّقَهُمُ اللهُ “
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இப்னு மஸ்வூதே! என்று என்னை அழைத்தார்கள். நான் “இதோ வந்துவிட்டேன், கட்டுப்பட்டேன் என்று மூன்று தடவை கூறினேன். இறைநம்பிக்கையின் எந்த அம்சம் மிக பலமானது என்பதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு நான் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று சொன்னேன். “அல்லாஹ்விற்காகவே நட்புக் கொள்வதும், அல்லாஹ்விற்காகவே நேசிப்பதும், அல்லாஹ்விற்காகவே கோபம் கொள்வதும் தான் இறைநம்பிக்கையின் பலமான அம்சம்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(சிறிது நேரத்திற்கு பின்பு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இப்னு மஸ்வூதே! என்று என்னை அழைத்தார்கள். நான் “அல்லாஹ்வின் தூதரே! இதோ இருக்கிறேன், கட்டுப்பட்டேன் என்று கூறினேன். இறைநம்பிக்கையாளர்களில் யார் சிறந்தவர் என்று என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று சொன்னேன். மார்க்கத்தை அறிந்த பின் நற்செயல்களை செய்வோரோ இறைநம்பிக்கையாளர்களில் சிறந்தவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(சிறிது நேரத்திற்கு பின்பு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இப்னு மஸ்வூதே! இறைநம்பிக்கையாளர்களில் யார் சிறந்த அறிவாளி என்பதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு நான் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று சொன்னேன். தனது கைவிரல்களை இணைத்துக் காட்டி-இவ்வாறு அவர்கள்-தங்களுக்குள் கருத்துவேறுபாடு கொள்ளும்போது அவர்களில் உண்மையை யார் நன்குதெரிந்துக்கொள்கிறாரோ அவர்தான் சிறந்த அறிவாளி. அவரின் நற்செயல்களில் குறைவு இருந்தாலும், அவர் அமல்செய்வதில் தவழ்ந்து ஊர்ந்து செல்பவராக இருந்தாலும் சரியே என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 10357)
சத்தியம் எதுவென்று தேடிப்பார்க்காமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதை எச்சரித்து அல்லாஹுத்தஆலா பல அல்குர்ஆன் வசனங்களை இறக்கி வைத்துள்ளான். எடுத்துக்காட்டாக,
இவ்வாறே உமக்கு முன் ஒரு ஊருக்கு எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பும் போதெல்லாம் “எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம். நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்கள்” என்று அவ்வூரில் சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை.
“நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன?” என்று அவர் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கேட்டபோது, “எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம்” என்று அவர்கள் கூறினர்.
உமக்கு அறிவு இல்லாததை நீர் பின்பற்றாதீர்! செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவையாகும்.
எனவே, இத்தகைய தடைக்கல்லுக்கு சிறந்த சிகிச்சையாக, நாம் எப்பொழுதும் மார்க்க விஷயங்களை ஆதாரத்தோடு நம்பக்கூடியவர்களாகவும், பின்பற்றக்கூடியவர்களாகவும் மாற வேண்டும்.
மன இச்சையைப் பின்பற்றுவது தொடர்பாகப் பல தடைகள் அல்குர்ஆன் அஸ்ஸுன்னா நெடுகில் பதிவாகியுள்ளன. அந்தவிதத்தில் அல்லாஹுத்தஆலா பின்வருமாறு கூறுகின்றான்:
தனது மனோ இச்சையைத் தனது கடவுளாகக் கற்பனை செய்தவனைப் பார்த்தீரா? அவனுக்கு நீர் பொறுப்பாளர் ஆவீரா?
தாவூதே! உம்மைப் பூமியில் வழித்தோன்றலாக நாம் ஆக்கினோம். எனவே மக்கள் மத்தியில் நியாயமான தீர்ப்பு வழங்குவீராக! மனோ இச்சையைப் பின்பற்றாதீர்! அது அல்லாஹ்வின் பாதையை விட்டும் உம்மை வழிகெடுத்து விடும். அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழிகெடுப்போர் விசாரணை நாளை மறந்ததால் அவர்களுக்குக் கடுமையான வேதனை உண்டு.
நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
“வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் உண்மைக்கு மாற்றமாக (கூறி) வரம்பு மீறாதீர்கள்! இதற்கு முன் தாமும் வழிகெட்டு, அதிகமானோரையும் வழிகெடுத்து, நேரான பாதையை விட்டும் தடம் புரண்ட கூட்டத்தின் மனோஇச்சைகளைப் பின்பற்றாதீர்கள்!” என்று கூறுவீராக!
தனது மனோ இச்சையைத் தனது கடவுளாக்கிக் கொண்டவனைப் பார்த்தீரா? தெரிந்தே அவனை அல்லாஹ் வழிகெடுத்தான். அவனது செவியிலும், உள்ளத்திலும் முத்திரையிட்டான். அவனது பார்வையின் மீது மூடியை அமைத்தான். அல்லாஹ்வுக்குப் பின் அவனுக்கு வழிகாட்டுபவன் யார்? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
عَنْ أَبِي عَامِرٍ عَبْدِ اللهِ بْنِ لُحَيٍّ الْهَوْزَنِيِّ،
(நமக்குமுன்) வேதமுடைய இரு சமுதாயத்தினரும் தங்கள் மார்க்கத்தில் எழுபத்திரண்டு பிரிவினராக பிரிந்துவிட்டனர். இந்த (முஸ்லிம்) சமுதாயம் எழுபத்தி மூன்று பிரிவினராக பிரிவார்கள். அனைவரும் நரகத்தில் இருப்பர். ஒரு கூட்டத்தைத் தவிர. அவர்கள் தான் ஜமாஅத் அவர்கள். “எனது சமுதாயத்தில் சில கூட்டத்தினர் தோன்றுவார்கள். நாய் கடித்தவனுக்கு எப்படி நாடி நரம்புகளிலும் மூட்டுகளிலும் நோய் ஏற்படுகிறதோ அது போன்று அவர்களுக்கு யூத, கிருத்துவர்களின் மனோ இச்சைகள் என்ற நோய் ஏற்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 885), (அபூதாவூத்: 4597) ➚
யார் தமது இறைவன் முன்னே நிற்பது பற்றி அஞ்சி, மனோ இச்சையை விட்டும் தன்னை விலக்கிக் கொண்டாரோ சொர்க்கமே (அவரது) தங்குமிடம்.
பொறாமையானது ஒரு சோதனையாகும். சிலர், சத்தியம் குறித்த நபரிடமிருந்து வரும் போது அதனைக் காரணம் காட்டி ஏற்க மறுக்கின்றனர். இதன் காரணமாகவே மதீனாவில் காணப்பட்ட யூதர்களும் நயவஞ்சகர்களும் சத்தியத்தைக் கொண்டு வந்த அல்லாஹ்வின் தூதரை ஏற்க மறுத்தனர். இது குறித்து அல்லாஹுத்தஆலா கூறுகிறான்:
நீங்கள் நம்பிக்கை கொண்ட பிறகு உங்களை (இறை)மறுப்போராக மாற்றிட வேதம் கொடுக்கப்பட்டோரில் பெரும்பாலோர் ஆசைப்படுகின்றனர். உண்மை அவர்களுக்குத் தெளிவான பின்பு அவர்களிடம் ஏற்பட்ட பொறாமையே இதற்குக் காரணம். அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை (அவர்களை) பொருட்படுத்தாது அலட்சியப்படுத்தி விடுங்கள்! அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.
அல்லாஹ் தனது அருளை இம் மக்களுக்கு வழங்கியதற்காக அவர்கள் பொறாமை கொள்கிறார்களா? இப்ராஹீமின் குடும்பத்தாருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம். அவர்களுக்கு மகத்தான ஆட்சியையும் வழங்கினோம்.
இந்த பொறாமை நம் உள்ளத்தில் குடி கொள்ளாமல் இருப்பதற்கு அல்லாஹ் ஒரு பிராத்தனையை கற்றுத் தருகிறான்.
எங்கள் இறைவா எங்களையும் எங்களுக்கு முன்னால் நம்பிகொண்டவர்களையும் மன்னிப்பாயாக! எங்களுடைய உள்ளத்தில் நம்பிக்கை கொண்டோருக்கெதிராக பொறாமையை ஏற்படுத்திவிடாதே. நீயே மன்னிப்பவன் கருணையாளன்.
மார்க்கத்தில் எல்லை மீறிச் செயற்படுவதும் சத்தியம் எங்களை விட்டும் தடைப்படுவதற்குக் காரணமாக அமைகின்றது. அதனால் தான் அவ்வாறு எல்லை மீறிச் செல்ல வேண்டாம் என்று வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
நபியவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக இந்த மார்க்கம் இலகுவானது. எவரொருவர் இந்த மார்க்கத்தில் எல்லை மீறிச் சென்று அதனை கடினமானதாக ஆக்கிக் கொள்கிறாரோ அவரை அது மிகைத்துவிடும்”.
வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். “எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை நாங்கள் விரும்ப மாட்டோம்” எனவும் கூறுகின்றனர்.
(முஹம்மதே!) இதை நோக்கி அழைப்பீராக! உமக்குக் கட்டளையிட்டவாறு நிலைத்திருப்பீராக! அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! “அல்லாஹ் அருளிய வேதத்தை நம்பினேன். உங்களுக்கிடையே நீதியாக நடக்கக் கட்டளையிடப்பட்டுள்ளேன். அல்லாஹ்வே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. எங்களுக்கும், உங்களுக்குமிடையே எந்தத் தர்க்கமும் (இனி) இல்லை. அல்லாஹ் (மறுமையில்) நம்மை ஒன்று திரட்டுவான். அவனிடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது” என்று கூறுவீராக!
எங்கள் செயற்பாடுகள் எமக்கு, உங்கள் செயற்பாடுகள் உங்களுக்கு!’ (28:55➚, 42:15➚) என்பதும் இஸ்லாத்தின் அடிப்படையாகும். யாரும் தமது சட்டத்தை அடுத்தவர் மீது திணிக்கக் கூடாது என இந்த வசனம் கூறுகின்றது.
தற்பெருமை கொள்வது பலவகையான நன்மைகள் கைகூடுவதை விட்டும் தடுக்கக்கூடியதாக உள்ளது. அந்தவிதத்தில் சத்தியத்துடைய விடயத்தில் ஒருவர் அதனை மனதார ஏற்காமல், புரக்கணித்து நடப்பாரென்றால் அதன் காரணமாக அவரைவிட்டும் சத்தியம் வெகு தூரப்பட்டு சென்றுவிடுகின்றது.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் “யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், “தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக கருதுவதும்தான்” என்று கூறினார்கள்.
நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளைத் தண்டிப்போம்.
மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.
இப்படியான நோக்கில் செயற்படுபவரும் சத்தியத்தைவிட்டும் தூரப்படுத்தப்படுவார். ஏனெனில், இத்தகையவர்களின் முழு நோக்கமும் தனது பதவியை தக்க வைத்துக் கொள்வதாகும். அதற்காக வேண்டி இத்தகையவர்கள் மார்க்கத்தைக் கூட உதாசீனம் செய்யக்கூடிய நிலையைப் அவதானித்து வருகின்றோம். வரலாற்றில் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி ஸலூலைப் பாருங்கள்! அவன் முனாபிக்களின் தலைவனாகக் காணப்பட்டான். தான் எதிர்பார்த்த பதவி தன்னை விட்டும் கைநழுவிப் போனதை அறிந்த போது, அதனை நோக்காகக் கொண்டு சத்தியம் வந்தபோதும் அதற்கு எதிரியாகச் செயற்பட்டான். இந்நிலைதான் பட்டம் பதவிக்கு முதலிடம் கொடுக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் உண்டாகும்.
அதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்
“மதீனாவுக்கு நாம் திரும்பினால் அங்குள்ள உயர்ந்தோர் இழிந்தோரை வெளியேற்றுவார்கள்” என்று கூறுகின்றனர். கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும், நம்பிக்கை கொண்டோருக்கும் உரியது. எனினும் நயவஞ்சகர்கள் அறிய மாட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் புகுவர்.
1 . நீதியை அறிந்து அதன்படி தீர்ப்பளிப்பவர். இவர் சொர்க்கத்தில் நுழைவார்.
2 . நீதியை அறிந்தும் அதன்படி தீர்ப்பளிக்காமல், தீர்ப்பில் அநீதி செய்பவர். இவர் நரகத்தில் நுழைவார்.
3 . உண்மையை அறியாமல் தன்னுடைய அறியாமையுடனேயே மக்களுக்குத் தீர்ப்பு வழங்கியவர். இவர் நரகத்தில் நுழைவார்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி), (அபூதாவூத்: 3573) ➚
ஆகவே நம் வாழ்வில் இவற்றை நல்ல முறையில் விளங்கி, சத்தியத்தை நேசிக்கக்கூடிய நன்மக்களாகவும், அதனை தேடிப் பின்பற்றக்கூடியவர்களாகவும் அல்லாஹுத்தஆலா எம்மையும் உங்களை ஆக்கி அருள்புரிவானாக!