உணவு ஒர் அருட்கொடை!
உலகை படைத்து பரிபாலித்து பாதுகாத்து வரும் அல்லாஹ் மனித குலத்திற்கு இவ்வுலகில் இன்புற்று வாழ ஏராளமான அருட்கொடைகளை வாரி வழங்கியுள்ளான். அவன் வழங்கிய அருட்கொடைகளில் அடிப்படையானது மனிதன் உயிர் வாழ தேவையான உணவாகும்.இவ்வுலகில் வாழக்கூடிய அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான உணவு வளங்களை ஏற்கனவே அவர்களுக்காக இப்பூமியில் ஏற்படுத்தியிருப்பதாக இறைவன் கூறுகிறான்.
உயிரினங்களில் யாரும் நமது உணவுகளை ஏற்பாடு செய்துகொண்டு பிறப்பதில்லை.உதாரணத்திற்கு மீன் வகைகளில் ஒன்றான திமிங்கலம் ஒரு நாளைக்கு 32 டன்(3200 கிலோ) எடை அளவிற்கான மீன்களை தனது உணவாக உட்கொள்கிறது. அப்படியென்றால் எத்துனை கோடி உயரினங்களுக்கு அல்லாஹ் உணவளிக்கின்றான் என்று சிந்தித்தால் அல்லாஹ்வின் வல்லமை எளிதாக விளங்கும்.
எத்தனையோ உயிரினங்கள் தமக்குரிய உணவைச் சுமந்து கொண்டிருப்பதில்லை. அல்லாஹ்தான் அவற்றுக்கும், உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன் செவியேற்பவன்; நன்கறிந்தவன்.(அல்குர்ஆன்: 29:60)➚
மனித வாழ்வின் அனைத்து தேவைகளுக்கும் தனது திருமறையின் மூலம் வழிகாட்டும் அல்லாஹ் “உணவு” குறித்தும் அதை எவ்வாறு தனது வல்லமையால் உற்பத்தி செய்கிறான் என்றும், நாம் எவ்வாறு அதை பயன்படுத்த வேண்டும், எதை உண்ண வேண்டும், எதனை உண்ணக்கூடாது என ஒவ்வொன்றையும் நமது நலன் கருதி பாகுபடுத்தி திருமறையில் எராளமான வசனங்களில் விவரிக்கின்றான்.நீரின்றி அமையாது உலகு:எந்த உணவு பொருள்களாக இருந்தாலும் அது உற்பத்தியாவதற்கு மிக முக்கிய ஆதாரம் “மழையாகும்”. இறைவனின் கருணையாம் மழை எனும் இவ்வருட்கொடை மட்டும் இல்லையென்றால் உலகில் எந்த உயிரும் வாழ முடியாது. மேலும் நிலத்தில் விளையும் அனைத்து விளைச்சல்களுக்கும் மழை நீரே ஆதாரமாகும். இது குறித்து அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்:
இரவு, பகல் மாறிமாறி வருவதிலும், அல்லாஹ் வானிலிருந்து இறக்கிய மழையிலும், அதன்மூலம் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிப்பதிலும், காற்றுகளை மாறிமாறி வீசச் செய்வதிலும் சிந்திக்கின்ற சமுதாயத்திற்குச் சான்றுகள் உள்ளன.(அல்குர்ஆன்: 45:5)➚
அவன்தான் பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் உங்களுக்காகப் பாதைகளை ஏற்படுத்தினான். வானிலிருந்து மழையை இறக்கி, அதன் மூலம் பல்வேறு வகையான தாவரங்களை ஜோடிகளாக வெளிப்படுத்தினோம்.(அல்குர்ஆன்: 20:53)➚
பல்வகை உணவுகள்:மனிதனின் விருப்பத்தை அறிந்த அல்லாஹ் ஒரே விதமான உணவுவை ருசித்து சளித்து விடாமல் இருப்பதற்கு பல்வேறு உணவு வகைகளை பல சுவைகளில் ருசித்து இன்புற தானியங்களையும் கனிகளையும் படைத்திருப்பாதாக கூறுகிறான்.
படர விடப்பட்டவையும், படர விடப்படாதவையும் கொண்ட சோலைகளையும், பேரீச்ச மரங்களையும், பலவகை உணவுகளைக் கொண்ட விளைச்சலையும், ஒத்ததாகவும் மாறுபட்டதாகவும் அமைந்த ஸைத்தூன் மற்றும் மாதுளையையும் அவனே படைத்தான். அவை பயனளிக்கும்போது அதன் பயனிலிருந்து உண்ணுங்கள்! அதன் அறுவடை நாளில் அதற்கான கடமையைக் கொடுத்துவிடுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் நேசிப்பதில்லை.(அல்குர்ஆன்: 6:141)➚
அருகருகே இருக்கும் (நிலப்) பகுதிகள் பூமியில் உள்ளன. (அவற்றில்) திராட்சைத் தோட்டங்களும், பயிர்களும், கிளைகள் படர்ந்த மற்றும் கிளைகள் படராத பேரீச்சை மரங்களும் உள்ளன. ஒரேவிதமான நீர்தான் அவற்றுக்குப் பாய்ச்சப்படுகிறது. ஆனால் அவற்றில் ஒன்றைவிட மற்றொன்றைச் சுவையில் சிறப்பாக்கியுள்ளோம். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் உள்ளன.(அல்குர்ஆன்: 13:4)➚
மனித சமுதாயத்தை படைத்த அல்லாஹ் மனிதன் ஒரே விதமான தாவர உணவை மட்டும் உண்ணாமல் இறைச்சியையும் உண்டு மகிழுவும் அதை செரிக்கும் விதமாக உடல் அமைப்பை கொண்டு மனிதனை படைத்துள்ளான்.
நீங்கள் கடலிலிருந்து புத்தம் புதிய இறைச்சியை உண்பதற்காகவும், அதிலிருந்து நீங்கள் அணியும் ஆபரணங்களைத் தேடி எடுப்பதற்காகவும் அவனே கடலை வசப்படுத்தியுள்ளான். அதில் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு செல்லும் கப்பல்களையும் நீர் காண்கிறீர். அவனது அருளை நீங்கள் தேடுவதற்கும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (இவ்வாறு வசப்படுத்தினான்).(அல்குர்ஆன்: 16:14)➚
தடை செய்யப்பட்ட உணவுகள்:எண்ணற்ற உணவுகளை உண்பதற்கு அனுமதிக்கும் அல்லாஹ் மனிதனுடைய நலனுக்காக சில உணவுகளை உண்பதற்கு தடை விதிக்கிறான்.
(தாமாகச்) செத்தவை, (ஓட்டப்பட்ட) இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறப்பட்டவை ஆகியவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிபட்டவை, அடிபட்டவை, (மேலிருந்து) உருண்டு விழுந்தவை, கொம்பால் முட்டப்பட்டவை, வேட்டையாடும் பிராணிகள் கடித்தவை ஆகியவற்றில் (அவை இறக்கும் முன்) நீங்கள் (முறைப்படி) அறுத்தவற்றைத் தவிர (இவற்றில் செத்தவையும்), பலிபீடங்களில் அறுக்கப்பட்டவையும் (தடுக்கப்பட்டுள்ளன.) அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (தடுக்கப்பட்டுள்ளது.) இது பாவச் செயலாகும்.(அல்குர்ஆன்: 5:3)➚
விலங்குகளின் இறைச்சியோ, பறவைகளின் இறைச்சியோ அவைகளை மனிதன் உண்ணும் போது அவற்றை அறுத்து அவைகளின் உடலில் இருந்து முழவதுமாக இரத்தம் வெளியேறிய பிறகு மனிதன் உண்ணும் போது இரத்தத்தில் உள்ள அனைத்து விதமான கெட்ட கிருமிகளும் வெளியேறி சுத்தமான இறைச்சியை மனிதன் உண்ணுகிறான்.இன்றைய அறிவியல் கூட அறுத்த விலங்குகளின், பறவைகளின் இரத்தம் முழவதும் வெளியேறி மாமிசங்கள் சுத்தமாகிறது என்று கூறுகிறது. ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பே அல்லாஹ் இறந்த, தாமாக செத்தவற்றை உண்ண வேண்டாம் அது மனிதனுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்.
அதுபோல பறவைகளின், விலங்குகளின் இரத்ததை உண்ண இஸ்லாம் தடை செய்கிறது. இரத்தத்தை மனிதன் சமைத்து உண்டால் பல்வேறு விதமான நோய்கள் உருவாகும் என்ற காரணத்தினால் தான் அல்லாஹ் தனது திருமறையில் தடை செய்கிறான். இன்றைய அறிவியலும் இதையே ஆய்வு செய்து கூறுகிறது.அதே போல பன்றியின் இறைச்சியை உண்ண அல்லாஹ் தடை செய்துள்ளான். இன்றைய அறிவியல் உலகம் பன்றி இறைச்சியை உண்டால் அதில் உள்ள நாடப்புழுக்கள் மனிதனுடைய உடலில் பல்வேறு நோய் பாதிப்புகளை உண்டாக்கும் என்று எச்சரிக்கை செய்கிறது.எல்லாவற்றையும் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கு, மனிதன் எந்த உணவை உண்ண வேண்டும், எதை அவன் தவிர்க்க வேண்டும் என்பது தெரியும்.
அவற்றையே அவனது வேதமான திருக்குர்ஆனில் வலியுறுத்துகிறான்.உணவுகளை வீணாக்க வேண்டாம்:இன்று உலகில் பல நாடுகளில் மக்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் நிலையில் இன்னும் சில நாடுகளில் அதிமான உணவுகளை தங்களுக்கு என்று சேமித்து வைத்து அடுத்தவர்களுக்கு கொடுக்காமலும் வீண்விரயம் செய்து வருகின்றனர்.இறைவன் கொடுத்த அருட்கொடையான உணவை மனிதனின் தேவைக்கு ஏற்ப எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் உணவை ஒரு போதும் வீணாக்க கூடாது என்பதையும் அல்லாஹ் தனது திருமறையில் எச்சரிக்கை செய்கிறான்.
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள்! உண்ணுங்கள்! பருகுங்கள்! விரயம் செய்யாதீர்கள்! விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.(அல்குர்ஆன்: 7:31)➚
இப்படி பல்வேறு விதமான உணவுகளை அல்லாஹ் மனிதனுக்கு வழங்கி தன் அருட்கொடைகளை பொழிகிறான். ஆனால் மனிதனோ எல்லாமே இயற்கையாகவே உற்பத்தியாகிறது என்று கூறி தன் இறைவனுக்கு நன்றி செலுத்த மறுக்கிறான். எனவே உணவு எனும் அருட்கொடை உலக மக்களின் பொதுவுடமை என்பதை உணர்ந்து அதை தேவைக்கேற்ப உண்டு தேவையுடையோருக்கும் கொடுத்து பொதுநலன் போற்றும் மக்களாக வாழ்வோமாக!