மரணம் பற்றிய மார்க்க நினைவூட்டல்கள்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

மரணம் என்பது சாதாரணமாகக் கடந்து போகக் கூடிய விசயம் அல்ல. அதில் அநேகமான பாடங்களும் படிப்பினைகளும் பொதிந்துள்ளன. மரணத்தை மையப்புள்ளியாகக் கொண்டு மார்க்கத்தில் நிறைய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கு காண்போம்.

மரணம் எனும் மகத்தான சான்று!

ஏக இறைவனை அறிந்து கொள்வதற்கு அவனது ஆற்றலைப் புரிந்து கொள்வதற்கு எண்ணற்ற விசயங்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. அந்த வகையில் மரணம் என்பது மகத்தான சான்றாகத் திகழ்கின்றது.
உடலில் இருந்து உயிர் பிரியும் நிகழ்வே மரணம் என்று சொல்லப்படுகிறது. உயிர் என்றால் என்ன? அது உடலில் எங்கே இருக்கிறது? அது எங்கே செல்கிறது? இப்படிப் பல கேள்விகள் இன்றளவும் மனிதர்களுக்கு இருக்கின்றன. இதற்கு இறைவன் இறைமறையில் பதில் அளித்துள்ளான்.
உயிர் என்பது உடலில் ஒளிந்திருக்கும் பொருளல்ல. அது இறைவனது கட்டளை என்கிறது திருக்குர்ஆன். இன்றைய அறிவியல் பார்வையில் கூறுவதாக இருந்தால், அது உடலை இயக்கும் ஓர் ஆற்றல். அதை மனிதனால் பார்க்க இயலாது; தொட இயலாது.
இதற்கு மேல் அதைப் பற்றி விளக்க முடியாமல் விழிப்பிதுங்கி நிற்கிறது நவீன உலகம். இனிமேலும் முழுமையாக விளக்கிட முடியாது. மனிதன் அனைத்தையும் அறிந்தவன் அல்ல; அல்லாஹ் ஒருவனே அனைத்தையும் அறிந்தவன். இதைப் புரிந்து கொண்டு அவனை நம்பிக்கை கொண்டு அவன் அறிவுறுத்தியபடி நமது வாழ்வை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

மையவாடி சந்திப்பும்! மரண நினைவும்!

இந்த உலகம் ஒரு சோதனைக் களம். அந்தச் சோதனையின் முடிவாக மரணம் இருக்கிறது. மரணத்திற்குப் பிறகுள்ள மறுமையில் கிடைப்பதுதான் நிரந்தரமான வாழ்க்கை. அந்த வாழ்க்கையை மறந்துவிடக் கூடாது; அதில் வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனை நம்மிடம் என்றென்றும் இருக்க வேண்டும். அதற்கு அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத்தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், “நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத்தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்லிம்: 1777)

மையவாடியை சந்திப்பதற்கு கப்ரு ஜியாரத் என்று சொல்லப்படும். இச்சந்திப்பு நிச்சயமாக மரணம் நமக்கும் வரும் என்றும், அதற்குப் பிறகுள்ள மறுமை வெற்றிக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் நினைவூட்டுவதாக உள்ளது. பொது மையவாடிகளுக்குச் சென்றுவருமாறு அறிவுரை வழங்கிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு அங்கு செல்லும் போது ஓதுவதற்கு ஒரு துஆவையும் கற்றுத் தந்துள்ளார்கள்.

மரணத்தை விரும்ப வேண்டாம்

மறுமையை நம்புகிறோம்; மறுமையில் சொர்க்கம் செல்ல நினைக்கிறோம் என்பதற்காக இப்போதே மரணம் வந்துவிட வேண்டும்; இவ்வுலகை விட்டுச் சென்றுவிட வேண்டும் என்று எண்ணக் கூடாது. இதோ நபிகளார் கூறுவதைக் கேளுங்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘எவரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது (மாறாக, அல்லாஹ்வின் தனிபெரும் கருணையாலேயே எவரும் சொர்க்க புகமுடியும்)’ என்று கூறினார்கள். மக்கள், ‘தங்களையுமா (தங்களின் நற்செயல் சொர்க்கத்தில் நுழைவிப்பதில்லை), இறைத்தூதர் அவர்களே?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(ஆம்) என்னையும் தான்; அல்லாஹ் (தன்னுடைய) கருணையாலும் அருளாளலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர’ என்று கூறிவிட்டு, ‘எனவே, நீங்கள் நேர்மையோடு (நடு நிலையாகச்) செயல்பாடுங்கள். நிதானமாக நடந்துகொள்ளுங்கள். உங்களில் எவரும் மரணத்தை விரும்பிட வேண்டாம். ஒன்று அவர் நல்லவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதன் மூலம்) நன்மையை அதிகமாக்கிக் கொள்ளலாம். அல்லது அவர் தீயவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 5673, 7235)

சரியாக நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்பவர்களாக இருந்து கொண்டிருந்தால் இன்னும் அதிக நன்மைகளை அடையும் வாய்ப்பு கிடைக்கும். ஒருவேளை மார்க்கத்தை மறந்தவர்களாக இருந்தால் மனம் திருந்தி மன்னிப்பைப் பெற்றவர்களாக மாறுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.
ஆகவே மறுமை வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வ மிகுதியால் மரணித்துவிட ஆசைப்படக் கூடாது. மரணம் ஏற்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கலாமே தவிர அதற்காக அவசரப்படக் கூடாது. இந்தப் புரிதலும் பக்குவமும் அல்லாஹ்வின் பாதையில் போர்க்களத்தில் போராடும் வீரர்களுக்கும் இருக்க வேண்டும். இதைப் பின்வரும் நபிமொழி விளக்குகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை) எங்களிடையே நின்று, “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் நற்செயல்களிலேயே மிகவும் சிறந்ததாகும்’’ என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம், நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் சென்று கொல்லப்பட்டால், (உங்கள் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்)” என்று பதிலளித்தார்கள்.
பிறகு (சிறிது நேரம் கழித்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எப்படிக் கேட்டீர்கள் (மீண்டும் சொல்லுங்கள்)?” என்று கேட்டார்கள். அந்த மனிதர், “நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்?” என்று கேட்டார். மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம், நீங்கள் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் செல்லும்போது (கொல்லப்பட்டுவிட்டால் உங்கள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன.) ஆனால், கடனைத் தவிர! ஏனெனில், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் (இப்போதுதான்) இவ்வாறு கூறினார்” என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூகத்தாதா (ரலி)
(முஸ்லிம்: 3830)

அறப்போர் நடைபெறும் களத்தில் போர்வீரராக இருக்கும் போது மரணிக்க அவசரப்படாமல் பொறுமையாக இருக்குமாறு நபிகளார் அறிவுரை அளிக்கிறார்கள். அறப்போரிலே மரணம் வந்தால் அதை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் எனவும் அதை எதிர்கொள்ளும் போது நிலைகுலைந்து விடக் கூடாது எனவும் தமது தோழர்களுக்கு அறிவுறுத்தியதுடன் அதற்காக உறுதிப் பிரமாணம் வாங்கியிருப்பதையும் நபிமொழிகளில் காண முடிகிறது.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எதிரிகளைப் போர்க்களத்தில் சந்தித்த நாள்களில் ஒரு முறை சூரியன் உச்சி சாயும் வரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பிறகு மக்களிடையே எழுந்து நின்று உரை நிகழ்த்தலானார்கள்: மக்களே! (போர்க்களம் சென்று) எதிரிகளைச் சந்திக்க வேண்டுமென்று ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் (போரைத் தவிர்க்க வாய்ப்பளித்து) அமைதி நிலை தரும்படி கேளுங்கள். (அதையும் மீறி) எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க நேரிட்டால் நிலைகுலைந்து விடாமல் போரின் துன்பங்களைச் சகித்துக் கொண்டு பொறுமையாயிருங்கள். மேலும், சொர்க்கம் வாட்களின் நிழல்களில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டு, ‘இறைவா! வேதத்தை அருள்பவனே! மேகத்தை நகர்த்திச் செல்பவனே! படைகளைத் தோற்கடிப்பவனே! இ(ப்பகை)வர்களைத் தோற்கடித்து இவர்களுக்கெதிராக எங்களுக்கு உதவுவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா(ரலி)
(புகாரி: 2965, 2966)

‘ஹர்ரா’ போரின்போது என்னிடம் ஒருவர் வந்து, ‘அப்துல்லாஹ் இப்னு ஹன்ழலா (ரலி), மக்களிடம் மரணத்தைச் சந்திக்கத் தாயாராயிருக்கும் படி உறுதிமொழி வாங்குகிறார்கள்’ என்று கூறினார். அதற்கு நான், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு (ஹுதைபிய்யாவில் அளித்த உறுதிமொழிக்கு)ப் பின்னர் வேறெவரிடமும் இதற்காக நான் உறுதிமொழியளிக்க மாட்டேன்’ என்று கூறினேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி)
(புகாரி: 2959, 2960)

வீரமரணத்தை விரும்புவோர் கவனத்திற்கு!

அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைந்து அளப்பரிய நன்மைகளை அடைய வேண்டுமென ஒருவர் ஆசைப்படுகிறார். அந்த விசயத்தில் மார்க்க அறிவுறுத்தலுக்கு ஏற்ப நடந்து கொள்கிறார். அவர் இயற்கையாக இயல்பாக மரணம் அடைந்தாலும் வீரமரணம் அடைந்த தகுதியைப் பெற்றுக் கொள்வார் எனும் நற்செய்தி நபிமொழியில் இடம்பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் உண்மையான மனதுடன் இறைவனிடம் வீரமரணத்தை வேண்டுவாரோ, அவரை உயிர்த் தியாகிகளின் தகுதிகளுக்கு அல்லாஹ் உயர்த்துவான்; அவர் தமது படுக்கையில் (இயற்கை) மரணமடைந்தாலும் சரியே!
அறிவிப்பவர்: சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி)
(முஸ்லிம்: 3870)

மரணத்தைக் கேட்டுப் பிரார்த்திக்கக் கூடாது

உலகில் துன்பங்கள், பிரச்சனைகள் ஏற்படும் போது சிலர், இறைவா! எனக்கு மரணத்தைக் கொடுத்து இதிலிருந்து காப்பாற்றிவிடு! என்று வேண்டி விடுகிறார்கள். இவ்வாறு மரணத்தைத் தந்துவிடுமாறு இறைவனிடம் பிரார்த்தனை செய்வதற்கு நபியவர்கள் தடை விதித்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாரும் மரணத்தை விரும்ப வேண்டாம். மரணம் வருவதற்கு முன்பே அதை வேண்டிப் பிரார்த்திக்க வேண்டாம். (ஏனெனில்,) உங்களில் ஒருவர் இறந்துவிட்டால், அவரது (நற்)செயல் நின்றுவிடுகிறது. இறைநம்பிக்கையாளருக்கு அவரது ஆயுள் நன்மையையே அதிகமாக்கும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்லிம்: 5206)

கைஸ் இப்னு அபீ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் கப்பாப் இப்னு அரத் (ரலி) அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றோம். (கடும் வயிற்று வலிக்கு சிகிச்சை பெறுவதற்காகத் தம் வயிற்றில்) அவர்கள் ஏழு முறை சூடு போட்டிருந்தார்கள். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: முன்சென்றுவிட்ட எம் தோழர்கள் தம(து நன்மைகளு)க்கு இவ்வுலகம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தி விடாத நிலையில் (சிரமத்துடன் வாழ்ந்து) மறைந்துவிட்டார்கள். (ஆனால், அவர்களுக்குப் பின்) நாங்கள் (வீடு கட்ட) மண்ணுக்குச் செலவழிப்பதைப் தவிர வேறு தேவையே இல்லாத அளவுக்கு(ச் செல்வத்தை)ப் பெற்றுள்ளோம். நபி(ஸல்) அவர்கள் மரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்திருக்காவிட்டால் அதை வேண்டி நான் பிரார்த்தனை புரிந்திருப்பேன். (அந்த அளவுக்கு இப்போது நான் நோயினால் சிரமப்படுகிறேன்.) மற்றொரு முறை நாங்கள் கப்பாப் (ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். அப்போது தம் (வீட்டுச்) சுவரைக் கட்டிக் கொண்டிருந்த அவர்கள் ‘ஒரு முஸ்லிம், தாம் செய்கிற எல்லாச் செலவினங்களுக்காகவும் பிரதிபலன் அளிக்கப்படுவார்; (தேவைக்கு அதிகமாக வீடுகட்ட) இந்த மண்ணில் அவர் செய்கிற செலவைத் தவிர’ என்று கூறினார்கள்.
(புகாரி: 5672)

மரணத்தைக் கேட்டு பிரார்த்தனை செய்யக் கூடாது என்பதையும் நபிகளாரின் இந்தக் கட்டளைக்கு நபித்தோழர்கள் எந்தளவுக்குக் கட்டுப்பட்டார்கள் என்பதையும் மேலுள்ள நபிமொழி மூலம் அறிய முடிகிறது. அத்தகைய கட்டுப்படும் பண்பு நம்மிடமும் இருக்க வேண்டும்.
ஒரு வேளை கடுமையான சூழல் காரணமாக இறைவனிடம் மரணத்தைக் கேட்டுத்தான் ஆகவேண்டும் என்ற மனநிலையில் ஒருவர் இருந்தால் அவர் எப்படிப் பிரார்த்திக்க வேண்டும் என்பதை நபியவர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.
உங்களில் யாரும் தமக்கு நேர்ந்துவிட்ட ஒரு துன்பத்தின் காரணத்தால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு மரணத்தை விரும்பித் தான் ஆகவேண்டும் என்றிருந்தால், “இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்துவிடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!” என்று கேட்கட்டும். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(புகாரி: 5671) ,(முஸ்லிம்: 5203)

பொதுவாக, மறுமை வாழ்வுக்குள் விரைவாகச் செல்ல விரும்பியோ அல்லது துன்பத்தில் இருந்து தப்பிக்க விரும்பியோ மரணத்தை அளிக்குமாறு ஒருபோதும் அல்லாஹ்விடம் துஆ செய்யக் கூடாதே தவிர, விதியின் அடிப்படையில் மரணம் வரும் போது குறிப்பிட்ட நிலையில் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வது குற்றம் ஆகாது. இதைப் பின்வரும் வசனம் மூலமாக விளங்கலாம்.
“எங்கள் இறைவனிடமே நாங்கள் திரும்பிச் செல்வோர். எங்கள் இறைவனின் சான்றுகள் எங்களிடம் வந்தபோது அவற்றின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்பதற்காகவே தவிர நீ எங்களைப் பழிவாங்கவில்லை!” என அவர்கள் கூறினர். “எங்கள் இறைவனே! எங்கள்மீது பொறுமையைப் பொழிவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக!” (என்று பிரார்த்தித்தனர்.)
(அல்குர்ஆன்: 7:125-126)➚

ஃபிர்அவ்னுக்கு ஆதரவாக மந்திரம் செய்ய வந்தவர்கள் மூஸா நபியின் கைத்தடி உண்மையான பாம்பாக மாறிய அற்புதச் செயலைப் பார்த்து அவர் இறைத்தூதர்தான் என்பதைப் புரிந்து கொண்டு மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அதற்காக அவர்களைக் கொலைசெய்து விடுவதாக ஃபிர்அவ்ன் எச்சரிக்கும் போது அவர்கள் அளித்த பதிலும் அப்போது அவர்கள் அல்லாஹ்விடம் செய்த பிரார்த்தனையும் மேற்கண்ட வசனங்களில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம், விதிக்கப்பட்ட அடிப்படையில் மரணம் வரும் போது நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்றோ, நல்ல அமலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்றோ, வீரமரணம் அடைய வேண்டும் என்றோ, சரியான முஸ்லிமாக முஃமினாக இருக்க வேண்டும் என்றோ, பிரார்த்தனை செய்வதற்கு அனுமதி இருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.