10) காத்திருந்து கிடைத்த அருட்பேறு

நூல்கள்: இப்ராஹிம் (அலை) அவர்களின் வரலாறு (கதை வடிவில்)

ஆண்டுகள் உருண்டோடின. இரு மனைவிகள் இருந்தும் அவருக்கு பிள்ளைப் பேறு கிட்டாமலே இருந்தது . வயதோ முதிர்ந்து கொண்டு வந்தது.

பிள்ளைக்கு ஆசைப்படாத மனிதரும் இந்த பூமியில் உண்டா என்ன??

அவரும் ஒரு பிள்ளைக்கு ஆசைப்பட்டார்.

“இறைவா! எனக்கு சாலிஹான நல்ல பிள்ளையைத் தா…” என்று பிரார்த்தனை செய்தார்.

இப்ராஹிமின் பிரார்த்தனைகளை இறைவன் தட்டியதில்லை. அவர் தந்தைக்கு பாவமன்னிப்பு கேட்டபோது தவிர . அனைவருக்கும் ஒரே நீதி தான் இறைவனிடம்.

தனக்கு மிகப் பிரியமான மனிதரான இப்ராஹிம் அவர்களின் தந்தையாக இருந்தாலும் இறைமறுப்பாளர்களை இறைவன் மன்னிப்பதில்லை. அது நியாயமும் அல்ல.

மற்ற எல்லா பிரார்த்தனைகளையும் இறைவன் அங்கீகரித்தான்.

பொறுமை மிக்க பிள்ளை கிட்டும் என்று நற்செய்தி கிடைத்தது.

அவரது மனைவி ஹாஜரா தாயானார்.

அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இஸ்மாயில் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

பல ஆண்டுகள் காத்திருந்து பெற்ற வரம் அந்தப் பிள்ளை.

பிஞ்சு விரல்களைப் பற்றிக்கொள்ளவும், மொட்டு போன்ற அந்த முகத்தைக் கண்டு களிக்கவும், அழுகையையும் சிரிப்பையும், அதன் ஒவ்வொரு அசைவையும் ரசிப்பதற்கு ஒரு தந்தையாக இப்ராஹிமிற்கு எவ்வளவு இன்பமாய் இருந்திருக்கும்!

பிள்ளை மீது பெரும் பாசம் அவருக்கு..

பிள்ளை மீது தாயின் பாசம் அதிகம் என்றாலும் , தந்தையின் உணர்வு அலாதியானது.

ஒரு பெண் தன் பிள்ளைக்கு பாலூட்டுவதாலும், பராமரிப்பதாலும் தன் அன்பை வெளிப்படுத்தி விடுவாள் . ஆனால் ஒரு தந்தை தன் பிள்ளையின் மீது காட்டும் பாச உணர்வுக்கும் பொறுப்புணர்வுக்கும் வேறு யாரும் ஈடாக மாட்டார்.

பிள்ளை பிறந்து சில நாட்கள் கடந்தன..

அப்போது தான் இறைவனிடம் இருந்து அந்தக் கட்டளை வந்தது.

கட்டுப்படுதலில் ஒவ்வொருவரும் ஒரு தகுதியில் இருப்பார்கள்.

இப்ராஹீம் (அலை) அதில் முதலாமவராக இருந்தார். அவரது கட்டுப்படுதல் ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் வழிகாட்டியாக ஆனது . இஸ்லாம் என்பதற்கு இலக்கணமாக இப்ராஹீம் (அலை) இருந்தார்கள்.

எண்ணங்களே செயல்பாடுகளின் பிறப்பிடமாகும்.

இப்ராஹீம் (அலை) தனது ஆழ்மனதின் எண்ணத்தை இறைவனிடம் சொன்னார்.

“வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன் எவனோ அவன் பக்கம் சத்திய நெறியில் நின்றவனாக என் முகத்தை திருப்பி விட்டேன் .நான் இணை வைப்பவன் அல்ல“

இது அவரது மனதின் அடியாழத்தின் கூற்று.

(இந்த வார்த்தைகளைத் தான் ஒவ்வொரு முஸ்லிமும் தமது தொழுகையின் ஆரம்பத்தில் ஓதுவதற்காக இறைவன் தேர்ந்தெடுத்தான்)

இறைவனின் ஒவ்வொரு கட்டளைக்கும் கட்டுப்படுதலை பேரின்பமாக கருதினார்.

அந்த கட்டளை எத்தகையதாக இருந்தாலும் அவருக்கு அது இன்பம் தான்.

இறைவன் அவரது கட்டுப்படுதலை சோதித்தான்.

தனது அன்பு மனைவியையும், அருமைப் பிள்ளையையும் பல மைல்கள் தொலைவில் உள்ள பாலைவனமான மக்காவில் கொண்டு சென்று விட்டுவிட வேண்டும் என்பது தான் அந்த கட்டளை.

இறைவன் கட்டளையிட்டு விட்டால் இப்ராஹீம் தாமதிப்பது இல்லை.

உடனே கிளம்பி விட்டார்.

பிள்ளையை ஏந்திக் கொண்டு மனைவியையும் அழைத்துக் கொண்டு பயணம் தொடங்கியது.