31) நபிகள் நாயகத்தின் மனைவிமார்கள்
காமத்திற்காகத் திருமணம் செய்பவர் உடனடியாக அதை நிறைவேற்றிக் கொள்ளத்தக்க பெண்ணைத் தான் திருமணம் செய்வார். ஆபூபக்ர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகத்தின் உயிர் நண்பராக இருந்ததால் தமக்கும் நபிகள் நாயகத்திற்கும் ஒரு உறவை ஏற்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டு, ஆபூபக்கர் ரலி அவர்கள் வற்புறுத்தியதன் பேரில் அவரது மகளாகிய ஆயிஷா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்தார்கள்.
ஹஃப்ஸா (ரலி) திருமணம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது 56ஆம் வயதில் ஹஃப்ஸா (ரலி அவர்களைத் திருமணம் செய்தார்கள். இவர் நபிகள் நாயகத்தின் மற்றொரு உயிர் நண்பரான உமர் (ரலி) அவர்களின் புதல்வியாவார். ஹஃப்ஸா (ரலி) அவர்களது கணவர் உஹதுப் போரில் வீர மரணமடைந்ததால் விதவையானார்கள். தமது விதவை மகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டால் நபிகள் நாயகத்துடன் தமது உறவு பலப்படும் என்று விரும்பிய உமர் ரலி அவர்கள் வற்புறுத்தியது தான் இத்திருமணத்திற்கும் காரணம்.
ஸைனப் பின்த் ஹுஸைமா (ரலி) திருமணம்
நபிகள் நாயகம் (ஸல்) தமது 56ஆம் வயதில் ஸைனப் பின்த் ஹுஸைமாவை மணந்தார்கள். இவர் அதற்கு முன்பு ஒன்றன் பின் ஒன்றாக மூன்று கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு, மூவரும் அடுத்தடுத்து மரணித்ததால் விதவையாக இருந்தார். ஏறக்குறைய நபிகள் நாயகத்தின் வயதை ஒத்தவராக ஸைனப் பின்த் ஹுஸைமா (ரலி) இருந்தார்கள். மூன்று கணவருடன் வாழ்ந்த, சுமார் 56 வயதுடைய ஒரு பெண்ணை, யாரேனும் பெண்மோகத்திற்காகத் திருமணம் செய்வார்களா?
ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) திருமணம்
அடிமையாக இருந்த ஸைத் என்பாரை, அன்றைய அரபுகளின் வழக்கப்படி நபிகள் நாயகம் (ஸல்) வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்துக் கொண்டார்கள். (தத்தெடுத்தல் பின்னர் தடுக்கப்பட்டு விட்டது) உயர்ந்த குலம் என்று கருதப்பட்ட தமது குலத்தைச் சேர்ந்தவரும், தமது மாமி மகளும், தமது பொறுப்பில் வளர்ந்தவருமான ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களை, முன்னாள் அடிமையான ஸைதுக்கு மணமுடித்து வைத்தார்கள். இதன் மூலம் அன்றைய அரபுகளிடம் இருந்த குலப் பெருமைக்கு சமாதி கட்டினார்கள்.
ஆனால் இவ்விருவருக்கும் ஒத்துப்போகவில்லை. இருவரும் இணைந்து வாழ்வதற்கு நபிகள் நாயகம் (ஸல்) எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. மனைவியை விவாகரத்துச் செய்வதில் ஸைத் உறுதியாக இருந்தார். ஸைனப் (ரலி) 35வது வயதில் விவாகரத்துச் செய்யப்பட்டு, திக்கற்றவராக இருந்தார். எனவே அவரை நபிகள் நாயகம் (ஸல்) திருமணம் செய்தார்கள். இதற்கும் பெண்மோகத்தைக் காரணமாகக் கூற முடியாது ஏனெனில் ஸைனபின் மீது அவர்கள் ஆசைப்பட்டிருந்தால் 18 முதல் 30 வயது வரை பெண்களின் அழகு பிரகாசிக்கும் காலகட்டத்தில் ஸைனபை மணந்திருப்பார்கள்.
தமது பொறுப்பிலிருந்த உறவுக்காரப் பெண்ணுக்குத் தாம் செய்து வைத்த திருமண வாழ்வு மகிழ்ச்சிகரமாக அமையவில்லையே என்ற அனுதாபமே இத்திருமணத்திற்குக் காரணமாக இருக்க முடியும்.
உம்மு ஸலமா (ரலி) திருமணம்
அடுத்ததாக உம்மு ஸலமா (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள். இவரது கணவர் பூஸலமா (ரலி) மரணித்த பின் ஏழாவதாக இவரைத் திருமணம் செய்து கொண்டார்கள். உம்மு ஸலமாவை நபிகள் நாயகம் (ஸல்) திருமணம் செய்வதாகக் கூறிய போது ‘நான் வயது முதிர்ந்தவளாக இருக்கிறேன். என் வயதுடையவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை. குழந்தை பெறும் வயதைக் கடந்து விட்டேன் என்று அவர்கள் பதிலளித்தார்கள். இத்தகைய நிலையில் உள்ள ஒரு பெண்ணை, பெண்மோகத்திற்காக யாரேனும் மணப்பார்களா?
ஜுவைரியா (ரலி) திருமணம்
நபிகள் நாயகம் (ஸல்) தமது 59ஆம் வயதில் ஜுவைரிப்பா அவர்களை மணந்து கொள்கிறார்கள். பனூ முஸ்தலக் என்ற எதிரிகள் மீது நபிகள் நாயகம் (ஸல்) போர் தொடுத்தார்கள். போரில் கைதிகளாகப் பிடிபட்டவர்களில் ஜுவைரிய்யாவும் இருந்தார். இவர் அக்கூட்டத்தின் தலைவருடைய மகளாவார். அன்றைய வழக்கப்படி போரில் கைது செய்யப்பட்டவர்கள் போராளிகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்படுவார்கள். ஜுவைரிய்யா (ரலி) ஸாபித் பின் கைஸ் என்ற நபித்தோழருக்கு வழங்கப்பட்டார். அவரைப் பெற்றுக் கொண்ட ஸாபித் பின் கைஸ் (ரலி), “ஏழு வெள்ளிக் காசுகள் தந்து விட்டு நீ விடுதலையாகிக் கொள்” என்று ஜுவைரிய்யாவிடம் தெரிவித்தார்.
ஜுவைரிய்யா, நபிகள் நாயகத்திடம் வந்து ‘நான் சமுதாயத்தில் முக்கியப் பிரமுகரின் மகளாக இருக்கிறேன். எனவே எனக்காக ஏழு வெள்ளிக்காசுகள் கொடுத்து விடுதலைக்கு உதவுங்கள்” என்று கேட்டார். அவ்வாறே அவரை விடுவித்து நபிகள் நாயகம் (ஸல்) மணந்து கொண்டார்கள், இத்திருமணமும் பெண் மோகத்திற்காக நடந்திருக்க முடியாது. ஏனெனில் ஜுவைரிய்யா அவர்கள் பெண்மோகம் கொண்டவர்களை ஈர்க்கும் வசீகரத்துடன் இருந்து நபிகள் நாயகமும் அதில் ஆசைப்பட்டிருந்தால் அவரை ஸாபித்துக்குக் கொடுக்காமல் தாமே எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
மேலும் அன்றைய சமூகத்தில் இளம் பெண்கள் அதிக விலைக்கும் வயதானவர்கள் குறைந்த விலைக்கும் விற்கப்பட்டளர், ஜுவைரிய்யாவைப் பெற்றுக் கொண்ட ஸாபித் வெறும் ஏழு வெள்ளிக் காசுகளே கேட்கிறார். இவ்வாறு அற்ப விலையைப் பெற்றுக் கொண்டு அவர் விடுதலை செய்ய முன்வந்ததே ஜூவைரிய்யா அவர்கள் முதிய வயதுடையவராக இருப்பார் என்பதைச் சொல்கிறது.
உம்மு ஹபீபா (ரலி) திருமணம்
அடுத்ததாக, தமது 60வது வயதில் உம்மு ஹபீபா அவர்களைத் திருமணம் செய்தார்கள். இவரது தந்தை முஸ்லிம்களின் எதிரிகளான மக்காவாசிகளுக்குத் தலைவராகத் திகழ்ந்தவர். உம்மு ஹபீபா இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் தந்தையின் கொடுமைக்கு ஆளானார்கள். எனவே தமது கணவர் அப்துல்லாஹ்வுடன் அபீசீனியாவுக்கு நாடு துறந்து சென்றார்கள். அதன்பின் இவரது கணவர் அப்துல்லாஹ் இஸ்லாத்தை விட்டு கிறித்தவ மதத்திற்கு மாறி விட்டார்.
இன்னொரு நாட்டில் நிற்கதியாக விடப்பட்டு, பெற்ற தந்தையை எதிர்த்து நிற்கும் தியாகப் பெண்மணிக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் அவரைத் தாமே திருமணம் செய்து கொள்வதாக நஜ்ஜாஷி என்ற அபீசீனிய மன்னருக்கு நபிகள் நாயகம் (ஸல்) தகவல் அனுப்பினார்கள். உம்மு ஹபீபாவை நஜ்ஜாஷி மதீனாவுக்கு அனுப்பி வைத்த பின் அவரை நபிகள் நாயகம் (ஸல்) திருமணம் செய்து கொண்டார்கள் இதற்கும் பெண் மோகம் காரணமாக இருக்க முடியாது. ஏனெனில் 15 ஆண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகத்தைப் பிரிந்து உம்மு ஹபீபா, தம் கணவருடன் அபீசீனியாவிற்குச் சென்று அங்கேயே தங்கி விட்டார்கள். அவர்களது தோற்றமோ, அழகோ எப்படியிருக்கும் என்பது நபிகள் நாயகத்திற்குத் தெரியாது நிற்கதியாக நிற்கும் ஒரு தியாகப் பெண்மணி என்பது மட்டும் தான் நபிகள் நாயகத்திற்குத் தெரியும். அதற்காகத்தான் அவரைத் திருமணமும் செய்தார்கள்.
ஸஃபிய்யா (ரலி ) திருமணம்
தமது 60வது வயதில் ஸஃபிய்யா(ரலி) அவர்களை மணந்தார்கள். இவர் கைபர் பகுதியைச் சேர்ந்தவராவார். கைபர் மீது நபிகள் நாயகம் (ஸல்) போர் தொடுத்து வெற்றியடைந்த போது யூதத் தலைவர்களில் முக்கியமானவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஸஃபிய்யாவின் கணவர் கினானாவும் ஒருவர்.
கைது செய்யப்பட்ட ஸஃபிய்யாவை அன்றைய வழக்கப்படி திஹ்யா என்பவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழங்கினார்கள். அப்போது நபித் தோழர்கள், ‘இவர் இந்தச் சமுதாயத்தின் தலைவருடைய புதல்வியாக இருக்கிறார். இவரைத் தங்களைப் போன்ற ஒரு தலைவர் எடுத்துக் கொள்வதே சிறந்தது’ என்று கூறினார்கள். இதை ஏற்றுக் கொண்டு அவரை விடுதலை செய்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். ஜுவைரிய்யா (ரலி) அவர்களைத் திருமணம் செய்வதற்குச் சொன்ன காரணமே இதற்கும் பொருந்தும்.
மைமூனா (ரலி) திருமணம்
இறுதியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதே 60வது வயதில் மைமூனா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். இவரது வயது குறித்துத் தெளிவான சான்று கிடைக்கவில்லை என்றாலும் ஏற்கனவே அடுத்தடுத்து இரண்டு கணவர்களை மணந்து விதவையாக இருந்தார் என்பதற்குச் சான்று உள்ளது.
எனவே இவரும் நடுத்தர வயதைக் கடந்தவர் என்பதை யூகிக்க முடியும். மைமூனா (ரலி), நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அப்பாஸின் மனைவிக்குச் சகோதரியாவார். பெரிய தந்தையின் வற்புறுத்தலின் பெயரிலும், மைமூனாவே வந்து கேட்டுக் கொண்டதன் பேரிலும் இவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்மோகத்தின் காரணமாக அதிகத் திருமணங்களைச் செய்யவில்லை என்பதை மேலே நாம் கூறிய இந்த வரலாற்றுக் குறிப்புகளைப் பார்ப்பவர்கள் விளங்கிக் கொள்ளலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை ஏராளமான நபித்தோழர்கள் வழியாகத்தான் முஸ்லிம்கள் அறிந்து கொள்கின்றனர். ஒவ்வொரு நபித்தோழரும் நபிகள் நாயகத்தின் நடவடிக்கைகளைப் பார்த்து அறிவிக்கின்றனர். அதே சமயம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வீட்டில், இல்லற வாழ்க்கை நடத்தியது. உண்டது. பருகியது. இரவு வணக்கம் செய்தது போன்ற செய்திகளை நபித்தோழர்களால் அறிந்து கொள்ள முடியாது. அவர்களுடன் வீட்டில் குடும்பம் நடத்தும் மனைவியரால் மட்டும் தான் இது சாத்தியமாகும். எனவே அவர்களது மனைவியர் மூலமாக நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் நடந்த அனைத்து விஷயங்களும் உலக மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காக இறைவனின் தூதர் என்ற அடிப்படையில் இறைவன் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.
ஒரே ஒரு மனைவி மட்டும் இருந்து நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு அவர் மட்டும் நபிகள் நாயகம் குறித்த செய்திகளை அறிவித்தால் அதில் நம்பகத் தன்மை குறையும். அவர் தவறான தகவலைக் கூறிவிட்டால் அதைச் சான்றாகக் கொண்டு முஸ்லிம்கள் நடக்கும் நிலை ஏற்படும். பல மனைவியர் இருந்தால் எந்த மனைவியும் கூடுதல் குறைவாகச் சொல்வதற்குத் தயங்குவார். ஒருவர் தவறாகச் சொல்லி மற்றவர்கள் அதை மறுத்து உண்மையை விளக்குவார்கள். இதனால் நபிகள் நாயகம் கொண்டு வந்த மார்க்கத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கிறது. இது போன்ற காரணங்களுக்காகத் தான் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பல திருமணங்கள் செய்தார்கள் என்பதை மேற்கண்ட சான்றுகளில் இருந்து அறியலாம்.
வாழ்க்கை சுருக்கம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் நாற்பதாம் வயதில் நபியாக நியமிக்கப் பட்டார்கள். தமக்கு வஹீ அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் மக்காவில் பதின் மூன்றாண்டுகள் தங்கியிருந்தார்கள். பிறகு ஹிஜ்ரத் செய்யும் படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட ஹிஜ்ரத் செய்து (மதீனாவில்) பத்தாண்டுகள் வாழ்ந்து வந்தார்கள். தம் அறுபத்து மூன்றாம் வயதில் இறப்பெய்தினார்கள். அப்போது அவர்களுடைய தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள்கூட இல்லை (புகாரி: 3902) ➚,(முஸ்லிம்: 4685) ➚