24) அபூபக்கர் (ரலி) அவர்களின் ஹஜ் – ஹிஜிரி 9
தபூக் போரை அடுத்து ஹிஜ்ரி 9ல் நடைபெற்ற முக்கிய நிகழ்வு அபூபக்கர் (ரலி) அவர்களின் ஹஜ்ஜாகும். முஸ்லிம்களுக்கு ஹஜ்ஜின் கிரியைகளை கற்றுத்தரும் வகையில் நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரழி) அவர்களை ஹஜ்ஜூக்காக மக்கா அனுப்பினார்கள்.
அதன் பிறகு இணைவைப்பாளர்களுடான ஒப்பந்தத்தை முறித்து கொள்ளும் படி இறைவன் வசனம் அருளவே அதை தெரிவிக்க மதீனாவிலிருந்து அலீ இப்னு அபூதாலிபை நபி (ஸல்) மக்கா அனுப்பி வைத்தார்கள். புறப்பட்ட அலீ (ரழி) அர்ஜ் என்ற இடத்தில் அபூபக்ரை சந்திக்கிறார்கள். “தாங்கள் தலைவராக வந்தீர்களா? அல்லது தூதுவராக வந்தீர்களா?” என்று அபூபக்ர் (ரழி) கேட்க, அதற்கு “நான் தூதுவராகவே வந்துள்ளேன்” என்று அலீ (ரழி) கூறினார்கள். பிறகு இருவரும் ஒன்றாக மக்கா சென்றனர்.
அபூபக்ர் (ரழி) மக்களுக்கு ஹஜ் கடமைகளை நிறைவேற்றித் தந்தார்கள். ஹஜ் பிறை 10ல் ஜம்ரா அருகில் நின்று கொண்டு, மக்களுக்கு நபி (ஸல்) கூறியவற்றைச் சொன்னார்கள். பிறகு அலீ ரலி அவர்கள் இணைவைப்பாளர்களுடனான ஒப்பந்தம் முறிவை பற்றி அறிவித்தார்கள். (திர்மீதி: 2934)
அபூபக்ர் (ரலி) அவர்கள் தலைமையில் “ஹஜ்ஜத்துல் வதா’விற்கு முந்தைய ஆண்டு நடந்த) அந்த ஹஜ்ஜின் போது “இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்ய (வர)க்கூடாது. நிர்வாணமானவர் எவரும் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரக்கூடாது’ என்று “மினாவில் பொது அறிவிப்புச் செய்யும்படி சிலரை அனுப்பிவைத்தார்கள் அவர்களுடன் என்னையும் அனுப்பினார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அபூபக்ர் ரலி அவர்களுக்குப்) பின்னால் அலீ (ரலி) அவர்களை அனுப்பி, (இணைவைப்பாளர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) பொறுப்பு விலகிக்கொண்டது குறித்து பிரகடனம் செய்யும்படி(யும்) அலீ (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
அவ்வாறே எங்களுடன் அலீ அவர்களும் நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாளில்மினாவாசிகளிடையே “இணைவைப்போரிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் பொறுப்பு விலகிக்கொண்டது குறித்தும்) இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யமாட்டார் என்றும் இறையில்லம் கஅபாபவை நிர்வாணமானவர் எவரும் சுற்றி (தவாஃப்) வரக்கூடாது என்றும் அறிவிப்புச் செய்தார்கள். (புகாரி: 369) ➚
சிலை வழிபாடுக்கு அழிவு காலம் வந்து விட்டது. இனி இஸ்லாமே ஆளும் என்பதை அறிவிக்கும் விதத்தில் அபூபக்கர் ரலி அவர்களின் ஹஜ் வரலாற்றில் முக்கியவம் பெறுகிறது.