மனக்கட்டுப்பாடே மாற்றத்திற்கு வழிவகுக்கும்!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் – 4

உலகின் எல்லா ஜீவ ராசிகளை விடவும் மனித வர்க்கம் மதிப்பளிக் கப்படுவதற்கான காரணம் அவனுக்கென்றே பிரத்யேகமான பல பண்புகளை வல்லோன் வகுத்திருப்பதுதான். அப்பண்புகளை அவன் தன் வாழ்வோடு வருடிக் கொள்வதால்தான் பிற இனத்தை விட்டுப் பிரிந்து தனித்துவம் பெறுகிறான்.
நாம் வானங்களுக்கும், பூமிக்கும், மலைகளுக்கும் இந்த அமானிதத்தை எடுத்துக் காட்டினோம். அதனை அவை சுமக்க மறுத்து, அதற்கு அஞ்சி நடுங்கின. ஆனால் மனிதன் அதைச் சுமந்து கொண்டான். அவன் அநியாயக்காரனாகவும், அறியாதவனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன் – 33:72)
பகுத்துப் பார்க்கும் பகுத்தறிவு, சிந்தனைச் செறிவு, சகிப்புத்தன்மை, மேன்மை, மனபலம் போன்ற அமானிதங்களை அண்டத்தின் அனைத்துப் படைப்புகளும் சுமக்கத் திணறிய பொழுது திண்ணியத்தோடும் துணிச்சலோடும் மனிதனே அவைகளை சுமந்து கொண்டான். ஆகையால் தான் அவன் மதிப்பளிக்கப்படுகிறான்.
இப்படி மனிதனையும் மிருகத்தையும் வேறுபடுத்திக் காட்டும் பண்புகளுள் ஒன்று தான் மனக்கட்டுப்பாடு. அது மனித வாழ்வில் தட்டுப்பாடு!
வயது அரைசதம் அடித்துவிட்டது. வாயில் நுழையாத வார்த்தைகளிலெல்லாம் நூதன நோய்கள் உடலில் நுழைந்துவிட்டன. சுகர், பி.பி, கொலஸ்ட்ரால் போன்ற வாடிக்கை விருந்தாளிகள் வந்துவிட்டனர். இனிப்பு, காரம், உவர்ப்பு உள்ளிட்ட உணவுகளை சாப்பிட மருத்துவர் தடை விதித்துவிட்டார். நித்தம் நித்தம் மிஞ்சிப்போன பழைய கஞ்சியை உண்ணக் கொடுக்கும் வீடுகளில் அப்போது முதல் அறுசுவை பதார்த்தங்கள் சமைக்க ஆரம்பித்துவிடுவார்கள். கண்ணைக் கவரும் பண்ட பலகாரங்களைப் பார்க்கும் பொழுது ‘ஒரு கை பார்த்திடுவோம்’ என மனம் குமுறும்; குமையும். அதற்கெல்லாம் இடமளிக்காமல் மனதோடு போராடி உடல்நலனிற்காக அவ்வுணவுகளை உதறித் தள்ளுவதுதான் மனக்கட்டுப்பாடு.
இக்குணம் மனிதனைத் தவிர உலகின் எந்த உயிரினத்திற்கும் ஊட்டப்படவில்லை.
இந்தக் கட்டுப்பாடுகள் குர்ஆனின் கட்டளைகளுக்கு இணங்கி நடப்பதிலும், அது விலக்கிய ஹராமான விவகாரங்களை விட்டு ஒதுங்கியிருப்பதிலும் இருக்கவேண்டும். இப்பண்பை நம் வாழ்வோடு இணக்கிக் கொண்டால் மட்டும் தான் திருமறைக் குர்ஆன் நமக்கு முழுமையான தகவைமைப்பைத் தரும்.

தியாகியும் துறவியும்

விடைபெறும் ஹஜ்ஜில் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளரைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? எவரிடமிருந்து மக்கள் தங்களின் உயிர்களையும் உடமைகளையும் காத்துக் கொள்கிறார்களோ அவர் தாம் இறை நம்பிக்கையாளர். முஸ்லிமைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற மக்கள் அபயம் பெறுகிறார்களோ அவர் தாம் முஸ்லிம். (முஜாஹித் எனும்) தியாகியைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? எவர் தன் உள்ளத்தோடு போரிடுகிறாரோ அவர் தாம் தியாகி. (முஹாஜிர் எனும்) துறவியைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? எவர் பாவமான தீமையான காரியங்களை துறக்கிறாரோ அவர் தாம் துறவி.
நூல்: (அஹ்மத்: 23958)
அல்லாஹ்வின் வழியில் அறப்போர் செய்பவருக்குத்தான் முஜாஹித் எனப்படும். சொந்த மண்ணைத் துறந்து வேறொரு ஊருக்குப் புலம் பெயர்பவருக்குத்தான் முஹாஜிர் எனப்படும். எனினும் அந்த இரு புனிதமான பட்டத்தையும் பதக்கத்தையும் உள்ளத்தோடு சண்டையிடுபவருக்கும் பாவமான காரியங்களைத் துறப்பவருக்கும் சூட்டியுள்ளார்கள் நபிகளார். உயிரையும் ஊரையும் துறப்பதற்குச் சமானமானது உள்ளத்தைக் கட்டுப்படுவது என்றுரைத்துள்ளார்கள்.
மனிதன் எண்ணற்ற ஆசாபாசங்களோடு படைக்கப்பட்டுள்ளான். அவனது ஆசைகளுள் குர்ஆன் அனுமதியளித்திருப்பதை விட அடைத்திருப்பவை தான் அதிகம். அந்தத் தூண்டுதல்களுக்கு இரையாகாமல் இறைக் கட்டளைக்கு இணங்கி நடப்பவரையே தியாகி என்றும் துறவி என்றும் கர்ஜிக்கிறது இஸ்லாம்.

அகத்தை அழகுப்படுத்து!

வானவர்களை மனிதர்களுக்கு முன்மாதியாகக் கூறமுடியாது. ஏனெனில் வானவர்கள் மனிதர்களைப் போன்றோர் அல்ல. அவர்களின் படைப்பு வித்தியாசமானது. இயற்கையாகவே அவர்களுக்கு எவ்வித ஆசைகளும் மோகங்களும் இராது. இறைவன், அவர்களை எந்தப் பணிகளைச் செய்யுமாறு திட்டமிட்டு படைத்தானோ அதுவே அவர்களது முழுநேர அலுவலாக இருக்கும். அவர்கள் அவனுக்கு மாறுசெய்வோர் அல்ல.
ஆனால் மனிதன் அவ்வாறன்று. அவன் இறை சாசனத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்ற நிபந்தனையில் படைக்கப்பட்டிருந்தாலும் அவனுக்கு வெவ்வேறு திசை திருப்பல்கள் உண்டு. ஆசைகள் உண்டு. ஆவல்கள் உண்டு. அவனுக்கு நன்மை தீமை இரண்டையும் செய்வதற்கான ஆற்றல் உண்டு. இந்நிலையில் ஒரு மனிதன் தன் மனதோடு போராடி மாற்றம் கண்டுவிட்டால் அவனே ஈருலகிலும் வாகை சூடியவன்.
இவ்வடிப்படையைக் கொண்டே ஒவ்வொரு முஸ்லிமும் தன் ஈமானை எடை போடவேண்டும்.
காரிருள் சூழ்ந்த இரவு நேரம். தனிமை அறையில் இருக்கும் ஒரு மனிதர். முகநூலை சுழற்ற ஆரம்பிக்கின்றார். அரசியல், அறிவியல் என பல காணொளிகளைப் பார்த்து பயன் பெறுகிறார். திடீரென்று வந்த ஒரு ஆபாசப் புகைப்படம் அவரின் சிந்தனையை மழுங்கடிக்கிறது. சபலப்படுகிறார். உடலின் எத்திசையிளிருந்தும் ஆசைக்கணைகள் சுரக்க ஆம்பிக்கிறது. இந்நிலையில் அவர் அல்லாஹ்வைக் கொண்டு ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடி உள்ளத்தோடு சண்டையிட்டு தன்னைத் தற்காத்துக் கொண்டால் அவர் தன் ஈமானை தற்காத்துக் கொண்டவராவார்.
இல்லையேல் அவரின் ஈமான் மாசு படிந்தும் தூசு படிந்தும் இருக்கிறது என்று அர்த்தம். இத்தகையோர் தங்களின் அகத்தை அழகுப்படுத்தி, தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
‘எச்சரிக்கை! உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர்குலைந்து விட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள். அதுதான் இதயம்!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் இப்னு பஷீர் (ரலி)
நூல்: (ஸஹீஹ்(புகாரி: 52)
உள்ளத்தின்மீதும், அதை நெறிப்படுத்தியவன் மீதும் சத்தியமாக! அதன் பாவத்தையும், நன்மையையும் அதற்கு உணர்த்தினான். அ(வ்வுள்ளத்)தைத் தூய்மைப்படுத்தியவர் வெற்றி பெற்று விட்டார். அதை மாசுபடுத்தியவர் தோல்வியடைந்து விட்டார்.
(அல்குர்ஆன்: 91:7-10)➚
பாவம் எது? நன்மை எது? என்பதை உள்ளத்திற்குக் கற்றுக் கொடுத்த இறைவன் அதனைப் பரிசுத்தமாக பரிணமித்து வைத்திருக்க வேண்டிய பொறுப்பை மனிதர்களின் கரத்திலேயே ஒப்படைக்கின்றான். அதனைப் பின்வரும் வழிமுறைகள் மூலம் நெறிப்படுத்திக்கொள்ளலாம்.
இறைநினைவோடு இருத்தல், அதிகமதிகம் வணக்கம் புரிதல், பிரார்த்தனைகளையும் பாவமன்னிப்புகளையும் மிகுதிப்படுத்துதல், மார்க்க அறிவுரைகள் ஆற்றப்படும் பொழுது செவிகொடுத்துக் கேட்டல், தீய எண்ணங்களை முளையிலேயே கிள்ளி எறிதல் என்பன போன்ற நல்வழிகளை நடப்புக்குக் கொண்டு வந்தால் நம் அகத்தை நம்மால் அழகுப்படுத்திக் கொள்ளமுடியும். அவற்றின் ஆசை அலைவுகளிலிருந்து நம் ஈமானை அபயப்படுத்திக் கொள்ளமுடியும். அல்லாஹ் நமக்கு எவைகளைச் செய்யும்படியும், எவைகளைச் செய்யக்கூடாது எனவும் கட்டளை பிறப்பித்துள்ளானோ அதற்கேற்ப நம் உள்ளத்தை ஒத்திசைவு செய்ய முடியும்.

இறுதி வரை வேண்டும் உறுதி!

நம் வாழ்வைத் தழுவும் மாற்றங்கள் மரணம் வரை மறவாமல் நட்புறவாட வேண்டுமெனில் நம் உள்ளத்தை நாம் அடிமைப்படுத்தக் கற்றுக் கொண்டால் மட்டும்தான் அது சாத்தியம். நமது மாற்றங்கள் நித்தம் நித்தம் நீடித்து நித்தியமாய் நிலைபெற மனக்கட்டுப்பாடு மிக அவசியம்.
எல்லா மனிதர்களும் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் உறுதிமொழி எடுக்கும் நிலையை அடைவார்கள். மது அருந்த மாட்டேன், புகைபிடிக்க மாட்டேன், சூதாடமாட்டேன் என பலரும் பற்பல தீர்மானத்தை தீர்க்கமாகத் தன் உள்ளத்தில் சூளுரைப்பார்கள். காலம் கடக்க, கடக்க அந்த உறுதிமொழிகள் ஊர்ஜிதமின்றி உடைந்து போகின்றன. மாறுதலுக்கான போதிய மனபலம் இல்லாததுதான் இதற்குக் காரணம்.
மனக்கட்டுப்பாடு என்றைக்கு நம் வாழ்வில் மணக்க ஆரம்பிக்கின்றதோ அன்று முதல்தான் நிலையான மாற்றத்தை நாம் சுவைக்க ஆரம்பிப்போம். அதுவே உண்மையான மாற்றமும் கூட.
மனபலம் செறிந்த நபித்தோழர்கள் மற்றும் தோழியர்களின் மாற்றங்கள் எவ்வாறு இருந்தது என்பதை பாருங்கள்!

உம்மு ஹபீபாவின் உடைந்து போகாத உபரித் தொழுகை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது.
இதை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.
அறிவிப்பாளர் அம்பசா பின் அபீசுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.
அறிவிப்பாளர் அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அம்பசா (ரஹ்) அவர்களிடமிருந்து கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் விட்டதேயில்லை.
அறிவிப்பாளர் நுஅமான் பின் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.
நூல்: (முஸ்லிம்: 1727)

அபூஹுரைராவின் அற்றுப்போகாத தொடர் அமல்கள்

அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறியதாவது,
நபி (ஸல்) அவர்கள் மூன்று விஷயங்களை (செய்யுமாறு) எனக்கு நல்லுரைத்தார்கள். உள்ளூரில் இருக்கும் பொழுதும் சரி, பயணத்தில் இருக்கும் பொழுதும் சரி அவற்றை நான் விட்டதே இல்லை. அவையாவன: வித்ரு தொழுதுவிட்டு உறங்குதல், மாதம் தோறும் நோற்கவேண்டிய (உபரியான) மூன்று நோன்புகள், லுஹா நேரத்தில் தொழும் இரு ரக்அத்கள் ஆகியன.
நூல்: (முஸ்னத்(அஹ்மத்: 7671)

சாகும் வரை சாய்ந்து கொடுக்காத ஹக்கீம் பின் ஹிஷாம்(ரலி)

ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்,
நான் நபி(ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, “ஹகீமே! நிச்சயமாக இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படும்; இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறவருக்கு அதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது” எனக் கூறினார்கள்.
நான், “இறைத்தூதர் அவர்களே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீது ஆணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும் வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன்” எனக் கூறினேன்.
அபூபக்ர்(ரலி) (ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். பிறகு உமர்(ரலி) (தம் ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர்(ரலி), “முஸ்லிம் சமுதாயமே! தம் உரிமையைப் பெறுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற மறுக்கிறார். இதற்கு நீங்கள் சாட்சி!” எனக் கூறினார். ஹகீம், நபி(ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவேயில்லை என ஸயீத் இப்னு அல் முஸய்யப் கூறுகிறார்.
நூல்: (புகாரி: 1472)

உம்முல் அலாவின் உறுதிமொழி!

முஹாஜிர்களில் யார் யாருடைய வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்டிருந்தபோது உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரின் உடல் குளிப்பாட்டப்பட்டு அவரின் ஆடையிலேயே கஃபனிடப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), ‘ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன்’ எனக் கூறினேன். உடனே, நபி(ஸல்) அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது உனக்கெப்படித் தெரியும்?’ என்று கேட்டார்கள்.
‘அல்லாஹ்வின்தூதர் அவர்களே! என்னுடைய தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?’ என கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “இவர் மரணமடைந்துவிட்டார். எனவே, அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே விரும்புகிறேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னுடைய நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை.
நூல்: (புகாரி: 1243)

வாழ்நாள் முழுவதும் வாய்மை காத்த கஅப் பின் மாலிக்!

ஹிஜ்ரி 9ஆம் ஆண்டு நிகழ்ந்த தபூக் போரில் கலந்து கொள்ளாததற்குப் பலரும் புரட்டுக் காரணங்கள் சொல்லித் தப்பித்து விட்டார்கள். அவர்களுள் வாய்மை வாக்கை மொழிந்து ஊர் நீக்கம் தண்டனையைச் சுமந்து கொண்ட மூவரில் ஒருவர் கஅஃப் பின் மாலிக்(ரலி) அவர்கள். அவர் கூறியதாவது:
(ஐம்பது நாள் தண்டனைக்குப் பிறகு எனக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது) அஸ்லம் குலத்தை சேர்ந்த ஒருவர் ஓடிச் சென்று மலை மீது ஏறிக்கொண்டார். (மேலும் உரத்த குரலில் எனக்கு நற்செய்தி சொன்னார்.) மேலும், (மலை மீதிருந்து வந்த) அந்தக் குரல் அக்குதிரையை விட வேகமாக வந்து சேர்ந்தது. எவரது குரலை கேட்டேனோ அவர் என்னிடம் நற்செய்தி சொல்ல வந்த போது நான் என் இரு ஆடைகளையும் கழற்றி அவர் சொன்ன நற்செய்திக்கு பகரமாக அவருக்கு அணிவித்தேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அந்த இரண்டை தவிர வேறெதுவும் அப்போது எனக்கு சொந்தமானதாக இருக்கவில்லை. (வேறு) இரண்டு ஆடைகளை இரவல் வாங்கி அணிந்துக்கொண்டேன்……
(பிறகு, நான்) “அல்லாஹ்வின் தூதரே! உண்மை பேசிய காரணத்தினால் தான் அல்லாஹ் என்னை காப்பாற்றினான். (அதன் விளைவாக) என் பாவம் மன்னிக்கப்பட்டதையடுத்து நான் உயிரோடு வாழும் வரை உண்மையை தவிர வேறெதையும் பேச மாட்டேன்” என்று கூறினேன். ஆகவே, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த வார்த்தையை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் கூறிய நாளிலிருந்து உண்மை பேசியதற்காக எனக்கு அல்லாஹ் அருள் புரிந்ததுப் போன்று வேறெந்த முஸ்லிமுக்கும் அல்லாஹ் அருள் புரியவில்லை. அந்த உறுதிமொழியை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் கூறிய நாளிலிருந்து எனது இந்த நாள் வரை நான் பொய்யை நினைத்துப்பார்த்ததுக் கூட இல்லை. நான் எஞ்சியிருக்கும் காலத்திலும் அல்லாஹ் என்னைப் (பொய் சொல்லவிடாமல்) பாதுகாப்பான் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)
நூல்: (புகாரி: 4418)
இப்படி எண்ணற்ற சஹாபாக்கள் தங்களுக்குத் தாங்களே எவைகளை உறுதிமொழியாக சூளுரைத்தார்களோ அதில் தங்கு தடையின்றி தயவுதாட்சண்யமின்றி இறுதி வரை உறுதியோடும் அறுதியோடும் இருந்தார்கள். அந்த உறுதிப்பாடும் மனக்கட்டுப்பாடும் நம் உள்ளத்தையும் பதம் பார்க்கவேண்டும்.
நீரில் எழுதுவதுப் போல் இருந்திடக்கூடாது நம் வாக்குகள், வேரில் ஊன்றுவது போல் அமைந்திடவேண்டும். அடுக்குகள் கொண்ட அண்டத்தை இராட்சச மலைகள் ஊன்றிப் பிடித்திருப்பதைப் போன்றிருக்க வேண்டும். அதுவே முழுமையான மாற்றம், இல்லையேல் அது ஏமாற்றம்! நமது மாற்றங்கள் மரணம் வரை தொடர்ந்திட வேண்டும் என வல்லோனைப் பிரார்த்திப்போம்.