நாளின் ஆரம்பம் இரவா? பகலா?
நாளின் துவக்கம் இரவு தான்
நாளின் ஆரம்பம் இரவா? அல்லது பகலா? என்பதை விரிவாக குர்ஆன், நபிமொழியின் அடிப்படையில் பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நாளின் துவக்கம் இரவாக இருந்ததா? அல்லது பகலாக இருந்ததா? என்பதைக் காண்போம்.
صحيح مسلم (3/ 1589)
ذَكَرُوا النَّبِيذَ عِنْدَ ابْنِ عَبَّاسٍ، فَقَالَ: ” كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنْتَبَذُ لَهُ فِي سِقَاءٍ – قَالَ شُعْبَةُ: – مِنْ لَيْلَةِ الِاثْنَيْنِ فَيَشْرَبُهُ يَوْمَ الِاثْنَيْنِ، وَالثُّلَاثَاءِ إِلَى الْعَصْرِ، فَإِنْ فَضَلَ مِنْهُ شَيْءٌ سَقَاهُ الْخَادِمَ، أَوْ صَبَّهُ ”
مسند أحمد مخرجا (4/ 45)
“நபி (ஸல்) அவர்களுக்கு (சுவையான நீர் வழங்க) திங்கள் கிழமை இரவு (பேரீச்சம் பழங்கள் போட்டு) பாத்திரத்தில் ஊற வைக்கப்படும். திங்கள் கிழமை பகலிலும், செவ்வாய்க்கிழமை அஸர் வரையிலும் அதை அருந்துவார்கள். மீதமிருந்தால் அதைப் பணியாளுக்கு வழங்குவார்கள். அல்லது கொட்டி விடுவார்கள்.”
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூற்கள்: (முஸ்லிம்: 4083) , அஹ்மத் (2143)
நாளின் ஆரம்பம் பகல் என்றிருக்குமானால் திங்கள் கிழமை இரவுக்குப் பின்னர் செவ்வாய் பகல் தான் வரும். திங்கள் பகல் வராது. திங்கள் இரவு ஊறவைத்ததை திங்கள் பகலில் அருந்தினார்கள் என்றால் திங்கள் இரவுக்குப் பிறகு தான் திங்கள் பகல் வரும் என்பது தெளிவாக விளங்குகிறது.
مسند أحمد مخرجا (3/ 496)
“நபி (ஸல்) அவர்களுக்காக வியாழன் இரவு (பேரீச்சம் பழங்கள் போட்டு பாத்திரத்தில்) ஊற வைக்கப்படும். அதை வியாழன் பகலிலும், வெள்ளிக் கிழமையிலும் அருந்துவார்கள்.”
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: (அஹ்மத்: 2068)
வியாழன் இரவு ஊற வைத்ததை வியாழன் பகலில் நபி (ஸல்) அவர்கள் அருந்துவார்கள் என்ற இந்த ஹதீஸிலிருந்தும் வியாழன் இரவுக்குப் பின் வெள்ளி பகல் வராமல் வியாழன் பகலே வந்துள்ளது. நாளின் ஆரம்பம் இரவு என்பது இதில் இருந்தும் தெளிவாகிறது.
நான், அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்ற போது “நபி (ஸல்) அவர்களை எத்தனை துணிகளில் கஃபன் செய்திருந்தீர்கள்?” என்று அவர் கேட்டார். “வெண்மையான மூன்று பருத்தித் துணிகளில் கஃபன் செய்தோம். அவற்றில் சட்டையோ தலைப்பாகையோ இல்லை என்றேன்’.
அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் “நபி (ஸல்) அவர்கள் எந்தக் கிழமையில் மரணமடைந்தார்கள்? எனக் கேட்டார்கள். நான் திங்கள் கிழமை என்றேன். “இன்று என்ன கிழமை? என்று கேட்டதும் நான் திங்கள் கிழமை என்றேன். அதற்கவர்கள் “இன்றிரவுக்குள் (எனது மரணம்) நிகழும் என நான் எண்ணுகிறேன்.’ என்று கூறிவிட்டு, தாம் நோயுற்றிருந்த போது அணிந்திருந்த ஆடையைப் பார்த்தார்கள். அதில் குங்குமப்பூவின் கறை படிந்திருந்தது. “இதைக் கழுவி இத்துடன் இன்னும் இரு துணிகளையும் சேர்த்து அவற்றில் என்னைக் கஃபனிடுங்கள் எனக் கூறினார்கள். நான், இது பழையதாயிற்றே என்றேன். அதற்கவர்கள் “இறந்தவரை விட உயிருடனிருப்பவரே புத்தாடை அணிய அதிகத் தகுதி படைத்தவர். மேலும் அது (இறந்த) உடலிலிருந்து வழியும் சீழுக்குத் தான் போகும் என்றார்கள். பிறகு அன்று மாலை வரை மரணிக்கவில்லை. (அன்று) செவ்வாய் இரவில் தான் மரணித்தார்கள். காலை விடிவதற்கு முன் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: (புகாரி: 1387)
அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் இறந்த திங்கட்கிழமை இறக்க ஆசைப்பட்டார்கள். அன்று திங்கள் பகல் பொழுதில் இன்று இரவு முடிவதற்குள் மரணித்தால் திங்கள் கிழமை மரணித்தவராக ஆகலாம் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் அந்தப் பகலில் மரணிக்காமல் இரவு வந்த பின் தான் மரணித்தார்கள். அந்த இரவுக்கு பெயரிடும் போது ஆயிஷா ரலி அவர்கள் திங்கள் இரவு எனக் கூறவில்லை. மாறாக செவ்வாய் இரவு என்று குறிப்பிடுகிறார்கள். ஒரு நாளில் பகல் முடிந்து விட்டால் அடுத்து வரும் இரவு அடுத்த நாளின் இரவே தவிர முந்திய நாளின் இரவு அல்ல என்பது இதில் இருந்து தெளிவாக விளங்குகிறது.
நாளின் துவக்கம் பகல் என்றிருக்குமானால் அபூபக்ர் (ரலி) அவர்கள் இன்றிரவுக்குள் மரணித்து விடுவேன் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. மேலும் அன்றிரவு மரணமடைந்த அபூபக்ர் (ரலி) அவர்களை, செவ்வாய் இரவு மரணமடைந்தார்கள் என்று கூறவும் கூடாது. எனவே நாளின் ஆரம்பம் இரவு தான் என்பதை இந்தச் செய்தியிலிருந்தும் விளங்க முடிகிறது.
سنن أبي داود (2/ 51)
லைலதுல் கத்ர் இரவு பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் யார் விளக்கம் கேட்பது என்று பேசிக் கொண்டோம். இது ரமளான் மாதம் 21 ம் காலையில் நடந்தது. நான் புறப்பட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மஃரிப் தொழுகையில் பங்கு கொண்டேன். லைலதுல் கத்ர் பற்றி கேட்டு வர என்னை பனூ ஸலமா கூட்டத்தினர் அனுப்பியதைத் தெரிவித்தேன். இது எத்தனையாவது இரவு என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கேட்டனர். 22 ஆம் இரவு என்று நான் குறிப்பிட்டேன். இது தான் அந்த இரவு என்று கூறினார்கள். பின்னர் திரும்பி வந்து அடுத்த இரவும் எனக் கூறி 23 ஆம் இரவைக் குறிப்பிட்டனர்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி), நூல்: (அபூதாவூத்: 1379) (1171)
அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி), 21 ஆம் காலையில் புறப்பட்டு மஃரிபை அடைகிறார். நாளின் ஆரம்பம் ஸுப்ஹு தான் என்றால் அன்றைய மஃரிபை 21 ஆம் நாள் மஃரிப் எனக் கூற வேண்டும். ஆனால் 22ஆம் நாள் மஃரிப் என்று கூறுகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அதை அங்கீகரிக்கிறார்கள். இதிலிலிருந்து மஃரிப் தான் நாளின் துவக்கம் என்பதைச் சந்தேகமற அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் நடுவில் உள்ள பத்து நாட்கள் இஃதிகாப் இருப்பது வழக்கம். அவ்வழக்கப்படி ஒரு ஆண்டு இஃதிகாப் இருந்தனர். 21ஆம் இரவு வந்த போது, – அந்த இரவுக்குரிய காலையில் தான் இஃதிகாபிலிருந்து வெளியேறுவது அவர்களின் வழக்கம் – என்னுடன் இஃதிகாப் இருந்தவர்கள் கடைசிப் பத்து நாட்களும் இஃதிகாப் இருக்கட்டும். அவ்விரவு எனக்குக் காட்டப்பட்டு பின்னர் மறக்கடிக்கப்பட்டு விட்டது. அன்று காலையில் சேற்றிலும் தண்ணீரிலும் ஸஜ்தாச் செய்வதாகக் (கனவு) கண்டேன். எனவே கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடுங்கள்! ஒவ்வொரு ஒற்றைப் படை நாட்களிலும் தேடுங்கள்’என்றனர். அன்றிரவு மழை பொழிந்தது. பள்ளியின் பந்தலிலிருந்து தண்ணீர் வழிந்தது. 21ஆம் நாள் காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெற்றியில் சேற்றையும் தண்ணீரையும் என் கண்கள் கண்டன.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: (புகாரி: 2027)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 21ஆம் இரவில் மீண்டும் இஃதிகாப் இருந்தனர். அன்றிரவு மழை பெய்து அவர்களின் நெற்றியில் சேறு படிந்ததை ஸுப்ஹில் அபூஸயீத் (ரலி) பார்த்ததாகக் கூறுகிறார். நாளின் துவக்கம் ஸுப்ஹு என்றால் 22வது நாள் ஸுப்ஹு என்று தான் அதைக் கூற வேண்டும். ஆனால் நபித்தோழரோ 21ஆம் இரவுக்கு அடுத்து வரும் ஸுப்ஹை 21வது நாள் ஸுப்ஹ் எனக் கூறுகிறார். இதிலிருந்து நாளின் துவக்கம் இரவு தான் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
மேலும் அன்று காலை தான் இஃதிகாபை விட்டு வெளியேறுவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழக்கம் என்ற சொல்லும் கவனிக்கத் தக்கது. ஸுப்ஹிலிலிருந்து தான் நாள் துவங்குகிறது என்றால் மறுநாள் காலையில் வெளியேறுவார்கள் என்று தான் கூற வேண்டும். அன்று காலையில் வெளியேறுவார்கள் எனக் கூற முடியாது. அன்று காலையில் என்று கூறியிருப்பதால் நாளின் துவக்கம் இரவு தான் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகின்றது.
سنن الدارمي (1/ 290)
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் வெள்ளிக் கிழமை இரவிற்குரிய வியாழன் மாலை ஆகும் போது எழுந்து “சொல்லில் மிக உண்மையான சொல் அல்லாஹ்வின் சொல்லாகும்….” என்று கூறுவார்.
அறிவிப்பவர்: பிலாத் பின் இஸ்மா, நூல்: (தாரிமீ: 213) (209)
நபித்தோழர்கள் காலத்திலும் நாளின் ஆரம்பம் இரவாகவே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்பதற்கு இச்செய்தி சிறந்த சான்றாகும்.
வியாழன் மாலை வெள்ளிக் கிழமை இரவிற்குரியது என்று கூற வேண்டுமானால் இரவு தான் நாளின் ஆரம்பமாக இருக்க வேண்டும். இல்லையெனில் இது சாத்தியமான வாசகமாக அமையாது. இன்றும் இஸ்லாமியப் பெண்களிடம் இதைப் போன்ற வாசகங்கள் பயன்படுத்துவதும் நடைமுறையில் உள்ளது. இதைப் போன்ற வாசகம் நபி (ஸல்) அவர்கள் பொன்மொழியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வியாழனின் மாலை வெள்ளி இரவன்று ஆதமுடைய மக்களின் அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக்காட்டப்படும். (அப்போது) குடும்ப உறவை முறித்தவனின் அமலை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூற்கள்: (அஹ்மத்: 10272) (9883), அல்அதபுல் முஃப்ரத்(61), ஷுஅபுல் ஈமான்(7966)
இதைப் போன்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் சொல்லும் இதற்குச் சான்றாக அமைந்துள்ளது.
நீ வெள்ளிக் கிழமை இரவை அடைந்து விட்டால் ஜும்ஆத் தொழாமல் (பயணமாக) வெளியே செல்லாதே!
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-5114
நாளின் ஆரம்பம் பகல் என்றிருக்குமானால் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் சொல்லில் ஏதாவது பொருள் இருக்குமா? வெள்ளி இரவு வந்து விட்டால் எப்படி அடுத்த நாள் ஜும்ஆ தொழ முடியுமா? அடுத்த நாள் சனியாகவல்லவா இருக்கும். இரவு தான் ஆரம்பம் என்றிருக்குமானால் தான் ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்றிற்குப் பொருள் இருக்கும். எனவே அறிவுச் சுடர் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூட இரவு தான் நாளின் ஆரம்பம் என்று எண்ணியிருந்ததை இச்செய்தி தெளிவாகக் காட்டுகிறது. (இச்செய்தி வெள்ளிக் கிழமை இரவு தங்கியவர் வெளியே செல்லலாமா? செல்லக் கூடாதா? என்பதற்குரிய சான்றாக நாம் எடுத்து வைக்கவில்லை. நாளின் ஆரம்பம் எது என்பதில் ஆயிஷா (ரலி) அவர்களின் கருத்து என்ன என்பதைத் தெளிவுபடுத்தவே நாம் கூறியுள்ளோம் என்பதைக் கவனத்தில் கொள்க.)
நாம் மேலே குறிப்பிட்ட அனைத்து ஆதாரங்களும் நாளின் துவக்கம் இரவு என்பதை ஐயத்திற்கிடமின்றி தெளிவுபடுத்துகின்றன. குறிப்பாக நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நாளின் துவக்கம் இரவாகவே இருந்தது என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறது.
நாளின் துவக்கம் பகல் என்று கூறுவோரின் தவறான வாதங்கள்
நாளின் ஆரம்பம் பகல் தான், இரவு அல்ல என்று கூறுபவர்கள் சில ஆதாரங்களை எடுத்து வைக்கின்றனர். அவற்றின் உண்மை நிலை என்ன? என்பதைப் பார்ப்போம்.
“தொழுகைகளையும், நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு நில்லுங்கள்!”
இவ்வசனத்தில் கூறப்படும் நடுத்தொழுகை என்பது அஸர் தொழுகை தான் என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள். எனவே நாளின் ஆரம்பம் பகல் என்றிருந்தால் தான் அஸர் தொழுகை நடுத்தொழுகையாக வர முடியும். இரவு என்று கூறினால், இரவின் முதல் தொழுகை மஃரிப், இதன்படி ஸுப்ஹுத் தொழுகை தான் நடுத்தொழுகையாக வர வேண்டும். நபி (ஸல்) அவர்கள் ஸுப்ஹு என்று கூறாமல் அஸர் என்று கூறியிருப்பதால் நாளின் ஆரம்பம் பகலே! என்று கூறுகின்றனர்.
2:238 வசனத்தில் கூறப்படும் நடுத்தொழுகை என்பது அஸர் தொழுகை தான் என்று நபிமொழித் தொகுப்புகளில் கூறப்பட்டிருப்பது உண்மை தான். அப்படியானால் இரவு தான் துவக்கம் என்றால் எப்படி அஸர் தொழுகை நடுத்தொழுகையாகும்? என்ற கேள்வி எழலாம். அதற்குரிய பதில்கள் இதோ!
நடுத்தொழுகை என்ற சொல்லை வைத்து நாளின் துவக்கத்தை முடிவு செய்வதை விட கிழமையும், தேதியும் குறித்துப் பேசும் இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் முடிவு செய்வதே சரியானதாகும்.
நடுத்தொழுகை என்பதில் நடு என்பது வரிசைக் கிரமத்தை மட்டும் குறிக்காது. நடுத்தரம், சிறப்பு என்ற கருத்திலும் இச்சொல் பயன்படுத்தப்படுவதுண்டு.
நடுத்தொழுகை என்று மொழிபெயர்த்த இடத்தில் “நடு’ என்ற கருத்தைத் தர பயன்படுத்தப்பட்ட சொல் “அல் உஸ்தா’ என்ற அரபிச் சொல்லாகும். இதற்கு “நடு’ என்றும் சிறப்பிற்குரியது என்றும் பொருள் உண்டு. 2:238 வசனத்தில் சிறப்பிற்குரியது என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை ஹதீஸ் கலை மேதை ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானீ தனது புகாரியின் விரிவுரை நூலான பத்ஹுல் பாரியில் தெளிவுபடுத்துகிறார்கள்.
ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களின் கூற்றுக்கு குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் சான்றாக உள்ளன. “அல் உஸ்தா’ என்ற சொல்லின் மூலச் சொல்லிலிருந்து பிறந்த சொற்கள் இரண்டு பொருள்களுக்கு மத்தியில் உள்ளவை என்ற பொருளல்லாமல் சிறந்தது என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
(பார்க்க:(அல்குர்ஆன்: 68:28, 2:143) ➚
ஐவேளைத் தொழுகை அனைத்தும் முக்கியமானவை என்றாலும் ஸுப்ஹு, அஸர் ஆகிய இரண்டு தொழுகைகளை நபி(ஸல்) அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் மிஃராஜ் இரவில் தான் தொழுகை கடமையாக்கப்பட்டது ((புகாரி: 349)) மேலும் இரவில் தான் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டார்கள். இதைக் குர்ஆன் 17 அத்தியாத்தின் முதல் வசனம் தெளிவுபடுத்துகிறது. மிஃராஜ் இரவில் தொழுகை கடமையாக்கப்பட்டாலும் கடமையாக்கப்பட்ட பிறகு வந்த முதல் தொழுகை ஸுப்ஹு தான். கடமையாக்கப்பட்ட வரிசைப்படி அஸர் நடுத்தொழுகை என்று தான் முடிவு செய்ய முடியுமே தவிர நாளின் துவக்கத்தை முடிவு செய்ய இது சான்றாகாது.
நபி(ஸல்) அவர்களுக்கு தொழுகை விண்ணுலகப் பயணத்தில் கடமையாக்கப்பட்ட பிறகு இவ்வுலகத்திற்கு வந்த பின்னர் அவர்கள் சந்தித்த முதல் தொழுகை நேரம் ஸுப்ஹு. எனவே ஸுப்ஹுத் தொழுகையிலிருந்து கணக்கிடப்பட்டு அஸர் தொழுகை நடுத்தொழுகையாக வருகிறது. நாளின் ஆரம்பம் காலை என்ற அடிப்படையில் வந்தவை அல்ல.
அல்லது நடுத்தொழுகை என்று மொழிபெயர்ப்பதை விட “சிறப்பு மிக்கத் தொழுகை’ என்று பொருள் கொள்ள வேண்டும்.
எக்கருத்தைக் கொண்டாலும் நாளின் ஆரம்பம் பகல் என்று வராது. மேலும் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நாளின் துவக்கம் இரவு தான் என்பதற்கு வலுவான ஆதாரங்களை நாம் காட்டியுள்ளோம்.
அடுத்து நாளின் ஆரம்பம் பகல் தான் என்று கூறுபவர்கள் எடுத்துக்காட்டும் ஆதாரம் :
“வைகறை எனும் வெள்ளைக் கயிறு (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்!”
97:3 لَيْلَةُ الْقَدْرِ- ۙ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍؕ
97:4 تَنَزَّلُ الْمَلٰٓٮِٕكَةُ وَالرُّوْحُ فِيْهَا بِاِذْنِ رَبِّهِمْۚ مِّنْ كُلِّ اَمْرٍ
97:5 سَلٰمٌ – هِىَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ
மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை (பஜ்ர்) வரை இருக்கும். (அல்குர்ஆன்: 97:3-5) ➚.
முதலில் குறிப்பிட்ட (2:187) வசனத்தில் நாளின் ஆரம்பம் பஜ்ர் (காலை) என்றும், இரண்டாவது குறிப்பிட்ட (97:3-5) வசனத்தில் நாளின் முடிவு பஜ்ர் உதயமாகும் வரை என்று கூறப்பட்டுள்ளதாம்.
(2:187) வசனத்தில் நாளின் ஆரம்பம் பஜ்ர் என்று எங்கே கூறப்பட்டுள்ளது? நோன்பு என்ற கடமை பஜ்ரிலிருந்து ஆரம்பித்து இரவு வரை முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே தவிர நாளின் துவக்கத்தைப் பற்றி பேசவே இல்லை. இதைச் சாதாரண மக்கள் கூட விளங்குவார்கள்.
இதைப் போன்று தான் (97:3-5) வசனத்தில் லைலத்துல் கத்ர் என்ற இரவின் துவக்கமும் அதன் முடிவும் கூறப்பட்டுள்ளதே தவிர நாளின் முடிவு எங்கே கூறப்பட்டுள்ளது?
அடுத்து அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரம்:
“உங்களின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ((புகாரி: 472))
மேலும் வித்ரின் கடைசி நேரம் பஜ்ருக்கு முந்திய நேரமாகும் என்றும் நபி (ஸல்) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நம்முடைய கடைசித் தொழுகையாக வித்ரை பஜ்ருக்கு முன் தொழுது கொள்ள வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் நாளின் துவக்கம் பஜ்ராகும் என்று வாதிடுகின்றனர்.
நபிமொழிகளைச் சரியாகப் பார்வையிடாததால் ஏற்பட்ட கோளாறாகும் இவ்வாதம். பொதுவாகவே ஒரு நாளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. இரவில் தொழும் தொழுகையில் இறுதியாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என்று தான் கூறியுள்ளார்கள்.
“இரவின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூற்கள்: (புகாரி: 998) , முஸ்லிம் (1369), அபூதாவூத் (1226), அஹ்மத் (4480)
அவர்களின் ஆதாரம் : 2
سنن أبي داود (2/ 302)
مسند أحمد مخرجا (31/ 120)
ரமலானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என நபி (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும் பெருநாள் தொழுகை தொழும் திடலுக்குச் செல்லுமாறும் கட்டளையிட்டார்கள்.
((அபூதாவூத்: 2339) ,(அஹ்மத்: 18824)
இதைப் போன்ற கருத்துள்ள இன்னும் சில ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டி, நாளின் ஆரம்பம் இரவு என்றிருக்குமானால் அந்தக் கிராமவாசிகள் இன்று பிறை பார்த்தோம் என்றல்லவா? கூறியிருக்க வேண்டும். ஏன் நேற்று என்று கூறினார்கள்? என்று கேட்கின்றனர்.
மஃரிபில் பிறை பார்த்து விட்டு அடுத்த நாள் காலை நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கிறார்கள். இரவு பார்த்து விட்டு அதைத் தொடர்ந்து வரும் காலையில் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கும் அந்த கிராமவாசிகள் இன்று பிறை பார்த்ததாகவல்லவா கூற வேண்டும் என இந்த ஹதீஸை எடுத்து வைத்து வாதிடுகின்றனர்.
இவ்வாதம் அரபி மொழியில் உள்ள சொல்லுக்குரிய சரியான பொருளை அறியாததால் வந்த வினையாகும்.
அவர்கள் “நேற்று’ என்று மொழி பெயர்த்த இடத்தில் அரபி மூலத்தில் “அம்ஸி’ என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இதற்கு தமிழில் பரவலாக நேற்று என்று மொழி பெயர்க்கப்படுகிறது. இதனுடைய சரியான பொருள் என்ன? அரபி அகராதி நூலில் பார்வையிடுவோம்.
“ஒரு இரவைக் கொண்டு கடந்து விட்ட நாள்” (அல்காமூஸுல் முஹீத்).
நடப்பில் உள்ள நாளுக்கு முந்திய நாள், சில நேரங்களில் பொதுவாகக் கடந்து விட்டவைகளையும் குறிக்கும். (அல் முஃஜமுல் வஸீத்)
இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், வானிலிருந்து நாம் இறக்கிய தண்ணீரைப் போன்றது. மனிதர்களும், கால்நடைகளும் உண்ணுகிற பூமியின் தாவரங்களுடன் அத்தண்ணீர் கலக்கிறது. முடிவில் பூமி அலங்காரம் பெற்று கவர்ச்சியாக ஆகிறது. அதன் உரிமையாளர்கள் அதன் மீது தமக்குச் சக்தியிருப்பதாக நினைக்கும் போது நமது கட்டளை இரவிலோ, பகலிலோ அதற்கு (பூமிக்கு) கிடைக்கிறது. உடனே நேற்று அவ்விடத்தில் இல்லாதிருந்தது போல் அறுக்கப்பட்டதாக அதை ஆக்கினோம். சிந்திக்கிற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம்.
இவ்வசனத்தில் நேற்று என்று மொழிபெயர்த்த இடத்தில் “அம்ஸி’ என்ற சொல்லே இடம் பெற்றுள்ளது. இதற்கு 24 மணி நேரத்திற்கு முந்திய நாள் என்று பொருள் அல்ல! கடந்த நாட்கள் என்ற பொருளே கொள்ள வேண்டும். அதுவே இவ்விடத்தில் பொருத்தமாக அமையும். நேற்று என்ற தமிழ்ச் சொல்லும் கடந்து விட்டவைகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. “நேற்று எப்படி இருந்தான்? இன்று எப்படி இருக்கிறான்?’ என்று தமிழ் வழக்கில் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். இந்த நேற்றுக்கு 24 மணி நேரத்திற்கு முந்திய நாள் என்று பொருளில்லை என்பதை நாம் அறிவோம்.
இதைப் போன்று அரபி மொழியில் “அம்ஸி’ என்ற சொல் ஒரு இரவு கடந்த நாளையும் குறிக்கவும், பொதுவாகக் கடந்து விட்ட காலத்தை குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
இதன் அடிப்படையில் இரவில் பிறை பார்த்தவர்கள் ஒரு இரவைக் கடந்து வந்து கூறியுள்ளதால் “அம்ஸி’ நேற்று என்று பயன்படுத்தியுள்ளனர்.
அவர்களின் ஆதாரம் : 3
مسند أحمد مخرجا (8/ 456)
“மஃரிப் தொழுகை பகலின் வித்ர். எனவே இரவிலும் வித்ரு தொழுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ((அஹ்மத்: 4847))
இந்த ஹதீஸிலிருந்தும் நாளின் ஆரம்பம் பஜ்ர் என்று தெளிவாகிறதாம். இந்த ஹதீஸில் எந்த இடத்தில் நாளின் ஆரம்பம் பஜ்ர் என்று சொல்லப்பட்டுள்ளது. மஃரிப் தொழுகையின் ரக்அத் ஒற்றைப் படையில் இருப்பதால் அது பகலின் வித்ர் என்றும் இரவில் அவ்வாறு இல்லாததால் வித்ர் தொழுங்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதைத் தவிர இந்த ஹதீஸில் வேறு எதுவும் இல்லை.
அவர்களின் ஆதாரம் : 4
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். (5:3) என்ற வசனம் நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அரஃபாவில் நின்று கொண்டிருந்த போது இறங்கியது.
((புகாரி: 45) , முஸ்லிம்).
அரஃபா நாள் வெள்ளிக் கிழமை மாலை இறங்கியது. ((அஹ்மத்: 188))
வெள்ளிக் கிழமை இரவு நாங்கள் அரஃபாவில் இருக்கும் போது இறங்கியது. ((நஸாயீ: 3002))
இச்செய்தி அறிவிக்கும் உமர் (ரலி) அவர்கள் அன்றைய நாளை, மாலையை, இரவை, வெள்ளிக் கிழமை அரஃபா மாலை, வெள்ளிக் கிழமை இரவு எனக் கூறியதிலிருந்து நாள் பஜ்ரிலிருந்து ஆரம்பமாகிறது என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாக(?) விளங்குகிறது என்று கூறுகின்றனர்.
பலவிதமாக அறிவிக்கப்பட்ட ஹதீஸ்களைத் தனக்குச் சாதகமாக வரிசைப்படுத்திக் கொண்டு முதலில் பகல் பின்னர் இரவு என்று கூறி மிகப் பெரிய ஆதாரமாக எடுத்துக் காட்டுகிறார்.
“முதலில் இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்’ (5:3) என்ற வசனம் அரஃபா பகலில் இறங்கியதா? அல்லது மாலையில் இறங்கியதா? அல்லது இரவில் இறங்கியதா? என்பதை முதலில் அவர்கள் தெளிவுபடுத்தட்டும். அனைத்து செய்திகளும் உமர் (ரலி) வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்க.
மாறுபட்ட செய்திகளை ஒன்றோடு ஒன்றை இணைத்து தனக்கு சாதகமாகப் பயன்படுத்துவது சரியல்ல.
ஒற்றுமை கோஷம்
பிறையை முன்கூட்டியே கணித்தால் எல்லோரும் ஒன்றாகவும் அமைதியாகவும் பெருநாள் கொண்டாட முடியும் என்ற வாதம் தவறானது. பிறையைக் கணிப்பது கூடாது என்று நபிமொழி தடை செய்கின்றது. எனவே பாவமான ஒரு காரியத்தில் சமுதாயத்தை ஒன்றுபடச் சொல்வதை ஏற்க முடியாது.
நமது பகுதியில் வேறுபட்ட நாட்களில் பெருநாள் கொண்டாடப்படுவதற்கு அவரவர் மனோ இச்சையின் அடிப்படையில் செயல்படுவதே காரணமாகும். நமது பகுதியில் பிறையைக் கண்ணால் பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்ற சரியான நிலைபாட்டிற்கு நாம் அனைவரும் வந்துவிட்டால் நமது பகுதியில் ஒரே நாளில் பெருநாள் நடைபெறும்.
இதற்கு மாற்றமாக சிலர் சவுதிப் பிறையையும் சிலர் சர்வதேச பிறையையும் சிலர் கணிப்பு அடிப்படையில் செயல்படுவாதாலே குழப்பமும் வேறுபாடும் ஏற்படுகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அறிவியல் அறிவு இல்லாத காரணத்தால் பிறையைக் கண்ணால் பார்த்தார்கள் என்று கூறி கணிப்பு முறையைத் திணிக்கப்பார்க்கிறார்கள்.
பிறையைக் கண்ணால் பார்க்க வேண்டும் என்பதற்கு நபி (ஸல்) அவர்கள் கண்ணால் பார்த்துத் தான் செயல்பட்டார்கள் என்ற வாதத்தை நாம் வைக்கவில்லை.
பிறையை கண்ணால் பார்த்தே முடிவு செய்ய வேண்டும். அதைக் கண்ணால் பார்க்காமல் முடிவு செய்யக் கூடாது என்ற உத்தரவை அவர்கள் கியாமல் நாள் வரைக்கும் வரும் உலக மக்களுக்கு இட்டுள்ளார்கள் என்பதே நமது வாதம்.
கண்ணால் பார்க்க வேண்டும் என்று நபியவர்கள் உத்தரவிட்ட பிறகு இங்கே கணிப்பைக் கொண்டுவந்தால் இறைத்தூதரின் உத்தரவு புறக்கணிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.
நபியவர்களுக்கு அறிவியல் அறிவு இல்லாத காரணத்தினால் தான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்கள் என்று இவர்கள் கூறப் போகின்றார்களா? அப்படி இவர்கள் கூறினால் நிச்சயமாக இவர்கள் இறைவனையும் இறைத்தூதரையும் இழிவுபடுத்தியவர்களே.
நபி (ஸல்) அவர்கள் மார்க்க அடிப்படையில் எந்த ஒரு கட்டளையை இட்டாலும் அது அவர்களின் சுயக்கருத்தல்ல. மாறாக அதுவும் இறைவனிடமிருந்து அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டதே. நபியவர்களுக்கு அறிவியல் அறிவு இன்றி இவ்வாறு கூறிவிட்டார்கள் என்றால் அதன் பொருள் அல்லாஹ் அறிவியல் அறிவின்றி இவ்வாறு கூறிவிட்டான் என்பதாகும்.
அல்லாஹ் அவனை நாம் வணங்குவதற்கு ஒரு வழியைக் காட்டுகிறான். அவன் காட்டிய வழியில் தான் அவனை வணங்க வேண்டுமே தவிர நமது மனோ இச்சைப்படி வேறு வழிகளைத் தேர்வு செய்வது வழிகேடாகும். அப்படி இறைவன் காட்டிய வழியை புறக்கணித்து வேறு வழியை தேடினால் அந்த வணக்கத்தை இறைவன் ஏற்றுக்கொள்ளவே மாட்டான்.
மொத்தத்தில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடப்பதை விட்டுவிட்டு அவனுடைய அறிவில் குறைகண்டு அல்லாஹ்வுக்கே அறிவியலை கற்றுக் கொடுக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக,
நார்வே பிரச்சனை
பிறையைக் கணிக்கலாம் என்பதற்கு நார்வே போன்ற நாட்டை இவர்கள் குறிப்பிடுவதாகக் கூறினீர்கள். அந்நாட்டில் ஆறு மாத காலம் இரவு இன்றி பகலாக மட்டும் இருப்பதால் இங்கு இவர்களால் பிறையைக் கண்ணால் பார்க்க முடியாதே. கணிக்கத் தான் வேண்டும். எனவே நமது நாட்டிலும் பிறையைக் கணித்துக் கொள்ளலாம் என்பது இவர்களின் வாதம்.
அடிப்படையான அறிவு இல்லாத காரணத்தால் இந்த வாதத்தை முன்வைத்துள்ளனர்.
மார்க்க சட்டதிட்டங்கள் யாவும் அதைச் செயல்படுத்துவதற்குரிய சூழல் இருந்தால் மட்டுமே கடமையாகும். செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால் அப்போது அதற்கேற்றவாறு வேறோரு வழிகாட்டலை மார்க்கம் கூறும். இந்த அடிப்படையை இவர்கள் விளங்கியிருந்தால் தங்களது தவறான கொள்கைக்கு நார்வேவை ஆதாரமாகக் காட்டியிருக்கமாட்டார்கள்.
உதாரணமாக பன்றி இறைச்சி உண்ணக்கூடாது என்று மார்க்கம் கூறுகின்றது. பன்றி இறைச்சியைத் தவிர வேறு எந்த உணவும் ஒருவருக்குக் கிடைக்காவிட்டால் அதை உண்ண அவருக்கு மார்க்கம் அனுமதிக்கின்றது. இப்போது அறிவிலியான இந்தக் கூட்டத்தினர் உணவு கிடைக்காதவர்கள் பன்றி இறைச்சியைத் தானே உண்ண முடியும். எனவே எல்லோரும் பன்றி இறைச்சியை உண்ணலாம் என்று கூறினால் அது எவ்வளவு பெரிய மடமைத்தனமோ அது போன்றே இவர்களின் இவ்வாதம் அமைந்திருக்கின்றது.
நம் நாடு உட்பட பெரும்பாலான நாடுகளில் பிறையைக் கண்ணால் பார்க்கும் சூழல் இருக்கின்றது. நார்வே மட்டும் ஆறுமாத காலம் இதற்கு விதிவிலக்காக இருக்கின்றது. பிறை கண்ணுக்குத் தென்படும் சூழல் இருந்தாலே பிறையைக் கண்ணால் பார்க்க வேண்டும் என்ற சட்டம் வரும். பிறை கண்ணுக்குத் தெரியாவிட்டால் அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்களே நமக்கு கூறிவிட்டார்கள்.
“பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: (புகாரி: 1906) , 1907, (முஸ்லிம்: 1961))
பிறையை கண்ணால் பார்ப்பதற்கு மேகமூட்டம் குறுக்கிட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ள வேண்டும் என்று இந்த செய்தியில் நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.