10) வேண்டாம் சிலைவழிபாடு

நூல்கள்: இப்ராஹீம் நபியின் பிரார்த்தனைகளும் அவை தரும் படிப்பினைகளும்

 

وَاحْنُبْنِي وَبَنِيَّ أَنْ نَعْبُدَ الْأَصْنَامَ

“என்னையும் என் வழித்தோன்றல்களையும் சிலைகளை வணங்குவதை விட்டும் தூரமாக்குவாயாக!” என இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!

(அல்குர்ஆன்: 14:35)

இந்தப் பிரார்த்தனை ஏகத்துவத்தை எடுத்துச் சொல்வதுடன், அல்லாஹ்வின் தனித்தன்மையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஒரு நபியாகவே இருந்தாலும் தானாக நேர்வழியை நோக்கிப் பயணிக்கமுடியாது, அதற்கு அல்லாஹ்வின் உதவிதான் அவசியமானது என்பதைக் கற்றுத் தருகிறது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விசயம் என்னவெனில் இப்ராஹீம் நபியைப் பொறுத்தவரை அவர்கள் உண்மை முஸ்லிமாக வாழ்ந்தார்கள். ஒரு கட்டத்திலும் இணைவைக்கவில்லை. சிலை வழிபாடும் செய்யவில்லை, மாறாக சிலை வழிபாட்டிற்கு எதிராகக் கடும் பிரச்சாரத்தை செய்தார்கள்.

பின்னர் எதற்காக அவர்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்? நம்மைப் பொறுத்தவரை ஒரு நபி இணை வைப்பாரா என்ற எண்ணம் எழக்கூடும். ஆனால் நபிமார்களின் எண்ணம் அவ்வாறு இருக்கவில்லை.

“ஆதமின் மக்களின் (மனிதர்களின்) உள்ளங்கள் அனைத்தும் அளவற்ற அருளாளனின் இரு விரல்களுக்கிடையே ஒரேயோர் உள்ளத்தைப் போன்று உள்ளன. அதைத் தான் நாடிய முறையில் அவன் மாற்றுகிறான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: (முஸ்லிம்: 5161)

நபிமார்களுக்கு இறைவன் செய்த எச்சரிக்கையை அவர்கள் தன்னுள்ளத்தில் ஆழப் பதிய வைத்தவர்களாக இருந்ததன் காரணமே இப்பிரார்த்தனை.

“நீர் இணைவைத்தால் உமது நற்செயல் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தோரில் ஆகிவிடுவீர்” என உமக்கும், உமக்கு முன்னிருந்தோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன்: 39:65)

இப்ராஹீம் நபியின் பிரார்த்தனையை இவ்வசனத்தின் வெளிப்பாடாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. அல்லாஹ்வின் நாட்டம் இல்லையென்றால் நாம் வழிகேட்டிற்குச் சென்று விடுவோம், அவ்வாறு சென்று விட்டால் நம்முடைய நன்மைகள் அனைத்தும் அழிந்து நாசமாகிவிடுமே என்பதை உளப்பூர்வமாக உணர்ந்திருந்தார்கள். ஆனால் நமது நிலை என்ன? நாம் தான் இன்று ஏகத்துவவாதியாக இருக்கின்றோமே இவ்வாறு இறுதிவரை இருந்துவிடுவோம் என்று நினைக்கின்றோம். ஒரு கட்டத்திலும் இவ்வாறு நினைத்துவிடக் கூடாது.

ஏனெனில் நல்லவர்களாக இருந்த, கொள்கையில் உறுதியாக இருந்த எத்தனையோ நபர்கள் இறுதியில் கொள்கை எதிரியாக வழிகேட்டிற்குச் சென்று விட்டார்கள். ஏன்? இப்லீஸும் கூட ஆரம்பத்தில் நல்லவனாகத்தானே இருந்தான். பிறகு தான் வழிகேட்டிற்குச் சென்றுவிட்டான். இந்த அவல நிலைக்கு நாமும் தள்ளப்பட்டுவிடக் கூடாது என்றால் இப்ராஹீம் நபியைப் போன்று நாமும் ஒவ்வொரு பிரார்த்தனையின் போதும் இணைவைப்பை விட்டுப் பாதுகாப்பு தேடவேண்டும்.

நாம்தான் இணைவைக்கவில்லை. இணைவைப்பிற்கு எதிராகக் களம் காண்கிறோமே என்று பொடும்போக்காக இருந்துவிடாமல் அல்லாஹ்விடம் அதிகம் துஆ செய்யவேண்டும்