08) வணக்கசாலியாக ஆக்கக் கோரி..
என் இறைவனே! என்னையும், என் வழித்தோன்றல்களையும் தொழுகையை நிலை நிறுத்தக் கூடியவர்களாக ஆக்கிவைப்பாயாக!
நபி வணக்கத்தில் ஒருபோதும் குறைவைக்க மாட்டார். இப்ராஹீம் நபியும் அவ்வாறுதான் அனைத்திலும் அல்லாஹ்விற்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள். நம்மைப்போன்று இல்லாமல் மாபெரும் வணக்கசாலியாக இருந்தும் இப்ராஹீம் நபியவர்கள் நாம் தான் வணக்கத்தை வழமையாகச் செய்து வருகிறோமே! இதற்காக அல்லாஹ்விடம் ஏன் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அலட்சியமாக இருந்துவிடாமல் நாம் இவ்வாறு செய்வதற்கு அல்லாஹ்வின் நாட்டம் தான் அவசியம் என்பதை உணர்ந்துதான் இதுபோன்ற பிரார்த்தனையைக் கேட்கிறார்கள். ஏனெனில் நாம் நினைத்தையெல்லாம் நம்மால் செய்துவிடமுடியாது.
இன்றும்கூட நாம் பார்க்கலாம் தொழ வேண்டும். வணக்கங்களைச் செய்யவேண்டும்.
நல்லவனாக வாழவேண்டும் என்றெல்லாம் பலர் நினைக்கின்றோம். என்றாலும் நம்மால் அவ்வாறு இருக்க முடியவில்லையே! ஏன்? இதற்கான காரணம் என்ன? அல்லாஹ்வின் நாட்டம் இல்லை என்பதைத் தவிர வேறெதுவுமில்லை. இதுபோன்ற நிலையிலிருந்து இந்தப் பிரார்த்தனை நம்மைக் காக்கும்.
ஆனால் இவ்வாறான பிரார்த்தனைகள் நம்மில் எத்தனை நபர்களிடம் உள்ளது? இவ்வாறான பிரார்த்தனைகளை செய்தால்தானே அதன் மூலமாவது நாம் வணக்கசாலியாக மாறமுடியும்! இன்று மார்க்கத்தை அறிந்தவர்கள், அதை மக்களுக்கு அறிவிப்பவர்கள் கூட வணக்கத்தில் பின்தங்கி இருப்பதைப் பார்க்க முடிகிறது.
எனவே இதையெல்லாம் கவனத்தில் கொண்டு இதுபோன்ற பிரார்த்தனையை அலட்சியப் படுத்திவிடாமல் அல்லாஹ்விடம் அதிகமாகக் கேட்டால் நாமும் இன்ஷா அல்லாஹ் மாபெரும் வணக்கசாலியாக மாறிவிடலாம்.