05) பிள்ளையை வேண்டி
“என்இறைவனே! எனக்கு வழித்தோன்றலாக) நல்லவரை அளிப்பாயாக!” (என்று இப்ராஹீம் இறைஞ்சினார்.)
உலகில் ஒரு மனிதருக்கு மிகப்பெரிய அருட்கொடைகளில் ஒன்றுதான் பிள்ளை பாக்கியமாகும். வாழ்க்கையின் அர்த்தமாக பிள்ளை பாக்கியத்தைத் தான் மனிதார்கள் பார்க்கிறார்கள். நமது வாழ்க்கை நம்மோடு முடிவடையாமல், வாழையடி வாழையாக வளர்ந்து கொண்டே இருப்பதற்கும், நமது வாழ்வின் ஒரு திருப்புமுனையாக இருப்பதற்கும் முக்கியக் காரணம் பிள்ளைப் பாக்கியம்தான்.
ஒருவனுக்குப் பிள்ளை இல்லையெனில் அவர் தன் வாழ்வையே அர்த்தமற்றதாக நினைக்கிறார். இந்த அளவிற்கு மனிதனால் ஏக்கத்துடன் எதிர்பார்க்கப்படும் இவ்வருட்கொடையை அனைவருக்கும் வழங்கவில்லை என்றே அல்லாஹ் கூறுகிறான்.
வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன், தான் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண் (பிள்ளை)களைக் கொடுக்கிறான். தான் நாடியோருக்கு ஆண் (பிள்ளை)களைக் கொடுக்கிறான். அல்லது ஆண் (பிள்ளை)களையும், பெண் (பிள்ளை)களையும் சேர்த்தே கொடுக்கிறான். தான் நாடியோரை மலடாகவும் ஆக்கிவிடுகிறான்.
இறைவன் தான் நாடியவாறு சிலருக்குப் பிள்ளைகளைக் கொடுத்து சோதிக்கின்றான். இன்னும். சிலருக்குப் பிள்ளைகளைக் கொடுக்காமல் சோதிக்கின்றான். சோதனைகளில் அதிகமான மக்கள் தோல்வியைதான் தழுவுகின்றனர். அல்லாஹ்வின் மீது அவநம்பிக்கை கொண்டு விடுகின்றனர். பொறுமையையும் இழந்து விடுகின்றனர். ஆனால் அவ்வாறில்லாமல் இந்தச் சோதனையின் போதும் இப்ராஹீம் நபி சோர்ந்து விடாமல் அல்லாஹ்விடம் தனக்கு ஓர் வாரிசைக் கேட்கிறார்கள்.
இன்னும் பலருக்குப் பிள்ளைகள் இருந்தாலும் அந்தப் பிள்ளைகள் பெற்றோர்களுக்கு உதவியாகவோ,உறுதுணையாகவோ இல்லாமல் பொறுப்பற்ற பிள்ளைகளாக இருக்கின்றனர். பெற்றோர்களைப் பேணி, பாதுகாத்து. பராமரிக்கும் பொறுப்புள்ள பிள்ளைகளாக தங்களின் பிள்ளைகள் இல்லாததை நினைத்து இப்படிபட்ட பிள்ளையை நான் ஏன் பெற்றேன்? என்ற சிந்தனைக்கு வருமளவிற்கு சில பிள்ளைகளின் நிலையுள்ளது.
பிள்ளைகள் இருந்தும் அரவணைக்க யாருமின்றி பெற்றோர்கள் அனாதைகளாக ஏராளம் உள்ள உள்ளனர். அதேபோன்று எத்தனையோ தாய், தந்தைகள் நன்மக்களாக, நற்குணமுடையவர்களாக இருந்தபோதும் அவர்களின் நற்குணமுள்ளவர்களாகவோ, நல்லவர்களாகயோ இருப்பதில்லை. பெற்றோரின் பெயர்களையும் சேர்ந்து நாசம் செய்துவிடுகின்றனர். இவர்கள்தான் தன் பிள்ளை என்று பிறரிடம் பகிர அவமானப்படும் அவலத்திற்கு ஆளாகிவிடுகின்றனர். பிள்ளை என்றாலே தொல்லை என்னுமளவிற்கு நம் சமூகத்தின் நிலையுள்ளது.
இதுபோன்ற தீய பிள்ளைகளுக்குப் பெற்றோராக இருப்பதில் நபிமார்களும் விதிவிலக்கல்ல எனலாம். உதாரணமாக நூஹ் நபியின் பிள்ளையை எடுத்துக்கொள்ளலாம்.
பிள்ளைகள் இருப்பதினாலேயே பெற்றோர்கள் பல சிரமத்திற்கு உள்ளாகும் நிகழ்வுகளையும் கண்கூடாகவே பார்க்கின்றோம். ஆதலால் தான் இப்ராஹீம் நபி தனக்குப் பிள்ளையைக் கேட்கும்போதும் கூட அந்தப் பிள்ளை, நல்லப் பிள்ளையாக இருக்க வேண்டும் என இறைவனிடம் இறைஞ்சுகிறார்கள்.
சிலர் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்குத் தாமதமானால் அதை நினைத்தே ஏங்கி தமது வாழ்க்கையை இழக்கின்றார்கள். இதுபோன்ற சோதனையின் போது மனம் தளர்ந்து விடாமல் நாம் பொறுமையோடு அவற்றை எதிர்கொள்ள வேண்டும்.
(ஒரு விஷயம் உங்களுக்கு நன்மையாக இருக்கும் நிலையில் நீங்கள் வெறுக்கக் கூடும். ஒரு விஷயம் உங்களுக்குத் தீயதாக இருக்கும் நிலையில் அதை நீங்கள் விரும்பக்கூடும். அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
நமக்கு எது நல்லது, கெட்டது என்பதை நம்மைப் படைத்த அல்லாஹ் நன்கறிவான். நாம் அல்லாஹ்வின் மீது பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அல்லாஹ்விடம் இப்ராஹீம் நபியைப் போன்று அதற்காக பிரார்த்தனை செய்துவிட்டு, நமது இலக்கை நோக்கி நம் பயணத்தை தொடர வேண்டும். இதை நினைத்து. நினைத்து நமது வாழ்வை வினடித்து விடக்கூடாது.
இதுபோன்ற தருணங்களில் தனது மாமியாரால், இன்னும் பிற மக்களால் பெண்கள் மிகுதியான துன்பத்திற்கும். மனக் கவலைக்கும் உள்ளாக்கப்படுகின்றார்கள். இந்த நேரத்தில் கணவன்மார்கள்தான் தங்களின் மனைவிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பிள்ளைகள் இல்லை என்பது கணவன், மனைவி என்ற இன்பமானவாழ்விற்கு ஒருபோதும் இடையூறாகாது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
பிள்ளை இல்லை என்பதாலேயே பிரச்சனைகள் வருவதை பார்க்கின்றோம். ஆனால் பிள்ளைகள் இன்றியும் பிரச்சனையில்லை என்று நமக்கு முன்னுதாரணமாக முதுமை வரை வாழ்ந்தவர்கள் தான் இப்ராஹீம் (அலை) அவர்கள்.
இன்று சிலர், எனக்குப் பிள்ளையில்லையே! சமூகத்தில் தலைகாட்ட முடியாது என்ற எண்ணத்தில் எப்படியாவது பிள்ளை வேண்டும் என்று நினைத்து இணைவைப்புக் காரியங்களில் தள்ளப்படுவதை பார்க்கின்றோம். தர்ஹாக்களுக்குச் சென்று தொட்டில் சுட்டிப் போடுவது, அவ்லியாக்களிடம் உதவி தேடுவது போன்ற இணைவைப்பின் பக்கம் மக்கள் சென்றுவிடுகிறார்கள். பிள்ளை பாக்கியத்தைத் தருவது அல்லாஹ்வின் அதிகாரம் அல்லாஹ் அல்லாதவர்களிடம் கேட்பது மாபெரும் இணைவைப்பு காரியம் என்பதைச் சிந்திக்க மறந்து விட்டார்கள்.
ஆனால் அல்லாஹ்வின் தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களோ தனக்கு பிள்ளை வேண்டும் என்று அல்லாஹ்விடம் தான் கேட்கிறார்கள். ஒரு நபியவர்களே அல்லாஹ்விடம்தான் கேட்கிறார்கள் என்றால் நாம் யாரிடம் கேட்க வேண்டும்? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிள்ளைகளின் விஷயத்தில் தடுமாறும் பெற்றோர்களுக்கு இப்ராஹீம் நபியின் இந்தப் பிரார்த்தனையில் சிறந்தப் பாடம் உள்ளது.