01) முன்னுரை
மனிதர்களுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் பிரார்த்தனை என்பதும் மிக முக்கியமான ஓர் அருட்கொடையாகும். தனது எண்ணற்ற கோரிக்கைகளையும், தேவைகளையும் மனிதன் பிரார்த்தனையின் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. பிரார்த்தனையால் நமது உள்ளம் ஆசுவாசமடைகிறது. நமது மனக் குமுறல்களையும் இறைவனிடம் கொட்டித் தீர்க்க முடிகிறது.
எல்லா இறைத்தூதர்களும் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களின்போது அவர்கள் முதலில் எடுத்துக் கொண்ட ஆயுதமும் அருமருந்தும் இந்தப் பிரார்த்தனையே!
இறைத்தூதர்களின் பிரார்த்தனையில் இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை மிகவும் பிரசித்தி பெற்றதும், அற்புதமானதும், அழகிய படிப்பினையுடையதுமாகும். எனவே அதைப் பற்றி இந்தக் நூலில் காண்போம்.
இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்வு தரும் படிப்பினைகளில் அவர்கள் செய்த பிரார்த்தனையும் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. இறைவனிடமிருந்து ஏராளமான சிறப்புகள் அவர்களுக்குக் கிடைத்ததற்கும் அவர்களின் பிரார்த்தனைக்குப் பெரும்பங்கு உண்டு.
இப்ராஹீம் நபியின் பிரார்த்தனைகளை நாம் படிக்கும்போது அது நம்மை மெய்சிலிர்க்கச் செய்கிறது. ஆச்சரியத்திற்கு உள்ளாக்குகிறது. நல்ல மனிதராக இருந்தாலும், நபியாக இருந்தாலும் ஏன்? வல்ல நாயனின் நண்பராகவே இருந்தாலும் நாம் நாடியதையெல்லாம் செய்துவிடமுடியாது; அல்லாஹ்வின் நாட்டம்தான் அனைத்திற்கும் அஸ்திவாரம் என இப்ராஹீம் நபியவர்கள் ஒவ்வொரு பிரார்த்தனையின் வாயிலாக நானும் அல்லாஹ்வின் அடிமையே என்பதை நம்மவர்களுக்கெல்லாம் ஆணித்தரமாக எடுத்துரைத்துப் பாடம் புகட்டுகிறார்கள்.
பிரார்த்தனை ஒரு வணக்கம் என மார்க்கம் கூறுகிறது. இந்த வணக்கத்திலும் இப்ராஹீம் நபி குறை வைத்திடவில்லை.
இப்ராஹீம் நபியவர்கள் பல சந்தர்ப்பங்களில் அல்லாஹ்விடம் அதிகமான பிரார்த்தனைகளை முன்வைத்தார்கள். அந்தப் பிரார்த்தனையின் மூலமாக அவர்களுக்கும். அவர்களது சமுதாயத்தார்களுக்கும் மட்டுமின்றி நமது சமூகத்தார்களுக்கும் கூட பல நன்மைகளைப் பெற்றுத் தந்துள்ளார்கள். இப்ராஹீம் நபியின் அந்த அற்புதமான பிரார்த்தனைகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.