ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான்
மக்கள் நேர்வழியை பெறுவதற்கு திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அழகிய உதாரணங்களை காட்டி மக்களுக்கு விளக்கியுள்ளார்கள். அவர்களின் உதாரணங்களில் படிப்பினைகளும் சிந்தனையைத் தூண்டும் விஷயங்களும் நிறைந்து காணப்படுகின்றன. அல்லாஹ்வும் இதே கருத்தை நமக்கு கூறியிருக்கின்றான்.
மக்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு அல்லாஹ் உதாரணங்களைக் கூறுகிறான். (அல்குர்ஆன்: 14:25) ➚
மனிதர்கள் சிந்திப்பதற்காக இந்த உதாரணங்களை அவர்களுக்குக் கூறுகிறோம். (அல்குர்ஆன்: 59:21) ➚
அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டும் சில உதாரணங்கள் நுட்பம் வாய்ந்தவையாக இருக்கும். அவற்றை அறிவுடையோர் மட்டுமே விளங்க முடியும்.
இந்த உதாரணங்களை மக்களுக்காகக் கூறுகிறோம். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதை விளங்க மாட்டார்கள். (அல்குர்ஆன்: 29:43) ➚
இவ்வாறு பல நுட்பான கருத்தக்களை உள்ளடக்கிய நபிகளாரின் உதாரணங்களில் நாம் பார்ப்போம்.
இலகுவான வழியில் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலர், பல குறுக்குவழிகளை கையாளுகின்றனர். அதில் அடுத்தனை ஏமாற்றி பொய்யான தகவல்களைக்கூறி ஏமாற்றவதை இன்றை உலகில் சர்வசாதரணமாக பார்க்க முடியும். இதில் சிலர் பல தடவை ஏமாந்தவர்கள் உண்டு, தொடர்ந்து ஏமாந்து கொண்டிருப்பவர்களும் உண்டு. இவர்களுக்கு அழகிய உதாரணத்தின் மூலம் நபிகளார் ஓர் அறிவுரை வழங்கியுள்ளார்கள்.
“இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹýரைரா (ரலி), நூல் : (புகாரீ: 6133), (முஸ்லிம்: 5317)
ஒரு முறை புற்றில் கைவிட்டு தீண்டப்பட்டவர் மீண்டும் அதே புற்றில் கை நுழைத்து தீண்டப்படக்கூடாது. முதல் தடவைதான் அதில் என்ன இருக்கிறது என்பது தெரியாது என்றாலும் இரண்டாம் முறை புற்றைப் பார்க்கும் போது அதில் நாகம் இருக்கலாம், அது நம்மைத் தீண்டிவிடலாம் என்று விழிப்புணர்வு பெற்று அதில் கைவிடாமல் இருக்கவேண்டும்.
அல்லாஹ்வை நம்பியவர்கள் அவனுக்குச் செய்யும் வணக்கங்களில் மட்டும் கவனமாக இருந்தால் மட்டும் போதாது, உலக விஷயங்களிலும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். புத்திசாலியாக இருக்கவேண்டும், ஏமாளியாக இருக்கக்கூடாது. எவ்வாறு புத்திசாலியாக இருக்கவேண்டும் என்பதற்கு நபிகளாரே சான்றாக இருக்கிறார்கள்.
ஒரு முறை கடைவீதியில் நபிகளார் சென்று கொண்டிருந்தபோது ஒரு கோதுமைக் குவியலைக் கண்டார்கள். அதில் ஏதோ ஏமாற்று வேலையை கடைக்காரர் செய்திருப்பதை உணர்ந்து அதை சோதனை செய்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைத் கடந்துசென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் “உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இதில் மழைச் சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!”‘ என்றார். அப்போது அவர்கள் ” ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக்கூடாதா? என்று கேட்டுவிட்டு ” மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்”‘ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹýரைரா (ரலி), நூல் : (முஸ்லிம்: 164)
தானியக் குவியலில் ஈரமானதை உட்பகுதியிலும் காய்ந்ததை வெளிப்பகுதியிலும் வைத்து விற்கும் போது வாங்குபவன் ஏமாற்றப்படுவான். காய்ந்த தானியமாக இருந்தால் நிறுத்தல் அளவையில் கூடுதலாக இருக்கும். ஈரமாக இருந்தால் நிறுத்தல் அளவையில் தானியம் குறைந்துவிடும். நீரின் அளவும் சேர்ந்து கொள்ளும், இதனால் வாங்குபவர் பாதிக்கப்படுவார். எனவே இது போன்ற நேரங்களில் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
“ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான்’ என்ற பழமொழி கவனத்தில் கொண்டு நாம் ஏமாறுவதை தவிர்க்கவேண்டும். குறிப்பாக ஒரு தடவை ஏமாந்தால் அதிலிருந்து படிப்பினை பெற்று திரும்பவும் ஏமாறாமல் இருக்கவேண்டும் இது இறைநம்பிக்கையாளின் பண்பாக “இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்” செய்தியிலிருந்த நபிகளார் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.