06) இப்ராஹீம் நபியின் அஞ்சாத பிரச்சாரம்
ஒருமுறை அந்த ஊரில் திருவிழா நடைபெறும் நாள் வந்தது .
எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் .
ஊரை விட்டு கொஞ்சம் ஒதுக்குப்புறமாக, திருவிழா நடைபெறும் இடம் தயாராக இருந்தது .
சாரை சாரையாக மக்கள் சென்று கொண்டிருந்தனர் .
இப்ராஹீம்(அலை) போகிறவர்களை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தார்.
திருவிழாவிற்காக சென்று கொண்டிருந்த ஒருவர் இப்ராஹிமைக் கவனித்தார்;
“ திருவிழாவிற்கு வரவில்லையா ?” என்றார்.
“ உடல் நலமில்லை “ என்றார் இப்ராஹீம்(அலை) .
சமாளிக்க வேறு எதுவும் சட்டென்று நினைவில் வரவில்லை .
அவரது தந்தையிடமும் கூட்டத்தாரிடமும் , “ நீங்கள் வணங்கிக் கொண்டிருக்கும் இந்த சிலைகள் எல்லாம் என்ன ?” என்றார் .
“முன்னோர்கள் எல்லாம் இவைகளைத் தானே வணங்கி வந்தார்கள் “ என்றார்கள்.
அந்த சிலைகள் தான் அவர்களைப் படைத்தன என்று கூறுவதற்கு அவர்களுக்குத் துணிவு வரவில்லை. அவர்களது வாய் தான் பதில் சொன்னதே தவிர , சிந்தனை பதிலளிக்கவில்லை .
“நீங்களும் , உங்கள் முன்னோர்களும் …..!!!!”
“எல்லோரும் பகிரங்கமான வழிகேட்டில் தான் இருக்கிறீர்கள்…!” இப்ராஹீம் சொன்னார்.
“என்ன சொல்கிறீர் ? உண்மையை தான் சொல்கிறீரா ?? விளையாடுகிறீரா ??” கேட்டவர்கள் ஆவேசப் பட்டார்கள் .
“விளையாடவெல்லாம் இல்லை..,
வானங்களுக்கும் பூமிக்கும் யார் இறைவனோ , அவன் தான் உங்கள் இறைவன் ; அவன் தான் அவற்றை படைத்தான் ; அதற்கு நானும் ஒரு சாட்சி !”
“ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக ! நீங்கள் சென்ற பிறகு சிலைகள் விசயத்தில் ஒரு தந்திரம் செய்யப் போகிறேன் “ என்றார்
அனைவரும் திருவிழாவுக்கு சென்று விட்டனர் .
இப்ராஹீம் ஒரு திட்டத்தோடு தான் காத்திருந்தார் போலும்,
சிறிது நேரம் கழித்து அங்கிருந்து எழுந்தார்…
ஊர் மக்களெல்லாம் படையலிட்டுப் , பூஜை செய்து, கொண்டாடி வரும் சிலைகளெல்லாம் அசைவற்று நின்று கொண்டிருந்தன .
மதிகெட்ட மனிதர்கள் செய்வதற்கு அந்த கற்கள் தான் என்ன செய்யும் ??
வெறும் கல்லாய் இருந்த தம்மைக் கடவுளாய் மாற்றிய குற்றம் மனிதர்களைத் தானே சேரும் ??
அவ்விடம் நிசப்தமாய் இருந்தது ;
சிற்பிகளால் நேர்த்தியாக செதுக்கப்பட்டு , அவைகளின் கண்களும் காதுகளும் தத்ரூபமாக இருந்தாலும் கூட , கேட்காத காதை வைத்துக் கொண்டு என்ன தான் செய்து விட முடியும் ?
இப்ராஹீம்(அலை) நுழைந்த சப்தத்தை அவைகள் உணரவில்லை .
வரிசையாய் நின்று கொண்டிருந்தவைகளின் எதிரில் வந்து பார்த்தார் இப்ராஹீம் . ஒரு சிலை மட்டும் பெரியதாக இருந்தது . மற்ற குட்டி சிலைகளுக்கு அது தான் தலைவன் போலும் ;
ஒரு இளைஞன் தம் எதிரில் நின்று கவனிப்பதைக் கூட அவற்றால் பார்க்க முடியவில்லை , கண்கள் திறந்து இருப்பது போன்று சிலை வடித்து என்ன பயன் ? பார்வை வேண்டுமே !?
அந்த சிலைகளின் முன் போய் நின்று கொண்டார் .
பொதுவாக சிலைகள் முன் உணவுப் பொருட்கள் படையல் செய்து வைத்திருப்பார்கள் தானே?, அங்கேயும் அப்படி வைத்திருந்தார்களோ என்னவோ , இப்ராஹீம் (அலை) அவற்றிடம் பேச ஆரம்பித்தார்.
“ சிலைகளே !!”
“என்ன ? சாப்பிட மாட்டீர்களா ????”
“என்ன ஆயிற்று உங்களுக்கு ??”
“எதுவும் பேச மாட்டேன் என்கிறீர்கள் ??”
அவை அப்படியே அசைவற்று நின்று கொண்டிருந்தன , எந்த பதிலும் சொல்லவில்லை .
பதில் சொல்வதற்கு வாய் வேண்டுமே ?
என்ன கேட்டார் என்று கூட அவற்றிற்கு புரியாது , காது கேட்க வேண்டுமே ?
இப்ராஹீம் (அலை) நேராக சென்றார் .
தனது வலது கையில் ஒரு கோடாரியை எடுத்து வந்தார் .
ஒவ்வொரு சிலையாக அடித்து உடைத்தார் .
அவை நொறுங்கி விழுந்தன .
கோடரியைக் கொண்டு போய் பெரிய சிலையின் அருகில் வைத்துவிட்டு வெளியேறினார் .
அலங்காரமாய் இருந்த இடம் அலங்கோலமாக ஆனது.