14) தடுக்கப்பட்ட இரகசியம்
திருக்குர்ஆன் எவ்வாறு இறைச் செய்தியாக அமைந்துள்ளதோ அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கமும் இறைச் செய்தி தான். அதையும் கண்டிப்பாக ஏற்று ஆக வேண்டும் என்பதை திருக்குர்ஆன் ஆதாரங்களுடன் நாம் நிரூபித்து வருகின்றோம். அந்த வரிசையில் மற்றோர் ஆதாரத்தைப் பார்ப்போம்.
இரகசியம் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோரை நீர் அறியவில்லையா?286 பின்னர் எதை விட்டும் தடுக்கப்பட்டார்களோ அதை மீண்டும் செய்கின்றனர். பாவம், வரம்பு மீறுதல், தூதருக்கு மாறுசெய்தல் ஆகியவற்றை இரகசியமாகப் பேசுகின்றனர். (முஹம்மதே!) அவர்கள் உம்மிடம் வரும்போது அல்லாஹ் எதை உமக்கு வாழ்த்தாக ஆக்கவில்லையோ அதை உமக்கு வாழ்த்தாகக் கூறுகின்றனர். நாம் கூறுவதற்காக அல்லாஹ் நம்மைத் தண்டிக்காமல் இருக்க வேண்டுமே என்று தமக்குள் கூறிக் கொள்கின்றனர். அவர்களுக்கு நரகமே போதுமானது. அதில் அவர்கள் எரிவார்கள். அது கெட்ட தங்குமிடம்.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இரகசியம் பேசினால் பாவம், வரம்பு மீறுதல், தூதருக்கு மாறுசெய்தல் ஆகியவை குறித்து இரகசியம் பேசாதீர்கள்! நன்மையையும், இறையச்சத்தையும் இரகசியமாகப் பேசுங்கள். யாரிடம் ஒன்று திரட்டப்படுவீர்களோ அந்த அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!
இவ்விரு வசனங்களும் கூறுவது என்ன என்பதைக் கவனமாகச் சிந்தியுங்கள்.
* இரகசியம் பேசுவது முதலில் அடியோடு தடை செய்யப்பட்டிருந்தது.
* இத்தடையை சிலர் மீறியதுடன் பாவமான காரியங்களை இரகசியமாகப் பேசினார்கள்.
* அறவே இரகசியம் பேசக் கூடாது என்ற தடை நீக்கப்பட்டு கெட்ட காரியங்களை இரகசியம் பேச வேண்டாம், நல்ல காரியங்களை இரகசியம் பேசலாம் என்றும் கட்டளை இதன் பின்னர் வந்தது,
இம்மூன்று செய்திகளையும் மேற்கண்ட (அல்குர்ஆன்: 58:8-9) ➚ வசனங்களில் இருந்து அறியலாம்.
குர்ஆன் மட்டும் தான் மார்க்க ஆதாரம்! நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியமில்லை என்பது உண்மையாக இருந்தால் ஏற்கனவே இரகசியம் பேசுவதை விட்டும் அடியோடு தடுக்கப்பட்டார்களே அந்தத் தடை குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் அடியோடு இரகசியம் பேசுவதைத் தடை செய்யும் ஒரு வசனமும் குர்ஆனில் இல்லை.
“இரகசியம் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோரை நீர் காணவில்லையா?” என்று திருக்குர்ஆன் கேட்பதிலிருந்து ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்ததை விளங்கலாம். அந்தத் தடையை நீக்கும் இவ்விரு வசனங்கள் தான் குர்ஆனில் உள்ளனவே தவிர தடை செய்யும் வசனங்கள் குர்ஆனில் இல்லை.
குர்ஆன் மட்டும் போதும் என்று வாதிடுவோர் குர்ஆனிலிருந்து இந்தத் தடையை எடுத்துக் காட்டவே இயலாது.
குர்ஆனில் தடுக்கப்படாத ஒன்று எப்படி தடுக்கப்பட்டதாக ஆகும்? இறைத் தூதர் தடை செய்ததைத் தான் இது குறிக்கின்றது என்பதைச் சாதாரண அறிவு படைத்தவர்களும் அறிந்து கொள்ளலாம்.
குர்ஆனில் அல்லாஹ் தடை செய்யாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தது குற்றமாக இருந்திருந்தால் – நீர் எப்படி தடை செய்யலாம்? என்று அல்லாஹ் பிடித்திருக்க வேண்டும். குர்ஆனில் கூறாததை நீர் எப்படி தடுக்கலாம்? என்று இறைவன் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்.
இவ்வாறு செய்யாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த தடையை மீறி நடந்து கொண்டவர்களைத் தான் அல்லாஹ் கண்டிக்கின்றான்.
திருக்குர்ஆன் மூலமாக மட்டுமன்றி இன்னொரு வஹீயின் மூலம் – இறைத்தூதரின் உள்ளத்தில் தன் கட்டளையைப் பதியச் செய்வதன் மூலம் – சட்ட திட்டங்களை வழங்குவான் என்று நாம் தக்க சான்றுகளுடன் குறிப்பிட்டது இதன் மூலம் மேலும் உறுதியாகின்றது.
குர்ஆன் மட்டும் போதும் என்று வாதிடுவோர் இத்தடையைக் குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்டவே முடியாது எனும் போது தங்கள் வாதம் குர்ஆனுக்கே எதிரானது என்பதை உணர வேண்டும்.
இன்னும் சொல்ல வேண்டுமானால் நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவையில்லை என்போர் குர்ஆன் இறைவேதமாக இருக்க முடியாது என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றனர்.
அல்லாஹ் இரகசியம் பேசுவதைத் தடுத்ததாகக் கூறுகின்றானே! அந்தத் தடை குர்ஆனில் இல்லையே! தடுக்காத ஒன்றை தடுக்கப்பட்டதாகக் கூறி குர்ஆன் தவறான தகவலைத் தருகின்றதே! இது எவ்வாறு இறைவேதமாக இருக்க முடியும் என்று முஸ்லிமல்லாதவர்கள் கேள்வி எழுப்பினால் நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவை என்று கூறக்கூடியவர்களால் தக்க பதில் கூற முடியும். அது தேவையில்லை என்போர் தக்க பதில் கூற முடியாது.
குர்ஆன் மீது சந்தேகத்தை எழுப்பும் வாதம் ஒரு போதும் சரியானதாக இருக்க முடியாது.
குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உள்ளது. அதுவும் மார்க்க ஆதாரம் தான் என்பதற்கு மேலும் பல சான்றுகள் உள்ளன.