13) நபிகளார் விதித்த தடையும் அல்லாஹ்வின் அங்கீகாரமும்
திருக்குர்ஆனில் கூறப்படாத பல சட்டங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு, அது திருக்குர்ஆனாலும் அங்கீகரிக்கப்பட்டது என்பதற்குச் சான்றாக “கிப்லா மாற்றம்’ பற்றிய செய்தியைக் குறிப்பிட்டோம்.
அதுபோல் அமைந்த மற்றொரு சட்டத்தைக் காண்போம்.
187. நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை.உங்களுக்கு நீங்கள் துரோகம் செய்து கொண்டிருந்தது அல்லாஹ்வுக்குத் தெரியும். எனவே அவன் உங்கள் மன்னிப்பை ஏற்று உங்களைப் பிழைபொறுத்தான். இப்போது (முதல்) அவர்களுடன் கூடுங்கள்!50 அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை (சந்ததியை)த் தேடுங்கள்! வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்! பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும்போது மனைவியருடன் கூடாதீர்கள்! இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை நெருங்காதீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காகத் தனது வசனங்களை அல்லாஹ் மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.
நோன்புக் கால இரவுகளில் மனைவியருடன் கூடுவது அனுமதிக்கப்பட்டுள்ளது என்று இவ்வசனம் துவங்குகின்றது. இவ்வசனம் அருளப்படுவதற்கு முன்னர் நோன்புக் காலத்தில் இரவுகளில் மனைவியருடன் கூடுவது அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
அனுமதிக்கப்படவில்லை என்று கூறுவதை விட தடை செய்யப்பட்டிருந்தது என்றே கூறலாம்.
“நீங்கள் உங்களுக்கே துரோகம் செய்து வந்தீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். எனவே உங்களை மன்னித்தான்” என்ற சொற்றொடரிலிருந்து இதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
இவ்வசனம் அருளப்படுவதற்கு முன் நோன்பின் இரவுகளில் மனைவியருடன் கூடுவது தடுக்கப்பட்டிருந்தாலும் அந்தத் தடையைப் பலராலும் கடைப்பிடிக்க இயலவில்லை. உணர்ச்சி வசப்பட்டு இத்தடையை சிலர் மீறவும் செய்தனர். “உங்களுக்கே நீங்கள் துரோகம் செய்ததை அல்லாஹ் அறிவான்” என்று இதைப் பற்றியே அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இதற்கு முன் இத்தடையை மீறியதை மன்னித்து விட்டதாகவும் கூறுகின்றான்.
அதைத் தொடர்ந்து “இப்போது (முதல்) அவர்களுடன் கூடுங்கள்” என்று கூறியதன் மூலம் இதற்கு முன் இது அனுமதிக்கப்பட்டதாக இருக்கவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகின்றான்.
இந்த வசனத்தை ஓரளவு ஈடுபாட்டுடன் கவனிக்கும் யாரும் இந்த உண்மைகளை அறிந்து கொள்ள முடியும்.
குர்ஆன் மட்டுமே போதும் என்று வாதிடக் கூடியவர்களிடம் – ஹதீஸ் தேவையில்லை என்று சாதிக்கக் கூடியவர்களிடம் – நாம் கேட்க விரும்புவது இதுதான்.
நோன்புக் கால இரவில் மனைவியருடன் கூடுவது இப்போது அனுமதிக்கப்பட்டுள்ளது என்று இவ்வசனம் கூறுகின்றது. ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்ததையும் கூறுகின்றது.
குர்ஆன் மட்டும் போதும் என்றால் அந்தத் தடை குர்ஆனில் இருக்க வேண்டும். “நோன்பாளிகளே! ரமளானின் இரவுக் காலங்களிலும் மனைவியருடன் சேரக்கூடாது” என்ற தடையை கியாமத் நாள் வரை குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்டவே முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருந்ததைத் தான் அல்லாஹ் தன்னுடைய தடையாக எடுத்துக் கொள்கின்றான். இப்போது முதல் அனுமதிக்கின்றேன் என்று கூறுகின்றான். இதற்கு முன் நடந்ததை மன்னிக்கிறேன் என்றும் கூறுகின்றான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மற்றொரு வஹீ மூலம் இவ்வாறு தடை செய்ய அதிகாரம் இல்லாதிருந்தால் அவர்கள் தடை செய்ததற்காக அவர்களை அல்லாஹ் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் கண்டிக்கவில்லை.
நீங்கள் இரவில் அவ்வாறு நடந்து கொண்டது குற்றமில்லை, முஹம்மது தவறாகக் கூறிவிட்டார் என்று இறைவன் கூறியிருக்க வேண்டும்.
அவ்வாறு கூறாமல் நீங்கள் செய்து கொண்டிருந்தது குற்றம் தான். நபி கட்டளையிட்டிருக்கும் போது அது குர்ஆனில் இல்லாவிட்டாலும் அதை மீறுவது பாவம் தான். என்றாலும் உங்களை நான் மன்னித்து விட்டேன் என்று கூறுகின்றான்.
இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீ குர்ஆன் மட்டுமல்ல. நபிகள் நாயகத்தின் உள்ளத்தில் இறைவன் போடுகின்ற கருத்துக்களும் வஹீ தான். அவற்றையும் பின்பற்றியாக வேண்டும் என்பதை இவ்வசனம் நிரூபிக்கின்றது.!