10) தூதரை நோக்கி வருதல்

நூல்கள்: அஹ்லே குர்ஆன் கூட்டத்தாரின் தவறான வாதங்களும் தக்க பதில்களும்

திருமறை குர்ஆனில் கூறப்பட்டதைப் பின்பற்றி நடப்பது எவ்வாறு அவசியமோ அது போல் திருக்குர்ஆனுக்கு விளக்கமாக அமைந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்றுவது அவசியமாகும் என்பதை திருக்குர்ஆனிலிருந்தே நாம் நிரூபித்து வருகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை ஏற்க மறுப்பவர்கள் உண்மையில் குர்ஆனைத் தான் நிராகரிக்கிறார்கள் என்பதையும் தெளிவுபடுத்தி வருகிறோம். திருக்குர்ஆனை மட்டுமின்றி நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதலையும் பின்பற்றித் தான் ஆகவேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகளை மேலும் பார்ப்போம்.

“அல்லாஹ் அருளியதை நோக்கியும், இத்தூதரை (முஹம்மதை) நோக்கியும் வாருங்கள்!” என்று அவர்களிடம் கூறப்பட்டால் நயவஞ்சகர்கள் உம்மை ஒரேயடியாகப் புறக்கணிப்பதை நீர் காண்கிறீர்.

(அல்குர்ஆன்: 4:61)

இவ்வசனத்தில் இறைவன் பயன்படுத்திய இரண்டு சொற்றொடர்களைக் கவனியுங்கள்.

1. அல்லாஹ் இறக்கியருளியதன் பாலும்

2. இத்தூதரின் பாலும்

என இரண்டு சொற்றொடர்களை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான்.

குர்ஆன் மட்டும் தான் அல்லாஹ் இறக்கியருளியது, அது மட்டுமே போதும் என்பது இறைவனின் நாட்டமாக இருந்தால் “இத்தூதரின் பாலும்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியிருக்க மாட்டான். எதையும் தெளிவாகப் பேசும் திருக்குர்ஆனில் வேண்டாத – குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய – ஒரு சொல்லும் பயன்படுத்தப்படவில்லை என்பதை முஸ்லிம்கள் நம்ப வேண்டும்.

ஹதீஸ்களை மறுப்போரின் கருத்துப்படி அல்லாஹ் இறக்கியருளியதின் பால் வாருங்கள் என்று கூறியவுடனேயே கூற வேண்டிய செய்தி முற்றுப் பெற்று விடுகின்றது. “இத்தூதரின் பாலும்” என்ற சொற்றொடரை அல்லாஹ் அர்த்தமில்லாமல் பயன்படுத்தி விட்டான் என்று அவர்கள் கூறுவார்களா?

அல்லாஹ் தேவையற்ற ஒரு சொல்லையும் பயன்படுத்தவே மாட்டான் என்று நம்பிக்கை கொண்டு குர்ஆனை மதிப்பவர்கள், “இத்தூதரின் பாலும்” என்று அல்லாஹ் கூறியதை உரிய முக்கியத்துவத்துடன் கவனத்தில் கொள்ளக் கடமைப்பட்டுள்ளனர்.

திருக்குர்ஆனின் பால் மக்கள் வரக் கடமைப்பட்டுள்ளது போல் அதற்கு விளக்கமாக நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போதனைகளின் பாலும் வர வேண்டும். அவ்வாறு வருவது தான் குர்ஆனைப் பின்பற்றுவதாக ஆகும் என்பதை இவ்வசனம் தெளிவாகவே பிரகடனம் செய்வதை ஏற்றுக் கொள்வார்கள்.

இதே வசனத்தில் இறைவன் பயன்படுத்தியுள்ள மற்றொரு சொற்றொடரும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

இறைவன் இறக்கியருளியதன் பாலும், இத்தூதரின் பாலும் அழைக்கப்பட்டால் இரண்டையும் புறக்கணிப்பார்கள் என்று இவ்வசனத்தில் கூறாமல் “உம்மைப் புறக்கணிப்பார்கள்” என்று இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். அவ்வாறு புறக்கணிப்பவர்கள் முனாஃபிக்குகள் என்றும் பிரகடனம் செய்கின்றான்.

அல்லாஹ் இறக்கியருளியதன் பால் வருவதை ஏற்றுக் கொண்டு, இத்தூதரின் பால் வர வேண்டும் என்ற அழைப்பை யார் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் தம்மை அஹ்லுல் குர்ஆன் என்று கூறிக் கொண்டாலும் இவர்களுக்கு அல்லாஹ் சூட்டும் பெயர் முனாஃபிக்குகள்.

அல்லாஹ் இறக்கியருளியதன் பால் மட்டும் வருவோம். இத்தூதரின் பால் வர மாட்டோம் எனக் கூறும் இவர்களுக்காகவே இவ்வசனம் அருளப்பட்டது போல் அற்புதமாக அமைந்திருப்பதை அவர்கள் கவனித்துத் திருந்திக் கொள்ள வேண்டும்.

இரண்டையும் புறக்கணிக்கிறார்கள் என்று கூறாமல்

அல்லாஹ் இறக்கியருளியதைப் புறக்கணிக்கிறார்கள் என்றும் கூறாமல்

உம்மைப் புறக்கணிக்கிறார்கள் என்று இறைவன் கூறியது ஏன் என்பதை இவர்கள் சிந்திப்பார்களானால் நிச்சயமாக உண்மையை உணர்வார்கள்.

இதே போல் (அல்குர்ஆன்: 5:104) வசனத்திலும் இரண்டு விஷயங்களின் பால் அல்லாஹ் அழைப்பு விடுக்கின்றான்.

“அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை நோக்கியும் வாருங்கள்!” என்று அவர்களிடம் கூறப்பட்டால் “எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்” என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா?

(அல்குர்ஆன்: 5:104)

அல்லாஹ் இறக்கியருளியதன் பாலும் மேலும் இத்தூதரின் பாலும் வாருங்கள் என்று இரண்டு அடிப்படைகளின் பால் இறைவன் அழைப்பு விடுக்கின்றான். இரண்டையும் ஒருசேர மறுப்பவர்கள் பற்றி இவ்வசனத்தில் சுட்டிக் காட்டுகின்றான்.

அல்லாஹ் இறக்கியருளியது மட்டுமின்றி அவன் தூதரின் பாலும் மக்கள் வரவேண்டும் என்பதும், இரண்டுமே இறைவனின் வஹீயை அடிப்படையாகக் கொண்டவை என்பதும் இவ்வசனங்களிலிருந்து சந்தேகமற நிரூபிக்கப்படுகின்றது.

திருக்குர்ஆனில் இன்னும் பல வசனங்களில், “அல்லாஹ்வின் பாலும், அவனது தூதரின் பாலும் அழைக்கப்பட்டால்” என்ற சொற்றொடர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

குர்ஆன் மட்டும் போதும் என்றிருந்தால், குர்ஆனைக் கொண்டு வந்து தருவது தவிர தூதருக்கு ஒரு வேலையும் இல்லை என்றிருந்தால் இத்தகைய சொற்களைப் பயன்படுத்தியிருக்க முடியாது.

அவர்களிடையே தீர்ப்பளிப்பதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும்போது அவர்களில் ஒரு பிரிவினர் புறக்கணிக்கின்றனர்.

(அல்குர்ஆன்: 24:48)

அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும்போது “செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்” என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

(அல்குர்ஆன்: 24:51)

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும்போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுயவிருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்பவர் தெளிவாக வழிகெட்டு விட்டார்.

(அல்குர்ஆன்: 33:36)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குப் பதிலளியுங்கள்! உங்களுக்கு வாழ்வளிக்கும் காரியத்திற்கு இத்தூதர் (முஹம்மத்) உங்களை அழைக்கும்போது அவருக்கும் (பதிலளியுங்கள்.) ஒரு மனிதனுக்கும், அவனது உள்ளத்திற்கும் இடையே அல்லாஹ் இருக்கிறான் என்பதையும், அவனிடமே ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன்: 8:24)

அல்லாஹ்வின் பால் அழைக்கப்படுவது என்றால் திருக்குர்ஆனின் பால் அழைக்கப்படுவது என்பது பொருள். தூதரின் பால் அழைக்கப்படுவது என்றால் என்ன பொருள்? அதற்கும் திருக்குர்ஆனின் பால் அழைக்கப்படுதல் எனப் பொருள் கொள்ள முடியுமா? திருக்குர்ஆனின் பால் அழைக்கப்படுவது பற்றி ஏற்கனவே கூறப்பட்டு விட்ட பின் அவ்வாறு பொருள் கொள்வது பொருத்தமாகாது.

நாம் ஏற்கனவே நிரூபித்துள்ளபடி குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீயின் பால் அழைக்கப்படுவதையே இவ்வாறு இறைவன் குறிப்பிடுகின்றான் எனப் பொருள் கொள்வதே சரியானதாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழி காட்டுதல்களைப் பின்பற்றியே ஆகவேண்டும் எனக் கூறும் வசனங்கள் இத்துடன் முடியவில்லை. இன்னும் பல வசனங்கள் உள்ளன.