07) நேர்வழி காட்ட வேதம் மட்டும் போதுமா ?

நூல்கள்: அஹ்லே குர்ஆன் கூட்டத்தாரின் தவறான வாதங்களும் தக்க பதில்களும்

மனிதர்களுக்கு நேர்வழி காட்ட வேதம் மட்டும் போதுமென்றால் – வேதத்தைக் கொண்டு வந்து மக்களிடம் கொடுப்பதைத் தவிர வேறு எந்தப் பணியும் அதிகாரமும் தூதர்களுக்கு வழங்கப்படவில்லை என்றால் – ஒரு சமுதாயத்திற்கு ஒரு காலகட்டத்தில் ஒரே ஒரு தூதர் தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் திருக்குர்ஆனை நாம் ஆராயும் போது பல்வேறு சமுதாய மக்களுக்கு ஒரு காலகட்டத்தில் பல தூதர்கள் கூட்டாக அனுப்பப்பட்டுள்ளதை அறிய முடியும்.

ஓர் ஊராரிடம் தூதர்கள் வந்தபோது நடந்ததை அவர்களுக்கு முன்னுதாரணமாகக் கூறுவீராக!

அவர்களிடம் இருவரைத் தூதர்களாக நாம் அனுப்பியபோது அவ்விருவரையும் பொய்யரெனக் கருதினர். எனவே மூன்றாமவரைக் கொண்டு வலுப்படுத்தினோம். நாங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் என்று அவர்கள் கூறினர்.

(அல்குர்ஆன்: 36:13-14)

இதைத் தொடர்ந்து மேலும் ஆறு வசனங்களிலும் இந்நிகழ்ச்சி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

வேதத்தைக் கொண்டு வந்து கொடுக்கும் வேலையோடு தூதர்களின் பணி முடிந்து விட்டது என்றால் முதலில் இரண்டு தூதர்களை அனுப்பியிருக்க வேண்டியதில்லை. எவ்வளவு தான் விளக்கிக் கூறிய பிறகும் மக்கள் ஏற்காத போது மேலும் ஒரு தூதரை அனுப்பியிருக்கத் தேவையேயில்லை.

இதிலிருந்து இறைத்தூதர்களின் பணி வேதங்களைக் கொண்டு வந்து கொடுப்பது மட்டுமல்ல என்பதை அறிந்து கொள்கிறோம்.

வேதத்தைக் கொண்டு வந்து மக்களிடம் கொடுப்பது மட்டுமின்றி அதற்கு விளக்கம் கூறுவதும், பிரச்சாரம் செய்வதும் இறைத்தூதர்களின் பணியாக இருந்தால் மட்டுமே ஒரு சமுதாயத்திற்கு ஒரு காலகட்டத்தில் மூன்று தூதர்களை அனுப்பியிருக்க முடியும்.

மக்களின் கடின சித்தம், விளங்கும் திறனில் குறைவு போன்ற காரணங்களால் ஒரு தூதரால் இதை முழுமையாகச் செய்ய முடியாது என்று இறைவன் கருதும் போது அதிகமான தூதர்களை அனுப்பி வைக்கிறான். ஒரு வகையில் பார்த்தால் வேதத்தை விட தூதர்களுக்கு அல்லாஹ் அதிகமான முக்கியத்துவத்தை அளித்திருக்கிறான் என்பதை விளங்கலாம்.

இது போன்று மற்றொரு காலகட்டத்தில் மூஸா நபியுடன் துணையாக ஹாரூன் நபியையும் அல்லாஹ் அனுப்பி வைத்தான்.

35. மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அவருடன் அவரது சகோதரர் ஹாரூனை உதவியாளராக ஏற்படுத்தினோம்.

(அல்குர்ஆன்: 25:35)

எனது குடும்பத்திலிருந்து என் சகோதரர் ஹாரூனை எனக்கு உதவியாளராக ஏற்படுத்து!

அவர் மூலம் என்னைப் பலப்படுத்து!

எனது பணியில் அவரையும் கூட்டாக்கு!

(அல்குர்ஆன்: 20:29-31)

“என் சகோதரர் ஹாரூன் என்னை விட தெளிவாகப் பேசுபவர். எனவே அவரை என்னுடன் உதவியாக அனுப்பிவை! அவர் என்னை உண்மைப்படுத்துவார். என்னை அவர்கள் பொய்யெரெனக் கருதுவார்கள் என்று அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்).

“உம் சகோதரர் மூலம் உமது தோளைப் பலப்படுத்துவோம். உங்களுக்கு தக்க சான்றைத் தருவோம். அவர்கள் உங்களை நெருங்க மாட்டார்கள். நமது சான்றுகளுடன் (செல்லுங்கள்!) நீங்கள் இருவரும், உங்களைப் பின்பற்றியோருமே வெற்றி பெறுபவர்கள்” என்று அவன் கூறினான்.

(அல்குர்ஆன்: 28:34-35)

“அவ்வாறில்லை! நமது சான்றுகளுடன் இருவரும் செல்லுங்கள்! நாம் உங்களுடன் செவியுற்றுக் கொண்டிருப்போம்” என்று (இறைவன்) கூறினான்.

ஃபிர்அவ்னிடம் சென்று “நாங்கள் அகிலத்தின் இறைவனுடைய தூதர்களாவோம். எங்களுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி விடு!”181 என்று கூறுங்கள்! (என்றும் இறைவன் கூறினான்.)

(அல்குர்ஆன்: 26:16)

இவ்வசனங்கள் ஒரு காலகட்டத்தில் ஒரு சமுதாயத்திற்கு இரண்டு தூதர்கள் அனுப்பப்பட்டதைக் கூறுவதுடன் அவ்வாறு அனுப்பப்பட்டதற்கான காரணத்தையும் கூறுகின்றன.

வேதத்தைக் கொண்டு போய் கொடுக்கும் வேலை மட்டும் தான் இறைத் தூதர்களுடையது என்றால் மூஸா (அலை) மட்டுமே அனுப்பப்பட்டிருப்பார்கள். அதுவே இந்தப் பணியைச் செய்திடப் போதிய ஏற்பாடாகும்.

மூஸா நபியவர்கள் தம்மால் தெளிவாக விளக்க முடியாது என்றும், தம்மை விட ஹாரூன் விளக்கமளிக்கும் திறன் அதிகம் பெற்றவர் என்றும் காரணம் கூறி, “ஹாரூனையும் என்னுடன் அனுப்பு’ என்று கேட்டார்கள். அல்லாஹ்வும் அவர் கூறிய காரணத்தை ஏற்றுக் கொண்டு மூஸா நபியை விட விளக்கும் திறமை பெற்றிருந்த ஹாரூன் நபியையும் துணையாக – தூதராக – அனுப்புகின்றான்.

மக்களுக்குப் புரியும்படி விளக்குவதும், அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நீக்குவதும் இறைத்தூதர்களின் பணியாக இருந்தது என்பதை இதிலிருந்து சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

இதை விட முக்கியமான மற்றொரு அம்சமும் மூஸா நபி வரலாற்றில் கவனிக்கத்தக்கதாகும்.

மூஸா நபியையும், ஹாரூன் நபியையும் அல்லாஹ் ஃபிர்அவ்னிடம் அனுப்பும் போது எந்த வேதத்தையும் அவர்களுடன் கொடுத்து அனுப்பவில்லை. சில அற்புதங்களைக் கொடுத்து பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு அனுப்பி வைத்தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தான் மூஸா நபிக்கு அல்லாஹ் வேதத்தை வழங்கினான்.

மூஸா நபியும் ஹாரூன் நபியும் ஃபிர்அவ்னிடமும் அவனது சமுதாயத்தினரிடமும் பிரச்சாரம் செய்கின்றார்கள். மூஸா நபிக்கும், மந்திரவாதிகளுக்கும் போட்டி நடத்தப்படுகிறது. அப்போதும் வேதம் அருளப்பட்டிருக்கவில்லை.

இஸ்ரவேல் சமுதாயத்தைக் கொடுமைப்படுத்துகின்றனர். மூஸா நபியும் அவர்களின் சமுதாயமும் அதைத் தாங்கிக் கொள்கின்றனர். அப்போதும் வேதம் அருளப்படவில்லை.

ஃபிர்அவ்னுடைய கூட்டத்தினர் பஞ்சம், கனமழை, வெட்டுக்கிளி, பேன், தவளை, இரத்தம் போன்றவற்றால் பலவிதமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போதும் வேதம் அருளப்பட்டிருக்கவில்லை.

பின்னர் மூஸா நபியும் அவர்களின் சமுதாயமும் ஊரை விட்டே ஓடுகின்றனர். ஃபிர்அவ்ன் விரட்டி விடுகின்றான். முடிவில் மூஸா நபியும் அவர்களின் சமூகத்தினரும் காப்பாற்றப்படுகின்றார்கள். ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டான். அப்போதும் வேதம் அருளப்பட்டிருக்கவில்லை.

இவ்வளவு நிகழ்ச்சிகளும் நடந்த பிறகு தான் மூஸா நபிக்கு அல்லாஹ் வேதத்தை வழங்கினான். ஏழாவது அத்தியாயம் 103 வது வசனத்திலிருந்து 150 வது வசனம் வரையுள்ள வசனங்களைச் சிந்தித்தால் இந்த உண்மையை விளங்கலாம். 103 வது வசனம் முதல் 141 வது வசனம் வரை மூஸா நபியின் பிரச்சாரம், சோதனை, ஃபிர்அவ்ன் அழிவு போன்றவற்றைக் கூறிவிட்டு 142 முதல் 145 வரை அவருக்கு வேதம் வழங்கப் பட்டதையும் கூறுகின்றான்.

எவ்வித வேதமும் இல்லாமல் நீண்ட நெடுங்காலம் மூஸா நபியும், ஹாரூன் நபியும் பிரச்சாரம் செய்து வந்தனர்.

எதிரிகள் அழிக்கப்படும் வரை அவர்களுக்கு எந்த வேதமும் அருளப்பட்டிருக்கவில்லை. இவ்வளவு நீண்ட நெடுங்காலம் அவர்கள் எந்த அடிப்படையில் பிரச்சாரம் செய்தனர்? வேதமில்லாத இன்னொரு வஹீயின் மூலம் தான் அவர்கள் தமது பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்க முடியும்.

தூதர்களாக நியமிக்கப்பட்டதற்கும் வேதம் அருளப்பட்டதற்கும் உள்ள நீண்ட கால இடைவெளியிலிருந்து வேதம் மட்டும் இறைவனால் அருளப்படுவதில்லை. வேதமில்லாத வேறு வஹீயின் மூலமாகவும் பிரச்சாரம் செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தனர் என்பதை அறியலாம்.

வேதம் இல்லாமல் அவர்கள் செய்த பிரச்சாரத்தை – போதனையை – சட்ட திட்டங்களை மக்கள் நம்பியே ஆகவேண்டும். உமக்குத் தான் வேதம் அருளப்படவில்லையே? வேதம் இல்லாமல் நீர் கூறுவதை ஏன் ஏற்க வேண்டும் என்று கூறக் கூடாது என்பதையெல்லாம் இந்த வசனங்கள் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் தெரிவிக்கின்றன.

எனவே வேதம் மட்டும் வழிகாட்டும். தூதர்களின் விளக்கமோ வேத ஆதாரமில்லாத வழிகாட்டுதலோ தேவையில்லை என்று வாதிடுவது குர்ஆனுக்கே எதிரானதாகும்.

எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.244 தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன்: 14:4)

வேதங்களைக் கொண்டு வந்து மக்களிடம் சேர்ப்பிப்பது மட்டும் தான் இறைத்தூதர்களின் பணி, விளக்கமளிப்பது அவர்களின் பணி அல்ல என்று வாதிடுபவர்களுக்கு இவ்வசனம் சம்மட்டி அடியாக அமைந்துள்ளது. இத்தகையோருக்கு மறுப்பு சொல்வதற்காகவே அருளப்பட்டது போல் ஒவ்வொரு வார்த்தையும் இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு சமுதாயத்துக்கு ஒரு தூதரை அனுப்பும் போது வேதத்தைக் கொண்டு போய் மக்களிடம் சேர்ப்பது மட்டும் தான் அவருடைய வேலை என்றால் அம்மக்கள் பேசும் மொழியை அவர் அறிந்திருக்கத் தேவையில்லை. நம்மிடம் கடிதத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் தபால்காரருக்கு நமது மொழி தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் எந்த ஒரு காலகட்டத்திலும் எந்த ஒரு தூதரையும் அவரது சமுதாயத்தினர் பேசும் மொழி பேசுபவராகவே தவிர அனுப்பியதே கிடையாது என்று இறைவன் கூறுகின்றான்.

இவ்வாறு அனுப்பியதற்கான காரணத்தையும் அவனே கூறுகின்றான். அத்தூதர் அம்மக்களுக்கு விளக்க வேண்டும் என்பது தான் இறைவன் கூறும் காரணம்.

விளக்கம் கூறுவதற்காகத் தான் இறைத்தூதர்கள் அந்தச் சமுதாயத்தின் மொழியை அறிந்தவர்களாக தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றார்கள் என்பதன் உட்கருத்து என்ன என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

வேதங்களை இறைவனிடமிருந்து பெற்று மக்களுக்கு வழங்குவது மட்டுமின்றி அம்மக்களுக்கு அதில் ஏற்படும் ஐயங்களை விளக்கும் பொறுப்பும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. விளக்கத்தை அளிக்கும் பொறுப்பு தூதர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றால் அவ்விளக்கத்தை ஏற்கும் கடமை மக்களுக்கு இருக்கிறது என்பது தான் பொருளாகும்.

ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் தூதர்களாக அனுப்பப்பட்டவர்களின் விளக்கம் வேண்டுமானால் அவர்களின் காலத்தோடு முடிந்து விடலாம். உலகம் அழியும் வரை வருகின்ற மக்களுக்கு தூதராக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த வேதம் எவ்வாறு எல்லாக் காலத்தவர்களுக்கும் தேவையோ அது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கமும் உலகம் அழியும் நாள் வரை தோன்றுகின்ற அனைவருக்கும் தேவையாகும்.

வேதத்துக்கு இறைத்தூதர்கள் அளித்த விளக்கம் அவர்கள் வாழ்ந்த காலத்தவர்களுக்கு மட்டும் கிடைத்து பின்னர் வருகின்ற சமுதாயத்திற்கு அவ்விளக்கம் கிடைக்காமல் போனால் அது அநீதியாகும். அல்லாஹ் எந்த மனிதருக்கும் எள்ளளவும் அநீதி இழைப்பவன் அல்ல என்று திருக்குர்ஆனிலேயே அல்லாஹ் பல இடங்களில் தெளிவுபடுத்தி விட்டான்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த மக்கள் தமக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாக விளக்கிய போதும் தெரிந்து கொண்டார்கள். அவர்கள் தெரிந்து கொண்ட யாவும் உலகம் உள்ளளவும் வருகின்ற மக்களுக்கு உரியதாகும்.

இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்று கூறுவார்களேயானால் இதுவரை நாம் எடுத்துக் காட்டிய எல்லா வசனங்களையும் அவர்கள் நிராகரிக்கின்றார்கள்.

இறைத்தூதர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் விளக்கமளித்தார்கள் என்று ஒப்புக் கொண்டால் – இறைவனின் கட்டளைப்படி அவர்கள் அளித்த விளக்கம் அந்தக் காலத்துடன் முடிந்துவிட்டது என்று கூற எந்த வசனம் ஆதாரமாகவுள்ளது என்று எடுத்துக் காட்ட வேண்டும். இவ்வாறு கூறக் கூடிய ஒரு வசனமும் திருக்குர்ஆனில் கிடையாது.

எனவே நபிமார்களுக்கு வேதம் வழங்கப்பட்டது போல் அதற்கு விளக்கமளிக்கும் அதிகாரமும் சேர்த்தே அருளப்பட்டுள்ளது. அதுவும் இறைவனின் வஹீ தான் என்பதை இவ்வசனமும் சந்தேகத்திற்கு இடமின்றி அறிவித்து விடுகின்றது.

அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் மறுத்து, “சிலவற்றை ஏற்று சிலவற்றை மறுப்போம்” எனக் கூறி, அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்குமிடையே வேற்றுமை பாராட்டி இதற்கு இடைப்பட்ட வழியை உருவாக்க யார் எண்ணுகிறார்களோ அவர்களே உண்மையாக (நம்மை) மறுப்பவர்கள். மறுப்போருக்கு இழிவு தரும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.

அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்பி அவர்களில் எவருக்கிடையேயும் வேற்றுமை காட்டாதோருக்கு அவர்களது கூலிகளை அவன் பின்னர் வழங்குவான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 4:150-152)

திருக்குர்ஆன் மட்டுமே எங்களுக்குப் போதும், திருத்தூதர்களின் வழிகாட்டுதல் ஏதும் தேவையில்லை என்று வாதிடுவோருக்கும், இஸ்லாத்திற்கும் எள்ளளவும் தொடர்பு இல்லை என்று இந்த வசனங்கள் தெளிவாகப் பிரகடனம் செய்கின்றன.

“அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் இடையே வித்தியாசப்படுத்தி சிலதை ஏற்போம். வேறு சிலதை நிராகரிப்போம்” என்று கூறுபவர்கள் மெய்யாகவே காஃபிர்கள் என்று இவ்வசனம் கூறுகிறது.

இவ்வசனம் தெளிவாகக் கூறும் இவ்வுண்மையை மறுத்திட இவ்வசனத்திற்கு தவறான பொருள் கொடுத்து வருகின்றனர். திருக்குர்ஆனின் சில தமிழாக்கங்களில் இவ்வசனம் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதை தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக்கிக் காட்டுகின்றனர்.

இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் அனைவரும் சமமானவர்களே. அவர்களுக்கிடையே பாரபட்சம் காட்டக் கூடாது. அவர்களில் சிலரை ஏற்று வேறு சிலரை மறுக்கக் கூடாது என்பது தான் இவ்வசனத்தின் பொருள் என்று இவர்கள் கூறுகின்றனர்.

இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களுக்கிடையில் பாரபட்சம் காட்டக் கூடாது. எல்லாத் தூதர்களையும் நம்ப வேண்டும் என்பது சரிதான். இதைத் திருக்குர்ஆன் வேறு சில இடங்களில் குறிப்பிட்டிருக்கிறது. அத்தகைய வசனங்களுக்குத் தான் இவ்விளக்கம் பொருந்துமே தவிர இவ்வசனத்திற்கு அவ்விளக்கம் அறவே பொருந்தாது.

ஏனெனில் இவ்வசனம் இறைத் தூதர்களுக்கிடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்று பொருள் கொள்ளும் வகையில் அமையவே இல்லை.

“வயுரீதூன அன் யுபர்ரிகூ பைன ருஸுலிஹி” என்று கூறப்பட்டால் இறைத் தூதர்களுக்கிடையே பாரபட்சம் காட்ட எண்ணுகிறார்கள் என்று பொருள்.

ஆனால் இவ்வசனத்தில் “பைன ருஸுலிஹி” (தூதர்களுக்கு இடையில்) என்று கூறாமல் “பைனல்லாஹி வருஸுலிஹி” (அல்லாஹ்வுக்கும் அவனது தூதர்களுக்கும் இடையில்) என்று தான் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ்வுக்கும், அவன் தூதர்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டாதீர்கள் என்ற சொற்றொடருக்கு தூதர்களிடையே பாரபட்சம் காட்டாதீர்கள் என்று பொருள் கொள்வதை விட அறியாமை ஏதும் இருக்க முடியாது.

எனவே இவ்வசனம் அல்லாஹ்வுக்கும், அவன் தூதர்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டக்கூடாது என்பதைத் தான் கூறுகிறது. யாருடைய விளக்கமும் இன்றி நேரடியான வாசகமே அப்படித் தான் அமைந்திருக்கின்றது.

அல்லாஹ்வுக்கும் அவனது தூதர்களுக்குமிடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்பதன் பொருளை சரியான முறையில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வுக்கும் அவனது தூதர்களுக்கும் இடையே நிச்சயமாக பாரபட்சம் உள்ளது. அல்லாஹ்வைப் போல் அவன் தூதர்களைக் கருதக் கூடாது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.

அல்லாஹ்வுக்குச் செய்யும் வணக்கத்தை அல்லாஹ்வின் தூதருக்குச் செய்ய வேண்டும் என்று இவ்வசனத்தைப் புரிந்து கொள்ளக் கூடாது.

அப்படியானால் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்குமிடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்பதன் பொருள் என்ன?

இதற்காக நாம் அதிகம் சிரமப்படத் தேவையில்லை. ஏனெனில் எந்த வகையில் பாரபட்சம் காட்டக் கூடாது என்பதையும் இவ்வசனத்திலேயே அல்லாஹ் தெளிவாகக் கூறி விடுகின்றான். “சிலவற்றை ஏற்போம். சிலவற்றை மறுப்போம்” என்று கூறுவதையே பாரபட்சம் காட்டுதல் என்று அல்லாஹ் இங்கே குறிப்பிடுகிறான்.

அல்லாஹ் சொன்னதை நாங்கள் ஏற்போம். அவன் தூதர்கள் கூறியதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று யாராவது கூறினால் அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் இடையில் பாரபட்சம் காட்டுகிறார்கள்.

அல்லாஹ்வுடைய எல்லா அந்தஸ்தையும் தூதர்களுக்கு வழங்கி பாரபட்சமில்லாது நடக்க வேண்டும் என்பது இதன் பொருளல்ல.

அல்லாஹ்வின் கட்டளையை ஏற்பேன். அவனால் அனுப்பப்பட்ட தூதர்களின் கட்டளையை ஏற்க மாட்டேன் என்று கூறும் பாரபட்சத்தையே இங்கே அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.

அல்லாஹ்வுடைய எல்லா அந்தஸ்தையும் தூதர்களுக்கு வழங்கி பாரபட்சமில்லாது நடக்க வேண்டும் என்பது இதன் பொருளல்ல.

அல்லாஹ்வின் கட்டளையை ஏற்பேன். அவனால் அனுப்பப்பட்ட தூதர்களின் கட்டளையை ஏற்க மாட்டேன் என்று கூறும் பாரபட்சத்தையே இங்கே அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.

இவ்வாறு கூறுபவர்களின் நிலை என்ன என்பதையும் இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். இவர்கள் பாதியை ஏற்று மீதியை மறுத்து, புது வழியை உருவாக்கியதால் இவர்கள் தான் உண்மையாகவே காஃபிர்கள். இவர்களுக்கு இழிவு தரும் வேதனை இருக்கிறது என்று பிரகடனம் செய்கின்றான்.

குர்ஆன் மட்டும் போதும். நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவையில்லை எனக் கூறுவோர் இவ்வசனத்தின் தெளிவான தீர்ப்பின்படி முஸ்லிம்கள் அல்லர். சந்தேகத்திற்கிடமின்றி இவர்கள் காஃபிர்களே!

மேலே நாம் எடுத்துக் காட்டிய 150, 151, 152 ஆகிய வசனங்களில் மூன்றாவது வசனத்தை இவர்கள் தங்களின் கருத்துக்கு ஆதரவாக வளைக்க நினைக்கின்றனர்.

“யார் அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்புகிறார்களோ – மேலும் அவர்களில் எவருக்குமிடையே பாரபட்சம் காட்டாமல் உள்ளனரோ அவர்களின் பரிசுகளை அவர்களுக்கு அவன் வழங்குவான் என்பது தான் 152வது வசனம்.

இவ்வசனத்தில் இறைத்தூதர்களுக்கு இடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்று கூறப்படுவதால் 150வது வசனத்திற்கும் அவ்வாறு தான் பொருள் கொள்ள வேண்டும் என்பது இவர்களின் வாதம்.

முதலில் ஒரு அடிப்படையை இவர்கள் அறியவில்லை. இரண்டு விதமான கருத்துக்கள் கொள்ள எந்த வசனம் இடம் தருகின்றதோ அது போன்ற வசனங்களுக்குத் தான் – எந்த விளக்கம் கொடுக்கலாம் என்பதற்காக – வேறு வசனங்களைத் துணைக்கு அழைக்க வேண்டும்.

எந்த வசனம் இரண்டு கருத்துக்கள் கொள்ள இடம் தரவில்லையோ அது போன்ற வசனங்களுக்கு இன்னொரு வசனத்தின் துணையுடன் விளக்கம் கூறுவதாகக் கருதிக் கொண்டு நேரடியான பொருளை நிராகரிக்கக் கூடாது. இந்த அடிப்படையைத் தான் இவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

150வது வசனத்தில் “அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டுகிறார்களோ” என்று கூறப்படுகின்றது. இதற்கு இரண்டு கருத்துக்கள் கிடையாது. அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்ற ஒரு கருத்து தான் இதற்கு இருக்கிறது.

“தூதர்களுக்கிடையில் பாரபட்சம் காட்டக் கூடாது” என்பது தான் இதன் கருத்து என்றால் “அல்லாஹ்வுக்கும்” என்ற வாசகம் தேவையில்லாமல் வீணாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ஆகி விடும். (இறை வேதத்தில் இத்தகைய வீணான சொற்கள் இருப்பதாகக் கூறுவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பானாக!)

எனவே அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்ற 150வது வசனத்திற்கு அதற்குரிய பொருளையும் தூதர்களுக்கிடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்ற 152வது வசனத்திற்கு அதற்குரிய பொருளையும் கொடுக்க வேண்டுமே தவிர இல்லாத ஒன்றை வலிந்து திணிக்கக் கூடாது.

இவ்வளவு தெளிவான விளக்கத்திற்குப் பிறகும் இவர்கள் பிடிவாதம் பிடித்தால் “அல்லாஹ்வுக்கும் அவனது தூதர்களுக்கும் இடையே” என்று தவறுதலாக இடம் பெற்று விட்டது. அவனது தூதர்களுக்கு இடையே” என்று தான் இருக்க வேண்டும் என்று கூறி குர்ஆனை நிராகரிக்கின்றார்களா?

இவ்வாறு கூறுவதும், வாதிடுவதும் தெளிவான இறை நிராகரிப்பு என்று அல்லாஹ் பிரகடனம் செய்த பிறகும் அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டப் போகின்றார்களா?

வேதம் மட்டும் இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீ அல்ல. இறைத் தூதர்களின் விளக்கமும் வஹீ தான். அவற்றையும் பின்பற்றுவது அவசியம் தான் எனக் கூறும் இன்னும் பல சான்றுகள் உள்ளன.

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம்.239 அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம்.105 நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும்,255 அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.26

(அல்குர்ஆன்: 16:43-44)

இவ்வசனங்களில் திருக்குர்ஆனை விளங்குவதற்கு இரண்டு வழிகள் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

1. நீர் அவர்களுக்கு விளக்குவதற்காகவும்

2. அவர்கள் சிந்திப்பதற்காகவும்

இவ்வேதத்தை உமக்கு வழங்கியுள்ளோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

திருக்குர்ஆனின் சில வசனங்களை நாம் சரியான முறையில் சிந்திப்பதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம். வேறு சில வசனங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம் என்ற கருத்தை இவ்வசனங்கள் தாங்கி நிற்கின்றன.

இவ்வேதத்தைக் கொண்டு போய் மக்களிடம் ஒப்படைப்பதற்காக உம்மிடம் வேதத்தை வழங்கினேன் என்று அல்லாஹ் கூறியிருந்தால் நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவையில்லை என்று வாதிடலாம்.

“நீர் விளக்குவதற்காகவே உமக்கு இவ்வேதத்தை அருளினேன்” என்று அல்லாஹ் கூறியுள்ளதால் திருக்குர்ஆனுக்கு நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியத்திலும் அவசியம் என்பது தெளிவாகின்றது.

குர்ஆன் மட்டும் போதும் என்று வாதிடுவோரிடம் நாம் கேட்க விரும்புவது இது தான்!

நபிகள் நாயகம் இவ்வசனத்தின் கட்டளையை ஏற்று இவ்வேதத்துக்கு விளக்கம் அளித்தார்களா? இல்லையா?

விளக்கம் அளித்தார்கள் என்றால் அவ்விளக்கத்தை நாம் ஏற்றுச் செயல்பட வேண்டுமா? கூடாதா?

அவர்கள் விளக்கம் அளித்தார்கள் என்றால் அந்த விளக்கம் என்ன? அவர்கள் அளித்த விளக்கத்தை நாம் எப்படி அறிந்து கொள்வது?

யுக முடிவு நாள் வரை இவர்களால் நபிகள் நாயகம் அளித்த விளக்கத்தை எடுத்துக் காட்ட இயலாது. ஹிக்மத் எனப்படும் நபிவழியை ஏற்றுக் கொண்டால் தவிர வேறு எந்த வழியிலும் நபிகள் நாயகத்தின் விளக்கத்தை எடுத்துக் காட்டவே முடியாது.

நபிகள் நாயகத்தின் விளக்கமில்லாமல் சிந்தித்து சில வசனங்களை விளங்க முடியும் என்றாலும் அவர்களின் விளக்கம் இருந்தால் தான் விளங்க முடியும் என்ற நிலையிலும் பல வசனங்கள் குர்ஆனில் உள்ளன. அப்படி இருப்பதால் தான், “நீர் அவற்றை விளக்க வேண்டும்” என்று அல்லாஹ் கூறுகிறான்.

நபிகள் நாயகத்தின் விளக்கத்தின் துணையில்லாமல் முழுக் குர்ஆனையும் விளங்க முடியும் என்றால் “நீர் விளக்க வேண்டும்” என்று கூறுவது பொருளற்றதாகி விடும்.

எனவே நபிகள் நாயகத்தின் விளக்கங்கள் பல வசனங்களை விளங்குவதற்கு இன்றியமையாதவையாக உள்ளன. அந்த விளக்கங்களும் அல்லாஹ்வின் வஹீயேயாகும். இன்னொரு வஹீ மூலம் வழங்கப்பட்டவை என்பதற்கு இவ்வசனங்கள் சான்றாகவுள்ளன.

அவர்கள் முரண்பட்டதை அவர்களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்குவதற்காகவே256 உமக்கு இவ்வேதத்தை நாம் அருளியுள்ளோம். (இது) நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர்வழியாகவும், அருளாகவும் உள்ளது.

(அல்குர்ஆன்: 16:64)

“நீர் விளக்குவதற்காக இதை அருளினேன்” என்று கூறுவதை விட “நீர் விளக்குவதற்காகவே தவிர அருளவில்லை” என்பது அழுத்தம் நிறைந்ததாகும். நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியத்திலும் அவசியம் – அவர்களின் விளக்கம் இல்லாவிட்டால் இதை அருளியிருக்கவே மாட்டேன் என்ற கருத்தை இவ்வாசக அமைப்பு தெளிவாக அறிவிக்கின்றது. நபிகள் நாயகத்தின் விளக்கம் எந்த அளவு முக்கியமானது என்பதற்கு இவ்வசனம் மிக முக்கியமான ஆதாரமாக அமைந்துள்ளது.

திருக்குர்ஆனை மக்களிடம் கொடுத்தவுடன் அல்லது வாசித்துக் காட்டியவுடன் அவர்களுக்கு விளங்கி விடும் என்றிருந்தால், “நீர் விளக்குவதற்காகவே” என்று அல்லாஹ் கூறியிருப்பானா? விளக்காமலே விளங்குவதை யாரேனும் விளக்குவார்களா? நுண்ணறிவாளனாகிய அல்லாஹ் இத்தகைய வேண்டாத வேலையைச் செய்வானா?

எனவே நபிகள் நாயகத்தின் விளக்கத்தின் துணையோடு அவர்களின் காலத்தில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு திருக்குர்ஆனை விளங்கினார்களோ அதே விளக்கத்தின் துணையோடு தான் நாமும் திருக்குர்ஆனை விளங்க வேண்டும். விளங்க முடியும்.

நபிகள் நாயகத்தின் விளக்கம் இல்லாமல் குர்ஆனை முழுமையாக விளங்க முடியாது என்று அறிவிக்கும் இன்னும் பல வசனங்களும் உள்ளன.