பெண்கள் மருதாணி வைத்தநிலையில் வெளியே வரலாமா?

கேள்வி-பதில்: பெண்கள்

பெண்கள் தங்களின் முகம், முன்னங்கை, முன்னங்கால் தவிர வேறு எவைகளையும் அந்நிய ஆண்களுக்கு முன்னிலையில் வெளிப்படுத்தக்கூடாது என்பது இஸ்லாத்தின் விதி.

அப்படி வெளியே தெரியவேண்டிய பகுதிகளில் மருதாணி, மோதிரம், வளையல் போன்ற அலங்காரங்களை மஹரமல்லாத (திருமணம் முடிக்கத் தடுக்கப்பட்டவர்கள் அல்லாத) நபர்களிடம் வெளிப்படுத்துவதும் கூடாது.

இதனை பின்வரும் வசனம் நமக்கு தெரியப்படுத்துகிறது,

இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் நீர் கூறுவீராக! அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்; தமது கற்புநெறிகளைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும்! அவர்கள், (சாதாரணமாக) வெளியில் தெரிவதைத் தவிர தமது அலங்காரத்தில் வேறு எதையும் வெளிப்படுத்த வேண்டாம். தமது தலைமுக்காடுகளைத் தமது மேற்சட்டைகளின்மீது போட்டுக் கொள்ளட்டும். அவர்கள் தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களின் தந்தையர், தமது மகன்கள், தமது கணவர்களின் மகன்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் மகன்கள், தமது சகோதரிகளின் மகன்கள், தம்(மைப் போன்ற) பெண்கள், தமது அடிமைகள், ஆண்களில் (பெண்கள்மீது) விருப்பமில்லாத பணியாளர்கள், பெண்களின் அந்தரங்க உறுப்புகளைப் பற்றி அறியாத சிறுவர்கள் ஆகியோரைத் தவிர மற்றவர்களிடம் அவர்கள் தமது அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம். தமது அலங்காரத்தில், தாம் மறைத்துள்ளவை அறியப்பட வேண்டும் என்பதற்காகத் தமது கால்களால் அடி(த்து நட)க்க வேண்டாம். இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அனைவரும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருங்கள்!

(அல்குர்ஆன்: 24:31)

இந்த வசனத்தில் பெண்கள் யார்யாரிடம் தங்களின் அலங்காரங்களை வெளிப்படுத்தலாம் என்று கூறப்படுகிறதோ அவர்களை விடுத்து வேறு எவரிடமும் அவைகளை வெளிப்படுத்தக்கூடாது.

எனவே பெண்கள் அந்நிய ஆண்கள் இருக்கும் சபைகளில் மருதாணி, மோதிரம், வளையல், ப்ரேஸ்லெட் போன்றவைகள் அந்நிய ஆண்களுக்கு தெரிந்திருக்கும் வகையில் அணிந்து வரக்கூடாது. அந்நிய ஆண்களுக்கு அவை தெரியாத வகையில் அணிவதில் தவறில்லை.

அந்நிய ஆண்களில் கவனத்தை ஈர்த்து தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள அனைத்து அலங்காரங்களையும் தவிர்த்துக் கொள்வதே சரியானது.