05) அதிர்ந்தார் அரசர்
இறைவனை வணங்குவதும் , தொழுவதும் , சிந்திப்பதுமாய் அவரது வாழ்க்கை கழிந்து கொண்டிருந்தது.
அவருக்கு இறைவனுடனான தொடர்பு கிட்டியது .
இறைவனிடம் இருந்து அவருக்கு செய்திகள் வந்துகொண்டிருந்தன .
இப்ராஹீம்(அலை) அவரது ஊருக்குள் மக்களிடம் தொடர்ந்து விவாதித்து கொண்டே இருப்பார் . இறைவனைப் பற்றி, அவன் ஆற்றல்கள் பற்றி , மக்களின் மூட நம்பிக்கை பற்றி , பலவாறாக மக்களிடம் உரையாடுவார்.
ஒரு நாள் அந்த நாட்டு அரசரிடம் சென்றார் . அங்கும் இவரது பிரச்சாரம் தொடர்ந்தது . அப்போதெல்லாம் மக்கள் அரசர்களை தெய்வங்களாக வணங்குவார்கள் , இங்கும் நமது நாட்டில் கூட ஆட்சியாளர்கள் தெய்வங்கள் போல் வணங்கும் பழக்கம் இருந்தது .
அரசர் இப்ராஹிமிடம் இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தார் .
“என் இறைவன் உயிர் தருபவன்; மரணிக்க செய்பவன்.. “ என்றார் இப்ராஹிம் .
“நானும் தான் உயிர் கொடுப்பேன் ; மரணிக்க செய்வேன்.. “ என்றார் அரசர் .
“ ஓ ! அப்படியா ? சரி , என் இறைவன் கிழக்கில் சூரியனை உதிக்க வைக்கிறான் ; நீங்கள் கடவுள் தானே ? அதை மேற்கில் உதிக்க வையுங்கள் பார்ப்போம் ….” என்றார்
மன்னர் வாயடைந்து போனார் .
……
ஒரு நாள் அவருக்கு ஒரு சந்தேகம் .
மரணித்த ஒருவர் எப்படி உயிர் பெற்று எழுவார் ??
இந்த சிந்தனை அவரை விடாமல் குடைந்து கொண்டு இருந்தது .
ஒரு நாள் இறைவனிடம் கேட்டார் ,” அல்லாஹ்வே ! நீ எப்படி மரணித்தவர்களை உயிர்ப்பிக்கிறாய் ?”
இறைவன் கேட்டான் , “ நீ நம்பவில்லையா ???”
“ நம்புகிறேன் அல்லாஹ்வே ! ஆனாலும் என் மனம் அமைதியாய் இருக்க , நீ எப்படி உயிர்ப்பிக்கிறாய் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் ..”
என்று பிரார்த்தனை செய்தார் .
நான்கு பறவைகளைப் பிடிக்குமாறு இறைவன் சொன்னான்; பிடித்தார் .
அவற்றை அழைத்தால் அவை வருவதற்கு பழக்கப் படுத்துமாறு சொன்னான் ; பழக்கப் படுத்தினார்.
அந்த பறவைகளை பல துண்டுகளாக வெட்டுமாறு சொன்னான் ; வெட்டினார் .
ஒவ்வொரு துண்டையும் ஒவ்வொரு மலை மீது வைக்குமாறு சொன்னான் ; வைத்தார் .
பறவைகளை அழைக்கச் சொன்னான் ; அழைத்தார் .
என்ன ஒரு ஆச்சரியம் ????!!!
பறவைகள் பறந்தோடி வந்தன அவரிடம்..!!!!!!!!!
அல்லாஹ்வுக்கு ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றல் உள்ளது என்பதை நேரடியாக அறிந்து கொண்டார் .
ஒருமுறை தன் தந்தையிடமும் ஊர் மக்களிடமும் அவர் கேட்டார் , “ எதை வணங்குகிறீர்கள் ??”
பல முறை அவர் அவர்களுக்கு படைப்பினங்களை வணங்குவது மூடத்தனம் என்பதை எடுத்துச் சொல்லி இருந்தார் .
எப்போதும் தெய்வங்கள் என்றே தாங்கள் வணங்குபவைகளைப் பற்றிக் குறிப்பிடும் அந்த மக்கள் இந்த முறை அழுத்தமாக சொன்னார்கள் ,
“ நாங்கள் கற்பனை தெய்வங்களை வணங்கிக் கொண்டே தான் இருப்போம் “ என்றார்கள் .
அதற்கு இப்ராஹீம் (அலை) கேட்டார் , “ நீங்கள் அழைத்தால் அவை கேட்கின்றனவா ??
உங்களுக்கு நன்மை ஏதேனும் செய்கின்றனவா ? அல்லது தீமை செய்கின்றனவா ??””
அவர்களிடம் பதில் இல்லை
“எங்கள் முன்னோர்கள் இவ்வாறு தான் செய்தார்கள் “ என்று கூறி சமாளித்தார்கள் .
“அகிலத்தைப் படைத்த ஒரு இறைவனைத் தவிர வணங்கப்படும் போலி தெய்வங்கள் எல்லாம் என்னுடைய எதிரிகள் தான்;
அந்த இறைவன் தான் என்னைப் படைத்தான் ;
அவன்தான் என்னை நேர்வழியில் செலுத்துகிறான் ;
அவன் தான் எனக்கு உணவும் தருகிறான் தண்ணீரும் தருகிறான்;
நான் நோயுற்றால் அவன் தான் எனக்கு குணமளிக்கிறான்;
அவன் தான் என்னை மரணிக்கச் செய்வான் ;
அவனே மீண்டும் என்னை உயிர் கொடுத்து எழுப்புவான் ;”
இறைவன் என்பவன் யார் என்பதை அந்த மக்களுக்கு விளக்கமாகச் சொன்னார் இப்ராஹீம் (அலை).
மீண்டும் எழுப்பப்படும் நாளைப் பற்றிக் கூறியதும் அவர் உள்ளத்தில் ஒரு அச்சம் தோன்றியது .
“தீர்ப்பு நாளில் என் குற்றங்களை மன்னிக்க வேண்டும் என்று அவனிடம் கோரிக்கை வைக்கிறேன் “ என்றார்.
அந்த மக்களுக்கு இறைவனைப் பற்றிச் சொல்லிவிட்டு, இறைவனிடம் கையேந்தி பிரார்த்தனை செய்தார் , “ இறைவா! எனக்கு ஞானத்தைக் கொடு ! நல்ல மக்களுடன் என்னை சேர்த்து விடு ! எனக்கு பின் வருபவர்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்து ! இன்பம் நிறைந்த சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும் ஆக்கி விடு ! என் தந்தையை மன்னித்து விடு அவர் வழிகேடர்களில் ஒருவராக ஆகி விட்டார் ; மறுமையில் என்னை இழிவு படுத்தி விடாதே !” என்றார் .
அவரது தந்தை மேல் அவருக்கு இரக்கமாக இருந்தது . வேண்டுமென்று இறைவனை அவர் இறைவனை மறுக்கின்றாரே! ஊர் மக்களுடன் சேர்ந்து சத்தியத்தை நிராகரிக்கக் கூடியவராக இருக்கிறாரே ! என்கிற கவலையும் இருந்தது.
ஆகையால் இப்ராஹீம் அலை அவர்கள், தம் தந்தையின் மன்னிப்பிற்காக பிரார்தனை செய்தார் .
ஆனால் அல்லாஹ் மன்னிக்க மறுத்து விட்டான் .
ஏனெனில் , இறைவனுக்கு இணையாக மற்றவர்களை கருதுவது ஷிர்க் எனும் இணைவைப்பு ஆகும் .
அல்லாஹ்வை வைக்கவேண்டிய இடத்தில வேறு யாரையும் வைக்காமல் இருத்தலே ஈமான் ஆகும் .