04) இப்ராஹிம் நபியின் பிரச்சாரம்

நூல்கள்: இப்ராஹிம் (அலை) அவர்களின் வரலாறு (கதை வடிவில்)

எது என் இறைவன் ?

வீட்டை விட்டு வெளியேறினாலும் அவர் ஊரை விட்டெல்லாம் வெளியேறவில்லை .

ஊருக்குள் தான் நடமாடிக்கொண்டு இருந்தார் .

அவர் மனம் நன்றியால் நிரம்பி இருந்தது . அதனால் தான் இறைவனை வைக்கும் இடத்தில் படைப்பினங்களை வைப்பதைப் பார்த்துக்கொண்டு அவரால் சும்மா இருக்க இயலவில்லை .

தந்தை துரத்தி விடும் முன்னரும் கூட, அவர் அப்படித் தான் .

ஊர்மக்களிடமும் தந்தையிடமும் , “எதை வணங்குகிறீர்கள் ?” என்று கேட்பார்;

“இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவனைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள ?; படைத்தவனை விட்டு விட்டு பொய்யை வணங்குகிறீர்களா ?” என்பார் ;

ஊர் மக்கள் கண்டதையும் கடவுள் என்று கொண்டாடுவதைப் பார்த்து துடித்துக் கொண்டிருப்பார்..

இது எப்படிக் கடவுள் ஆகும் ?? என்ற சிந்தனை அவருக்குள் எப்போதும் இருந்து கொண்டு இருந்தது.

கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அவர் தவறவிடுவதில்லை…

அப்படிதான் ஒரு முறை ,.

இரவு நேரம்..

அப்படியே வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒரு நட்சத்திரம் பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டிருந்தது .

மக்களுக்கு இணைவைப்பை உணர்த்திக்காட்டுவதற்காக இது தான் இறைவனாக இருக்குமோ? என்ற எண்ணம் தன் மனதில் தோன்றியதாக கூறினார்.

அனைவரிடமும் சொன்னார் , “அதோ ! அது தான் என் இறைவன்”

சொல்லிவிட்டு தூங்கி விட்டார் .

விடிந்ததும் நட்சத்திரம் காணாமல் போயிருந்தது.

“ இல்லை… மறைந்து போகக்கூடியவை எனக்கு பிடிக்காது “ என்றார்.

அன்றிரவும் அது போல ஒரு சிந்தனையில் இருந்தார் இப்ராஹீம்.

சந்திரனைக் கண்டார் .

அழகான பிரகாசமான பௌர்ணமி நிலவு அவரது உள்ளத்தை வசீகரித்தது.

இது தான் இறைவனோ ? ஒரு சிந்தனை உதித்தது அவர் மனதில் .

“இது தான் என் இறைவன் “ என்றார் .

அடுத்த காலை அதுவும் மறைந்து போய் விட்டது.

என்னைப் படைத்த இறைவன் மட்டும் எனக்கு வழிகாட்டவில்லை என்றால் நானும் இந்த வழிகெட்ட கூட்டத்தில் ஒருவனாக ஆகி விடுவேன் “ என்று தான் அறியாத இறைவனை மனதால் தேடத் தொடங்கினார் .

காலை பிரகாசமான சூரியனைக் கண்டதும் , “ஆஹா ! இது தான் மிகப் பெரியது !! இது தான் இறைவன் !!” என்றார் .

மாலை, சூரியன் மறைந்து வானம் இருட்டியது .

மறையக்கூடிய இவைகள் அனைத்தும் கடவுளாக இருக்க முடியாது. இவை அனைத்தையும் படைத்த ஒருவன் தான் இறைவன் என்பதை தெளிவுபடுத்த விரும்பினார்.

அவரது சமூகத்திடம் போய் சொன்னார்,

“மக்களே !”

“நீங்கள் இறைவனுக்கு இணையாக வணங்கும் அனைத்தையும் விட்டு நான் விலகி விட்டேன்…

வானங்களையும் பூமியையும் படைத்தவனை நோக்கி செல்கிறேன்…

நேரான வழியில் நின்றவனாக ,

அவன் பக்கம் என் முகத்தை திருப்பி விட்டேன்..

நான் இணை வைப்பவன் அல்ல “என்றார்.

அவர்கள் வாதம் செய்தார்கள் .

சூரியைனை இறைவன் என்று சொன்ன போது வராத கோபம் , சந்திரனையும் நட்சத்திரங்களையும் இறைவன் என்று சொன்ன போது வராத கோபம் , அவற்றை படைத்தவனைப் பற்றி சொல்லும் போது அவர்களுக்கு வந்தது.

கடுமையாக வாதம் செய்தனர் .

வழி வழியாக இதைத் தானே வணங்கி வருகிறோம்??

இவருக்கு என்ன ஆயிற்று? நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா? அவர்கள் சொன்னால் சரியாக தானே இருந்திருக்கும் ? இத்தனை காலமாக இந்த கடவுள்களுக்கு தானே வழிபாடு செய்து வந்தோம் ?

புதிதாக யார் அந்த அல்லாஹ்? முன்னோர்களுக்கு தெரியாதது இவருக்கு தெரிந்து விட்டதா?

பலவாறாக வாக்கு வாதம் செய்தனர் .

நம் தெய்வங்களைப் பற்றி குறை சொன்னால் கடும் விளைவுகள் ஏற்படும்..

என்ன நடக்கும் என்றே தெரியாது.. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வங்கள்… ஆபத்து வரப் போகிறது…

பயமுறுத்தினர் ..

இப்ராஹீம் சொன்னார்,

“ அல்லாஹ்வைப் பற்றியா வாதம் செய்கிறீர்கள் ??

அவன் தான் எனக்கு நேர்வழி காட்டினான் . நீங்கள் அவனுக்கு இணையாக செய்து வைத்திருக்கிற சிலைகளைப் பார்த்தெல்லாம் நான் பயப்பட மாட்டேன்..

அவன் நாடினால் தவிர எனக்கு எதுவும் ஏற்படாது..

அவன் ஒவ்வொன்றையும் சூழ்ந்து இருக்கிறான் ; அனைத்தையும் அறிகிறான்..

நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா??? “ என்றார் .

அவர்கள் தங்கள் பயமுறுத்தும் பேச்சுக்களை தொடர்ந்தனர்.

அதற்கு இப்ராஹிம் ,

“எந்த ஆதாரமும் இல்லாத சிலைகளை, உண்மையான இறைவனுக்கு சமமாக ஆக்குவதற்கு உங்களுக்கு பயம் இல்லை …..;

உங்கள் ஒன்றுமில்லாத தெய்வங்களைப் பார்த்து நான் பயப்படுவேனா ???

நம் இருவரில் பயமின்றி யார் இருக்க வேண்டும் ? நீங்கள் சிந்திப்போராக இருந்தால் சொல்லுங்கள்..!” என்றார் .

அவர்களிடம் பதிலில்லை..

இப்படிதான் அடிக்கடி அவர்களுக்குள் பேச்சு வார்த்தைகள் நடக்கும்.

இப்படி அவர் பேசுவது அவரது தந்தைக்கு பிடிக்காது .

அவரது தந்தையிடமும் பல முறை சொல்லியிருக்கிறார்;.

என்றாலும் இந்த முறை அவரின் கோபம் எல்லை மீறி விட்டது .

மூட நம்பிக்கையில் மூழ்கி இருப்பவர்களின் சிந்தனை விரிவது இல்லை .

அவர்களது உள்ளங்களில் ஈரம் சுரப்பது இல்லை . தம் வறட்டு வாதங்களை நிலைநாட்ட என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் .