இறைவனிடம் எப்படி பிரார்த்திப்பது?
இறைவனிடம் கேட்கும் போது, கேட்கப்படும் கோரிக்கை தனக்கு அவசியம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வயுறுத்திக் கேட்க வேண்டும். ”உனக்கு விருப்பமிருந்தால் தா! இல்லாவிட்டால் தராதே!” என்பது போல் கேட்கப்படும் துஆக்களும் அங்கீகரிக்கப்படுவதில்லை. எப்படிக் கேட்டாலும் அவன் விரும்பினால் தான் தருவான். விரும்பினால் தா! என்று கேட்கும் போது அவன் விரும்பாவிட்டால் கூட நிர்பந்தப்படுத்தி வாங்க முடியும் என்ற கருத்து இதில் உள்ளது.
உங்களில் எவரேனும் துஆச் செய்தால் வயுறுத்திக் கேட்கட்டும்! நீ விரும்பினால் தா! என்று எவரும் கேட்க வேண்டாம். ஏனெனில் அவனை நிர்பந்தம் செய்பவன் எவனுமில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: (புகாரி: 6338, 6339, 7464, 7477)
சாதாரண சின்னச் சின்ன விஷயங்களை அல்லாஹ்விடம் கேட்காமல் நானே அடைந்து கொள்ள முடியும். பெரிய விஷயங்களை மட்டும் தான் அவனிடம் கேட்பேன் என்று மக்கள் நடந்து கொள்கிறார்கள்..
தங்களுக்கு எவை சாத்தியமென நம்புகிறார்களோ அதைத் தான் இறைவனிடம் கேட்கின்றனர். தங்களுக்குச் சாத்தியமற்றவையாகத் தோன்றக் கூடியதை அவர்கள் இறைவனிடம் கேட்பதில்லை. இதவும் தவறாகும்.
திருமணம் ஆகி பத்து வருடங்கள் வரை குழந்தையில்லா விட்டால் அல்லாஹ்விடம் குழந்தையைக் கேட்கின்றனர். ஆனால் தள்ளாத வயதையடைந்தும் குழந்தை இல்லா விட்டால் இறைவனிடம்
கேட்பதில்லை.
தள்ளாத வயதுடையவர்களுக்கு குழந்தை பிறப்பதில்லை என்பதால் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். இறைவனால் எதுவும் முடியும் என்ற நம்பிக்கையிருந்தால் இந்தக் கட்டத்திலும் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதைத் தவிர்க்க மாட்டார்கள்.
ஜக்கரியா நபி உடல் தளர்ந்து, எலும்புகள் பலவீனமடைந்து மயிர்கள் நரைத்து விட்ட நிலையில் தமக்கொரு சந்ததியைக் கேட்டார்கள். இறைவனும் சந்ததியை வழங்கினான். இதைத் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது.
(இது) உமது இறைவன் தனது அடியார் ஸக்கரிய்யாவுக்குச் செய்த அருளைக் கூறுதல்! அவர் தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை.(அல்குர்ஆன்: 19:2-4) ➚
சிறிய தொழில் செய்பவன் தன்னைக் கோடீஸ்வரனாக்குமாறு இறைவனிடம் கேட்பதில்லை. சிறிய தொழில் கோடிக் கணக்கான ரூபாய்கள் எப்படிக் கிடைக்க முடியும் என்று எண்ணுகிறானே தவிர வல்ல அல்லாஹ்வுக்கு எதுவும் சாத்தியம் தான் என்று எண்ணுவதில்லை.
தன்னைப் போன்ற பலவீனனாக இறைவனையும் அவனது உள் மனது நினைக்கிறது. அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் என்பதை நம்பவில்லை. இது தான் இந்தப் போக்குக்குக் காரணம்.
எனவே கேட்பதில் கஞ்சத்தனம் காட்ட வேண்டியதில்லை.
உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன்: 7:55) ➚
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர். (அல்குர்ஆன்: 7:205) ➚
இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்ற வழி முறையை இவ்வசனங்கள் கற்றுத் தருகின்றன.
ஒரு அதிகாரியிடம், அமைச்சரிடம் நமது கோரிக்கைகளை எழுப்புவது என்றால் அதற்கென சில ஒழுங்கு முறைகளைக் கடைப் பிடிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.
நமது கோரிக்கையைக் கேட்கும் போது அடுக்கு மொழியில் வசனம் பேசினால் அல்லது ராகம் போட்டு கோரிக்கையை எழுப்பினால் கோரிக்கை எவ்வளவு நியாயம் என்றாலும் அந்த அதிகாரி ஏற்க மாட்டார். அல்லது கடுமையான சப்தத்தில் கோரிக்கையை எழுப்பினாலும் கோரிக்கை நிராகரிக்கப்படும்.
மனிதனிடம் கோரிக்கை வைக்கும் போது காட்டப்படும் பணிவை விட அல்லாஹ்விடம் ஆயிரமாயிரம் மடங்கு அதிகமாக பணிவைக் காட்ட வேண்டும். அதைத் தான் அல்லாஹ் இங்கே கூறுகிறான்.
பணிவுடன் உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்பது முதலாவது ஒழுங்கு. அல்லாஹ்விடம் கேட்கும் போது ராகம் போட்டோ, அடுக்கு மொழியிலோ கேட்டால் அங்கே பணிவு எடுபட்டுப் போய் விடும்.
பெரும்பாலான பள்ளிவாசல்களில் இப்படித் தான் பணிவு இல்லாமல் யாரிடம் கேட்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் சடங்காகப் பிரார்த்தனை செய்கின்றனர்.
மேலும் இரகசியமாகப் பிரார்த்திப்பது பிரார்த்தனையின் ஒழுங்காக இங்கே குறிப்பிடப்படுகிறது.
இதிரிலிருந்து கூட்டாக சப்தமிட்டுக் கேட்பது முறையான பிரார்த்தனை இல்லை என்பது தெரிய வரும்.
ஒவ்வொருவருக்கும் தனித் தனித் தேவைகள் உள்ளன. அவரவர் தத்தமது தேவையை தமது மொழியில் பணிவுடனும், ரகசியமாகவும் கேட்பதே பிரார்த்தனையின் முக்கிய ஒழுங்காகும்.
இறைவன் எவ்வாறு பிரார்த்திக்குமாறு நமக்குக் கட்டளையிடுகிறானோ, அவ்வாறு செய்யப்படும் பிரார்த்தனையைத் தான் ஏற்றுக் கொள்வான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இரவை மூன்றாகப் பிரித்து அதில் கடைசிப் பகுதியில் கேட்கப்படும் துஆக்கள் அதிகம் பலனளிப்பவை. அந்த நேரத்தைத் தேர்வு செய்து பிரார்த்திக்க வேண்டும்.
இரவை மூன்றாகப் பிரித்து கடைசிப் பகுதியில் இறைவன் முதல் வானத்துக்கு தினமும் இறங்குகிறான். ”என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை ஏற்கிறேன். என்னிடம் கேட்டால் கொடுக்கிறேன். என்னிடம் மன்னிப்புக் கேட்டால் மன்னிக்கிறேன்” என்று கூறுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: (புகாரி: 1145, 6321, 7494)
அடியான் அல்லாஹ்விடம் அதிகம் நெருங்குவது ஸஜ்தாவின் போது தான். எனவே இந்தச் சந்தர்ப்பத்தையும் துஆவுக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அடியான், அவனது இறைவனுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது ஸஜ்தாவின் போதுதான். எனவே அதில் துஆவை அதிகப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்வர்: அபூஹுரைரா (ரலி) நூல்: (முஸ்லிம்: 744)
நமக்கு வேண்டியவருக்காக அவர் முன்னிலையில் துஆச் செய்வதை விட அவருக்குத் தெரியாமல் அவருக்காகச் செய்யும் துஆக்கள் நிச்சயம் அங்கீகரிக்கப்படும்.
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்காக மறைவாக துஆச் செய்தால் அது அங்கீகரிக்கப்படும். அவனது தலைமாட்டில் ஒரு வானவர் இருப்பார். இவர் துஆச் செய்யும் போதெல்லாம் அந்த வானவர் ஆமீன் எனக் கூறிவிட்டு உனக்கும் அது போல் கிடைக்கும் எனக் கூறுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அபுத்தத்தா (ரலி) நூல்:(முஸ்லிம்: 4912)
தந்தை தன் மகனுக்காகச் செய்யும் துஆக்களும் அதிகம் ஏற்கப்படத் தக்கவை. தந்தையரை சிறந்த முறையில் கவனித்து அவர்களின் துஆவைப் பெற வேண்டும். தமது பிள்ளைகளுக்காக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மூன்று துஆக்கள் ஏற்கப்படுவதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பாதிக்கப்பட்டவனின் துஆ, பிரயாணத்தில் செல்பவனின் துஆ, தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: (திர்மிதீ: 1828)
இது போல் நேர்மையான ஆட்சியாளன், நோன்பாளி ஆகியோரின் துஆக்கள் பற்றியும் ஹதீஸ்கள் உள்ளன.
நீங்கள் கேளுங்கள். தருகிறேன் என்று இறைவனின் உறுதிமொழியில் எந்தச் சந்தேகமும் இல்லை. கேட்பதற்கான ஒழுங்குகளைப் பேணிக் கொண்டால் எந்தப் பிரார்த்தனையும் வீண் போவதில்லை.
இந்த ஒழுங்குகளை எல்லாம் பூரணமாகப் பேணிய பிறகும் துஆக்கள் அங்கீகரிக்கப்படாமல் போனால் அதனால் நம்பிக்கையிழந்து விடக் கூடாது. நமது துஆவை இறைவன் அங்கீகரிக்கவில்லை என்று எண்ணி விடக் கூடாது.
நாம் கேட்பது நமக்கே தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கலாம். அது நமக்குத் தெரியா விட்டாலும் அவனுக்குத் தெரியும். எனவே கேட்டதைத் தராமல் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் தருவான்.
விபரமறியாத குழந்தைகள் தாயிடம் ஆபத்தான கத்தியை வாங்கிக் கேட்டால் தாய் அதை வாங்கிக் கொடுக்க மாட்டாள். மாறாக அதை விட அதிக விலையில் உள்ள வேறு பொருளை வாங்கிக் கொடுப்பாள். தாயை விட அதிகக் கருணையுடையவன் இறைவன். அடியான் அறியாமையினால் அவனுக்கு தீங்கிழைக்கக் கூடியதைக் கேட்டால் அதைத் தராமல் அதை விடச் சிறந்ததை வழங்குவான்.
ஒரு அடியான் பெருஞ் செல்வத்தைக் கேட்கலாம். அந்தச் செல்வம் அந்த அடியானைத் தவறான வழியிலும், இறை நிராகரிப்பிலும் செலுத்தி விடும் என்று இருந்தால் அதைக் கொடுக்காமல் அதை விடச் சிறந்ததைக் கொடுப்பான்.
அது இல்லையெனில் அவனுக்கு வரவிருக்கின்ற ஆபத்தைத் தடுப்பான். நம்மிடம் ஒரு மனிதன் ஒரு உதவியைக் கேட்கிறான். அந்த நேரத்தில் அந்த மனிதன் பின்னால் ஒரு பாம்பு தீண்டத் தயாராக இருப்பதை நாம் பார்த்து விடுகிறோம். இந்த நேரத்தில் அவன் கேட்ட உதவியை நாம் செய்ய மாட்டோம். மாறாக பாம்பை அடிப்போம். அல்லது அவனைப் பாம்பு தீண்டாமல் வேறு புறம் இழுப்போம்.
அடியான் தனக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை உணராமல் வேறு தேவையைக் கேட்டால் அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ் அதைக் கொடுப்பதற்குப் பகரமாக அந்த ஆபத்தை நீக்குகிறான்.
அவ்வாறு இல்லையெனில் அவன் கேட்டதைக் கொடுக்காமல் அதற்காக மறுமையில் அவனது நிலையை இறைவன் உயத்துகிறான். ஆகவே கேட்டது கிடைக்காவிட்டாலும் ஏதோ நன்மைக்காக இறைவன் மறுமைப் பயனாக அதை மாற்றி விடுவான் என நம்ப வேண்டும்.
பாவமற்ற விஷயங்களிலும், உறவினரைப் பகைக்காத விஷயத்திலும் யாரேனும் அல்லாஹ்விடம் கேட்டால் மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் அதை இறைவன் அங்கீகரிக்கிறான். அவன் கேட்டதையே கொடுப்பான் அல்லது அதை மறுமையின் சேமிப்பாக மாற்றுவான் அல்லது அவனுக்கு ஏற்படும் தீங்கை நீக்குவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் ”அப்படியானால் நாங்கள் அதிகமாகக் கேட்போமே” என்றனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் ”அல்லாஹ் அதை விட அதிகம் கொடுப்பவன்” என்றார்கள்.அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) நூல்: (அஹ்மத்: 10709)
எனவே துஆக்கள் அனைத்தையும் இறைவன் அங்கீகரிக்கிறான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளக் கூடாது.
இந்த ஒழுங்குகளைப் பேணி இந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொண்டால் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படுவதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்பட்ட மக்களாக நம் அனைவரையும் இறைவன் ஆக்கியருள்புரிவானாக!