அர்ஷை நடுங்கச் செய்யும் தலாக்?
حدثنا أبو بكر أحمد بن محمد بن يحيى الضرير الخباز ، ثنا عبد الله بن محمد بن عبد العزيز ، ثنا أبو إبراهيم الترجماني ، ثنا عمرو بن جميع ، عن جويبر ، عن الضحاك ، عن النزال ، عن علي ، قال : قال رسول الله صلى الله عليه وسلم :
திருமணம் செய்யுங்கள், விவாகரத்து செய்யாதீர்கள். விவாகரத்து என்பது (இறைவனின் சிம்மாசனத்தை) அர்ஷை நடுங்கச் செய்துவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் அலீ (ரலி), நூல் அக்பார் உஸ்பஹான் (540)
இதே செய்தி தாரீக் பக்தாத், அல்காமில் ஃபீ லுஅஃபாயிர் ரிஜால், ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.
(4103) -[14: 93] أَخْبَرَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عُمَرَ الْمُقْرِئُ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ سَعِيدٍ الآدَمِيُّ بِالْمَوْصِلِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَحْمُودٍ الصَّيْدَلانِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو إِبْرَاهِيمَ التَّرْجُمَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ جُمَيْعٍ، عَنْ جُوَيْبِرٍ، عَنِ الضَّحَّاكِ، عَنِ النَّزَّالِ بْنِ سَبْرَةَ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” تَزَوَّجُوا
قال تزوجوا ولا تطلقوا فإن الطلاق يهتز منه العرش
இந்த செய்தி அனைத்திலும் அம்ர் பின் ஜுமைஃ, ஜுவைபிர் என்ற இரண்டு அறிவிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவரும் கடும் விமர்சனத்திற்கு உள்ளான அறிவிப்பாளர்களாகும்.
இந்த செய்தியை பதிவு செய்த இப்னு அதீ அவர்கள் அம்ர் பின் ஜுமைஃ என்பவரைப் பற்றி பின்வருமாறு விமர்சித்துள்ளார்கள்.
இவருடைய பெரும்பான்மையான செய்திகள் மறுக்கப்படவேண்டியவையாகும். இவர் இட்டுகட்டிச் சொல்பவர் என்று குற்றம் சுமத்தப்பட்டவர்.
நூல்: அல்காமில் ஃபீ லுஅஃபாயிர் ரிஜால், பாகம்: 6, பக்கம்: 199
இதை பதிவு செய்த மற்றொரு இமாமான பக்தாதி அவர்களும் பின்வருமாறு விமர்சித்துள்ளார்கள்.
அம்ர் பின் ஜுமைஃ எனபவர் பிரபலியமானவர்கள் வழியாக மறுக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவிப்பவர். உறுதியானவர்கள் வழியாக இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிப்பார்.
நூல்: தாரீக் பக்தாத், பாகம்:12, பக்கம்: 191
இச் செய்தியில் இடம்பெறும் மற்றொரு அறிவிப்பாளர் ஜுவைபிர் என்பவரும் முற்றியிலும் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.
ஜவைபிர் என்பவர் (ஹதீஸ் துறையில்) எந்த மதிப்பும் அற்றவர் என்று யஹ்யா பின் மயீன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: தாரீக் இப்னு மயீன் (1343)
ஜுவைபிர் என்பவர் முற்றிலும் பலவீனமானவர் என்று அலீ இப்னுல் மதீனீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்: தஹ்தீபுல் கமால், பாகம்: 5, பக்கம்: 169
விவாகரத்து என்பது (இறைவனின் சிம்மாசனத்தை) அர்ஷை நடுங்கச் செய்துவிடும் என்ற செய்தி நபிமொழி அல்ல. நபிகளார் பெயரில் இட்டுகட்டப்பட்ட பொய்யான செய்தியாகும்.
அதே நேரத்தில் கணவன் மனைவி இணக்கமாக வாழவேண்டும் என்பதற்கு திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான செய்திகள் உள்ளன.
அவர்களுடன் அழகிய முறையில் வாழ்க்கை நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், அப்படி நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும்; ஆனால் அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருப்பான்.
« لاَ يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا رَضِىَ مِنْهَا آخَرَ ». أَوْ قَالَ « غَيْرَهُ ».
“இறைநம்பிக்கைகொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமை யாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும், மற்றொரு குணத்தைக் கண்டு திருப்திகொள்ளட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
ஒரு பெண், தனது கணவனிடமிருந்து வெறுப்போ அல்லது புறக்கணிப்போ ஏற்படுமெனப் பயந்தால் அவ்விருவரும் தமக்கிடையே சிறந்த முறையில் சமாதானம் செய்து கொள்வது அவர்கள்மீது குற்றமில்லை. சமாதானமே சிறந்தது.
அவ்விருவருக்குமிடையில் பிரிவினை ஏற்பட்டு விடும் என்று நீங்கள் பயந்தால் அவனது குடும்பத்தாரிலிருந்து ஒரு நடுவரையும், அவளது குடும்பத்தாரிலிருந்து ஒரு நடுவரையும் அனுப்பி வையுங்கள்! அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால் அல்லாஹ் அவர்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவான். அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், நன்கு தெரிந்தவனாகவும் இருக்கிறான்.
இது போன்ற பல வசனங்கள், நபிமொழிகள் சேர்ந்து வாழ வலியுறுத்துகின்றன. என்றாலும் இணக்கம் ஏற்படவில்லையானால் பிரிந்து வாழவும் இஸ்லாம் வழிகாட்டுகிறது. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்று கணவனின் கொடுமைகளை தாங்கிக் கொண்டே வாழ வேண்டும் என்று வலியுறுத்தவில்லை.
இருவரும் மார்க்கம் காட்டும் வழிமுறையில் பிரிந்து கொள்ளவும் வழிகாட்டுகிறது.
இந்த(த் திருப்பி அழைத்துக் கொள்ளும்) மணவிலக்கு இரண்டு தடவைதான். பின்னர் முறைப்படி சேர்ந்து வாழ வேண்டும்; அல்லது அழகிய முறையில் விடுவித்துவிட வேண்டும்.
எனவே அல்லாஹ் அனுமதித்த விவாகரத்தினால் அர்ஷ் நடுங்கிறது என்பது ஏற்க முடியாததாகும். அது தொடர்பான செய்திகள் அனைத்தும் இட்டுகட்டப்பட்ட பொய்யான செய்திகளாகும்.