வின்வெளிப் பயணத்தில் கிப்லாவை எப்படி நோக்குவது ?
நீண்ட நேர விமானப் பயணத்தின் போது கிப்லாவை எப்படி முன்னோக்குவது?
கிப்லாவை முன்னோக்குவது தொழுகையின் முக்கியமான நிபந்தனைகளில் ஒன்றாகும்.
நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா) நோக்கித் திருப்புங்கள்.
கிப்லாவை முன்னோக்கி தொழுவது அவசியம் என்றாலும் சில சந்தர்ப்பங்களில் இதற்கு விதிவிலக்கும் உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கி வரும் போது வாகனத்தின் மீதமர்ந்து அது எந்தப் பக்கம் வாகனம் செல்கிறதோ அந்தத் திசையில் (அதாவது கஅபாவுக்கு எதிர்த் திசையில்) தொழுதார்கள். அப்போது மேற்கண்ட 2:116 வசனம் இறங்கியது என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம்
இந்த ஹதீஸில் சுட்டிக்காட்டப்படும்(அல்குர்ஆன்: 2:116) ➚வசனம் இதுதான்.
நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கேயும் அல்லாஹ்வின் திருமுகம் உண்டு
பயணம் செய்து கொண்டு இருக்கும் போது கிப்லாவை முன்னோக்குவது அவசியம் இல்லை என்ற கருத்தில் இந்த ஹதீஸ் அமைந்துள்ளது. ஆனால் வேறு ஹதீஸ்களைப் பார்க்கும் போது இது பொதுவான சட்டம் இல்லை என்பதை அறிய முடிகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணம் செய்யும் போது வாகனம் செல்லும் திசையில் தொழுவார்கள். கடமையான தொழுகையைத் தொழ நாடும் போது வாகனத்தில் இருந்து இறங்கி கிப்லாவை முன்னோக்கித் தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
வாகனத்தில் பயணம் செய்யும் போது கடமையல்லாத சுன்னத்தான நஃபிலான தொழுகைகளுக்குத் தான் கிப்வாவை முன்னோக்கும் அவசியம் இல்லை. கடமையான தொழுகைகளுக்கு கிப்லாவை முன்னோக்க வேண்டும் என்று இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
நாஃபிஉ அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் அச்ச நேரத் தொழுகை குறித்து கேட்கப்பட்டால் (இப்படிக்) கூறுவார்கள்:
(முதலில்) இமாமும் மக்களில் ஒரு பிரிவினரும் (ஓர் இடத்திற்கு) முன்னேறிச் செல்வார்கள். மக்களுக்கு இமாம் ஒரு ரக்அத் தொழுவிப்பார். மக்களில் மற்றொரு பிரிவினர் தொழாமல் மக்களுக்கும், எதிரிகளுக்கும் இடையே (பாதுகாப்பு அரணாக) இருப்பார்கள்.
இமாமுடன் இருப்பவர்கள் ஒரு ரக்அத் தொழுது முடித்துவிட்டால், ஸலாம் கொடுக்காமலேயே இது வரை தொழாதவர்களின் இடத்திற்குச் சென்றுவிடுவர். இப்போது இது வரை தொழாதவர்கள், முன் சென்று இமாமுடன் ஒரு ரக்அத்தைத் தொழுதுகொள்வர்.
பிறகு, இமாம் இரண்டு ரக்அத்களைத் தொழுது முடித்த நிலையில் திரும்பிச் சென்றுவிட, அதன் பிறகு இரு பிரிவினரில் ஒவ்வொருவரும் நின்று தனித்தனியாக ஒரு ரக்அத் தொழுவார்கள். இப்படியாக, இரு பிரிவினரில் ஒவ்வொருவரும் இரு ரக்அத்களைத் தொழுதுவிட்டிருப்பார்கள். இதைவிடக் கடுமையான அச்ச நிலை ஏற்பட்டால் அவர்கள் நடந்தவர்களாகவோ, நின்ற நிலையிலோ வாகனத்தில் பயணம் செய்தவர்களாகவோ கிப்லாத் திசையை முன்னோக்கியபடியோ, அல்லது முன்னோக்காமலோ தொழலாம்.
இதன் அறிவிப்பாளரான மாலிக் அவர்கள் கூறுகின்றார்கள்:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டே இதை அறிவித்திருப்பதாக நான் கருதுகிறேன் என்று நாஃபிஉ கூறினார்கள்.
போர்க்களத்தில் யுத்தம் கடுமையாக இருந்தால் கிப்லாவை நோக்கியோ, நோக்காமலோ தொழலாம் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.
ஆனால் இது இப்னு உமர் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாகவே உள்ளது. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டு அறிவித்திருப்பதாக இப்னு உமர் சொல்லவில்லை. அடுத்த அறிவிப்பாளர் தான் இப்படி இருக்கக் கூடும் எனக் கூறுகிறார். சம்மந்தப்ப்பட்ட நபித்தோழர் அவ்வாறு கூறாமல் மற்றவர்கள் ஊகம் செய்வது ஆதாரம் ஆகாது. இது இப்னு உமர் அவர்களின் சொந்தக் கூற்றுத் தான்.
எனவே போர்க்களத்தில் கிப்லாவை முன்னோக்காமல் இருக்க ஆதாரம் இல்லை. போர்க்களத்தில் அனைவரும் ஒரு நேரத்தில் தொழ மாட்டார்கள். ஒரு குழுவினர் தொழுவார்கள். மற்றொரு குழுவினர் அவர்களுக்கு அரணாக நிற்பதுடன் போரிலும் ஈடுபட்டு இருப்பார்கள். எனவே கிப்லாவை முன்னோக்குவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.
மேலும் இப்னு உமர் சொல்லும் போர்க்களத் தொழுகை முறை குர்ஆன் சொல்லும் போர்க்களத் தொழுகைக்கு மாற்றமாகவும் உள்ளது. வின்வெளிப்பயணம் சென்றால் என்ன நிலை? விமானப்பயணம் சென்றால் என்ன நிலை?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இல்லாத இந்த நிலைமைக்கு நேரடி ஆதாரம் இல்லை. இருக்கவும் முடியாது. மற்ற சான்றுகளை வைத்துத்தான் இது குறித்து நாம் முடிவு செய்ய வேண்டும். விமானப் பயணத்தைப் பொருத்தவரை குறுகிய விமானப் பயணமும் உள்ளது. நீண்ட நேர விமானப் பயணமும் உள்ளது.
குறுகிய விமானப் பயணம் செய்யும் போது தொழுகை நேரம் முடிவதற்குள் விமான நிலையத்தில் தரை இறங்க முடியும் என்றால் தரை இறங்கிய பின் கிப்லாவை முன்னோக்கித் தொழலாம். பயணத்தில் இருப்பவர்கள் இரு தொழுகைகளை ஒரு நேரத்தில் தொழ அனுமதி உண்டு. ஜம்வு என்று இது குறிப்பிடப்படுகிறது. அப்படி விமானம் தரை இறங்கும் போது ஜம்வு செய்து தொழ முடியும் என்றால் அப்படி செய்து கொள்ளலாம்.
இதைச் சில உதாரணங்கள் மூலம் விளக்கமாக அறிந்து கொள்ளலாம். ஒருவர் இரவு மூன்று அல்லது நான்கு மணிக்குப் பயணம் செய்கிறார். விமானம் சுப்ஹு நேரம் இருக்கும் போதே தரை இறங்கி விட்டால் இறங்கிய பின்னர் கிப்லாவை முன்னோக்கி தொழுவதில் எந்தப் பிரச்சணையும் இல்லை.
ஆனால் விமானம் சுப்ஹு நேரம் முடிந்த பின்னர் தான் தரை இறங்கும் என்றால் என்ன செய்வது? கிப்லாவை நோக்காமல் தொழுவதா? அல்லது இறங்கிய பின்னர் களாவாக தொழுவதா?
தொழுகை உரிய நேரத்தில் தொழுதல், கிப்லாவை நோக்குதல் ஆகிய இரண்டு முக்கிய விதிகளில் ஏதாவது ஒன்றை விட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
கிப்லாவை நோக்காமல் விடுவதற்கு கடமையான தொழுகைக்கு விதிவிலக்கு அளிக்கும் ஆதாரம் இல்லை. ஆனால் மனிதனுக்கு உரிய நேரத்தில் தொழ முடியாமல் மறதி, தூக்கம், நிர்பந்தம் இருந்தால் தொழுகை நேரம் முடிந்த பின்பும் தொழ அனுமதி உண்டு,
ஒருவர் ஒரு தொழுகையை மறந்து விட்டால் அல்லது உறங்கி விட்டால் நினைவு வந்ததும் அதைத் தொழுவது தான் அதற்கான பரிகாரமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம்
கடமையான தொழுகையை உரிய நேரத்தில் தொழுவது அவசியம்; களாவாக ஆக்கக் கூடாது என்றாலும் மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லாத தூக்கம் மறதி காரணமாக உரிய நேரத்தில் தொழ முடியாவிட்டால் வேறு நேரத்தில் தொழலாம் என்று இந்த ஹதீஸ் அனுமதி அளிக்கிறது.
ஒருவர் நீதி மன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளார். தொழுகை நேரம் முடியும் வரை குற்றவாளிக்ம்கூண்டில் நிற்கும் நிலை உள்ளது. இவரால் உரிய நேரத்தில் தொழ முடியாது. தூக்கம் மறதி எப்படி இவரது கட்டுப்பாட்டில் இல்லையோ அது போன்ற நிலை இப்போதும் ஏற்படுகிறது.
விமானப் பயணமும் இப்படித் தான். விமானத்தை விட்டு இறங்கி கிப்லாவை நோக்க முடியாது. நமது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயமாக இது உள்ளதால் தரை இறங்கும் வரை காத்திருந்து நேரம் கடந்து விட்டாலும் தொழலாம்.
ஒருவர் பகல் 12 மணிக்கு பயணிக்கிறார். விமானம் தரை இறங்க மாலை நான்கு மணியாகும் என்றால் இவருக்கு லுஹர் நேரம் தவறி விடும் என்றாலும் ஜம்வு செய்வதாக நினைத்துக் கொண்டால் தரை இறங்கிய பின் லுஹரையும் அஸரையும் சேர்த்து ஜம்வு செய்யலாம்.
ஆனால் உபரியான தொழுகைகளை எல்லா விமானப் பயணங்களிலும் தொழலாம். அதற்கு கிப்லாவை முன்னோக்குதல் அவசியம் இல்லை. இது விமானப் பயணம் குறித்த கேள்விக்கான பதிலாகும்.
வின் வெளிப்பயணத்தைப் பொருத்தவரை தூக்கத்தைப் போல், மறதியைப் போல் சில மணி நேரங்களில் முடிந்து விடும் விஷயம் அல்ல. வருடக்கணக்கில், மாதக் கணக்கில் பயணித்துத் தான் செவ்வாயையும், சந்திரனையும் அடைய முடியும்.
மேலும் தொழுகை நேரத்தையும் சூரிய ஓட்டத்தை வைத்து முடிவு செய்ய முடியாது. மேலும் சந்திரனில் இறங்கிய பிறகும் கிப்லாவை முன்னோக்க முடியாது. இந்த வகையில் விமானப் பயணத்தில் இருந்து வின்வெளிப் பயணம் வேறுபடுகிறது.
விமானப் பயணத்தில் தரை இறங்கிய பின்னர் கிப்லாவை முன்னோக்க முடியும். வின்வெளிப் பயணத்தில் வின்கலம் இறங்கினாலும் கிப்லாவை நோக்கவே முடியாது. அறவே சாத்தியமில்லாத போது கிப்லாவை முன்னோக்காமல் தான் தொழுது ஆக வேண்டும்.
எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி இறைவன் நிர்பந்தப்படுத்துவதில்லை.
(அல்குர்ஆன்: 2:286, 6:152, 6:42, 23:62, 65:7, 2:233, 4:84) ➚ வசனங்களையும் பார்க்க.
எனவே விண்வெளிப் பயணத்தில் கிப்லாவை முன்னோக்க அறவே வாய்ப்பு இல்லை என்பதால் கிலாவை முன்னோக்கும் சட்டம் இல்லை. தொழுகை நேரமும் கூட சூரிய ஓட்டத்தை வைத்து முடிவு செய்யும் வாய்ப்பு இல்லை. கணிப்பின் மூலம் தான் தொழுகை நேரங்களையும் முடிவு செய்ய முடியும்.