யார் தேச விரோதிகள்? வரலாறு சொல்லும் பாடம்

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

இந்தியாவை 800 ஆண்டுகள் ஆட்சி செய்த முஸ்லிம்கள் இந்த நாட்டைப் பல்வேறு திட்டங்களின் மூலம் உருவாக்கினார்கள். பல சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்த இந்த நாட்டை ஒரே நாடாக உருவாக்கியதில் முஸ்லிம்களின் பங்கு அளப்பரியது.

அதன்பின் இந்தியா வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது உயிராலும், பொருளாலும் தியாகங்கள் செய்து இந்திய விடுதலைக்கு வித்திட்டவர்கள் முஸ்லிம்கள்.

தன் சதவீதத்திற்கு அதிகமாக சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த முஸ்லிம்களை இன்று தேச விரோதிகளாக சங்பரிவாரக் கும்பல் சித்தரித்து வருகின்றது. இவர்கள் அறுதிப் பெரும்பான்மையில் ஆட்சியைப் பிடித்ததும் முஸ்லிம்களை இந்த நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கொடிய எண்ணத்தில் சட்டங்களை இயற்றி வருகின்றனர். இந்தச் சட்டங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் அனைவரையும் தேச விரோதிகள், தேசத் துரோகிகள் என்று முத்திரை குத்துகின்றனர்.

சரி! இதைச் சொல்கின்ற சங்கிகள் தேசப் பற்று மிக்கவர்களா? தேசத்திற்காக இவர்கள் செய்த தியாகம் என்ன? என்று பார்த்தால் சங் பரிவார இயக்கத்ததைக் கட்டமைத்தவர்களின் வரலாறுகள் மிகக் கேவலமாக இருப்பதைப் பார்க்க முடிகின்றது.

இந்துத்துவத்தைக் கட்டமைத்தவரான சாவர்க்கர் பற்றிய ஒரு கட்டுரை விகடனில் வெளியாகி சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கட்டுரையைப் படித்துப் பார்த்தால் விடுதலைப் போரில் சங் பரிவாரின் பங்கு என்ன என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

முஸ்லிம்களின் தேசப் பற்றையும், அவர்களின் குடியுரிமையையும் கேள்விக்குறியாக்கும் சங்கிகளின் இந்தக் கேவலமான வரலாற்றை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது அவசியம் என்பதால் “`Holy Land’ சாவர்க்கர்” என்ற தலைப்பில் சக்திவேல் என்பவர் எழுதி, விகடனில் வெளியான கட்டுரையை இங்கு பிரசுரிக்கின்றோம்.

யார் இந்த சாவர்க்கர்?

“மேக் இன் இந்தியா என்பது இப்போது ‘ரேப் இன் இந்தியா’வாக மாறி விட்டது” என்று பேசியதற்காக ராகுல்காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்று பி.ஜே.பி.யினர் கொந்தளித்தனர். அதற்குப் பதிலளித்த ராகுல்காந்தி, `நான் ராகுல், சாவர்க்கர் அல்ல’ என்றார்.

அதைக் கண்டித்து மகாராஷ்ட்ரா பி.ஜே.பி. சட்டமன்ற உறுப்பினர்கள், `நான் சாவர்க்கர்’ என்று அச்சிடப்பட்ட தொப்பி அணிந்து சட்டமன்றத்துக்கு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமித்ஷாவின் சாவர்க்கர் பாசம் அகிலம் அறிந்த ஒன்று. அவரது வீட்டில் நிரந்தரமாகவே ஒரு சாவர்க்கர் படம் உண்டு. எப்போதும், அதன் முன்னால் அமர்ந்தபடிதான், போட்டோவுக்கு போஸே கொடுப்பார் மனிதர்.

ஆக, ஒரு விஷயம் தெளிவாகிறது. சாவர்க்கரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கான வேலைகள், வேகமெடுத்துவிட்டன. ஏற்கெனவே, `ரூபாய் நோட்டில் சாவர்க்கர் படத்தைப் பொறிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை வேறு நிறைய ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. அதுவும் இனி மேலெழுந்து வரக்கூடும்.

இதன் ஆபத்தை நாம் எந்தளவுக்கு உணர்ந்திருக்கிறோம் என்று தெரியவில்லை. ஏனென்றால், சாவர்க்கருக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் என்பது, வெறுமனே அவருக்கான அங்கீகாரம் மட்டுமல்ல. அது, அவரது கோட்பாட்டுக்கு அளிக்கப்படும் அங்கீகாரமும் கூட. இந்த நேரத்தில், சாவர்க்கர் யார்? அவரது அரசியல் எப்படிப்பட்டது? அவர் பாடுபட்டது யாருக்காக? என்பதையெல்லாம், விரிவாகப் பேச வேண்டியது அதிஅவசியமாகிறது.

இல்லையென்றால், நாளைக்கு ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் சாவர்க்கர் சிரிப்பதை, வரும் தலைமுறைப் பிள்ளைகள் பார்க்க நேரிடும். அமித்ஷா வேறு `வரலாற்றை மாற்றி எழுதுவோம்’ என்று பீதி கிளப்பிக் கொண்டிருக்கிறார். ஆகவே, இப்போது பேசுவதுதான் சரி!

சாவர்க்கர் ஒரு சிந்தனைவாதி என்பதில் எவரும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. அவர் சிந்தனைவாதி தான்! ஆனால், அவரது சிந்தனைகள் எதை நோக்கி இருந்தன என்பதுதான் முக்கியமானது. அதையே அதிகம் கவனத்தில் எடுத்து விவாதிக்க வேண்டும். அவரது சிந்தனை என்ன. இந்து ராஷ்டிரம்தான்! அந்த இந்து ராஷ்டிரம் எப்படியிருக்கும் அவரே அதை விவரிக்கிறார்…

`எவரெல்லாம் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் இல்லையோ, அவர்களெல்லாம் இந்தியர்களும் அல்ல!’

ஒரு தேசியத்துக்குக் கொடுக்கப்படும் Motherland, Fatherland என்ற கருத்துருவாக்கங்களைத் தாண்டி,`Holy land’ என்ற கருத்துருவாக்கத்தைக் கொண்டுவந்து வைக்கிறார் சாவர்க்கர்.

அவரது அந்தத் தத்துவத்தின்படி, இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் இந்தியர்கள் அல்லர். ஏனென்றால், அவர்களின் புண்ணியபூமி அரேபியாவிலும் பாலஸ்தீனத்திலும் இருக்கிறது என்பது அவரது வாதம். இதைத்தான் 1905 தொடங்கி 1966 வரை வெவ்வேறு வார்த்தைகளில் பேசிக்கொண்டிருந்தார் அவர். அதாவது, அவர் மரணத்தைத் தழுவும் வரை அதிலிருந்து மாறவே இல்லை. கடைசிக்காலங்களில், `இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இந்துப் பெண்களைச் சூறையாடியதைப் போலவே, இந்துக்கள் இஸ்லாமியப் பெண்களைச் சூறையாட வேண்டும்’ என்று சொல்லும் அளவுக்குக் கூட அவர் இறங்கியிருக்கிறார். மத அடிப்படைவாதத்தில் அவரது மனம் எந்த அளவுக்குக் கெட்டித்தட்டிப் போயிருந்ததது என்பதற்கான உதாரணம், அந்த வார்த்தைகள்.

ஜனநாயக அரசியலில் ஒரு பாலபாடம் உண்டு. அதாவது, ‘அனைவரையும் உள்ளடக்கும் அரசியலுக்கு(Inclusive Politics) எவரெல்லாம் அச்சுறுத்தலாக இருக்கிறார்களோ, அவர்களெல்லாம் ஜனநாயகத்துக்கும் எதிராகவே நிற்கிறார்கள்’ என்பதே அது!

சாவர்க்கர், அனைவரையும் உள்ளடக்கும் அரசியலுக்கு எதிராக நின்றவர். இங்கேயே பிறந்து, இங்கேயே வாழ்ந்து வரும் மாற்று மதத்தவர்களை`Others’என்று கூசாமல் சொன்னவர் அவர். `அவர்களுக்கு எந்த விதத்திலும் இந்த நாடு சொந்தமில்லை’ என்ற கருத்தாக்கத்தை, சாவர்க்கரின் எழுத்துகளில் திரும்பத் திரும்ப பார்க்க முடிகிறது. ஆகவே, அவர் இந்தியாவின் ஜனநாயகப் பண்புக்கு முற்றிலும் எதிரானவர்! இப்படிப்பட்டவருக்கு, அகிலத்தின் மாபெரும் ஜனநாயக நாட்டினரான நாம், பாரத ரத்னா கொடுத்து அழகு பார்க்கப் போகிறோமா? அப்படிச் செய்தால், நமக்கு அடுத்து வரும் தலைமுறையினர் நம்மைப் பற்றி என்ன மதிப்பு வைத்திருப்பார்கள்?

காந்தி ‘Power to people’ என்று சொன்னார் என்றால், சாவர்க்கர் அதிலிருந்து அப்படியே வேறுபட்டு ‘Power over people’ என்று சொன்னார். அதாவது, மக்களின் மீது அரசு மேலாதிக்கம் செலுத்துவதை அப்பட்டமாக ஆதரித்தவர் சாவர்க்கர்.

போதாக்குறைக்கு, இந்தியாவை இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு ராணுவ தேசமாக உருவகித்தார் சாவர்க்கர். அதனால்தான் அவருக்கு ஜெர்மனி பிடித்தது. பின்னாளில், இஸ்ரேலும் அவரது மனதைக் கவர்ந்ததற்குக் காரணம் அதுவே. ‘இந்தியாவை காலனியாதிக்கத்தின் கண்கள் கொண்டு பார்த்தவர் சாவர்க்கர்’ என்று சில ஆய்வாளர்கள் சொல்வது அதனால்தான்!

இந்துத்துவத்தை கண்டுபிடித்தவர் சாவர்க்கர் தான்! விவேகானந்தரும் அரவிந்தரும் திலகரும் `இந்துயிஸம்(Hinduism) என்று பேசியதை, `இந்துத்துவம் (Hindutva)’ என்ற இடத்துக்கு நகர்த்தியவர் சாவர்க்கர்.

இந்துயிஸத்தை, இந்து மதத்தைப் பின்பற்றுவது, அதைப் பற்றிப் பேசுவது, அதன் தத்துவங்களைப் பரப்புவது என்று வரையறுக்கலாம்.

ஆனால், இந்துத்துவம் அப்படியல்ல. அது, இந்துக்களை ஒருங்கிணைப்பது, ஒருங்கிணைத்து ஓர் இந்து சமுதாயத்தைக் கட்டமைப்பது! அதாவது, இந்துயிஸம் இந்துக்களை ஒரு மதமாகப் பார்த்தால், இந்துத்துவா ஓர் இனமாகப் பார்க்கும். அந்த இனத்தின் ஆதிக்கத்துக்குள் அது தேசத்தைக் கொண்டு வரும். அந்தத் தேசத்தில், சிறுபான்மை இனத்தவர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள். அவர்களுக்கென்று எந்த உரிமையும் இருக்காது. இதை நோக்கியே, அந்த ‘Holy land’ என்ற பதத்தை வெகு சாதுரியமாகப் பயன்படுத்தினார் சாவர்க்கர்.

இந்தியாவை முழுவதுமாக `இந்து மயமாக்குவதே’ சாவர்க்கரின் நோக்கம். அதற்காக, படை உருவாக்குவது, அந்தப் படையை மக்கள் மேல் செலுத்தி அவர்களை ஆளும் அதிகாரத்தை அடைவது, அந்த அதிகாரத்தின் வழியே, நாடு முழுவதும் ஒற்றைத்தன்மையைக் கொண்டுவருவது என்று, தெளிவாக வரைபடம் வரைகிறார் சாவர்க்கர்.

`Hinduise all politics, Militarize Hinduism’ என்ற பதத்தை அவர் அடிக்கடி பயன்படுத்துகிறார். இந்த ஒருங்கிணைத்தலைச் செய்ய அவருக்கு ஒரு எதிர்த்தரப்பு தேவைப்பட்டது. அதனால்தான், இந்து அல்லாதவர்களை, அதாவது இஸ்லாமியர்களை, கிறிஸ்துவர்களை ‘Others’ என்று அழைத்து, `Self’ எனப்படும் இந்துக்களின் எதிரிகளாகக் கட்டமைக்கிறார் அவர். ஜைனர்கள், சீக்கியர்கள், பௌத்தர்களைக் கூட அவர் ஓரமாகவே நிறுத்துகிறார். அதுவும், அன்பையும் சமத்துவத்தையும் போதித்த பௌத்தத்தை, இஸ்லாம் கிறிஸ்துவத்துக்கு இணையாக வெறுக்கிறார். அவருடைய, ‘Hindutva : Who is a Hindu’ புத்தகம், ஏறக்குறைய ஹிட்லரின் ‘Mein kampf’ என்ற புத்தகத்துக்கு இணையானது!

சாவர்க்கரின் இந்து ராஜ்ஜியத்தின் இன்னொரு ஆபத்து, அது இந்து சமுதாயத்தையே பிளவுபடுத்திப் பார்க்கிறது என்பதாகும்.